Published:Updated:

சீர்காழி: `ஓங்கி அறைந்த கணவன்; சுருண்டு விழுந்த மனைவி பலி!'

சீர்காழி  அருகே ஒருவர் தன் மனைவியின் கன்னத்தில் வாக்குவாதத்தின்போது ஓங்கி அறைந்ததில், அவர் சுருண்டு விழுந்து உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியை அடுத்த அத்தியூர் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சீதாராமன். இவர் மகன் ஐயப்பன் (வயது 38). ஐயப்பன் கொத்தனாராக வேலை பார்த்துவருகிறார். இவரின் மனைவி கலா (35). கலா கடந்த சில தினங்களாக, உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்குச் சென்று மருந்து, மாத்திரைகள் வாங்கிச் சாப்பிட்டுவந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், நேற்று முன்தினம் மாலை மகளிர் சுயஉதவிக்குழுவில் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்துவதற்காக ஐயப்பனிடம் ரூ 2,000 பணம் கேட்டிருக்கிறார்.

ஐயப்பன்
ஐயப்பன்

ஆனால், அவர் பணம் தர மறுத்திருக்கிறார். அதனால், கணவன் - மனைவி இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. ஒரு கட்டத்தில், வாக்குவாதம் முற்றி, ஐயப்பன் கலாவைக் கன்னத்தில் சரமாரியாக அறைந்ததாகக் கூறப்படுகிறது. அதில், கலா சுருண்டு விழுந்திருக்கிறார். ஆனால், அவர் கீழே விழுந்தும்கூட ஐயப்பன் கண்டும் காணாததுபோல, வயல்வெளிக்குச் சென்றிருக்கிறார்.

பிறகு இரண்டு மணி நேரம் கழித்து வீட்டுக்கு வந்து பார்த்தபோது, கலா இறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். அதையடுத்து, பயந்துபோன ஐயப்பன், கலா வீட்டுக்குள் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டதாக கிராம மக்களிடம் தெரிவித்து, மனைவி கலாவை மயானத்துக்கு எடுத்துச் சென்று அடக்கம் செய்ய ஏற்பாடுகளைச் செய்துகொண்டிருந்தார். இந்த நிலையில், அக்கம் பக்கத்தினர் மூலம் தகவலறிந்த கலாவின் அண்ணன் சுப்பிரமணியன், சம்பவம் தொடர்பாகக் கொள்ளிடம் போலீஸில் புகாரளித்தார். கொள்ளிடம் இன்ஸ்பெக்டர் அமுதாராணி வழக்கு பதிவு செய்து சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்டார். அப்போது, ஐயப்பன் தாக்கியதில்தான் கலா இறந்தார் என்பது உறுதியானது.

மரணம்
மரணம்
சித்திரிப்புப் படம்

அதையடுத்து, போலீஸார் கலாவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக, சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துவிட்டு, ஐயப்பனைக் கைதுசெய்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். தொடர்ந்து, அவரிடம் விசாரணை நடத்திவருகின்றனர்.

ஐயப்பன் - கலா தம்பதிக்குச் சரவணன் (15), சந்தோஷ்(12) என இரண்டு மகன்கள் இருக்கின்றனர்.

சீர்காழி: கொலையா... தற்கொலையா?; தூக்கில் தொங்கிய சடலம்! - 10 மணி நேரம் நடந்த போராட்டம்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு