Published:Updated:

``விரைவில் நல்ல முடிவுவரும்!” - ஆவின் பால் டேங்கர் லாரி உரிமையாளர்கள் புதிய முடிவு

ஆவின் டேங்கா் லாரிகள் வேலைநிறுத்தம், அதிகாரிகள் பேச்சுவாா்த்தையைத் தொடா்ந்து தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

aavin milk
aavin milk

நாமக்கல்லில் நேற்று முன்தினம் செய்தியாளர்களைச் சந்தித்த ஆவின் ஒப்பந்த பால் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சுப்பிரமணி, சரவணன், ``டீசல் விலை உயர்வால் ஏற்கெனவே கொடுத்த வாடகை கட்டுப்படியாகாமல் வாகனங்களை ந‌‌ஷ்டத்தில் இயக்கிவரும் இந்த வேளையில், ஆவின் நிர்வாகம் சுமார் ரூ.20 கோடி வரை டேங்கர் லாரி உரிமையாளர்களுக்கு வாடகை பாக்கி வைத்துள்ளது. இதனால் லாரி டிரைவர்களுக்கு சம்பளம்கூட வழங்க முடியவில்லை. மேலும், தீபாவளி நெருங்கிவரும் வேளையில் பணியாளர்களுக்கு போனஸ் வழங்க வேண்டிய கட்டாயம் உள்ளது.

``விரைவில் நல்ல முடிவுவரும்!” - ஆவின் பால் டேங்கர் லாரி உரிமையாளர்கள் புதிய முடிவு

எனவே, உடனடியாகப் பால் டேங்கர் லாரிகளுக்கு வாடகை டெண்டரை நடத்தி வாடகையை இறுதி செய்ய வேண்டும்.மேலும், வாடகை நிலுவைத்தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என அரசுக்கும் ஆவின் நிர்வாகத்துக்கும் கோரிக்கை வைத்தோம். எங்கள் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படாததால் இனிமேலும் லாரியை இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கோரிக்கை நிறைவேறும் வரை தமிழகம் முழுவதும் பால் டேங்கர் லாரிகளை நிறுத்தி வைத்து காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். தமிழகம் முழுவதும் 275 பால் டேங்கர் லாரிகள் நிறுத்தப்பட்டால் சென்னையில் மட்டும் நாள் ஒன்றுக்கு 20 லட்சம் லிட்டர் பால் விநியோகம் பாதிக்கப்படும். தமிழகம் முழுவதும் 30 லட்சம் லிட்டர் பால் விநியோகம் பாதிக்கப்படும். இதனால் ஆங்காங்கே பால் தட்டுப்பாடு ஏற்படும் அபாயமும் உள்ளது" என்று பேட்டியளித்தனர்.

இந்நிலையில் நேற்று சேலம் ஆவின் ஒன்றிய அலுவலகத்தில் பேச்சுவாா்த்தை நடத்த அரசு தரப்பில் பால் டேங்கா் லாரி உரிமையாளா்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆவின் பொது மேலாளா் விஜயபாபு தலைமையில் பேச்சுவாா்த்தை நடைபெற்றது. டேங்கா் லாரி உரிமையாளா்கள் தரப்பில் சுப்பிரமணியம், செல்வராஜ், ராஜா, காளியப்பன், ஆனந்தன் ஆகிய ஐந்து போ் கலந்து கொண்டனா்.

ஆவின்
ஆவின்

இந்தப் பேச்சுவாா்த்தையில், புதிய ஒப்பந்தப் பிரச்னை, வாடகை பாக்கி தொடா்பாக விரைவில் நல்லதொரு முடிவு எடுக்கப்பட்டு, அரசின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்படும் என உறுதியளிக்கப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட பால் டேங்கா் லாரி உரிமையாளா்களும், வேலைநிறுத்தத்தை தற்காலிகமாக ஒத்திவைப்பதாகத் தெரிவித்தனா். இதையடுத்து வழக்கம்போல் ஆவின் டேங்கா் லாரிகள் இயங்கும். எவ்வித பால் தட்டுப்பாடும் ஏற்படாது என அதிகாரிகள், டேங்கா் உரிமையாளா்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.