Published:Updated:

`வாடகை வந்தால்தான் பால் வரும்!’ - ஆவினை அதிர வைத்த டேங்கர் லாரி உரிமையாளர்கள்

புதிய ஒப்பந்தத்தை அமல்படுத்தக் கோரி, ஆவின் டேங்கா் லாரி உரிமையாளா்கள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றனா். இதனால் தமிழகம் முழுவதும் 'ஆவின் பால்' தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

ஆவின் பால்
ஆவின் பால்

தமிழகத்தில் நாமக்கல், சேலம், ஈரோடு, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 55 டேங்கர் லாரி உரிமையாளர்களுக்கு சொந்தமான 275 பால் டேங்கர் லாரிகள் ஆவின் நிர்வாகத்துக்கு ஒப்பந்த அடிப்படையில் இயக்கப்பட்டு வருகின்றன. இதற்காக 2016-ம் ஆண்டு டெண்டர் அறிவிக்கப்பட்டு, அதில் கலந்துகொண்ட டேங்கர் லாரி உரிமையாளர்களுக்கு வாடகை நிர்ணயம் செய்து கொடுக்கப்பட்டது. இந்த ஒப்பந்தம் கடந்த 2018-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 31-ம் தேதியுடன் நிறைவு பெற்றது.

ஆவின்
ஆவின்

மீண்டும் புதிய ஒப்பந்தம் கொண்டுவர காலதாமதம் ஏற்பட்டதால் கூடுதலாக 6 மாத காலம் பழைய டெண்டர் விதிமுறைப்படியும், அதே வாடகைக்கும் டேங்கர் லாரிகளை இயக்குமாறு ஆவின் நிர்வாகம் கேட்டுக்கொண்டதால், லாரி உரிமையாளர்கள் சம்மதம் தெரிவித்து தங்களின் வாகனங்களை இயக்கி வருகின்றனர். கடந்த ஜூன் மாதத்துடன் இந்தக் கால அவகாசம் முடிந்தும் தற்போது வரை அதே வாடகைக்கு பால் டேங்கர் லாரிகள் இயங்கி வருகின்றன. இதற்கிடையே கடந்த 10-ம் தேதி டெண்டர் அறிவிக்கப்பட்டு, திடீரென ஆவின் நிர்வாகம் அந்த டெண்டரை ரத்து செய்துவிட்டது. இதனால் டேங்கர் லாரி உரிமையாளர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். இதனால் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடவும் முடிவு செய்துள்ளனர்.

நாமக்கல்லில் ஆவின் ஒப்பந்த பால் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சுப்பிரமணி, சரவணன் ஆகியோர் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய அவர்கள், "டீசல் விலை உயர்வால் ஏற்கெனவே கொடுத்த வாடகை கட்டுப்படியாகாமல் வாகனங்களை ந‌‌ஷ்டத்தில் இயக்கிவரும் இந்த வேளையில், ஆவின் நிர்வாகம் சுமார் ரூ.20 கோடி வரை டேங்கர் லாரி உரிமையாளர்களுக்கு வாடகை பாக்கி வைத்துள்ளது. இதனால் லாரி டிரைவர்களுக்கு சம்பளம்கூட வழங்க முடியவில்லை. மேலும், தீபாவளி நெருங்கிவரும் வேளையில் பணியாளர்களுக்கு போனஸ் வழங்க வேண்டிய கட்டாயம் உள்ளது. எனவே, உடனடியாகப் பால் டேங்கர் லாரிகளுக்கு வாடகை டெண்டரை நடத்தி வாடகையை இறுதி செய்ய வேண்டும்.

ஆவின் பால்
ஆவின் பால்

மேலும், வாடகை நிலுவைத்தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என அரசுக்கும் ஆவின் நிர்வாகத்துக்கும் கோரிக்கை வைத்தோம். எங்கள் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படாததால் இனிமேலும் லாரியை இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இன்று காலை 6 மணி முதல் கோரிக்கை நிறைவேறும் வரை தமிழகம் முழுவதும் பால் டேங்கர் லாரிகளை நிறுத்தி வைத்து காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். தமிழகம் முழுவதும் 275 பால் டேங்கர் லாரிகள் நிறுத்தப்பட்டால் சென்னையில் மட்டும் நாள் ஒன்றுக்கு 20 லட்சம் லிட்டர் பால் விநியோகம் பாதிக்கப்படும். தமிழகம் முழுவதும் 30 லட்சம் லிட்டர் பால் விநியோகம் பாதிக்கப்படும். இதனால் ஆங்காங்கே பால் தட்டுப்பாடு ஏற்படும் அபாயமும் உள்ளது" என்றனர்.