Published:Updated:

செடி, கொடிகளில் மறைந்து கிடக்கும் 50 ஆழ்துளைக் கிணறுகள்!- 13 ஆண்டுகளாக புதுச்சேரியில் அவலம்

ஆழ்துளைக்கிணறு
ஆழ்துளைக்கிணறு ( அ.குரூஸ்தனம் )

திருச்சியைச் சேர்ந்த சிறுவன் சுர்ஜித் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சம்பவம் தமிழகத்தில் சோகத்தை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், புதுச்சேரியில் சுமார் 50-க்கும் மேற்பட்ட ஆழ்துளைக் கிணறுகள் மூடப்படாமல் இருப்பது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.

திருச்சி மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் மூடப்படாத ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் சுர்ஜித்தை மீட்கும் பணி கடந்த 60 மணி நேரத்துக்கும் மேலாக நீடித்து வருகின்றன. சிறுவன் சுர்ஜித் மீண்டு வருவதற்காக மதங்களைக் கடந்து தமிழகத்தில் பிரார்த்தனைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அதேசமயம் ஆழ்துளைக் கிணற்றில் விழும் முதல் சிறுவன் சுர்ஜித்தானா என்ற கேள்வியை நாம் ஒவ்வொருவரும் எழுப்பிக்கொள்ள வேண்டும். தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளில் 12 சிறுவர், சிறுமிகள் ஆழ்துளைக் கிணறுகளில் வீழ்ந்திருக்கிறார்கள்.

கிணறுகள்
கிணறுகள்
அ.குரூஸ்தனம்

அதில் இரண்டு பேரைத் தவிர மற்ற அனைவரையும் சடலங்களாக மட்டுமே நம்மால் மீட்க முடிந்தது. ஒவ்வொரு முறையும் அசம்பாவிதங்கள் நிகழும்போது மட்டும் அதுகுறித்துப் பேசிவிட்டு, அதன்பிறகு மறந்துவிடும் நாம் அனைவருமே இந்த விவகாரத்தில் குற்றவாளிகள்தாம். குறைந்தபட்சம் மூடப்படாமல் இருக்கும் ஆழ்துளைக் கிணறுகள் குறித்த தகவல்களை அதிகாரிகளின் கவனத்துக்குக் கொண்டு அதை மூடுவதற்கான நடவடிக்கைகளைக்கூட எடுப்பதில்லை என்பதுதான் கசப்பான உண்மை.

ஆழ்துளைக் கிணறுகள் மரணக் குழிகளாக மாறி குழந்தைகளின் உயிரைக் காவு வாங்கிக் கொண்டிருக்கும் நிலையில், புதுச்சேரியில் அரசு கையகப்படுத்திய 800 ஏக்கர் நிலத்தில் 50-க்கும் மேற்பட்ட ஆழ்துளைக் கிணறுகள் கடந்த 13 வருடங்களாக மூடப்படாமல் கிடக்கும் அதிர்ச்சித் தகவல் தற்போது வெளியாகியிருக்கிறது.

மீட்புப் பணி
மீட்புப் பணி

புதுச்சேரியில் கடந்த 2006-ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியின்போது சிறப்பு பொருளாதார மண்டலம் அமைப்பதற்காக சேதராப்பட்டு, துத்திப்பட்டு, கரசூர் பகுதிகளில் இருந்த 840 ஏக்கர் விவசாய நிலங்களை அரசு கையகப்படுத்தியது. அப்போது நிலங்களின் சந்தை மதிப்பைவிட குறைவான விலையையே அரசு கொடுத்ததாகச் குற்றச்சாட்டு எழுந்தது.

தொடர்ந்து பொருளாதார சிறப்பு மண்டலம் அமைப்பதற்கான ஒப்பந்தம் இரண்டு தனியார் நிறுவனங்களிடம் கைமாறிய விவகாரத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாக எதிர்க்கட்சிகள் சட்டப்பேரவையில் குற்றம் சுமத்தின. அதைத் தொடர்ந்து சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைப்பதற்கான ஒப்பந்தத்தை ரத்து செய்தது மத்திய அரசு. இந்த விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்றம் புதுச்சேரி அரசை அப்போது கடுமையாக விமர்சித்திருந்தது.

சிறுவன் சுர்ஜித் மீட்புப் பணி
சிறுவன் சுர்ஜித் மீட்புப் பணி

திட்டம் அப்படியே கிடப்பில் போடப்பட்டது. முன்னதாக தங்கள் விவசாய நிலங்களில் போடப்பட்டிருந்த போர்வெல்களில் இருந்து மோட்டார்களை மட்டும் கழற்றிக்கொண்ட விவசாயிகள், ஆழ்துளைக் கிணறுகளை மூடாமல் அப்படியே சென்றுவிட்டனர். கடந்த 13 வருடங்களாக இந்தக் கிணறுகள் அப்படியே திறந்த நிலையிலேயே இருப்பதால், ஆட்டுக்குட்டிகள் விழுவதும், மாடுகளின் கால்கள் மாட்டிக் கொள்வதும் தொடர்கதையாகிக் கொண்டிருக்கிறது என்கின்றனர் அப்பகுதி மக்கள்.

மேய்ச்சலுக்காக ஆடு, மாடுகளை இந்தப் பகுதிகளுக்கு ஓட்டி வரும் தாய்மார்கள், பள்ளி செல்லும் வயதை எட்டாத தங்கள் குழந்தைகளையும் அழைத்து வருவார்கள். அப்போது தங்கள் குழந்தைகளின் பாதுகாப்பைக் கருதி அங்கிருக்கும் ஆழ்துளைக் கிணறுகளை செங்கல், மரக்கிளைகள் போன்றவற்றைக் கொண்டு மூடி வைத்திருக்கிறார்கள்.

சேதராப்பட்டு
சேதராப்பட்டு
அ.குரூஸ்தனம்

பல கிணறுகள் எங்கிருக்கிறது என்று கண்டுபிடிக்க முடியாதபடி செடி, கொடிகள் வளர்ந்து மறைத்திருக்கின்றன. உள்ளூர் மக்களின் உதவியுடன் நாம் களத்துக்குச் சென்று ஆய்வு செய்தபின் அதுகுறித்து மாவட்ட ஆட்சியர் அருணின் கவனத்துக்குக் கொண்டு சென்றபோது, “தகவலை தெரிவித்ததற்கு நன்றி. உடனே அதற்கான நடவடிக்கைகளை எடுக்கிறேன்” என்று வாக்குறுதி கொடுத்தார்.

இந்தக் கிணறுகள் இன்னொரு உயிரைக் குடிப்பதற்கு முன்பு அதைத் தடுக்கும் பொறுப்பும் கடமையும் அரசுக்கு இருக்கிறது.

மூடப்படாத 50 ஆழ்துளை மரணக் கிணறுகள்... கண்டுகொள்ளாத புதுச்சேரி அரசு... மாவட்ட ஆட்சியரிடம் கொண்டு சென்ற விகடன் ஆழ்துளைக்...

Posted by Vikatan EMagazine on Monday, October 28, 2019
அடுத்த கட்டுரைக்கு