Published:Updated:

மதுரை எய்ம்ஸ்: அடிக்கல் நாட்டி 3 ஆண்டுகள் நிறைவு; அடுத்த செங்கல் எப்போது வரும்?

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டிய இடம்

கட்டுமான வேலையே தொடங்காத தோப்பூர் எய்ம்ஸுக்கு இயக்குநர் குழுவெல்லாம் அமைத்து கூட்டமெல்லாம் நடத்தி வருகிறார்கள். ஆனால், வேலை எப்போது தொடங்கும் என்பதுதான் தெரியவில்லை.

மதுரை எய்ம்ஸ்: அடிக்கல் நாட்டி 3 ஆண்டுகள் நிறைவு; அடுத்த செங்கல் எப்போது வரும்?

கட்டுமான வேலையே தொடங்காத தோப்பூர் எய்ம்ஸுக்கு இயக்குநர் குழுவெல்லாம் அமைத்து கூட்டமெல்லாம் நடத்தி வருகிறார்கள். ஆனால், வேலை எப்போது தொடங்கும் என்பதுதான் தெரியவில்லை.

Published:Updated:
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டிய இடம்

ஜனவரி 27... மூன்றாண்டுகளுக்கு முன் இந்த நாளில்தான் மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனைக்காக பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சியால் மதுரை மக்கள் மட்டுமல்ல, தென் தமிழக மக்கள் அனைவரும் தங்களது நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறப்போவதாக மகிழ்ந்தார்கள்.

பிரதமர் மதுரையில் அடிக்கல் நாட்டியபோது
பிரதமர் மதுரையில் அடிக்கல் நாட்டியபோது

ஆனால், மூன்று ஆண்டுகள் ஆகியும் அடிக்கல் நாட்டிய இடத்தில் சுற்றுச் சுவர் மட்டும் எழுப்பப்பட்டு, கட்டுமான வேலைகள் எதுவும் தொடங்கப்படாமல் இன்றுவரை பரிதாபமாகக் காட்சியளித்துக் கொண்டிருக்கிறது. கட்டுமான வேலையே தொடங்காத தோப்பூர் எய்ம்ஸுக்கு இயக்குநர் குழுவெல்லாம் அமைத்து கூட்டமெல்லாம் நடத்தி வருகிறார்கள். ஆனால், வேலை எப்போது தொடங்கும் என்பதுதான் தெரியவில்லை. கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்லின்போது எய்ம்ஸ்க்கு அடிக்கல் நாட்டப்பட்ட ஒற்றை செங்கல் என்ற குறியீடு பிரசாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், கட்டுமான தாமதத்துக்கு, ஜப்பான் நிதி நிறுவனத்தின் நிதி இன்னும் வரவில்லை என்று மத்திய அரசால் சொல்லப்பட்டு வருகிறது; எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியைத் தற்காலிகமாக ராமநாதபுரம், சிவகங்கை, தேனி மருத்துவக் கல்லூரிகளில் நடத்தலாம் எனத் திட்டமிட்டு வருவதாகவும் சொல்கிறார்கள்.

சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டபோது
சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டபோது

எய்ம்ஸ் கட்டுமான வேலை இந்த ஆண்டாவது தொடங்குமா என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ள நிலையில், மதுரை எய்ம்ஸில் இதுவரை என்னென்ன நடந்துள்ளது என்பதை ரீவைண்ட் பண்ணி பார்ப்போம்.

* தென் தமிழக மக்கள் பயனடையும் வகையில் எய்ம்ஸ் மருத்துவமனையை மதுரையில் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி மதுரை மக்கள் நீண்டகாலமாகப் பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்த நிலையில், தமிழ்நாட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று பிப்ரவரி 2015-ல் அப்போதைய நிதியமைச்சர் அருண்ஜெட்லி அறிவித்தார்.

* எய்ம்ஸ் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து இடம் தேர்வு செய்ய மூன்றரை ஆண்டுகள் ஆயின. இடையில் எய்ம்ஸை தஞ்சாவூரில் அமைக்க அ.தி.மு.க அமைச்சர்கள் திட்டமிட்டதால் இடம் தேர்வு செய்வதில் தாமதம் ஏற்பட்டது.

சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தில் செங்கலை காட்டி  உதயநிதி பிரசாரம்
சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தில் செங்கலை காட்டி உதயநிதி பிரசாரம்

* ஒருவழியாக 2018 ஜூனில்தான் மதுரை தோப்பூர் தேர்வு செய்யப்பப்பட்டது. அதன் பின்னர் 6 மாதங்கள் கழித்து மதுரை எய்ம்ஸ்க்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. 2019-ல் நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிய வேளையில் 27.01.2019-ல் மதுரையில் நடந்த விழாவில் பிரதமர் மோடி எய்ம்ஸ்க்கு அடிக்கல் நாட்டினார்.

* அடிக்கல் நாட்டி ஒன்றரை வருடங்கள் கழித்து ஜப்பானின் ஜெய்கா நிறுவனத்திடம் கடன் ஒப்பந்தம் கையெழுத்தான பின் கட்டுமானப் பணிகள் தொடங்கப்படும் என்று சொல்லப்பட்டது. 2020 டிசம்பரில் அப்போதைய அ.தி.மு.க அரசு, எய்ம்ஸுக்கான இடத்தை ஒப்படைக்கவில்லை என்று மத்திய அரசு குற்றம் சாட்டியது.

இது சம்பந்தமாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கைத் தொடர்ந்து நவம்பர் 3-ம் தேதி மத்திய அரசுக்கு நிலம் இடமாற்றம் செய்துகொடுக்கப்பட்டதாகத் தமிழக அரசு அறிவித்தது.

* மத்திய அரசு அறிவித்ததுபோல் டிசம்பர், ஜனவரி எனக் கடந்து செல்ல இறுதியாக 2021 மார்ச்சில் ஜப்பான் வங்கியுடன் கடன் ஒப்பந்தம் கையெழுத்தானது. `நிதிக்கான ஒப்பந்தம் போட்டாச்சு இனியாவது பணி தொடங்கும்' என்று எல்லோரும் எதிர்பார்த்திருந்த நிலையில், இன்றைய தேதிவரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் தொடங்கப்படவில்லை.

 ஜப்பான் நிதிக்குழு நேரில் ஆய்வு செய்தபோது
ஜப்பான் நிதிக்குழு நேரில் ஆய்வு செய்தபோது

* இதற்கிடையே மதுரை எய்ம்ஸ் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டு அதன் முதல் கூட்டம் கடந்த ஆண்டு ஜூனில் நடந்தது. அக்கூட்டத்தில், ``நாட்டின் 16-வது எய்ம்ஸ் மருத்துவமனை மதுரை தோப்பூரில் அமைய உள்ளது. 1,978 கோடி ரூபாய் மதிப்பில் கட்டுமானப் பணிகள் 2023-ம் ஆண்டு தொடங்கப்பட்டு 2026-ல் நிறைவடைய உள்ளது" எனத் தெரிவிக்கப்பட்டது.

மதுரை எய்ம்ஸ் குறித்து ஆர்.டி.ஐ மூலம் தொடர்ந்து தகவலைப் பெற்று ஊடகங்கள் மூலம் மக்களுக்குத் தெரிவித்துவரும் பாவூர்சத்திரம் பாண்டியராஜாவிடம் பேசியபோது, ``தமிழ்நாட்டுக்கு பின் அறிவிக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனை திட்டங்களில் எல்லாம் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டு, பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மருத்துவ மாணவர் சேர்க்கையும் தொடங்கி நடைபெற்று வருகிறது.

ஆனால், மதுரை எய்ம்ஸ்க்கு மட்டுமே காரணங்கள் கூறப்பட்டு காலம் தாழ்த்தப்பட்டு வருகிறது. நிலம் கையகப்படுத்துதல், கடன் ஒப்பந்தம் கையெழுத்து என்று காலம் தாழ்த்திய நிலையில் கட்டுமானம் தொடங்க இன்னும் தாமதமாகும் என்பது மதுரை உள்ளிட்ட தென் தமிழக மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. எனவே, மேலும் காலதாமதம் செய்யாமல் மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகளைத் தொடங்குவதற்கு, வரும் பாராளுமன்றக் கூட்டத்தொடரில் தமிழக எம்.பி-க்கள் அனைவரும் ஒன்றிணைந்து குரல் கொடுத்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

கடந்த 27.01.2019 அன்று பிரதமர் அடிக்கல் நாட்டும் போது 45 மாதங்களில் மதுரை எய்ம்ஸ் பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டது. அதாவது, 2023 செப்டம்பர் மாதம் பயன்பாட்டுக்கு வர வேண்டும். ஆனால், இப்போதோ 2023-ல்தான் கட்டுமானப் பணியே தொடங்கப்படும் என்று சொல்லப்படுகிறது.

இனிமேலும் தாமதிக்காமல் தமிழக எம்.பி-க்கள் அனைவரும் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார்கள் மதுரை மக்கள்.

மதுரை எய்ம்ஸ்... ஒரு காலப் பார்வை!

1. தமிழ்நாட்டுக்கு எய்ம்ஸ் அறிவிக்கப்பட்ட தேதி - 28.02.2015.

2. மதுரை தோப்பூரில் இடம் தேர்வு - 18.06.2018

3. மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கிய தேதி - 17.12.2018

4. மதுரை எய்ம்ஸ் அடிக்கல் நாட்டப்பட்ட தேதி - 27.01.2019

5. சுற்றுச்சுவர் கட்டுமான பணி தொடங்கப்பட்டது - 25.11.2019

6. மாநில அரசிடம் இருந்து மத்திய அரசுக்கு இடம் ஒப்படைக்கப்பட்ட தேதி - 03.11.2020

7. நிர்வாக இயக்குநர் அறிவிப்பு - 22.02.2021

8. ஜப்பான் கடன் ஒப்பந்தம் கையெழுத்து - 26.03.2021

9. மதுரை எய்ம்ஸ் நிர்வாகக் குழுவின் முதல் கூட்டம் காணொளி வாயிலாக நடைபெற்ற தேதி - 16.07.2021

அடுத்த செங்கல் வந்திறங்கி, எப்போதுதான் எழும் எய்ம்ஸ்?!