Published:Updated:

அற்புதம்மாளுக்கு ஆதரவு தெரிவித்து கிளர்ந்தெழுந்த இணைய உலகம்!

அற்புதம்மாள் - பேரறிவாளன்
அற்புதம்மாள் - பேரறிவாளன்

30 ஆண்டுகளாகத் தன் மகனின் வருகைக்காக நடந்துவரும் அற்புதம்மாளுக்கு ஆதரவு தெரிவித்து #StandwithArputhamAmmal என்ற ஹேஷ்டேக் தமிழ் ட்விட்டர் சமூகத்தால் டிரெண்ட் செய்யப்பட்டது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

அற்புதம்மாள்... தன் மகனுக்காக 30 ஆண்டுகளாக அரசு அமைப்புடன் போராடி வரும் தாய். தனி ஒரு ஆளாக, சிறையில் வாடும் தன் மகனுக்காக அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், வழக்கறிஞர்கள் எனப் பலரையும் சந்தித்து வருபவர். பரந்துபட்ட தமிழ் மக்கள் பலரும் அற்புதம் அம்மாளுக்காகவும் அவரின் மகன் பேரறிவாளன் உள்ளிட்டோரின் விடுதலைக்காகவும் ஆதரவுக் குரல் கொடுத்த வண்ணமிருக்கிறார்கள்.

அற்புதம்மாள்
அற்புதம்மாள்

அந்தத் தாயின் குரல் தற்போது இணையம் முழுவதும் ஒலித்துக்கொண்டிருக்கிறது. 30 ஆண்டுகளாகத் தன் மகனின் வருகைக்காக நடந்துவரும் அற்புதம்மாளுக்கு ஆதரவு தெரிவித்து #StandwithArputhamAmmal என்ற ஹேஷ்டேக் தமிழ் ட்விட்டர் சமூகத்தால் டிரெண்ட் செய்யப்பட்டது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பேரறிவாளன் சிறை சென்று ஜூன் 11-ம் தேதியோடு 30 ஆண்டுகள் ஆகின்றன.

ஸ்ரீபெரும்புதூரில் 1991-ம் ஆண்டு தேர்தல் பிரசாரத்துக்கு வந்தபோது மனித வெடிகுண்டு தாக்குதல் மூலம் ராஜீவ் காந்தி கொல்லப்பட்டார். இந்த வழக்கில் அற்புதம்மாவின் மகன் பேரறிவாளன் உட்பட பலர் கைது செய்யப்பட்டனர். பேரறிவாளன் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டு, `இரண்டு ஒன்பது வோல்ட் பேட்டரிகள்’ வாங்கிக் கொடுத்தார் என்பது. தொடக்கத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்டு பிறகு ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. தொடக்கத்தில் இருந்தே பேரறிவாளனை விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழகம் முழுவதும் குரல்கள் ஒழித்து வருகின்றன. பேரறிவாளனின் அம்மா, அற்புதம்மாள் தன் மகனின் விடுதலைக்காகத் தொடர்ந்து போராடி வருகிறார். பேரறிவாளனின் வாக்குமூலத்தைத் தவறாகப் பதிவு செய்ததாக விசாரணை அதிகாரியே கூறிவிட்ட பின்னும் விடுதலை செய்யவில்லை என்பதே சமூக ஆர்வலர்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டு.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இச்சூழலில் சமூக ஊடகங்களில் பேரறிவாளனை விடுதலை செய்ய வேண்டும் என்ற குரல் ஜூன் 11-ம் தேதி முதல் அழுத்தமாக ஒலித்து வருகிறது. இதையடுத்து, பேரறிவாளனின் அன்பின் நிழலில் இளைப்பாற காத்திருக்கும் அற்புதம்மாள், ட்விட்டரில் ``78 வயது கணவரும் 72 வயதில் நானும் எங்கள் வாழ்வின் இறுதியில் இருக்கிறோம் என்பதை நன்கறிவேன். எனக்குப் பின்னே என் மகனின் கதி பற்றி துயருற்று அழுத இரவுகள் பலவுண்டு. நாங்கள் இருக்கிறோம் என்று (#StandwithArputhamAmmal) இணையமே எழுந்து நிற்பதைக் கண்டு நம்பிக்கையில் அழுகின்றேன். மகன் வருவான்!” என்று மனம் நெகிழ கண்ணீர் ததும்ப ஏக்கத்தோடு பதிவிட்டிருந்தார்.

அற்புதம்மாளுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த சிலரிடம் இதுகுறித்துப் பேசினோம்

நடிகர் பொன்வண்ணன்

``கடந்த 30 வருடங்களாகத் தவறே செய்யவில்லை என்று இந்தக் கட்டமைப்புக்குள் போராடுவது என்பது மிகவும் கொடுமையானது. தவறு செய்தவர்கள் புத்திசாலித்தனமாக வாதாடி வெளியே வந்துவிடுகிறார்கள். விசாரணை அதிகாரியே, தவறு செய்துவிட்டேன் என்று சொல்லியிருக்கிறார். இவ்வளவு பேர் இதிலுள்ள நியாயத்தைப் பேசியும்கூட அரசு செவி சாய்க்காதது அதிர்ச்சியாக இருக்கிறது. தொடர்ச்சியாக ஒரு தாய் நியாயம் கேட்டு நடந்துகொண்டு இருக்கிறார். அந்தத் தாயின் மனநிலையில்தான் நாங்களும் இருக்கிறோம், அற்புதம் அம்மாள் பேரறிவை தன் வயிற்றில் ஈன்றெடுத்ததால் அவருக்கு வலி அதிகமாக இருக்கிறது. எங்களுக்கும் ஆழ் மனதில் அந்தத் தாய்க்கு நிகரான வலி இருக்கிறது. நாங்கள் இன்னும் அழுத்தமாகக் குரல் கொடுப்போம்.”

கவிஞர் சல்மா

``30 வருஷமா குற்றம் நிரூபிக்கப்படாமல், ஒரு நிரபராதி சிறையில் இருப்பது நீதிக்கே எதிரான விஷயம். அவர் பேட்டரி வாங்கிக் கொடுத்தார் என்பதைத் தவிர்த்து, எந்தக் குற்றச்சாட்டும் நிரூபிக்கப்படவில்லை.

குற்றம் நிரூபிக்கப்படாமல் பேரறிவாளன் அதிகப்படியான காலம் சிறையில் அனுபவித்துவிட்டார். அவர் விடுவிக்கப்பட வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக உள்ளது. தமிழ்நாடே அவரை விடுவிக்க வேண்டுமென்று ஒருசேர கூறுகையில் எந்த நோக்கத்துக்காக அவரை சிறையிலே வைத்து இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் தொடர்ந்து போராடிக்கொண்டு உள்ளார். தமிழ்நாடு ஒரே அணியில் நிற்கின்றது அவரின் விடுதலைக்காக. அவரை வெளியில்விடாமல் இருப்பது ஒரு வன்முறை. மனித உரிமைகளுக்கு எதிரான விஷயம். அவரை வெளியில் விடாமல் இருப்பதற்குரிய அரசியல் நோக்கம் என்ன என்று புரியவில்லை. தமிழ்நாடு சட்டமன்றத்திலேயே தீர்மானம் நிறைவேற்றி அவரை வெளியில் விட முடியும் என்று கூறுகிறார்கள். அதைச் செய்யாமல் ஒரு தாயின் போராட்டத்தை இந்தச் சமூகமும் ஆட்சியாளர்களும் வேடிக்கை பார்த்துக்கொண்டுள்ளார்கள் என்பதே ஒரு பெரிய அவமானம். அறிவு அதிக காலம் சிறையில் இருந்துவிட்டார், அவர் வெளியில் வருவதே நியாயம்."

கவிஞர் சல்மா
கவிஞர் சல்மா

கவிஞர் குட்டி ரேவதி

``ஒருத்தர் மேல குற்றமே இல்லை என்று நிரூபிக்கப்பட்ட பிறகும், 30 ஆண்டுகளுக்கு மேலும் அவரை விடுவிக்காமல் இருப்பது ஒரு பெரிய குற்றம், அநீதி.

முன்னர் அற்புதம்மாள் தனியாகப் போராடிக்கொண்டு இருந்தார். இப்போது அது பெரிய இயக்கமாகி இருக்கிறது. தமிழகமே அறிவு குற்றமற்றவர் என்று குரல் கொடுத்த பிறகும் அவரை சிறையில் வைத்திருப்பது மிகப்பெரிய அநீதி. உடனே அவரை சிறையிலிருந்து விடுவிக்க வேண்டும்.

அற்புதம்மாளின் 30 ஆண்டுக்காலமாகத் தன் மகன் குற்றமற்றவன் என்று நிரூபிக்க காவல்நிலையம், நீதிமன்றங்கள், சிறைச்சாலைகள் என்று ஓயாமல் ஓடிக்கொண்டே இருக்கிறார். இந்தப் போராட்டம் இந்திய வரலாற்றிலேயே நடைபெறாத ஒன்று. மத்திய புலனாய்வுத்துறையில் கண்காணிப்பாளராக இருந்த V.தியாகராஜன், ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 17 பேரின் வாக்குமூலத்தை பதிவு செய்தவர். அவர் ஓய்வு பெற்றபின், `பேரறிவாளனின் வாக்குமூலத்தை நான் சரியாகப் பதிவு செய்யவில்லை’ என்று மன்னிப்புக் கோரினார். பெரிய பதவியில் இருந்தவர், தானாக முன்வந்து தன் தவற்றை உணர்ந்து ஒப்புக்கொண்டார். மக்கள் கிளர்ந்தெழுந்து அனைவரும் ஒன்றுகூடி அவர்கள் மீதான தூக்குத் தண்டனையைத் தகர்க்க போராடியதால், அது நிகழ்ந்தது.

கவிஞர் குட்டி ரேவதி
கவிஞர் குட்டி ரேவதி

தற்பொழுது நிகழ வேண்டியது, 7 தமிழர்களும் விடுதலை அடைய வேண்டும். 30 ஆண்டுகள் என்பது காலம் மீறிய தண்டனை. இந்த மாதிரியான தவறான தண்டனை அளிக்கப்பட்டதற்கு பகிரங்கமாக மன்னிப்பும் இழப்பீடும் பேரறிவாளனுக்கு வழங்கப்பட வேண்டும். ஆளுநரும், மாநில அரசும் தலையிட்டு நீதி வழங்க முடியும். இதன் பின்னர் உண்மையான குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்."

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு