Published:Updated:

கஃபீல் கான்: `4 ஆண்டுகளில் சஸ்பெண்ட், கைது... தற்போது டிஸ்மிஸ்' - உ.பி அரசு நடவடிக்கை!

உத்தரப்பிரதேசத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் குழந்தைகள் இறந்ததாகக் குற்றம்சாட்டிய டாக்டரை அரசுப் பணியிலிருந்து டிஸ்மிஸ் செய்திருக்கிறது மாநில அரசு.

உத்தரப்பிரதேச மாநிலம், கோரக்பூர் அரசு மருத்துவமனையில் கடந்த 2017-ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் ஆக்சிஜன் பற்றாக்குறையால் 63 குழந்தைகள் உயிரிழந்தனர். ஆக்சிஜன் சப்ளை செய்யும் நிறுவனத்துக்கு ரூ.68 லட்சம் கொடுக்காத காரணத்தால்தான், ஆக்சிஜனுக்குப் பற்றாக்குறை ஏற்பட்டு குழந்தைகள் உயிரிழக்க நேரிட்டதாக அந்த மருத்துவமனையின் குழந்தைகள் பிரிவு டாக்டர் கஃபீல் கான் குற்றம்சாட்டினார். ஆனால், மருத்துவமனையில் குழந்தைகள் இறந்தது குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்ட கமிட்டியோ, பணியில் கவனக்குறைவாக நடந்துகொண்டதாகக் கூறி டாக்டர் கஃபீல் கானை அந்தப் பிரிவிலிருந்து நீக்கியதோடு 2017, ஆகஸ்ட் 22-ம் தேதி பணியிலிருந்து சஸ்பெண்ட் செய்தும் உத்தரவிட்டது.

டாக்டர் கஃபீல் கான்
டாக்டர் கஃபீல் கான்

அதோடு மட்டுமல்லாமல், பணியில் கவனக்குறைவாக இருந்ததாகக் கூறி கஃபீல் கான் கைதும் செய்யப்பட்டார். கஃபீல் கானுடன் மொத்தம் எட்டுப் பேர் பணியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். ஆனால் ஏழு பேர் மீண்டும் பணியில் சேர்க்கப்பட்ட நிலையில் கஃபீல் கான் மட்டும் பணியில் சேர்க்கப்படாமல் ஒன்பது மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார். அதையடுத்து, மத்திய அரசின் குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் போராட்டம் நடத்தியபோது மீண்டும் கைதுசெய்யப்பட்டு, பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். ஜாமீனில் வெளிவந்த பிறகு கொரோனா காலத்தில் தன் ஜாமீனை ரத்து செய்தால் மக்களுக்கு சேவை செய்யத் தயாராக இருப்பதாக கஃபீல் கான் அரசுக்குக் கோரிக்கை விடுத்தார்.

ஆனால் அரசு சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்யவில்லை. ஏற்கெனவே, சஸ்பெண்ட் உத்தரவு அமலில் இருக்கும் நிலையில், 2019-ம் ஆண்டு, ஜூலை 31-ம் தேதி அரசு மருத்துவமனையில் வலுக்கட்டாயமாக நோயாளிகளுக்கு சிகிச்சையளித்ததற்காக மீண்டும் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதை எதிர்த்து கஃபீல் கான் தாக்கல் செய்த மனுவை விசாரித்த அலகாபாத் உயர் நீதிமன்றம் இரண்டாவது முறையாகப் பிறப்பிக்கப்பட்ட சஸ்பெண்ட் உத்தரவுக்குத் தடைவிதித்தது. மற்றொரு புறம், கஃபீல் கானின் கவனக்குறைவால்தான் மருத்துவமனையில் குழந்தைகள் உயிரிழந்ததாக விசாரணைக் கமிட்டி தெரிவித்தது. கஃபீல் கான் மீது கூறப்பட்ட சில குற்றச்சாட்டுகளை விசாரணை கமிட்டி ரத்து செய்திருந்தது.

டாக்டர் கஃபீல் கான்
டாக்டர் கஃபீல் கான்

மேலும், கஃபீல் கான் தொடர்ந்த வழக்கு ஒன்றை விசாரித்த உயர் நீதிமன்றம், `நான்கு ஆண்டுகளாக ஏன் கஃபீல் கானை தொடர்ந்து சஸ்பெண்டில் வைத்திருக்கிறீர்கள்!' என்று அரசுக்குக் கேள்வி எழுப்பியது. இதையடுத்து இந்த விவகாரத்தில் நிரந்தரத் தீர்வு காணும்விதமாக கஃபீல் கானை மாநில அரசு, பணியிலிருந்து நீக்கி உத்தரவிட்டிருக்கிறது. அரசின் இந்த உத்தரவு தொடர்பாகக் கருத்து தெரிவித்திருக்கும் கஃபீல் கான், ``அரசின் இந்த உத்தரவை எதிர்த்து நீதிமன்றத்தில் நிச்சயம் வழக்கு தொடர்வேன். இதற்கு முன்பு அரசின் எட்டு விசாரணைகளில் நான் நிரபராதி என்று கூறி விடுவிக்கப்பட்டிருக்கிறேன். எனக்கு அரசியலில் நுழையும் திட்டம் இல்லை. ஆனால் ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழந்த குழந்தைகளின் குடும்பத்துக்காக நான் போராடிக்கொண்டிருக்கிறேன்" என்றார்.

கஃபீல் கானை அரசுப் பணியிலிருந்து நீக்கியிருக்கும் உத்தரப்பிரதேச அரசின் நடவடிக்கைக்கு, பிரியங்கா காந்தி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பலரும், சமூகச் செயற்பாட்டாளர்களும் தங்கள் எதிர்ப்பை தெரிவித்துவருகின்றனர்.

உ.பி: `கொரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சையளிக்க அனுமதியுங்கள்! -முதல்வருக்கு டாக்டர் கஃபீல் கான் கடிதம்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு