Published:Updated:

`ஒரேநாளில் ரூ.170 கோடிக்கு மது விற்பனை... பெண்களின் வாழ்வு கூட பறிபோகும்!'- வலுக்கும் எதிர்க்குரல்கள்

மது
மது

இந்நிலையில் அரசு மீண்டும் மதுக்கடைகளைத் திறக்கக்கூடாது என உரக்கக் குரல் கொடுக்கிறார்கள் சிலர். அவர்களிடம் கேட்டபோது...

தமிழகத்தில் 44 நாள்களுக்குப் பிறகு நேற்று முன் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. லட்சக்கணக்கானோர் மதுக்கடைகள் முன்பு நீண்ட கியூவில் நின்று மதுவை வாங்கிச் சென்றனர். பெரும்பாலான டாஸ்மாக் கடைகளில் சமூக இடைவெளியும் கடைபிடிக்கப்படவில்லை. இதனால், கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. முதல் நாளில் மட்டும் ரூ. 170 கோடிக்கு மது விற்பனை தமிழகத்தில் நடந்துள்ளது. நேற்று (8- ந் தேதி) 125 கோடிக்கு விற்பனை ஆகியுள்ளது. இத்தனைக்கும் சென்னையிலுள்ள மதுக்கடைகள் திறக்கப்படவில்லை. சென்னை மாகர எல்லைக்குள் 300-க்கும் மேற்பட்ட மதுக்கடைகள் உள்ளன. இந்த கடைகளும் திறக்கப்பட்டிருந்தால் மது விற்பனை ரூ. 230 கோடியை எட்டியிருக்கும் என்று சொல்லப்படுகிறது.

எந்த இடத்திலும் சமூக விலகல் சரிவரக் கடைபிடிக்கப்படாததாலும், நீதி மன்றம் விதித்த பிற நெறிமுறைகள் முறையாகப் பின்பற்றப்படாததாலும், டாஸ்மாக் திறப்புக்கு தடை கோரி நேற்று அவசர வழக்கு தொடரப்பட்டது. நேற்று அதிரடியாக அந்த வழக்கில் தீர்ப்பு கூறிய நீதிமன்றம், மே 17 வரை டாஸ்மாக் திறக்க தடை போட்டது. உடனே இந்தத் தீர்ப்பு அமலுக்கு வருவதாகவும் நீதிமன்றம் கூறியது. இதை எதிர்த்து தமிழக அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்போவதாகவும் செய்திகள் வந்தன. அப்படி மேல்முறையீடு செய்யப்பட்டால் அது அவசர வழக்காக இன்று எடுத்துக்கொள்ளப்படும். இந்நிலையில் அரசு மீண்டும் மதுக்கடைகளைத் திறக்கக்கூடாது என உரக்கக் குரல் கொடுக்கிறார்கள் சிலர். அவர்களிடம் கேட்டபோது...

தமிமுன் அன்சாரி
தமிமுன் அன்சாரி

``காற்றில் பறந்த ஜெயலலிதாவின் லட்சியம்" - தமிமுன் அன்சாரி

மனித நேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ கூறுகையில், ``தமிழகத்தில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக டாஸ்மாக் கடைகள் பூட்டப்பட்டு 40 நாள்களுக்கு மேலாகி விட்டது. குடிப்பவர்கள் தங்களை கட்டுப்படுத்திக் கொண்டுள்ளனர். குடிபோதைக்கு அடிமையாகாமல் இருப்பது எப்படி எனவும் பழகி விட்டனர். இந்த சந்தர்ப்பத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சியவர்களை காவல்துறையினர் இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கியுள்ளனர். இப்போது ஊரடங்கு தளர்வு ஏற்பட உள்ள மாவட்டங்களில் மதுக்கடைகளை திறக்கலாம் என மத்திய அரசு கூறியுள்ளது. ஆனால் தமிழக அரசு டாஸ்மாக் மதுக்கடைகளை மீண்டும் திறக்கக் கூடாது. ஏனெனில் அங்கு சமூக இடைவெளியை கடைபிடிக்காமல், கோயம்பேடு மார்க்கெட்டில் ஏற்பட்டது போன்ற நெரிசல் ஏற்படவே வாய்ப்புகள் அதிகம் உள்ளது. அது கொரோனா ஒழிப்பு முயற்சியில் பின்னடைவைத்தான் ஏற்படுத்தும். மேலும், தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா நெருக்கடி மூலம், குடிப்பழக்கம் கொண்டவர்கள் அதை கைவிடவும், திருந்தவும், மறுவாழ்வு பெறவும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. இதனால் பல ஆயிரம் குடும்பங்கள் மகிழ்ச்சியில் உள்ளன. மதுக்கடைகளை மூடுவது என்பது முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் லட்சியங்களில் ஒன்று என்பது தமிழக அரசுக்கு தெரியாதது அல்ல'' என்றார்.

``மது இல்லாமல் வாழமுடியும்" - சமூக ஆர்வலர் சிவ.சண்முகம்

தஞ்சாவூர் மாவட்டம் திருக்கருக்காவூர் கிராமத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலரான சிவ.சண்முகம் கூறுகையில் , ``சாப்பாட்டுக்கு வழியில்லாமல் இருந்தாலும் மூடப்பட்ட மதுக்கடையால் பல குடும்பங்கள் நிம்மதியாக வாழத் தொடங்கியுள்ளன. நல்ல விஷயத்திற்குத்தான் மற்ற மாநிலங்களை மேற்கோள் காட்ட வேண்டுமே தவிர இது போன்றவற்றை காரணம் காட்டி மதுக்கடைகளை திறப்பது சரியல்ல. ஒரு அரசு மக்களுக்கு நேரடியாக இதைவிட பெரிய துரோகம் எதையும் செய்ய முடியாது. குடிமகன்கள் உடனடியாகக் குடியை நிறுத்தினால் விபரீதம் ஏற்படும் என நொண்டிச் சாக்கை கூறி வந்தது. ஆனால் இத்தனை நாட்களில் அதுபோல் எந்தப் பிரச்னையும் ஏற்படவில்லை. மது இல்லாமல் மனிதர்கள் வாழ முடியும் என்பதற்கு இந்தக்காலம்தான் மிகச்சிறந்த உதாரணம். இரண்டு நாட்களுக்குப் பிறகு நீதிமன்றமும் குட்டு வைத்துவிட்டது. மதுக்கடைகளை மூடுவதற்கு இதைவிட சிறந்த சந்தர்ப்பமும் கிடைக்காது. இதைப் பயன்படுத்தி முதல்வரும் தன் சொந்த செல்வாக்கை அதிகரித்துக் கொள்ள இதனைப் பயன்படுத்திக் கொள்ளலாம்'' என்கிறார்.

மது வாங்க வரிசையில் நிற்கும் வாடிக்கையாளர்கள்
மது வாங்க வரிசையில் நிற்கும் வாடிக்கையாளர்கள்
இடம்: நீலகிரி

``மக்களை அழிப்பதற்கான நடவடிக்கை" - வாள் சண்டை வீரர் டேவிட் ராஜ்

கன்னியாகுமரி மாவட்டத்தில் டாஸ்மாக் மதுக்கடைகளை மூட வேண்டும் என போராட்டம் நடத்திவரும் தேசிய வாள் சண்டை வீரர் டேவிட் ராஜ் கூறுகையில், ``டாஸ்மாக் திறந்தது மக்களை அழிப்பதற்கான நடவடிக்கை. 24 மணி நேரமும் மது குடித்துக்கொண்டிருந்தவர்களும் 40 நாட்களுக்கும் மது குடிக்காமல் உள்ளனர். அவர்கள் திருந்தி நல்ல வாழ்க்கை வாழ நினைக்கும்போது அவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்க முயற்சிக்கிறது அரசு. இப்போது டாஸ்மாக் கடைகளை மீண்டும் திறந்தால் பணம் இல்லாதவர்கள் வீட்டில் இருக்கும் பொருட்களை விற்று குடிக்கும் நிலை ஏற்படும். படிப்படியாக மதுக்கடைகளை மூடுவோம் என தேர்தல் வாக்குறுதி கொடுத்தார்கள். ஆட்சிக்கு வந்தபிறகு கள்ளச்சாராயம் அதிகரிக்கும் என நொண்டிச்சாக்கு சொல்லி டாஸ்மாக்கை மூடாமல் இருந்தார்கள். ஆனால் இப்போது கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்களை உடனே கைது செய்யும் அளவிற்கு காவல்துறை வலுவாக உள்ளது. எனவே இந்த வாய்ப்பை பயன்படுத்தி தமிழக அரசு மதுக்கடைகளை மூடினால் மக்கள் நல அரசாக இருக்கும். இல்லை என்றால் சுயநல அரசாக இருக்கும்'' என்று சாடியுள்ளார்.

``தாய்மார்களின் சாபத்துக்கு ஆளாக வேண்டாம்" - வானதி சீனிவாசன்

`டாஸ்மாக்கைத் திறந்து தாய்மார்களின் சாபத்துக்கு ஆளாக வேண்டாம்' என்று தமிழக பா.ஜ.க மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து வானதி சீனிவாசன், ``பூரண மதுவிலக்கை தமிழக பா.ஜ.க நீண்ட ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறது. நான் மகளிர் அணி பொறுப்பாளராக இருந்தபோது `தாலி காக்கும் தாமரை போராட்டம்' நடத்தி டாஸ்மாக் கடைகளை எதிர்த்தோம். பூரண மதுவிலக்கை கொண்டுவர இது அற்புதமான காலம் என்பது எங்கள் கருத்து. அரசாங்கத்துக்கு இதில் இரண்டு சவால்கள் உள்ளன. அண்டை மாநிலங்களில் பூரண மதுவிலக்கு இல்லாதபோது, நாம் எப்படி செயல்படுத்த முடியும் என்பது ஒன்று. மற்றொன்று வருவாய்.

Vanathi srinivasan
Vanathi srinivasan

ஆனால், குஜராத்தில் நீண்ட ஆண்டுகளாக மதுவிலக்கு அமலில் உள்ளது. அரசாங்கம் நினைத்தால் இதை நிச்சயம் கட்டுப்படுத்த முடியும். இந்த விஷயத்தில் முதல்வருக்கு தேவை தீர்க்கமான மன உறுதி. தற்போது பொருளாதார ரீதியாக பல்வேறு நெருக்கடிகள் இருந்தாலும், மாஸ்க் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களை திருப்பூரில் உற்பத்தி செய்ய தொடங்கிவிட்டனர். இந்த காலகட்டத்திலும் மக்கள் உழைப்பதற்கு தயாராக இருக்கின்றனர். இந்த 40 நாள்கள் மது குடிக்காத ஆண்களை கண்டு பெண்கள் சற்றே மன நிம்மதியில் இருந்தனர். இரண்டு நாட்களில் டாஸ்மாக் திறந்ததில் பல அசம்பாவித செய்திகளைப் பார்த்தோம். மக்களுக்கு இலவசத்தைவிட சமுதாய பாதுகாப்பு முக்கியம். ஊரடங்கில் மக்களுக்கு உதவுவதற்கு நான் பட்டியல் எடுத்தேன். அதில் அதிகம் இருந்தது இளம் விதவைகள்தான். அவர்களின் கணவர்களில் 90 சதவிகித பேர் மதுவால் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த கணவர்களின் உயிரை அரசால் திருப்பி கொடுக்க முடியுமா?" என்று கேள்வி எழுப்பினார்

ஜவாஹிருல்லா
ஜவாஹிருல்லா

``மதுக்கடைகளை திறப்பது கொடுமையானது" - ஜவாஹிருல்லா

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும் முன்னாள் எம்.எல்.ஏ-வுமான ஜவாஹிருல்லா, ``மே 7-ம் தேதி டாஸ்மாக் திறந்த தமிழக அரசின் முடிவு கொடுமையானது; கொடூரமானது. பக்கத்து மாநிலமான தெலங்கானாவில் மதுக்கடை திறந்த போது அங்கு சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் ஆயிரக்கணக்கானோர் கியூவில் நின்றனர். போலீஸ் தடியடி நடத்தும் நிலைக்கு சென்றுள்ளது. இதில் இருந்து கூட இந்த அரசு பாடம் படித்ததாக தெரியவில்லை. கடந்த 40 நாட்களாக மதுக்கடைகள் அடைக்கப்பட்டதால் மதுவுக்கு அடிமையான பலர் அந்த பழக்கத்தினை மறந்து மீண்டு வந்துள்ளனர். இதே நிலை நீடித்தால் இன்னும் அதிகமானோர் அதில் இருந்து மீளும் வாய்ப்புகள் அதிகம். ஆனால் மீண்டும் மதுக்கடைகளைத் திறந்து அவர்களை மதுப்பழக்கத்தில் இருந்து விடுபட முடியாத நிலையை அரசு ஏற்படுத்தியுள்ளது. நீதிமன்றம் கண்டித்துள்ள நிலையில் அதை சிரமேற்கொண்டு அமைதியாக இருப்பதே நல்லரசுக்கு அழகு” என்றார்.

திருமாறன்
திருமாறன்

`̀`டீக்கடை இல்லை மதுக்கடை இயங்குகிறது" - வெங்காடம்பட்டி பூ.திருமாறன்

நெல்லை மாவட்டத்தில் அகில இந்திய காந்திய இயக்கத்தினர் மதுவுக்கு எதிராகத் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்கள். பள்ளிகள், கல்லூரிகள், பெண்கள் ஆகியோரிடம் இந்த அமைப்பினர் மதுவின் தீமைகளை விளக்கி வருகின்றனர். குறிப்பாக, பள்ளிக் குழந்தைகள் மூலம் பெற்றோரிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணியை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த இயக்கத்தின் இளைஞரணித் தலைவரான வெங்காடம்பட்டி பூ.திருமாறனிடம் பேசியபோது, ``டீக்கடைகள், சாலையோரங்களில் சாமானிய மக்கள் பயனடையும் கரும்புச் சாறுக் கடைகள் போன்றவற்றைத் திறக்கக் கூடாது என வலியுறுத்தும் அரசு, டாஸ்மாக் மதுக்கடையைத் திறந்தது வேதனை தருவதாக இருந்தது. நீதிமன்றம் கண்டித்த நிலையில் அரசு இந்த அரிய சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி நிரந்தரமாக மதுக்கடைகளை மூட வேண்டும். டாஸ்மாக் கடைகளைத் திறந்து விட்டால், கொரோனா பாதிப்பை விடவும் அதிகமான பாதிப்பு தமிழக மக்களுக்கும் வருங்கால சந்ததிக்கும் ஏற்பட்டு விடும்” என்று ஆதங்கப்பட்டார்.

``டாஸ்மாக்குக்கு எதிரான போராட்டத்தை தீவிரப்படுத்துவேன்!" மதுரை நந்தினி ஆவேசம்

டாஸ்மாக்குக்கு எதிராக பல ஆண்டுகளாக போராடி வரும் மதுரை நந்தினி கூறுகையில், ``கொரோனா ஊரடங்கு 40 நாட்களுக்கும் மேலாக நீடிக்கிறது. மக்கள் அனைவரும் மிக இக்கட்டான சூழ்நிலையில் இருக்கும் போது, மது ஆலைகளை இயக்கவும் மதுக்கடைகளை திறக்கவும் தமிழக அரசு அனுமதித்துள்ளது. மது ஆலைகளை இயக்க அனுமதிக்க வேண்டுமென மத்திய அரசிடம் மது ஆலை அதிபர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அவர்களின் கோரிக்கையை ஏற்று நாடு முழுவதும் மது ஆலைகள் இயங்கவும் மதுக்கடைகளை திறக்கவும் உடனடியாக மத்திய அரசு உத்தரவிட்டது. இதை எதிர்பார்த்துக் காத்திருந்த மாநில அரசுகள் அவசர அவசரமாக மதுக்கடைகளை திறக்கின்றன.

ஜெ நினைவு இல்ல சர்ச்சை... எம்.ஜி.ஆர் நினைவு இல்லம் விஷயத்தில் என்ன நடந்தது தெரியுமா?

மதுக்கடைகள் திறந்த தமிழக அரசை கண்டிக்கிறோம். முன்பு நடத்தியதை விட இன்னும் தீவிரமாக டாஸ்மாக் எதிர்ப்பு போராட்டத்தை நடத்துவேன்" என்றார்.

Madurai Nandhini
Madurai Nandhini

முதல்வருக்கு 10,000 மெயில் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சேலம் மாநகர செயலாளர் பிரவின், ``எங்கள் கட்சியின் சார்பாக மதுக்கடைகளைத் திறக்கக் கூடாது என்பதை வலியுறுத்தி முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு பத்தாயிரம் மெயில் அனுப்ப இருக்கிறோம். கட்சித் தலைமையில் பேசி அடுத்த கட்டமாக போராட்டத்தை தீவிரப்படுத்தவுள்ளோம்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு