Published:Updated:

ஏனென்றால் மார்க்ஸ், நீங்கள் மிகச் சரியானவர்! #KarlMarx

Karl Marx
News
Karl Marx

முதலாளிகளின் பிடியில் சிக்கி, அவர்களின் பேராசைக்கு இரையாக காலங்காலமாய் சுரண்டலுக்கு உள்ளாகி, பசி, வறுமை, போராட்டம் ஆகியவற்றை மட்டுமே வாழ்நாள் முழுவதும் அனுபவித்துவந்த பாட்டாளி வர்க்கத்தினருக்கு விடி வெள்ளியாய்த் தோன்றிய அசாதாரண சிந்தனையாளர்தான் கார்ல் மார்க்ஸ்.

``உலகின் வரலாற்றுப் பக்கங்களை திரும்பிப் பார்த்தால், அது உயிர்ப்புடன் இருக்க தூண்டுகோலாக இருப்பது புரட்சிகள் மட்டுமே!”

தன் மனத்தில் எழுந்த இந்தக் கருத்தை வெறும் சொற்களாக மட்டும் உதிர்க்காமல், மனித குலத்தின் மாபெரும் புரட்சியை மெய்யாக்கிக் காண்பித்த கார்ல் மார்க்ஸின் பிறந்த தினம் இன்று. முதலாளிகளின் பிடியில் சிக்கி, அவர்களின் பேராசைக்கு காலங்காலமாய் சுரண்டலுக்கு உள்ளாகி, பசி, வறுமை, போராட்டம் ஆகியவற்றை மட்டுமே வாழ்நாள் முழுவதும் அனுபவித்துவந்த பாட்டாளி வர்க்கத்தினருக்கு விடி வெள்ளியாய்த் தோன்றிய அசாதாரண சிந்தனையாளர்தான் கார்ல் மார்க்ஸ். அவர் வகுத்த கொள்கைகள், கோட்பாடுகளின் ஆழத்திற்குச் செல்லாமல் அவரின் வாழ்க்கைப் பக்கங்களை ஒரு முறை புரட்டிப்பார்த்தால், கார்ல் மார்க்ஸுக்கு வாழ்க்கை அவ்வளவு எளிதானதாக இருக்கவில்லை என்பதைப் புரிந்துகொள்ள முடியும். உலகத் தொழிலார்களின் வாழ்கையை மாற்ற தனது சிந்தனையைக் கூர் தீட்டிக்கொண்டிருந்த நேரத்தில், கார்ல் மார்க்ஸுக்கு பிறந்த ஏழு பிள்ளைகளில் நான்கு பேர் பசியின் கொடுமைக்குப் பலியாகுமளவுக்கு அவரின் குடும்பம் வறுமையின் கோரப் பிடியில் சிக்கியிருந்தது. இவ்வளவு இன்னல்களைச் சந்தித்த போதிலும், உலகின் தலைசிறந்த சித்தாந்தத்தை வகுத்த அவர், காதல், நட்பு என அனைத்தையும் ஒருசேரப் பெற்று வாழ்ந்தார் என்பதே உண்மை.

கார்ல் மார்க்ஸ்
கார்ல் மார்க்ஸ்

பிரஷ்யா என்றழைக்கப்படும் இன்றைய ஜெர்மனியின் ரைன் நதியோர ‘ட்ரையர்’ நகரில் ஒரு யூத குடும்பத்தில் பிறந்தவர், கார்ல் மார்க்ஸ். அன்றைய காலகட்டத்தில், கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் ஆதிக்கத்தால் பல யூதக் குடும்பங்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழக்கவே, வேறு வழியில்லாமல் மார்க்ஸின் குடும்பமும் ப்ராட்டஸ்டன்டுக்கு மதம் மாறியது. சிறுவனான மார்க்ஸுக்கு தந்தை ஹென்ரிச் எல்லையற்ற சுதந்திரத்தை வழங்கினார். முதன்முதலில் தனது 12-ம் வயதில் பள்ளிக்குச் சென்றபோது, தனது நோட்டுக்குள் தந்தையின் புகைப்படத்தை எடுத்துவைத்த மார்க்ஸ், அப்பழக்கத்தை தனது வாழ்நாள் முழுவதும் கைவிடவே இல்லை. சிறுவயதில் மார்க்ஸ் ஒரு புரியாத புதிராகவே இருந்தான், பிறரிடம் மிகவும் முரட்டுத்தனமாய் நடந்துக்கொள்வான். படிப்பிலும் கவனம் இல்லை. தன் மனத்தில் எரிமலைக் குழம்பாய் கொதித்த எண்ணங்களை வெளிப்படுத்த முடியாமல் தவித்தான். அந்த முரட்டுச் சிறுவனின் மனத்தில் தோன்றிய சிறு சிறு எண்ணங்களே பிற்காலத்தில் உலகின் மூலை முடுக்குகளை அலை அலையாகத் தாக்கும் என்பதை அப்போது யாரும் உணர்ந்திருக்கவில்லை.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

பள்ளிப் படிப்பு முடிந்ததும், தத்துவம் படிக்க விரும்பிய அவரை வலுக்கட்டாயமாக சட்டப்படிப்பில் சேர்த்தார், மார்க்ஸின் வக்கீல் தந்தை. சிறிதும் விருப்பம் இல்லாமல் பான் நகர பல்கலைக்கழகத்தில் சேர்ந்த மார்க்ஸின் அட்டூழியங்கள் அவரின் பெற்றோருக்குத் தலைவலியாக மாறியது. முழுநேரமும் மது விடுதியிலேயே இருந்த அவரை ஒரு முறை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். வேதனை தாங்காமல் தன் மகனை வீட்டுக்கு அழைத்துவந்தார் தந்தை. மீண்டும் பெர்லின் பல்கலைக்கழகத்தில் சேரவிருந்தார் மார்க்ஸ். இடைப்பட்ட அந்த இரண்டு மாதத்தில்தான் பூக்கத் தொடங்கியது உலகின் தலைசிறந்த, மிக அழகிய, ஒப்பற்ற ஒரு காதல் கதை. ரைன்லாந்து பகுதியைச் சேர்ந்த பிரபுக்களின் வம்சத்தில் பிறந்த ஜென்னி என்னும் பேரழகிக்கு ட்ரையர் நகரமே மதிமயங்கிக்கிடந்த நாள்கள் அது. மார்க்ஸின் சகோதரி சோபியாவின் நெருங்கிய தோழிதான் இந்த ஜென்னி. பல்கலையின் மோசமான நடத்தை காரணமாக, கார்ல் மார்க்ஸ் பெட்டி படுக்கையுடன் வீடு திரும்புகிறார் என்பதை கேள்விப்பட்டவுடன், ஜென்னி மனத்தில் கார்ல் மார்க்ஸ் பற்றி ஒரு ஆர்வம் தொற்றிக்கொண்டது. வீடு திரும்பிய மார்க்ஸ், தன்னைவிட நான்கு வயது மூத்த ஜென்னியைப் பார்த்த மறுநொடியில் அவரை காதல் ஆட்கொண்டது. ஜென்னியும் தன்னை விரும்புகிறாள் என்பதை விரைவிலேயே அறிந்து கொண்டார் மார்க்ஸ்.

கார்ல் மார்க்ஸ் மற்றும் ஏங்கெல்ஸ்
கார்ல் மார்க்ஸ் மற்றும் ஏங்கெல்ஸ்

கார்ல் மார்க்ஸ் மற்றும் ஜென்னியின் காதல், அவர்கள் இருவருக்கு மட்டுமல்லாமல் உலக பாட்டாளி மக்கள் அனைவரின் வாழ்விலும் வெளிச்சத்தைப் பாய்ச்சியது. இதுதான் கார்ல்மாக்ஸ்- ஜென்னி காதலை மேலும் புனிதமாக்கியது. கருமை நிறம், கரடு முரடனா தாடி என கார்ல் மார்க்ஸ் ஒரு புறம், அழகில் மட்டுமின்றி குணத்திலும் சிறந்த ஜென்னி மறுபுறம். பெரிய பின்புலத்தை உடைய தன் காதலியை மணக்க இருந்த மார்க்ஸ், திருமணத்துக்கு முன்னதாக குறைந்தபட்சம் ஒரு நல்ல வேலையிலாவது இருக்க வேண்டும் என நினைத்தார். ஜென்னியிடம் விடைபெற்று, தத்துவத்தில் டாக்டர் பட்டம் பெற பெர்லின் விரைந்தார் மார்க்ஸ். அதுதான் வரலாற்று மாற்றத்திற்கான தொடக்கப் புள்ளி.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பெர்லின் பல்கலைக்கழகத்தில் அறிவுத் தாகம் அவரை வாட்டி எடுத்தது. கல்லூரி நாள்களின் பெரும்பாலான நேரத்தை புத்தகம் வாசிப்பதிலேயே செலவிட்டார் மார்க்ஸ். காரசார விவாதங்கள் பலவற்றில் பங்கேற்றார். கலந்துரையாடல் மற்றும் விவாதங்களில் கார்ல் மார்க்ஸ் பங்கேற்க வருகிறார் என்றாலே அங்கே பெருங்கூட்டம் கூடிவிடும். அவரின் அறிவுத் திறனைக் கண்டு பல பேராசிரியர்கள் வலிய வந்து தோழர்கள் ஆனார்கள். மறுபுறம், தன் இனிய காதலி ஜென்னிக்கு கடிதங்கள் அனுப்புவதையும் அவர் தவறவில்லை. மார்க்ஸ், ஜென்னிக்கு எழுதிய காதல் கடிதங்களை இன்று வாசித்தாலும் அத்தனை உயிர்ப்புடன் இருக்கும்.

கார்ல் மார்க்ஸ்
கார்ல் மார்க்ஸ்

மார்க்ஸின் கனவுகளுக்கு இறக்கை முளைத்து, அறிவுத் தேடல் அவரை வெகு தூரம் அழைத்துச்சென்றுவிடவே, பல சமயங்களில் ஜென்னிக்கு கடிதம் அனுப்பத் தவறிவிடுவார். கார்ல் மார்க்ஸின் காதலுக்கு முதல் எதிரியாக அவரின் தந்தை ஹென்ரிச்தான் இருந்தார். அவர், ஜென்னியிடத்தில், ``உன்னுடைய குணத்துக்கு என் மகன் தகுதியானவன் கிடையாது, அதனால் அவனுக்காக காத்திருக்காதே” என்று கூறிப்பார்த்தார். தன் காதலில் உறுதியாய் இருந்த ஜென்னி அதற்கு செவி சாய்க்கவில்லை. மிக நீண்ட காத்திருப்புக்குப் பிறகு, தன் அன்புக் காதலன் மார்க்ஸை பலத்த போராட்டத்துக்குப் பிறகு மணந்தார் ஜென்னி. மன்னராட்சியை எதிர்த்து புரட்சி செய்த மார்க்ஸ், பிரபுக்களின் குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணை மணந்துள்ளதால், அவரின் கொள்கைகளின் மீது மற்றவர்களுக்கு சந்தேகம் எழத்தானே செய்யும். இதனால், தன் குடும்பத்தைவிட்டு நிரந்தரமாகப் பிரிய ஜென்னி முடிவுசெய்தார். குடும்பத்தை விட்டுப் பிரிந்து, மார்க்ஸுடன் ஜென்னி பாரீசுக்கு குடிபெயர்ந்தார்.

பாரீசில் பத்திரிகையாளர் பணியில் சேர்ந்த மார்க்ஸ், `ஜெர்மன் பிரஞ்சு மலர்’ என்னும் இதழில் எழுதிய புரட்சிக் கட்டுரைகள் ஆட்சியாளர்களிடையே மிகுந்த கோபத்தை உண்டாக்கியது. லண்டனைச் சேர்ந்த ப்ரெட்ரிக் ஏங்கல்ஸ் என்பவர் எழுதி வெளியான பொருளாதாரக் கட்டுரைகள்மீது ஈர்ப்பு ஏற்படவே, மார்க்ஸ் அதை தனக்கு வேண்டிய இடங்களில் மேற்கோள்காட்டவும் தவறவில்லை. மார்க்ஸைப் பற்றி ஏங்கல்ஸும் கேள்விப்படவே, அந்த இரு ஆளுமைகளும் சந்தித்துக்கொண்டனர். அந்தத் தருணத்தில், உலகில் புதிய விதை ஒன்று விதைக்கப்பட்டது. அப்போதுவரை, சிந்தனையில் மட்டுமே புரட்சியை ஏற்படுத்திவந்த மார்க்ஸ் மற்றும் ஏங்கல்ஸ், உடனடியாகக் களத்தில் இறங்கினர்.

அன்றைய காலக்கட்டத்தில், அவர்கள் இரண்டு பிரச்னைகளை மிக முக்கியமானவையாகக் கருதினர். ஒன்று, வேர்வை சிந்தி உழைக்கும் தொழிலாளர்களைக் கண்டு முகம் சுளிக்கும் போலி கம்யூனிஸ்ட்டுகள், மற்றொன்று ஜெர்மனி பிரான்ஸில் நடந்தேறிய தொழிலாளர்களுக்கு எதிராக அரங்கேற்றப்பட்ட கொடூரமான செயல்கள். ஒருகட்டத்தில், மார்க்ஸ் நடத்திவந்த ‘முன்னேற்றம்’ பத்திரிகை தடைசெய்யப்பட்டு, 30 வயதுகூட ஆகாத அவரை நாடுகடத்த முடிவுசெய்தது அரசு. பெல்ஜியம் நாட்டிற்கு குடும்பத்துடன் குடிபெயர்ந்தார் மார்க்ஸ். அங்கு இன்னும் கெடுபிடிகள், மிரட்டல்கள். எதற்கும் அசரவில்லை அவர். அனைத்தையும் புன்னகையுடன் எதிர்கொண்ட மார்க்ஸின் பெரிய பலமே ஜென்னிதான்.

கார்ல் மார்க்ஸ் ஜென்னி ஜோடி
கார்ல் மார்க்ஸ் ஜென்னி ஜோடி

இரு நண்பர்களின் வழிகாட்டுதலின்படி லண்டனில் `பொதுவுடைமை சங்கம்’ உதயமானது. தொழிலாளர்கள் தங்களை கம்யூனிஸ்ட் என அழைக்கத் தொடங்கினர். 1847- ம் ஆண்டு, லண்டனில் உலகின் மாபெரும் தொழிலாளர் மாநாடு நடந்தது. அதில் மார்க்ஸ், ஏங்கல்ஸ் இருவருக்கும் கம்யூனிஸ்ட்களுக்கான கொள்கைகளை வகுக்க அதிகாரம் வழங்கப்பட்டு, அவர்கள் தயாரித்த அறிக்கையே, கம்யூனிஸ்ட்டுகளின் புனித நூலாகப் போற்றப்படும் ``தி கம்யூனிஸ்ட் மேனிஃபெஸ்டோ” ஆகும். இந்தச் செயல், உலகத்தொழிலாளர்கள் அனைவரது மனத்திலும் மார்க்ஸுக்கென்று ஓர் நிரந்தர இடத்தை உருவாக்கியது.

``என்றும் நினைவில் கொள், ஒரு மனிதனாகப் பிறந்தவன் பயனின்றி அழியக்கூடாது” என்று கூறிய மார்க்ஸின் சித்தாந்தங்கள், இன்று வரை உயிர்ப்புடன் இருக்கின்றன. அவை, கடைசி மனிதன் உலகில் வாழும் வரை என்றென்றும் இருக்கும். ஏனென்றால், கார்ல் மார்க்ஸ் மானுட குலத்திற்கு ஒரு மிகச் சரியான பாதையைக் காண்பித்துச் சென்றவர்.

ஆம், நீங்கள் மிகச் சரியானவர் மார்க்ஸ்!