Published:Updated:

`ஜி.டி நாயுடு கூறிய வார்த்தைகள்’ - ராணுவத்துக்கு வாரிக் கொடுத்த முன்னாள் வீரர்

``ராணுவப்படையிலிருந்து ஒரு ராணுவ வீரரை வெளியேற்றலாம். ஆனால், ராணுவ வீரரிடம் உள்ள ராணுவத்தை வெளியே எடுக்க முடியாது” என்று ஒரு பழமொழி கூறுவதுண்டு. அதற்கேற்ப செய்துகாட்டியுள்ளார் முன்னாள் விமானப்படை வீரர் ஒருவர்.

ராணுவத்துக்காகப் பணம் அளித்த முன்னாள் வீரர்
ராணுவத்துக்காகப் பணம் அளித்த முன்னாள் வீரர் ( ANI )

சி.பி.ஆர் பிரசாத் என்பவர் பல வருடங்களுக்கு முன்பு இந்திய விமானப்படையில் பணியாற்றி வந்துள்ளார். அவர் அங்கு வேலை செய்துகொண்டிருக்கும்போதே அதிக சம்பளம் பெற வேண்டும் என்பதற்காக ரயில்வே துறையில் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றுள்ளார். ரயில்வேயில் தேர்ச்சி பெற்றதால் தன் விமானப்படை வேலையை ராஜினாமா செய்துவிட்டு ரயில்வே பணிக்காகக் காத்திருந்துள்ளார்.

சி.ஆர்.பி பிரசாத்
சி.ஆர்.பி பிரசாத்
ANI

ஆனால், துரதிர்ஷ்டவசமாகப் பிரசாத்துக்கு ரயில்வே பணி கிடைக்காமல் போயுள்ளது. இதனால் மிகுந்த சிரமப்பட்ட அவர் கடன் வாங்கி ஒரு கோழிப் பண்ணையைத் தொடங்கியுள்ளார். முதலில் சற்று மந்தமாக ஓடிய பண்ணை பின்னர் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இதனால் பிரசாத் நன்றாகச் சம்பாதித்து கோடீஸ்வரர் ஆகியுள்ளார். இருந்தும் நாட்டுக்காகத் தன்னால் எதுவும் செய்ய முடியவில்லையே என்ற கவலையிலிருந்த அவர், சமீபத்தில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை நேரில் சந்தித்து தன் வாழ்நாள் முழுவதும் சேமித்த பணம் 1.8 கோடி ரூபாயை இந்திய ராணுவத்துக்கு வழங்கியுள்ளார்.

அவர் வழங்கிய பணம் ராணுவ வீரர்களின் மேம்பாட்டுக்காகப் பயன்படுத்தப்படும் என ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். இது பற்றிப் பேசிய பிரசாத், ``நான் விமானப்படையில் பணிபுரிந்து கொண்டிருக்கும்போது தமிழக அறிவியல் அறிஞர் ஜி.டி நாயுடு விமானப்படை நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுப் பேசினார்.

நாம் வரும்போது எதையும் கொண்டு வரவில்லை. போகும்போதும் எதையும் கொண்டுபோகப்போவதில்லை. நம் குடும்பம் சார்ந்த கடமைகள் முடிந்த பிறகு, நாட்டுக்காக நாம் ஏதேனும் செய்ய வேண்டும். நம் முன்னோர்கள் அப்படிச் செய்ததன் விளைவாகத்தான் இன்று இந்தியா செழித்துள்ளது
ஜி.டி நாயுடு

அவரின் வார்த்தைகள் என் மனதில் பசைபோல அப்படியே ஒட்டிக்கொண்டன. எனவே, நான் சேமித்து வைத்திருந்த பணத்தை ராணுவத்துக்காக அளித்துள்ளேன். இப்போதுதான் என் மனது நிம்மதியடைந்துள்ளது. அன்று நான் வெறும் ஐந்து ரூபாயுடன் வீட்டைவிட்டு வெளியேறினேன். தற்போது 500 ஏக்கர் நிலம் என்னிடம் உள்ளது.

அதன் மூலம் சம்பாதித்ததில் 2 சதவிகிதத்தை என் மகளுக்கும் ஒரு சதவிகிதத்தை என் மனைவிக்கும் அளித்துவிட்டு மீதமுள்ள 97 சதவிகிதத்தை சமூகத்துக்காகவும் நாட்டுக்காகவும் தந்துவிட்டேன். என்னிடம் உள்ள சொத்தில் 50 ஏக்கரில் ஒரு விளையாட்டு வளாகம் கட்டியுள்ளேன். இன்னும் ஒரு 50 ஏக்கர் நிலத்தில் மற்றொரு வளாகம் கட்டிக்கொண்டு உள்ளேன். அதற்கான பணிகள் நடந்து வருகின்றன.

பிரசாத் அளித்த பணம்
பிரசாத் அளித்த பணம்
ANI

இதில் ஒன்று சிறுவர்களுக்காகவும் மற்றொன்று சிறுமிகளுக்காகவும் கட்டியுள்ளேன். ஒலிம்பிக்கில் பங்கேற்று தங்கம் வெல்ல வேண்டும் என்பது எனது சிறு வயது கனவு. ஆனால், அது நிறைவேறாமல் போனது. அதனால் கடந்த 20 வருடமாகக் குழந்தைகளுக்கு விளையாட்டு கற்பித்து வருகிறேன். அவர்களுக்காகவே வளாகம் கட்டியுள்ளேன்” எனக் கூறியுள்ளார்.