Published:Updated:

ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி... ஒரு ரூபாய் மருத்துவர் டு ஆந்திராவின் ராஜாவானது வரை! பிறந்த தினப் பகிர்வு

Y. S. Rajasekhara Reddy ( Photo: Twitter / YSRCParty )

ஆந்திர முன்னாள் முதல்வர், மறைந்த ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் 71-வது பிறந்ததினம் இன்று. இந்தாண்டு முதல் இந்நாள் விவசாயிகள் தினமாகக் கடைபிடிக்கப்படும் என ஆந்திர அரசு அறிவித்துள்ளது.

ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி... ஒரு ரூபாய் மருத்துவர் டு ஆந்திராவின் ராஜாவானது வரை! பிறந்த தினப் பகிர்வு

ஆந்திர முன்னாள் முதல்வர், மறைந்த ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் 71-வது பிறந்ததினம் இன்று. இந்தாண்டு முதல் இந்நாள் விவசாயிகள் தினமாகக் கடைபிடிக்கப்படும் என ஆந்திர அரசு அறிவித்துள்ளது.

Published:Updated:
Y. S. Rajasekhara Reddy ( Photo: Twitter / YSRCParty )
கடந்த ஜூலை ஒன்றாம் தேதி நாடெங்கிலும் மருத்துவர் தினம் அனுசரிக்கப்பட்டது. ஒவ்வொரு மாநிலத்திலும் சம்பிரதாயத்துக்காக மருத்துவ தினத்தை கொண்டாடிக் கொண்டிருக்க, அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தும் ஒரு அற்புதத் திட்டத்தை அந்த நாளில் தொடங்கி வைத்தார், அந்த மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி.

கொரோனா நெருக்கடிக் காலகட்டத்தில், மக்களுக்கு சிகிச்சையளிக்க, 79 மருந்துகள், 29 நவீன மருத்துவ உபகரணங்களுடன் ஒரு மினி தனியார் மருத்துவமனைக்கு நிகரான வசதிகளுடன் 1088 ஆம்புலன்ஸ்களை ஆந்திர மக்களுக்காக அளித்தார் ஜெகன் மோகன் ரெட்டி. ஒட்டு மொத்த ஆந்திரா முழுவதுமுள்ள 13 மாவட்டங்களில் இந்த ஆம்புலன்ஸ் வசதிகள் செயல்படுத்தப்படும் என்றும் கிராமங்களில் அழைத்த இருபது நிமிடங்களிலும் நகரப் பகுதிகளில் அழைத்த 15 நிமிடத்திலும் இந்த ஆம்புலன்ஸ் வந்தடையும் என்றும் அப்போது அறிவித்தார் ஜெகன் மோகன் ரெட்டி.

இதுபோன்ற அதிரடியான மற்றும் மக்களுக்குத் தேவையான நலத் திட்டங்களால் ஆந்திர மக்களின் மனங்களில் தனி இடம் பிடித்திருக்கிறார் ஜெகன். ஜெகனின் இந்த அதிரடிகளுக்கும் மக்கள் நலன் சார்ந்த திட்டங்களுக்கும் அடிப்படை மக்களுடனான அவரின் நேரடியான சந்திப்புகளும், மக்களின் தேவையறிந்து அதற்காக உடனடியாக செயல்படும் குணமே. இந்த இரண்டு விஷயங்களையும் அவர் கற்றது, அவரின் தந்தை யும் ஆந்திர முன்னாள் முதல்வருமான மறைந்த ராஜசேகர ரெட்டியிடமிருந்துதான். ஒரு ரூபாய் மருத்துவராக, தன் சொந்த ஊரில் பொது வாழ்வைத் தொடங்கி, ஆந்திராவின் தனிப்பெரும் தலைவனாக உருவெடுத்தது வரை அவர் கடந்து வந்த பாதையைப் பற்றிய சிறு குறிப்பே இந்தக் கட்டுரை.

ஜெகன் மோகன் ரெட்டி
ஜெகன் மோகன் ரெட்டி

ஆந்திரமாநிலம், புலிவெந்துலா மாவட்டத்தில், 1949-ம் ஆண்டு ஜூலை 8-ம் தேதி, ஒய்.எஸ்.ராஜா ரெட்டி, ஜெயம்மா தம்பதிக்கு மகனாகப் பிறந்தார் எடுகூரி சந்தின்டி ராஜசேகர ரெட்டி . 1958-ல் ராஜா ரெட்டி ஒப்பந்தத் தொழில் நிமித்தமாக கர்நாடகா மாநிலம் பெல்லாரி செல்ல, அங்கேதான் தன் பள்ளிப்படிப்பையும் மருத்துவப் படிப்பையும் முடித்தார் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி.

சிறுவயதில் இருந்தே அரசியல் தலைவனாக உருவெடுக்க வேண்டும் என்று சொல்லி சொல்லி வளர்க்கப்பட்டவர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி. அப்படி அவரின், அரசியல் பயணமானது அவரது மருத்துவக் கல்லூரி வாழ்க்கையில் இருந்தே தொடங்கிவிட்டது எனலாம். கர்நாடக மாநிலம் குல்பர்கா பல்கலைக்கழகத்தில் உள்ள எம். ஆர். மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் படிப்பை மேற்கொள்ளும்போதே மாணவர் தலைவர் தேர்தலில் போட்டியிட்டு வென்றார் ராஜசேகர் ரெட்டி. தொடர்ந்து, ஆந்திராவுக்குத் திரும்பி, திருப்பதி எஸ். வி. மருத்துவக் கல்லூரியில் ஒரு வருடம் பயிற்சி மருத்துவராகப் பணியாற்றினார். அப்போதும் தனது தலைமைத்துவப் பண்பால் பயிற்சி மருத்துவர்கள் சங்கத் தலைவராகச் செயல்பட்டார் மருத்துவர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி.

மருத்துவர்
மருத்துவர்

பிறகு தன் சொந்த மாவட்டமான கடப்பாவில் உள்ள அரசு மருத்துவமனைகளில், மருத்துவ அலுவலராகப் பணியாற்றிய வந்தார் ராஜசேகர் ரெட்டி. பிறகு மக்களுக்கு ஏதாவது செய்யவேண்டும் என முடிவெடுத்து, 1973-ம் ஆண்டு, தன் தந்தை பெயரில், 70 படுக்கைகளுடன் புலிவெந்துலாவில் ஒரு மருத்துவமனையைத் தொடங்கி, ஒரு ரூபாய்க்கு ஏழை மக்களுக்கு மருத்துவம் பார்க்கத் தொடங்கினார். அந்தப் பகுதி மக்களால் `ஒரு ரூபாய் டாக்டர்', `ஏழைகளின் மருத்துவர்' என அன்போடு அழைக்கப்பட்டார் ஒய்.எஸ்.ராஜசேஜர ரெட்டி. தன்னுடைய சேவை மனப்பான்மையால், குறுகிய காலத்திலேயே அந்தப் பகுதி மக்கள் மனதில் இடம் பிடித்த ராஜசேகர் ரெட்டி, 1978-ம் ஆண்டு தன் 29-வது வயதில், தன்னை இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சியில் இணைத்துக்கொண்டார். அந்தாண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், புலிவெந்துலா தொகுதியில் போட்டியிட்டு முதன்முறையாக சட்டமன்ற உறுப்பினரானார்.

1980-ம் ஆண்டுமுதல் 1983 வரை மாநில நல்வாழ்வு மற்றும் கல்வி அமைச்சராகப் பொறுப்பு வகித்து வந்தார் ராஜசேகர் ரெட்டி. அப்போது தனக்கு ஒரு ரூபாய் மட்டும் சம்பளம் போதும் என அறிவித்து அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார் ஒய்.எஸ்.ராஜசேகர் ரெட்டி. கடந்த ஆண்டு, முதல்வராகப் பொறுப்பேற்ற ஜெகன், தனக்கு ஒரு ரூபாய் மட்டும் சம்பளம் போதும் என அறிவிக்க, 1983-ல் என்.டிராமாராவ் செய்ததைக் காப்பியடிக்கிறார் ஜெகன் என எதிர்க்கட்சிகள் கொக்கரிக்க, காப்பியடித்தது உண்மைதான், ஆனால், என்டி.ஆரிடமிருந்து இல்லை, அவர் தந்தை ஒய்.எஸ்.ஆரிடமிருந்து என பதிலடி கொடுத்தனர் ஜெகனின் ஆதரவாளர்கள்.

ராஜீவ் காந்தி
ராஜீவ் காந்தி

1982-ம் ஆண்டு, ஆந்திர சூப்பர் ஸ்டார் என்.டி ராமாராவ் தெலுங்கு தேசம் எனும் கட்சியைத் தொடங்கி, கட்சி தொடங்கிய ஒரு வருடத்துக்குள் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தார். அதுவரை காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக இருந்த ஆந்திரப் பிரதேசத்தில் என்.டி.ராமாராவின் அலை ஆட்டம் காண வைத்தது. மறுபுறம் காங்கிரஸ் கட்சிக்கு புத்துயிரூட்டும் தேவை எழுந்தது. யாரைத் தலைவராக்கலாம் என அப்போதைய தலைவர் இந்தியா காந்தி யோசித்த நேரத்தில், மிகவும் திறமையான துணிச்சலான, மருத்துவக் கல்வி பயின்ற 33 வயது இளைஞனான ராஜசேகர் ரெட்டியைப் பரிந்துரைத்தார் ராஜீவ் காந்தி.

நரசிம்மராவ், சென்னா ரெட்டி போன்ற மிக மூத்த காங்கிரஸ் தலைவர்களையும் மிக லாவகமாகச் சமாளித்தார் ராஜசேகர் ரெட்டி. காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த இரண்டு ஆண்டுகளில் ராஜசேகர் ரெட்டி ஆற்றிய களப்பணியே, அந்தக் கட்சியை மீண்டும் 1989-ல் ஆட்சிக் கட்டிலில் அமரவைத்தது. ஆனால், அப்போது, கடப்பா நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றதால் முதல்வராகும் வாய்ப்பு ராஜசேகர் ரெட்டிக்கு வாய்க்கவில்லை. அப்போது மட்டுமல்ல, 1989, 1991, 1996, 1998 என தொடர்ந்து நான்குமுறை கடப்பா நாடாளுமன்றத் தொகுதியின் உறுப்பினராகவும் அதேபோல, 1978 முதல் 2009 வரை கிட்டத்தட்ட ஆறுமுறை புலிவெந்துலா தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் ராஜசேகர் ரெட்டி.

என்.டி.ராமாராவின் மறைவுக்குப் பிறகு தெலுங்குதேசம் கட்சியின் தலைமைப் பொறுப்புக்கு வந்த சந்திரபாபு நாயுடு, 1995-ம் ஆண்டு ஆந்திராவின் முதல்வரானார். தன்னை விட்டால் ஆந்திராவில் யாருமில்லை என தனிப்பெரும் ஆளுமையைச் செலுத்திக்கொண்டிருந்த அவரை அவரின் ஆரம்பகால நண்பரான ராஜசேகர் ரெட்டியை வைத்து சமாளிக்க நினைத்தது அகில இந்திய காங்கிரஸ் தலைமை. மீண்டும், 1998-ல் மாநில காங்கிரஸ் கமிட்டியின் தலைவராகப் பொறுப்பேற்றார் ராஜசேகர் ரெட்டி.

1999- சட்டமன்றத் தேர்தல் வந்தது. தெலுங்கு தேசம் கட்சியின் சார்பாக சந்திரபாபு நாயுடுதான் முதல்வர் வேட்பாளர் என அறிவித்துப் பிரசாரம் செய்கிறார்கள், ஆனால் காங்கிரஸ் கட்சியில் உங்களை அப்படி முன்னிறுத்தவில்லையே, நீங்கள் காங்கிரஸ் கட்சிக்கு மிகவும் அடிபணிந்து நடப்பதாகவும் எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்கின்றனவே என பத்திரிகையாளர்கள் கேட்க,

``எங்கள் கட்சி தேசியக் கட்சி, எங்கள் கட்சிக்கென சில வழிமுறைகள் இருக்கின்றன. வெற்றிபெற்ற சட்டமன்ற உறுப்பினர்கள்தான் முதல்வரைத் தேர்தெடுக்கவேண்டும். அதுதான் ஜனநாயகம்'' எனப்பதிலடி கொடுத்தார் ராஜசேகர் ரெட்டி. அந்தத் தேர்தலில் 91 இடங்களில் வெற்றி பெற்றது காங்கிரஸ் கட்சி. சட்டமன்ற எதிர்கட்சித் தலைவரானார் ராஜசேகர் ரெட்டி.

சந்திரபாபு நாயுடு
சந்திரபாபு நாயுடு

தொடர்ந்து, 2004 தேர்தலுக்கு முன்பாக ஆந்திர மாநிலம் முழுவதும் கிட்டத்தட்ட 1400 கி.மீ நடைப்பயணம் மேற்கொண்டார் ராஜசேகர் ரெட்டி. அந்த நடைப்பயணமும் மக்களின் குறைகளை நேரடியாக அவர்களின் இடத்துக்கே சென்று கேட்டதும் மக்கள் மத்தியில் அவரின் செல்வாக்கை உயர்த்தியது. தொடர்ந்து, 2004-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில், 185 தொகுதிகளைக் கைப்பற்றி தனிப்பெரும் மெஜாரிட்டியுடன் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தது காங்கிரஸ் கட்சி. முதல்வரானார் ராஜசேகர் ரெட்டி.

அதற்கடுத்து நிகழ்ந்தது எல்லாமே அதிரடிகள்தான்... ஏழை விவசாயிகளுக்கு மின்சாரம் இலவசம், அவர்களின் கடன்கள் ரத்து, முதியவர்களுக்கு உதவித்தொகை அதிகரிப்பு, இரண்டு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி, ராஜீவ் காந்தி பெயரில் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், இந்திராகாந்தி பெயரில் ஏழை மக்களுக்கு வீடு கட்டித்தரும் திட்டம் என பல்வேறு நலத்திட்டங்களைக் கொண்டு வந்தார் ராஜசேகர் ரெட்டி.

``எங்கே இருந்தாலும் யாருக்கா இருந்தாலும், ஒரு கர்ப்பிணிப்பெண்ணுக்கு பிரசவ வலியா, சின்னக் குழந்தைகளுக்கு காயம் பட்டுடுச்சா ஒரே ஒரு போன் கால் போதும், இருபது நிமிசத்துல உங்க இடத்துக்கு குய் குய் குய்யுன்னு நம்ம ஆம்புலன்ஸ் தேடிவரும்'' என இந்தியாவிலேயே முதன்முறையாக 108 ஆம்புலன்ஸ் வசதியை அறிமுகப்படுத்திய பெருமையும் ராஜசேகர் ரெட்டியையே சேரும்.

ரோஜா
ரோஜா

சந்திரபாபு நாயுடு ஹைதராபாத்தை ஹைடெக் சிட்டியாக, உலக வரைபடத்தில் ஒரு முக்கிய இடமாக மாற்ற, மறுபுறம் ஆந்திராவின் அடித்தட்டு கிராம மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து செல்வாக்குமிக்க தலைவராக, விவசாயிகளின் நண்பனாக உருவெடுத்தார் ராஜசேகர் ரெட்டி. அதுவரை ஆந்திர அரசியல் வரலாற்றிலேயே, காங்கிரஸ் கட்சியின் சார்பில் எந்தவொரு முதலமைச்சரும் ஐந்தாண்டுகளை நிறைவு செய்ததில்லை, அதை முறியடித்தார் ராஜசேகர் ரெட்டி.

2009 சட்டமன்றத் தேர்தல்... ஏற்கெனவே ஆளும் கட்சிக்கு இருக்கும் இயல்பான சவால்களுடன் தேர்தலைச் சந்தித்தது காங்கிரஸ் கட்சி. மறுபுறம் திரை நட்சத்திரப் பட்டாளங்களுடன் தெலுங்கு தேசம், (தற்போது ஜெகனின் வலது கரமாக சந்திரபாபு நாயுடுவுக்கு சிம்மசொப்பனமாக விளங்கும் நடிகை ரோஜாகூட அப்போது தெலுங்கு தேசம் கட்சியில்தான் இருந்தார்) மற்றொரு முனையில் சிரஞ்சீவியின் பிரஜா ராஜ்யம் என நட்சத்திரப் பட்டாளங்கள் சூழ பிரசாரம் போய்க்கொண்டிருந்தது.

``மற்ற கட்சிகள் எல்லாம் திரை நட்சத்திரப் பட்டாளங்களுடன் களத்தில் நிற்கிறார்கள்...அவர்களுக்கு பெருமளவு கூட்டமும் கூடுகிறது. நீங்கள் அது குறித்து கவலைப்படுகிறீர்களா'' எனப் பத்திரிகையாளர் ஒருவர் கேட்க, ``மக்கள் காசு கொடுத்து தியேட்டர்களுக்குச் சென்று தங்களுக்குப் பிடித்த கதாநாயகர்களைப் பார்க்கிறார்கள். அவர்களே நேரடியாக வந்து ஷோ காமிக்கும்போது மக்கள் கூட்டம் கூடத்தான் செய்யும். ஆனால், அது கண்டிப்பாக ஓட்டாக மாறாது. பிறகு நான் ஏன் கவலைப்படணும்'' என சிரித்துக்கொண்டே பதிலளித்தார் ராஜசேகர் ரெட்டி.

எதிரே திரைக் கதாநாயகர்கள் சூழ்ந்திருந்தாலும், தங்களின் நிஜக் கதாநாயகனான ராஜசேகர் ரெட்டியையே அந்த முறையும் முதல்வராக்கி அழகு பார்த்தார்கள் ஆந்திர மக்கள். ஆனால், இரண்டாவது முறையாக முதல்வராகப் பதவியேற்ற, ஒரு சில மாதங்களிலேயே விமான விபத்தில் இறந்துபோனார் ராஜசேகர் ரெட்டி. ஒட்டுமொத்த ஆந்திரமுமே கண்ணீல் கடலில் தத்தளித்தது.

Withinme... with me YSR Book Launch
Withinme... with me YSR Book Launch
Photo: Facebook / YS Sharmila

இன்று ஆந்திர மக்களின் காவலர் நாங்கள்தான் என தெலுங்குதேசம் கட்சியினர் ஜெகனுடன் மல்லுக் கட்டிக் கொண்டிருக்க, மறுபுறம் ஒய்.எஸ்.ராஜசேகர் ரெட்டி, எங்களுக்குத்தான் சொந்தம் என ஜெகனுடன் மல்லுக் கட்டிக்கொண்டிருக்கிறது, ஆந்திர மாநிலக் காங்கிரஸ் கமிட்டி. தற்போது ஜெகன் மோகன் அரசாங்கத்தின் மீது, எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் ஊழல் புகார்களைப் போலவே அப்போது ராஜசேகர் ரெட்டியின் மீதும் முன்வைத்தார்கள். ஆனால், அதையெல்லாம் தாண்டி ஆந்திர மக்களின் மனங்களில் தனிப்பெரும் தலைவராக அவர் ஜம்மென்று அமர்ந்திருந்தார் என்பதில் துளியளவும் சந்தேகமில்லை.

இந்தநிலையில், இன்று, ராஜசேகர் ரெட்டியின் 71-வது பிறந்த நாளையொட்டி, ஒய்.எஸ்.ஆரின் மனைவி விஜயலட்சுமி எழுதிய நாலோ... நாத்தோ... ஒய்.எஸ்.ஆர் (Withinme... with me YSR) எனும் ராஜசேகர் ரெட்டியின் வாழ்க்கை வரலாற்றை, ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி வெளியிட்டார்.