Published:Updated:

பழக்கடையில் ஆரம்பித்த பஞ்சாயத்து... பா.ஜ.க வலையில் கு.க.செல்வம் சிக்கிய பின்னணி!

கு.க.செல்வம்
கு.க.செல்வம் ( Photo: Srinivasulu / Vikatan )

எதற்காக இந்த போர்க்கொடி என்று ஒருபுறம் தி.மு.க-வில் விவாதம் நடந்து வரும் நிலையில், `யார் இந்த கு.க.செல்வம்?’ என்பதைப் பார்ப்போம்.

``ராமாவரம் தோட்டத்தில் எம்.ஜி.ஆர் இருந்தால் அங்கு செல்வமும் இருப்பார்” என்பது அ.தி.மு.க வட்டாரத்தில் அப்போது புழங்கிய சொலவடை. அந்த அளவுக்கு எம்.ஜி.ஆருக்கு கு.க.செல்வம் நெருக்கம். அதே செல்வம்தான் பின்னாளில் அறிவாலயத்தில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் இருந்தால் அவருடனேயே முழுநேரமும் இருந்தவர். தான் இருக்கும் தலைமைக்கு நெருக்கமாகவே இருந்து பழக்கப்பட்ட கு.க.செல்வம்தான் இப்போது தலைமைக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கியிருக்கிறார்.

கு.க.செல்வம்
கு.க.செல்வம்
Photo: Srinivasulu / Vikatan

சென்னை ஆயிரம் விளக்கு சட்டமன்ற உறுப்பினராகவும், தி.மு.க-வின் தலைமை நிலையச் செயலாளராகவும் இருந்த கு.க.செல்வம், கடந்த செவ்வாய்க்கிழமை அன்று டெல்லியில் பா.ஜ.க தேசிய தலைவர் நட்டாவைச் சந்தித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. பா.ஜ.க-வில் அவர் இணையப்போகிறார் என்று செய்திகள் உறுதியாக வந்த நிலையில், ``இணைவதற்காக வரவில்லை. மோடியின் நல்லாட்சியை வாழ்த்தவே வந்தேன்” என்று சொல்லிவிட்டு மறுபடியும் சென்னைக்குத் திரும்பியிருக்கிறார். கு.க.செல்வம், தி.மு.க-வின் இரண்டாம் கட்டத் தலைவர்களில் முக்கியமானவர்; கருணாநிதி குடும்பத்துக்கும், ஸ்டாலின் குடும்பத்துக்கும் நெருக்கமானவர். எதற்காக இந்தப் போர்க்கொடி என்று ஒருபுறம் தி.மு.க-வில் விவாதம் நடந்து வரும் நிலையில், `யார் இந்தக் கு.க.செல்வம்?’ என்பதைப் பார்ப்போம்.

எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்தபோது அவருக்கு வலதுகரமாக இருந்தவர் ஜேப்பியார். ஜேப்பியாருக்கு நம்பிக்கைக்குரிய நபராக அப்போது இளைஞரான கு.க.செல்வம் இருந்தார். அந்த நட்பினால் எம்.ஜி.ஆரிடம் செல்வத்தை அறிமுகம் செய்து வைத்தார். அந்த அறிமுகத்தைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்ட செல்வம், தினமும் காலையிலே ராமாவரம் தோட்டத்துக்குச் சென்று இரவுதான் வீடு திரும்புவார். எம்.ஜி.ஆர் வீட்டுக்கு வேண்டிய உதவிகளையும் செய்து வந்ததால் எம்.ஜி.ஆர் மனைவி ஜானகிக்கும் நெருக்கமான நபராக மாறினார் செல்வம். தலைமையுடனான இந்த நெருக்கத்தால் அ.தி.மு.க-வில் பவுர்ஃபுல் மனிதராகவும் வலம் வந்தார் செல்வம். அன்றைக்கு அ.தி.மு.க-வில் சென்னையில் முக்கிய புள்ளியாக விளங்கிய தி.நகர் மூர்த்தியும், கு.க.செல்வமும் நெருங்கிய நண்பர்கள். தி.நகர் மூர்த்தி, அன்பழகன் பழக்கடைக்கு எதிரே, `முத்து பழக்கடை’ என்கிற பெயரில் பழக்கடை நடத்திவந்தார்.

எம்.ஜி.ஆர் -ஜானகி
எம்.ஜி.ஆர் -ஜானகி

இரண்டு கட்சியைச் சேர்ந்தவர்களின் இந்தப் பழக்கடைப் போட்டியே அரசியல் போட்டிக்கு அடித்தளம் அமைத்தது. அன்பழகன் பழக்கடைக்குப் போட்டியாகச் செயல்பட்ட முத்து பழக்கடைதான் கு.க.செல்வத்தின் அரசியல் பேசும் இடமாக அப்போது இருந்தது. இதனால் ஆரம்பம் முதலே மறைந்த ஜெ.அன்பழகனுக்கும் கு.க.செல்வத்துக்கும் ஒத்துப்போகாத நிலை இருந்தது. அ.தி.மு.க-வில் எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு, ஜெ - ஜா என்று கட்சி பிரிந்தபோது ஜானகியின் ஆதரவாளராக இருந்தார் கு.க.செல்வம். அதற்கு ஜானகி மீது இருந்த பாசமும், ஆர்.எம்.வீரப்பனின் ஆலோசனையும் காரணமாக இருந்தது. கட்சி உடைந்த நிலையில் இரண்டு அணிகளுக்கு இடையே தொடர்ந்து பிரச்னை இருந்துவந்தது. முன்னாள் அமைச்சர் வளர்மதி அப்போது ஜானகி அணியிலிருந்தார். அவருடன் கு.க.செல்வம் இணைந்துகொண்டு போயஸ் தோட்டத்தில் உள்ள ஜெயலலிதாவின் வீட்டில் சாணியைக் கரைத்து ஊற்றும் போராட்டத்தை நடத்தினார். இதுதான் கு.க.செல்வத்தைக் கடைசிவரை ஜெயலலிதாவிடம் நெருங்கவிடாமல் செய்த நிகழ்வாகிவிட்டது.

ஜெயலலிதா 91-ம் ஆண்டு முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகு, செல்வம் அரசியல் நடவடிக்கையில் தீவிரம் காட்டாமல் தொழில்களில் தனது கவனத்தைத் திருப்பினார். ஆனால், ஜானகியம்மாவின் ஆளாகவே அப்போதும் பார்க்கப்பட்டார். ஆரம்பத்தில் கு.க.செல்வம் தொழில் தொடங்க ஜேப்பியாரும் சில உதவிகளைச் செய்தார். அதே போல் ராமச்சந்திரா பல்கலைக்கழகத்தின் வேந்தராக இருந்த ராமச்சந்திர உடையாரிடமும் எதையும் கேட்டு பெற்றுக்கொள்ளும் அளவுக்கு செல்வாக்குடன் இருந்தார் இந்தச் செல்வம். இந்தத் தொடர்புகளைப் பயன்படுத்தி தொழில்களை ஒருபுறம் விஸ்தரித்த நேரத்தில்தான் அ.தி.மு.க-வின் முதல் ஐந்தாண்டு ஆட்சி முடிவுக்கு வந்தது. அதற்கு முன்பாகவே ஜானகியம்மாள், ``அ.தி.மு.க-வில் நீ இருந்தால் வளர விடமாட்டார்கள். தி.மு.க-வுக்குச் சென்று விடு; எனக்குள்ள தொடர்புகளை வைத்து கருணாநிதியிடம் உன்னைப் பற்றிச் சொல்கிறேன்” என்று ஆலோசனை கொடுத்தார்.

கு.க.செல்வம்
கு.க.செல்வம்
Photo: Srinivasulu / Vikatan

96-ம் ஆண்டு, தி.மு.க ஆட்சிக்கு வந்தபோது சென்னை மாநகரத் தந்தையாக ஸ்டாலின் பொறுப்பேற்றார். அதன்பிறகு மீண்டும் அரசியலில் தீவிரம் காட்ட நினைத்த கு.க.செல்வம், தி.மு.க-வில் இணைந்தார். அப்போது ஜெ.அன்பழகனும் இவர் சார்ந்த தி.நகர்ப் பகுதியிலே இருந்தார். அன்பழகன் கருணாநிதியின் நம்பிக்கைக்குரிய நபராக இருந்ததால், கு.க.செல்வம் ஸ்டாலினின் ஆதரவாளராகத் தன்னை அடையாளப்படுத்த ஆரம்பித்தார். ஒரு கட்டத்தில் அன்பழகன் மாவட்டச் செயலாளராக இருந்த மேற்கு மாவட்டத்தின் மாவட்டச் செயலாளர் பதவிக்கே கு.க.செல்வம் போட்டியிட முடிவு செய்தார்.

அன்பழகன் நேரடியாகக் கருணாநிதியைச் சந்தித்து, ``இந்த ஒரு முறை எனக்கு மாவட்டச் செயலாளர் வாய்ப்பை தாருங்கள்” என்று உருக்கமாகக் கேட்டதால் கருணாநிதியே கு.க.செல்வத்தை அழைத்து, ``இந்த முறை அன்பழகன் இருக்கட்டும், அடுத்த முறை உனக்குப் பார்த்துக்கொள்ளலாம்” என்று உறுதி கொடுத்தார். அந்த அடிப்படையில்தான் 2015-ம் ஆண்டு இரண்டாவது முறையாக மாவட்டச் செயலாளர் பதவிக்கு வந்துள்ளார் அன்பழகன். அன்று அன்பழகனுக்காக விட்டுக்கொடுத்த பதவியை அன்பழகன் மறைவுக்குப் பிறகு தலைவர் தனக்குத் தருவார் என்று எதிர்பார்த்தவருக்கு அந்தப் பதவி கிடைக்காமல் போனதுதான் இப்போது போர்க்கொடி தூக்கக் காரணமாக அமைந்துவிட்டது.

கு.க.செல்வம் - நட்டா சந்திப்பு
கு.க.செல்வம் - நட்டா சந்திப்பு
பா.ஜ.கவின் `ஆபரேஷன் நார்த் தமிழ்நாடு', செம அப்செட்டில் செல்லூர் ராஜூ... டிஜிட்டல் கழுகார் அப்டேட்ஸ்

அன்று அன்பழகனுடன் மல்லுக்கு நின்றவரைச் சமாதானம் செய்ய ஸ்டாலினால் செல்வத்துக்கு வழங்கப்பட்ட பதவியே தலைமை நிலையச் செயலாளர் என்கிற பதவி. இப்போது வரை அறிவாலயத்தில் ஸ்டாலினைச் சந்திக்க செல்பவர்களை உள்ளே அனுமதிக்கும் பணியை செல்வமும், பூச்சி முருகனுமே செய்துவந்தார்கள். அந்த அளவுக்கு ஸ்டாலினுக்கு நெருக்காக இருந்தவர்தான் இப்போது தலைமை மீதே எதிர்ப்பு கொண்டுள்ளார்” என்று சொல்லி முடிக்கிறார்கள்.

கு.க.செல்வம் வகித்து வந்த தி.மு.க தலைமைச் செயற்குழு உறுப்பினர் மற்றும் தலைமை நிலையச் செயலாளர் ஆகிய பதவிகள் அவரிடமிருந்து பிடுங்கப்பட்டுள்ளன. தவிர, `அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து உங்களை ஏன் நீக்கக் கூடாது?’ என்று விளக்கம் கேட்டும் தி.மு.க தலைமை நோட்டீஸ் கொடுத்திருக்கிறது.

பா.ஜ.க-வின் இழுக்கும் தந்திரமும் தி.மு.க-வின் இழுபறி மந்திரமும் இந்தத் தேர்தலில் இன்னும் பல நாடகங்களை நமக்கு காட்டப்போகிறது என்பது மட்டும் உறுதி!

அடுத்த கட்டுரைக்கு