Published:Updated:

கிராம சபை நடத்தக்கோரி மாவட்ட ஆட்சியருக்கு கடிதம் அனுப்புவது எப்படி? - ஒரு வழிகாட்டல்

மாவட்ட ஆட்சியருக்கு அளிக்கும் கடித மாதிரி இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. இதை எடுத்து அப்படியே கோரிக்கை மனுவாகப் பயன்படுத்தலாம்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

தன்னாட்சி அமைப்பு, தோழன் இயக்கம், சட்டப்பஞ்சாயத்து இயக்கம், வாய்ஸ் ஆஃப் பீப்புள் (மக்களின் குரல்), அறப்போர் இயக்கம் ஆகிய அமைப்புகள் இணைந்து அக்டோபர் 11-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை கிராம சபை மீட்பு வாரமாகக் கடைப்பிடித்து பல்வேறு நிகழ்ச்சிகளை முன்னெடுத்து வருகிறன்றன. நேற்று 11-ம் தேதி திருவள்ளூர், சேலம், தர்மபுரி, திருப்பத்தூர், மதுரை, பெரம்பலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் கிராம சபை மீட்பு வாரம் சம்பந்தமாக விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தப்பட்டன. இதில் கிராமங்களில் உள்ள இளைஞர்கள், பெண்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இரண்டாம் நாளான இன்று அக்.12-ம் தேதி அந்தந்த மாவட்ட ஆட்சியருக்கு அந்தந்த மாவட்டங்களில் கிராம சபை கூட்டத்தை நடத்த வலியுறுத்தி மனு அளிக்குமாறு அமைப்புகள் சார்பாக வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளன.

கிராம சபை கூட்டம்
கிராம சபை கூட்டம்

ரத்து செய்யப்பட்ட கிராம சபையை நடத்தக்கோரி 12.10.2020 அன்று முதல் குறைதீர்ப்பு நாளில், மாவட்ட ஆட்சியரை நேரடியாகச் சந்தித்தோ, மின்னஞ்சல் மூலமாகவோ, பதிவுத் தபால் மூலமாகவோ கோரிக்கை வைத்தல் அல்லது பத்திரிகையாளர்களைச் சந்தித்து விளக்குதல் ஆகியவற்றை முன்னெடுக்கலாம்.

மாவட்ட ஆட்சியருக்கு அளிக்கும் கடித மாதிரி இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. இதை எடுத்து அப்படியே கோரிக்கை மனுவாகப் பயன்படுத்தலாம்.

ஐயா/ அம்மா,

பொருள்: கிராமசபைக் கூட்டத்தை உடனடியாக நடத்த உத்தரவிடுதல் தொடர்பாக.

வணக்கம்..!

தமிழகத்தில் இந்த வருடம் ஜனவரி 26-ல் கிராம சபை நடந்தது. கடந்த மார்ச் 24, 2020 முதல் ஊரடங்கு நடைமுறையிலிருப்பதால், மே 1 மற்றும் ஆகஸ்ட் 15 தேதிகளில் நடக்க இருந்த இரு கிராமசபைக் கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டன. சுமார் 8 மாத கால இடைவெளிக்குப் பிறகு, அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி கிராம சபைக்கான அறிவிப்பு 26.09.2020 அன்று வெளியிடப்பட்டது.

நம் மாவட்டத்தில் பல ஊராட்சிகளில், இளைஞர்கள், பெண்கள் மற்றும் பொதுமக்கள், இந்த கிராம சபையை எதிர்நோக்கிக் காத்திருந்தார்கள். ஆனால், எவரும் எதிர்பாராத வகையில் அக்டோபர் 1-ம் தேதி இரவு, கிராமசபைக் கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டன. கொரோனா சூழலிலும், கடந்த செப்டம்பர் மாதம், நாடாளுமன்றக் குளிர்கால கூட்டத்தொடர் நடந்து முடிந்துள்ளது. அதேபோல சட்டமன்றக் கூட்டமும் தமிழகத்தில் நடந்துள்ளது. கொரோனா சூழலில் சட்டங்கள் இயற்றவும், முக்கிய பிரச்னைகள் குறித்து விவாதிக்கவும் எந்த அளவிற்கு நாடாளுமன்றக் கூட்டமும், சட்டமன்றக் கூட்டமும் மிக அவசியமோ, அதே அளவிற்கு, கிராமசபையைக் கூட்டுவதும் அவசியமே.

உப்பூரில் கூடிய கிராமசபை கூட்டம் (கோப்பு படம்)
உப்பூரில் கூடிய கிராமசபை கூட்டம் (கோப்பு படம்)
உ.பாண்டி

மேலும் சட்ட மற்றும் நிர்வாக ரீதியிலான இரண்டு முக்கிய விஷயங்களையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது.

1. தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 பிரிவு 3(2)-இன் படி, கிராம சபை ஒரு ஆண்டில் குறைந்தது இரண்டு முறையாவது கூட வேண்டும். மேலும், இரண்டு கூட்டங்களுக்கு இடையே ஆறு மாதங்களுக்கு மேல் கால இடைவெளி இருக்கக் கூடாது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

2. மத்திய ஊரக வளர்ச்சித் துறை, 24.09.2020 அன்று தமிழகம் உட்பட அனைத்து மாநில கூடுதல் தலைமை செயலர்களுக்கும் அனுப்பியுள்ள கடிதத்தில், கிராம ஊராட்சி வளர்ச்சி திட்டம் தயாரிக்கவும், வருகின்ற நிதியாண்டில் தேசிய ஊராக வேலைவாய்ப்பு உறுதி திட்டம் தொடர்பான அனைத்து பணிகளுக்கான முடிவுகளை எடுக்கவும், அக்டோபர் 2 கிராம சபையையும், அக்டோபர் 3 முதல் நவம்பர் 30-க்குள் ஒரு சிறப்புக் கிராம சபையினையும் கட்டாயம் கூட்ட வேண்டுமென அறிவுறுத்தியுள்ளது. மக்கள் சுய நிதானம் இழந்து, சமூக இடைவெளி சற்றும் கடைப்பிடிக்க முடியாத நிலை ஏற்படுவதற்கு அனைத்து வாய்ப்புகளும் உள்ள டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்பட்டு விற்பனை நடைபெற்று கொண்டிருக்கும்போது,  ஜனநாயகத்தின் ஆணிவேராக இருக்கிற, கிராம மக்களின் வாழ்வாதாரத்தையும் சுற்றுச் சூழலையும் சுகாதாரத்தையும் உறுதி செய்யக்கூடியக் களமாக இருக்கக்கூடிய, கிராமசபைக் கூட்டத்தை ரத்து செய்திருப்பது மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது.

எனவே, ஊராட்சிகளின் ஆய்வாளர் என்ற அடிப்படையிலும், மாவட்ட அளவில் ஊரடங்கு குறித்து முடிவெடுக்கும் அதிகாரி என்ற அடிப்படையிலும், தாங்கள் போதிய பாதுகாப்பு நெறிமுறைகளை அறிவித்து, உடனடியாக கிராமசபைக் கூட்டங்களை நம் மாவட்டத்தில் நடத்திட ஆவன செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

இப்படிக்கு, 

தங்கள் உண்மையுள்ள,

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு