Published:Updated:

ஆபாசம், அச்சுறுத்தல், கொலை மிரட்டல்... பெண் ஊடகவியலாளர்களை குறிவைக்கும் கும்பல்!

Media ( Photo: Vikatan )

பெண் ஊடகவியலாளர்களைக் குறிவைத்து பாலியல் ரீதியான தாக்குதல்களைத் தொடுத்து வருபவர்களின் எண்ணிக்கை சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. முற்போக்கு கருத்துகளைப் பதிவிட்டு வரும் பெண்கள்தான் இதுபோன்ற தாக்குதல்களுக்கு உள்ளாகி வருகின்றனர்.

ஆபாசம், அச்சுறுத்தல், கொலை மிரட்டல்... பெண் ஊடகவியலாளர்களை குறிவைக்கும் கும்பல்!

பெண் ஊடகவியலாளர்களைக் குறிவைத்து பாலியல் ரீதியான தாக்குதல்களைத் தொடுத்து வருபவர்களின் எண்ணிக்கை சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. முற்போக்கு கருத்துகளைப் பதிவிட்டு வரும் பெண்கள்தான் இதுபோன்ற தாக்குதல்களுக்கு உள்ளாகி வருகின்றனர்.

Published:Updated:
Media ( Photo: Vikatan )

தமிழ்நாட்டில் ஊடகத்தினர் மீதான தாக்குதலில் `சீஸன் டூ' ஆரம்பித்திருக்கிறது. ஊடகத்துறையில் இயங்கிவரும் ஊடகவியலாளர்களைக் குறிவைத்து சமீபகாலமாக அவதூறு செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. சமூக ஊடகங்களில் இதுதொடர்பான குற்றச்சாட்டுகள், விவாதங்கள் என இரு தரப்பிலான மோதல்களும் தொடர்ந்து அரங்கேறிவருகின்றன.

இந்தநிலையில், அண்மைக்காலமாக ஊடகத்துறையைச் சார்ந்த பெண்களையும் குறிவைத்து இந்தத் தாக்குதல் வளையத்துக்குள் கொண்டுவந்துள்ளனர். ஊடகத்துறையில் சிலர் நடுநிலை தவறி செயல்பட்டதாகக்கூறி கடந்தமுறை திட்டமிட்ட பிரசாரத்தைக் கிளப்பியவர்கள், தற்போது பெண் ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதலுக்காகக் கையில் எடுத்தியிருக்கும் ஆயுதம்... ஆபாசம்.

பெண் ஊடகவியலாளர்கள் இழிவுபடுத்தப்பட்டதைக் கண்டித்து போராட்டம்
பெண் ஊடகவியலாளர்கள் இழிவுபடுத்தப்பட்டதைக் கண்டித்து போராட்டம்

தங்கள் சித்தாந்தத்துக்கு எதிரான கருத்துகளைக் கொண்ட பெண்களை சமூக ஊடகம் வழியே ஆபாசமாகச் சித்திரிப்பது, அவதூறு செய்திகளைப் பரப்புவது, அச்சுறுத்துவது என வெளிப்படையான தாக்குதலைத் தொடுத்துள்ளனர். அண்மையில், `சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவு சட்டம் 2020' (EIA Draft 2020) குறித்து கருத்து வெளியிட்ட `சென்னை தமிழச்சி' பத்மபிரியாவின் வீடியோ டிரெண்டிங் ஆனது. இதையடுத்து, சமூக ஊடகம் வழியே இவரது செல்பேசி எண், முகவரியைக் கேட்டு நேரடியாகவே மிரட்டல் விடுத்தனர். தொடர்ச்சியான மிரட்டலையடுத்து சம்பந்தப்பட்ட வீடியோ பதிவையே நீக்கிவிட்டார் பத்மபிரியா

இதற்கிடையே, ஊடகத் துறையினர் மீது இதுபோன்ற திட்டமிட்ட தாக்குதல்களை நடத்திவரும் நபர்களை, தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கண்டித்து வரும் சூழலில், சம்பந்தப்பட்ட நபர்களுக்கு ஆதரவாகவும் ஒருசில தலைவர்கள் கருத்து வெளியிட்டு வருவது இந்த விஷயத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாகவும் ஊடகத்துறையைச் சேர்ந்த பெண்களின் நடத்தையை மிக மோசமான வார்த்தைகளில் விமர்சித்து, பொதுமக்களின் வெறுப்புக்கு ஆளான பிரபலம் ஒருவர் இங்கே குறிப்பிடவே இயலாத ஆபாச வார்த்தைகளை ட்விட்டரில் பதிவிட்டார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இப்படித் தொடர்ந்து ஆபாச அர்ச்சனைகளை அரங்கேற்றி வருபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி தனிநபர்களும் பத்திரிகையாளர் சங்கத்தினரும் தொடர்ந்து புகார் அளித்து வருகின்றனர். ஆனால், சமூக அந்தஸ்து மற்றும் அரசியல் பின்புலத்தோடு இயங்கிவரும் இம்மாதிரியான நபர்கள் மீது காவல்துறையின் நடவடிக்கைகள் தீவிரமாக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டுகளும் பரவலாக எழுந்துள்ளன.

அண்மையில், பெண்களைப் பற்றி தொடர்ச்சியாக ஆபாச கருத்துகளைப் பதிவிட்டுவந்த நபரை, பெண் பத்திரிகையாளர் மன்றம் அளித்த புகாரின் பேரில், மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர். ஆனால், அடுத்த சில மணி நேரங்களில், சொந்த ஜாமீனில் வெளிவந்த அந்த நபர் மீண்டும் தனது ஃபேஸ்புக் பதிவில், `என்னை ஒண்ணும் **** முடியாது...' என்று பதிவிட்டு, அதிகார மையங்களுக்கே சவால் விடுத்தார். காரணம்... இந்தச் சம்பவத்தின் பின்னணியில் இவருக்கு ஆதரவாகச் செயல்பட்ட அரசியல் தலைவர்களின் தலையீடுகள்தான் என்கின்றனர் விவரமறிந்தவர்கள். சம்பந்தப்பட்ட நபர் ஜாமீனில் வெளிவந்ததைப் பாராட்டி, தேசியக் கட்சியின் தலைவர் ஒருவர் வெளிப்படையாகவே ட்வீட் செய்தது இங்கே குறிப்பிடத்தக்கது.

ஊடகவியலாளர் மீதான தாக்குதலை தடுத்து நிறுத்தக்கோரி புகார் மனு அளித்த 'ஊடகவியலாளர் கண்காணிப்பு குழு'
ஊடகவியலாளர் மீதான தாக்குதலை தடுத்து நிறுத்தக்கோரி புகார் மனு அளித்த 'ஊடகவியலாளர் கண்காணிப்பு குழு'

இந்தப் பிரச்னை குறித்துப் பேசும் அரசியல் விமர்சகர்கள், ̀முற்போக்கு சிந்தனைகளில் ஊறிப்போன மாநிலமாக விளங்கிவரும் தமிழ்நாட்டில், தங்களது சித்தாந்தங்களைப் பரப்புவதில் ஏற்பட்டுள்ள சிரமமும் அதைத்தொடர்ந்த கோபமும்தான் சம்பந்தப்பட்டவர்களின் மனநிலையை வெறியூட்டக்கூடியதாக மாற்றியிருக்கிறது' என்கின்றனர்.

தொலைக்காட்சி ஊடகத்தில் பணிபுரிந்து வரும் பனிமலர் பன்னீர்செல்வம், சமூக வலைதளங்களிலும் பொதுவெளியிலும் முற்போக்கு சிந்தனையாளராக அறியப்பட்டு வருகிறார். இதைத்தொடர்ந்து தனிப்பட்ட இவரது செயல்பாடுகளை சமூக ஊடகம் வழியே கொச்சையாக விமர்சித்துவந்த எதிர்தரப்பினர் தற்போது பாலியல் ரீதியிலான தாக்குதல்களையும் இவர் மீது தொடுக்க ஆரம்பித்துள்ளனர்.

இதுகுறித்துப் பேசுகிற பனிமலர் பன்னீர்செல்வம், ``வலதுசாரி அரசியலில் இருக்கிறவர்களும், அவர்களது ஆதரவாளர்கள் என்று சொல்லிக்கொள்பவர்களும் தொடர்ந்து பெண் பத்திரிகையாளர்களைக் கேவலப்படுத்தி வருகின்றனர். பொதுவெளியில், முற்போக்குக் கருத்துகளை நான் பேசிவருவதால், என்னை முடக்க நினைத்தவர்கள் சமூக ஊடகம் வழியே எனக்கு ஆபாச வீடியோக்களை அனுப்பி வைத்தனர். இதுபோன்ற மனநோயாளிகளை நாம் கவனத்தில் கொள்ளக்கூடாது என்பதால், சம்பந்தப்பட்டவர்களது கணக்குகளை மட்டும் ப்ளாக் செய்துவிட்டு எப்போதும் போல் என் பணியைத் தொடர்ந்துவந்தேன்.

என்னுடைய இந்தச் செயல்பாடு, அவர்களுக்குக் கூடுதல் கோபத்தைத் தந்திருப்பதால் அடுத்தகட்டமாக என் பெயரிலேயே எட்டுக்கும் மேற்பட்ட போலியான கணக்குகளை சமூக வலைதளத்தில் உருவாக்கி, அதன் மூலம் என் பெயரைக் களங்கப்படுத்தி வருகின்றனர். போலியான இந்தக் கணக்குகளை நீக்கக்கோரி ட்விட்டர் நிர்வாகத்துக்கும் ரிப்போர்ட் செய்திருக்கிறேன்.

பனிமலர் பன்னீர்செல்வம்
பனிமலர் பன்னீர்செல்வம்

வலதுசாரிகள் என்ற அரசியல் பின்புலத்தோடு, பாலியல் ரீதியாகப் பெண்களைத் தாக்குவதுதான் இவர்களது முதன்மையான நோக்கம். அதனால், கருத்து ரீதியாக இயங்கிவரும் எங்களைப் போன்றவர்களை மட்டுமல்லாது சமூக வலைதளங்களில் இயங்கிவரும் பொதுவான பெண்களையும்கூட தங்கள் வக்கிர புத்தியினால் அசிங்கப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்'' என்றார் கொதிப்புடன்.

இந்த நிலையில், ஊடகவியலாளர்களை மிரட்டுவோர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, `தமிழ்நாடு பெண் ஊடகவியலாளர்கள் மையம்' காவல்துறையில் புகார் மனு அளித்துள்ளது.

இந்த மையத்தின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான கவின்மலர், இந்த விவகாரம் குறித்துப் பேசும்போது,``மதம் - சாதி வெறிக்கு எதிரான கருத்துகளைக் கொண்ட அனைவரையுமே அசிங்கப்படுத்துவதுதான் இதுமாதிரியான நபர்களின் செயல்பாடாக இருக்கிறது. அதனால்தான் ஆண் ஊடகவியலாளர்கள் மீதும்கூட பாலியல் ரீதியான தாக்குதலை ஏற்கெனவே தொடுத்தார்கள். பெண்கள் என்று வரும்போது, குறிப்பாகத் தனிப்பட்ட அவர்களது நடத்தையைக் கேவலப்படுத்துகிற நோக்கில், தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்கள்.

2013-ம் ஆண்டிலேயே என் மீது இதுமாதிரியான அவதூறுகளை வீசினார்கள். அப்போதிலிருந்தே இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காவல்துறையில், நானும் புகார் அளித்துவருகிறேன். ஆனாலும்கூட யாரொருவர் மீதும் உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்படாததால், தொடர்ந்து இன்றளவிலும்கூட குறிப்பிட்ட அந்த நபர்கள் தொடர்ந்து இதுபோன்ற கீழ்த்தரமான செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.

கவின்மலர்
கவின்மலர்

ஊடகத்தின் வழியே வெளிப்படையாக இதுபோன்ற அசிங்கங்களில் ஈடுபட்டு வருகிறவர்களின் பின்னே மிகப்பெரிய அரசியல் பின்புலம் இருக்கிறது. குறிப்பிட்ட அரசியல் தலைவர் ஒருவரேகூட இதுபோன்ற மோசமான நபர்களுக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்து கருத்துப் பதிவிடுகிறார். அண்மையில், புகாரின் பேரில் கைதாகியிருந்த நபர் ஒருவர், `இத்தனை நாள்களாக காவல்துறையையும் ஆளுங்கட்சியையும் நான் ஆதரித்துப் பேசியதற்கு இதுதான் பரிசா...' என்று கேள்வி கேட்டு ஒரு பதிவை வெளியிடுகிறார். உடனே அடுத்த சில மணி நேரத்தில், விடுதலையாகி விடுகிறார். ஆக, இதன் பின்னணியில் தமிழக அமைச்சர்கள் சிலரே ஈடுபட்டிருக்கிறார்ளோ என்ற ஐயத்தை அந்த விடுதலை கிளப்புகிறது.

இப்படியான பின்னணிகள் இருப்பதால்தான், சம்பந்தப்பட்டவர்கள் மீது நான் புகார் கொடுத்தும்கூட புகாரே பதிவு செய்யாமல் இருந்தது காவல்துறை. பின்னர் நான் நீதிமன்றம் சென்று உத்தரவு வாங்கிவந்த பிறகுதான் முதல் தகவல் அறிக்கையே பதிவு செய்தார்கள்'' என்கிறார் ஆதங்கத்துடன்.

இந்தநிலையில், பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி ஊடகவியலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும்விதத்தில் ஊடக கண்காணிப்புக் குழு ஒன்றைக் கட்டமைத்துள்ளன தமிழக எதிர்க்கட்சிகள். இந்தக் குழுவின் சார்பில், தமிழக காவல்துறை இயக்குநரிடமும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதில், `மத்திய - மாநில ஆளுங்கட்சியைச் சேர்ந்த ஆதரவாளர்கள் சிலர், பெண் ஊடகவியலாளர்கள் மீது தனிநபர் தாக்குதல்களையும் தரம்கெட்ட ஆபாச விமர்சனங்களையும் செய்துவருவதை தடுத்து நிறுத்தி, அவர்களது பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும்' என்று கோரப்பட்டுள்ளது.

தொலைக்காட்சி நேரலை விவாதங்களின்போது, கருத்துகளை எதிர்கொள்ள முடியாதவர்களால் தனி நபர் தாக்குதலுக்கு உள்ளான சமூக செயற்பாட்டாளரும் எழுத்தாளருமான தோழர் சுந்தரவள்ளி, இந்தப் பிரச்னை குறித்துப் பேசும்போது, ``மக்களை எளிதாகப் போய்ச் சேருகிற சமூக ஊடகத்தைக் கைப்பற்றி, அதில் ஆள்களை வேலைக்கு அமர்த்தி, பொய்களை மட்டுமே பரப்பி ஆட்சிக்கு வந்தவர்கள்தாம் இப்போது தமிழ்நாட்டிலும் அந்த வேலையைச் செய்யப் பார்க்கிறார்கள். ஆனால், இவர்களது மதவாதத்தையும் சாதியப் பிரிவினைகளையும் புரிந்துகொண்ட மக்கள்தாம் தமிழ்நாட்டில் அதிகம். இதைக் கடந்த நாடாளுமன்றத் தேர்தல் தோல்வியிலேயே தெளிவாகத் தெரிந்துகொண்டார்கள். அதனால்தான், இப்போது இதை உடைத்தெறிகிற வேலையை கையில் எடுத்திருக்கிறார்கள்.

சுந்தரவள்ளி
சுந்தரவள்ளி

இதன் ஒருபகுதியாகத்தான் கல்லூரி மாணவர்கள் தங்களுடைய சமூக ஊடக கணக்குகளை பல்கலைக்கழகங்களில் தெரிவிக்க வேண்டும் என்று சொன்னார்கள். மேலும், சமூக ஊடகத்தில் தங்களுக்கு எதிரான கருத்துகளைப் பதிவிடும் இளைஞர்களையும் மிரட்டி வருகிறார்கள். இப்படிப் பொதுமக்களை கருத்தற்றவர்களாக மாற்றுவதன் பின்னணியில் உள்ள அரசியலை எடுத்துச் சொல்லி மிகக்கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறோம் நாங்கள்.

மேலும், இவர்கள் செய்துவருகிற அரசியல் சூழ்ச்சிகளை மக்களிடம் எடுத்துச் செல்கிற வகையில் எங்களது `செம்புலம்' யூடியூப் சேனல்வழியாகவும் நிறைய கேள்விகளை முன்வைத்து வருகிறோம். இதனாலேயே எங்கள் சேனலை முடக்க முயற்சி செய்தனர். பின்னர், நேரடியாக என் போன்றவர்களுக்கு மிரட்டல் விடுத்தனர். ஆனால், இவர்களது பூச்சாண்டிகளுக்கெல்லாம் பயப்படாத என் போன்ற பெண்களை இப்போது பாலியல் ரீதியாகத் தாக்குதல் நடத்தி துரத்தியடிக்க முயற்சி செய்கிறார்கள்.

இதில், சாமான்ய பெண்களைவிடவும் அரசியல் புரிதல் இருக்கிற, எழுத்து வளமை இருக்கிற, மக்களிடம் ஒரு கருத்தை எளிய முறையில் சொல்லும் திறமை இருக்கிற பெண்கள்மீதுதான் இதுபோன்ற தாக்குதல்கள் அதிகமாகியிருக்கிறது. இதற்காகவே, ஒவ்வொரு பெண்ணையும் நடத்தை ரீதியாக அவதூறு செய்யும்விதத்தில், போலியான ஒரு பட்டப்பெயரை சூட்டுகிறார்கள். பின்னர் திரும்பத் திரும்ப அதை சமூக ஊடகத்தில் பரப்பிக்கொண்டே இருக்கிறார்கள். இதற்கும் அடங்காத என் போன்றவர்களை, புகார் கொடுத்து கைது செய்வதற்கான முயற்சிகளையும் ஒருபக்கம் செய்துகொண்டிருக்கிறார்கள்.

ஆனால், இவை எதற்குமே அஞ்சாதவர்களை அடக்குவதற்காக `கல்புர்கியும் கௌரி லங்கேஷும் எங்களுக்கு நினைவுக்கு வருகிறார்கள்' என்பது போன்ற பதிவுகளை வெளியிட்டு எங்கள் உயிருக்கும் மிரட்டல் விடுக்கிறார்கள். இதுபோன்ற மிரட்டல்கள் மூலம், பொதுவெளியில் தங்களுக்கு எதிரான கருத்துகளைப் பேசுகிற பெண்கள் யாரும் வரவிடாமல் செய்துவிடமுடியும் என்று நம்புகிறார்கள்.

புகார் மனு
புகார் மனு

படித்து, வேலைக்குச் சென்று, குறிப்பிட்ட சித்தாந்தப் பின்புலத்தோடு அரசியலையும் புரிந்துகொண்டு போராடிக்கொண்டிருக்கும் பெண்களை, மறுபடியும் கூட்டுக்குள் அடைக்கிற முயற்சி செய்கிறார்கள்; இதற்காகவே இத்தனை ஆபாச வசவுகள், அவமானங்களை திட்டமிட்டு பரப்புகிறார்கள். இத்தனையையும் சட்டம் - ஒழுங்கு வேடிக்கை பார்த்துக்கொண்டேதான் இருக்கிறது'' என்றார் ஆவேசமாக.

இந்நிலையில், பெண்கள் மீது இதுபோன்ற ஆபாசத் தாக்குதல்களை நடத்துவோரின் மனநிலை குறித்தும், இதுபோன்ற சூழல்களை பெண்கள் எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்பது குறித்தும் பேசுகிற மனநல மருத்துவர் ஷாலினி, ``ஆணைப்போலவே பெண்களுக்கும் அறிவு இருக்கிறது, மனது இருக்கிறது, அவர்களுக்கென்ற ஒரு கருத்து இருக்கிறது என்பதையெல்லாம் யோசிக்காமல், பெண்ணை வெறும் உடலாக மட்டுமே பார்க்கிறவர்கள்தான் இதுபோன்ற கீழ்த்தரமான காரியங்களை செய்துவருகிறார்கள். அதாவது, பெண்ணையும் சக மனுஷியாக மதிக்கத் தெரியாமல் அவர்களுக்கு உண்டான மரியாதையைக் கொடுத்து கவனிக்கத் தெரியாதவர்கள்தான் `நீ ஒரு பெண்தானே... உன் உடலை நீ விலைக்கு விற்கிறாயா...' என்பது போன்று மலினமாகப் பேசி பெண்களின் வாயை அடைக்கப் பார்க்கிறார்கள்.

இப்படிச் சொல்லிவிட்டால், வெட்கம், மானம், சூடு, சொரணை எல்லாம் வந்து `அய்யய்யோ... இந்த ஆண்கள் எல்லோரும் நம்மை அசிங்கப்படுத்திவிடுவார்களோ' என்று பயந்து பெண்கள் பேசாமல் இருந்துவிடுவார்கள் என்று நினைக்கிறார்கள். 100 வருடங்களுக்கு முன்பு வேண்டுமானால், இது சாத்தியமாகி இருக்கலாம். இது ரொம்பவும் பழைய உத்தி!

ஷாலினி
ஷாலினி

100 வருடங்களுக்கு முன்பேகூட, இந்த மண்ணில் சமூக செயற்பாட்டாளர்களாக விளங்கிய தர்மாம்பாள் அம்மையார், மீனாம்பாள் சிவராஜ் போன்ற பெண்மணிகள் இதுபோன்ற ஆண்களின் மிரட்டல்களுக்கும் அவதூறுகளுக்கும் பயப்படாமல், நின்று சாதித்துக் காட்டியிருக்கிறார்கள். அந்தக் காலகட்டத்தில், முதல் பெண் மருத்துவர், முதல் பெண் பொறியாளர் என சாதித்துக்காட்டியவர்களையும்கூட, `பெண் பிள்ளையாக வீட்டில் அடக்க ஒடுக்கமாய் இராமல், உனக்கெதுக்கு இந்த வேலை' என்றெல்லாம் பேசி, அவர்களைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர ரொம்பவே மெனக்கெட்டிருக்கிறார்கள்.

ஆக எந்தெந்தத் துறையில் பெண்கள் தங்கள் தனித்திறனை முன்னிறுத்தி முன்னேறி வரும்போதும் இதுபோன்ற பழைய டெக்னிக்குகளைப் பயன்படுத்தி `ஆஃப்' செய்ய விரும்பும் ஆண்கள் தொன்றுதொட்டே இருந்துவந்திருக்கிறார்கள். உண்மையான ஆண்கள், பெண்களின் முன்னேற்றத்துக்கு உறுதுணையாக இருப்பார்கள்; மாறாக குறையுள்ள ஆண்கள்தான் தங்களது இயலாமையை மறைப்பதற்காக இதுபோன்று நெகட்டிவாக பேசுவார்கள். எனவே, `இதையெல்லாம் காதிலேயே வாங்கிக்கொள்ளாமல் நம் வேலையை நாம் சரியாக செய்துகொண்டிருப்போம்' என்று புறக்கணித்த பெண்கள்தான் அவரவர் துறைகளில் வெற்றி பெற்று வந்திருக்கிறார்கள். இந்த வரலாற்றை நாமும் புரிந்துகொண்டு, அடுத்தடுத்த கட்டத்துக்கு நகர்ந்துகொண்டே இருக்க வேண்டும்!'' என்கிறார் நம்பிக்கை ஊட்டும் வார்த்தைகளில்.