அலசல்
சமூகம்
Published:Updated:

தனியார் லாபத்தில் இயங்க வேண்டும்... அரசு நஷ்டத்தில் இயங்க வேண்டுமா?

ஆவின் பால்
பிரீமியம் ஸ்டோரி
News
ஆவின் பால்

- அமைச்சர் நாசரின் ‘அடடே’ விளக்கம்!

தீபாவளியையொட்டி கடந்த செப்டம்பர் மாதம், இனிப்பு பொருள்களின் விலையை ரூ.20-லிருந்து ரூ.80 வரை உயர்த்தி அறிவித்தது ஆவின் நிர்வாகம். அந்தச் சர்ச்சை ஓய்வதற்குள், ஆரஞ்சு நிற பாக்கெட் பாலுக்கான விலையை லிட்டருக்கு 12 ரூபாய் உயர்த்தி, மக்களுக்குக் கடும் அதிர்ச்சி கொடுத்திருக்கிறது தமிழக அரசு. இதேபோல், சிவப்பு நிற பால் பாக்கெட் லிட்டருக்கு ரூ.16 உயர்த்தப்பட்டிருப்பதாகவும் சர்ச்சை எழுந்திருக்கிறது.

இது குறித்து தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச்சங்கத் தலைவர் பொன்னுசாமியிடம் பேசினோம். “பால் உற்பத்தியாளர்களுக்குக் குறைந்தது 10 ரூபாய் கொள்முதல் விலை அதிகரித்துக் கொடுக்க வேண்டும் என நீண்ட நாள்களாகக் கோரிக்கை விடுத்தோம். ஆனால், கொள்முதல் விலையை 3 ரூபாயாக உயர்த்திவிட்டு, விற்பனை விலையை 12 ரூபாய் அதிகரித்திருப்பது அநியாயம். 2006-2011 தி.மு.க ஆட்சியில் மாதாந்தர அட்டைக்கும், நேரடி பால் விற்பனைக்கும் லிட்டருக்கு ரூ.4 மட்டுமே வேறுபாடு இருந்தது. ஆனால், இப்போது எதிர்பாராத அளவுக்கு விலையேற்றம் செய்திருக்கிறார்கள். இது மிகப்பெரிய முறைகேடுகளுக்கு வழிவகுக்கும். ஒரு வயதுக்கு மேற்பட்ட அனைவருமே ஆரஞ்சு நிற பால் அருந்தலாம் என்பதால், தமிழ்நாட்டில் வீட்டுப் பயன்பாட்டுக்கு அதிக அளவில் ஆரஞ்சு நிற பால்தான் வாங்கப்படுகிறது. எனவே, இது மக்களைக் கடுமையாக பாதிக்கும். அதேபோல. ‘டீ மேட்’ என்ற சிவப்பு நிற பாலின் விலையையும் சொல்லாமல் கொள்ளாமல் உயர்த்தியிருக்கிறார்கள். சென்னையில் டீ மேட் பால் விலையில் லிட்டருக்கு 8 ரூபாயும், மற்ற மாவட்டங்களில் லிட்டருக்கு 16 ரூபாயும் உயர்த்தியிருக்கிறார்கள்.

நாசர்
நாசர்

இதற்கு, பால் தட்டுப்பாடே காரணம் என்கிறது ஆவின். பொதுவாக, தொடர் மழைக்காலத்தில் பால் உற்பத்தி குறையும். இதனால் தனியார் நிறுவனங்கள் தங்களுக்குள் போட்டி போட்டுக்கொண்டு கொள்முதல் விலையை உயர்த்திவருகிறார்கள். தனியார் நிறுவனங்கள் பால் கொள்முதல் விலையாக லிட்டருக்கு 36 ரூபாய் கொடுக்கிறார்கள். ஆனால், ஆவின் நிறுவனமோ லிட்டருக்கு வெறும் 32 ரூபாய்தான் தருகிறது. இதனால், பெரும்பாலானோர் தனியார் நிறுவனங்களுக்கே பாலைக் கொடுத்துவிடுகிறார்கள். எனவே, இந்தத் தட்டுப்பாடு, ஆவின் நிறுவனமே வரவழைத்துக்கொண்ட தட்டுப்பாடுதான்” என்றார்.

நுகர்வோர் பாதுகாப்பு ஆர்வலர் சோமசுந்தரம், “பாலைப் பொறுத்தவரையில் அதிலுள்ள கொழுப்புச்சத்தைப் பொறுத்தே விலை நிர்ணயம் செய்யப்படுவது வழக்கம். தமிழகத்தில் பெரும்பாலான குடும்பங்கள் ஆரஞ்சு நிற பால்தான் வாங்குகிறார்கள். ஆனால், ‘வணிகரீதியாக மட்டுமே ஆரஞ்சு நிற பால் வாங்கப்படுகிறது என்றும், அதற்கு மட்டுமே விலையேற்றம் செய்திருக்கிறோம்’ என்றும் அமைச்சர் சொல்லியிருப்பது தவறு. உண்மையில் அந்தப் பாலில் 30%தான் ஹோட்டல் உள்ளிட்டவற்றுக்குச் செல்கிறது. மீதி 70%-ஐ மக்களே நேரடியாகப் பயன்படுத்துகிறார்கள். எனவே, லிட்டருக்கு ரூ.12 உயர்த்தியிருப்பதை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த விலையேற்றத்தால் லட்சக்கணக்கான நுகர்வோர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்” என்றார் ஆதங்கத்துடன்.

தனியார் லாபத்தில் இயங்க வேண்டும்... அரசு நஷ்டத்தில் இயங்க வேண்டுமா?

சென்னை பெருநகர டீக்கடை உரிமையாளர்கள் சங்கச் செயலாளர் சுந்தரம் “ஆரஞ்சு நிற ஆவின் பாலை 10 சதவிகித டீக்கடைகளில்தான் பயன்படுத்துகிறோம். தனியார் பாலில் கொழுப்புச்சத்து அதிகமென்பதால், அதையே அதிக அளவில் பயன்படுத்துகிறோம். தனியார் பால் நிறுவனங்கள் இந்த வருடம் நான்கு முறை விலையை ஏற்றியிருக்கின்றன. அரசு விலையேற்றம் செய்யும்போது தனியார் பால் நிறுவனங்களும் கண்டிப்பாக விலையை உயர்த்தும். அந்த வகையில், லிட்டருக்கு 70 ரூபாயாக இருக்கும் தனியார் பால் விலை, இனி 80 ரூபாயாக உயர வாய்ப்பிருக்கிறது” என்றார்.

பொன்னுசாமி, சோமசுந்தரம், சுந்தரம்
பொன்னுசாமி, சோமசுந்தரம், சுந்தரம்

இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து பால்வளத்துறை அமைச்சர் நாசரிடம் விளக்கம் கேட்டோம். “ஆவினின் ஆரஞ்சு நிற பால் பாக்கெட் சாதாரண மக்களால் வாங்கப்படுவதில்லை. மேலும், இடப்பெயர்வு, மரணம் ஆகிய காரணங்களால் கைவிடப்பட்ட நுகர்வோர் கார்டுகளைவைத்து, சிலர் வணிகப் பயன்பாட்டுக்கு ஆரஞ்சு நிற பாலைப் பெறுகிறார்கள். இதை ஒழுங்குபடுத்தவேண்டிய தேவை இருக்கிறது. இந்த நோக்கத்தில்தான் விலையேற்றம் செய்திருக்கிறோம். ஆனால், சிவப்பு நிற பால் பாக்கெட் விலையை நாங்கள் உயர்த்தியதாகச் சொல்வது தவறு. எப்படிப் பார்த்தாலும், மற்ற மாநிலங்களைக்காட்டிலும் தமிழகத்தில் லிட்டருக்கு 10 ரூபாய் குறைவான விலைக்கே பால் விற்பனையாகிவருகிறது. தனியார் லாபத்தில் இயங்க வேண்டும்... அரசு நஷ்டத்தில் இயங்க வேண்டுமா... எல்லா நஷ்டத்தையும் அரசாங்கத்தின் தலையில் கட்டினால் என்ன அர்த்தம்... தமிழகத்தில் பால் விலையேற்றத்தை மட்டும் பேசும் நீங்கள் குஜராத், கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, கேரளா பற்றி ஏன் பேசவில்லை... ஆவினை மட்டும் டார்கெட் செய்வது ஏன்... ஆவின் முழுக்க முழுக்க மக்களுக்கானது. கொரோனா நேரத்தில் தனியார் நிறுவனங்கள் லிட்டருக்கு 15 முதல் 18 ரூபாய் வரை என அடிமாட்டு விலைக்குப் பாலைக் கொள்முதல் செய்தபோது, அரசு 30 ரூபாய்க்கு விவசாயிகளிடம் கொள்முதல் செய்தது. அது பற்றி ஏன் யாரும் பேசுவதில்லை... ஒன்று மட்டும் உறுதி. இனிமேல் விலையேற்றம் இருக்காது” என்று முடித்துக்கொண்டார்.

ஆவினைக் குறை சொல்லவில்லை... ‘மக்கள் நிறுவனமே எங்களை அல்லல்படுத்தலாமா?’ என்றுதான் மக்கள் கேட்கிறார்கள் அமைச்சரே!