Published:Updated:

கிராம சபையைக் கூட்ட வலியுறுத்தி `கிராம சபை மீட்பு வாரம்'... கைகோக்கும் அமைப்புகள்!

உப்பூரில் கூடிய கிராமசபைக் கூட்டம் (கோப்பு படம்)
உப்பூரில் கூடிய கிராமசபைக் கூட்டம் (கோப்பு படம்) ( உ.பாண்டி )

தமிழகம் முழுவதும் கிராம சபைக் கூட்டத்தை நடத்த உத்தரவிட வேண்டும் என்று பல்வேறு அமைப்புகள் இணைந்து `கிராம சபை மீட்பு வாரம்' என்பதை நடத்த உள்ளன.

இந்த அமைப்புகளின் சார்பில் பேசிய தன்னாட்சி அமைப்பின் பொதுச் செயலாளர் நந்தகுமார், ``மக்களுக்கு மிக அருகிலிருந்து பணியாற்றிவரும் கிராம ஊராட்சி நிர்வாகம், கிராம நன்மைக்கான உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய நிலையில் உள்ளது. குடிநீர், ஆரோக்கியம், பொதுச் சுகாதாரம் போன்ற மிக முக்கியமான விஷயங்களில், நிர்வாக ரீதியான பணிகளையும் முடிவுகளையும் எடுத்து இயங்க வேண்டியுள்ளது. கிராம ஊராட்சி நிர்வாகத்தை முறையாக வழிநடத்தும் அமைப்பாக இருக்கும் கிராமசபை, ஊராட்சிக்கான வழிகாட்டுதல்களை வழங்கி முக்கிய முடிவுகள் எடுக்கப் பங்காற்றி வருகிறது.

கிராமசபை மூலமாகவே, திட்டப் பயனாளிகள் தேர்வு, பணிகள் தேர்வு, தணிக்கை அறிக்கை ஒப்புதல் போன்ற விஷயங்கள் நடைபெற்று வருகின்றன. மிக முக்கியமாக, கிராமத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கான கிராம வளர்ச்சித் திட்டம் தயாரிப்பு மற்றும் ஒப்புதல் ஆகியவை, `மக்கள் திட்ட இயக்கம்’ என்ற பெயரில் கிராமசபைகள் மூலமாகவே தற்போது தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

கிராம சபைக் கூட்டம்
கிராம சபைக் கூட்டம்

ஆனால், தமிழகத்தில் கடந்த மார்ச் 24, 2020 முதல் ஊரடங்கு நடைமுறையிலிருப்பதாலும், Epidemic Diseases Act 1897, பேரிடர் மேலாண்மை சட்டம் 2005, குற்றவியல் நடைமுறைச் சட்டம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டம் ஆகியவற்றின் பல்வேறு சட்டப்பிரிவுகள் மூலம், மாநில அரசும் மாவட்ட நிர்வாகங்களும் மக்களின் இயல்பு வாழ்க்கையைக் கட்டுப்படுத்தி வருவதாலும், மே 1 மற்றும் ஆகஸ்ட் 15 தேதிகளில் நடக்க இருந்த இரு கிராமசபைக் கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டன. இன்றுவரை அவை நடத்தப்படவில்லை.

தற்போது படிப்படியாக ஊரடங்குத் தளர்வு அறிவிக்கப்பட்டு, பொதுப் போக்குவரத்து இயக்கம், கடைகள் மற்றும் அலுவலகங்கள் திறப்பு, சிறு கூட்டங்கள் எனப் பணிகள் தொடங்கியுள்ள நிலையில், சுமார் 8 மாத கால இடைவெளிக்குப் பிறகு, அக்டோபர் 2 காந்தி ஜயந்தி கிராம சபைக்கான அறிவிப்பு 26.09.2020 அன்று வெளியிடப்பட்டது.

பல ஊராட்சிகளில், ஊரடங்கு காலச் சவால்கள், கிராம மக்களின் வேலைவாய்ப்பு இழப்பு, பொருளாதார சிக்கல்கள், அரசின் பல்வேறு திட்டங்கள் மற்றும் ஊராட்சி நலன் சார்ந்த பிற விஷயங்களை விவாதித்து முடிவு எடுக்கவும் செயல்படவும் இளைஞர்கள், பெண்கள் மற்றும் பொது மக்கள், இந்த கிராமசபையை எதிர்நோக்கிக் காத்திருந்தார்கள். மேலும், ஊராட்சித் தேர்தல் நடைபெறாத சுமார் 2,900-க்கும் மேற்பட்ட கிராம ஊராட்சிகளில் இந்தக் கிராமசபைக் கூட்டத்தின் மூலமாகத்தான், மக்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தத் தயாராக இருந்தார்கள். அரசு அறிவித்த பாதுகாப்பு வழிகாட்டுதல்களின்படி, சமூக இடைவெளிக்கான வழிமுறைகள், கிருமி நாசினி தெளித்தல் போன்றவற்றை கடைப்பிடிக்க தேவையான ஏற்பாடுகளை ஊராட்சித் தலைவர்கள் ஏற்பாடு செய்திருந்த நிலையில், எவரும் எதிர்பாராத வகையில் அக்டோபர் 1 இரவு, மாவட்ட ஆட்சித் தலைவர்களின் சுற்றறிக்கை வாயிலாகக் கிராமசபைக் கூட்டங்கள் ரத்து செய்யப்படுவதாக ஊடகச் செய்திகள் தெரிவித்தன.

கிராமசபை
கிராமசபை

கொரோனா சூழலிலும், கடந்த செப்டம்பர் மாதம், நாடாளுமன்றக் குளிர்கால கூட்டத் தொடர் நடந்து முடிந்துள்ளது. அதேபோல சட்டமன்றக் கூட்டமும் தமிழகத்தில் நடந்துள்ளது. ஆனால், மூன்றாவது அரசான கிராம ஊராட்சிகளில், கொரோனா பெருந்தொற்றுக்கு முன், ஜனவரி 26 அன்று குடியரசு தின கிராமசபை மட்டும்தான் நடைபெற்றுள்ளது. கொரோனா சூழலில் சட்டங்கள் இயற்றவும், முக்கிய பிரச்னைகள் குறித்து விவாதிக்கவும் எந்த அளவுக்கு நாடாளுமன்ற கூட்டமும், சட்டமன்றக் கூட்டமும் மிக அவசியமோ, அதே அளவுக்கு, கிராமசபையைக் கூட்டுவதும் அவசியமே.

1. தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 பிரிவு 3(2)-ன் படி, கிராமசபை ஒரு ஆண்டில் குறைந்தது இரண்டு முறையாவது கூட வேண்டும். மேலும், இரண்டு கூட்டங்களுக்கு இடையே ஆறு மாதங்களுக்கு மேல் கால இடைவெளி இருக்கக் கூடாது என்பதும் குறிப்பிடத்தக்கது.

2. மத்திய ஊரக வளர்ச்சித்துறை, 24.09.2020 அன்று தமிழகம் உட்பட அனைத்து மாநில கூடுதல் தலைமைச் செயலர்களுக்கும் அனுப்பியுள்ள கடிதத்தில், கிராம ஊராட்சி வளர்ச்சித் திட்டம் தயாரிக்கவும், வருகின்ற நிதியாண்டில் தேசிய ஊராக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் தொடர்பான அனைத்து பணிகளுக்கான முடிவுகளை எடுக்கவும், அக்டோபர் 2 கிராம சபையையும், அக்டோபர் 3 முதல் நவம்பர் 30-க்குள் ஒரு சிறப்புக் கிராமசபையையும் கட்டாயம் கூட்ட வேண்டுமென அறிவுறுத்தியுள்ளது.

நந்தகுமார்
நந்தகுமார்

பெரும்பாலும் மரத்துக்கடியில், பொது இடங்களில், பூட்டப்படாத காற்றோட்ட வசதி உள்ள இடங்களில் நடக்கும் கிராமசபைக் கூட்டங்களை சமூக இடைவெளியோடு நடத்துவதில் எந்தச் சிரமமும் இருக்காது. மக்கள் சுய நிதானம் இழந்து, சமூக இடைவெளி சற்றும் கடைப்பிடிக்க முடியாத நிலை ஏற்படுவதற்கு அனைத்து வாய்ப்புகளும் உள்ள டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்பட்டு விற்பனை நடைபெற்றுக்கொண்டிருக்கும்போது, ஜனநாயகத்தின் ஆணிவேராக இருக்கிற, கிராம மக்களின் வாழ்வாதாரத்தையும் சுற்றுச்சூழலையும் சுகாதாரத்தையும் உறுதி செய்யக்கூடியக் களமாக இருக்கக்கூடிய, கிராமசபைக் கூட்டத்தை தமிழக அரசு அறிவித்து, பின் ரத்து செய்திருப்பது மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது.

எனவே, தமிழக அரசு, போதிய பாதுகாப்பு நெறிமுறைகளை அறிவித்து, உடனடியாக கிராமசபைக் கூட்டங்களை நடத்திட ஆவன செய்ய வேண்டும் எனக் கீழ்க்கண்ட அமைப்புகளைச் சார்ந்த நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். கிராமசபையைக் கூட்ட இனியும் காலம் தாழ்த்துவது, அரசுக்கு அவப்பெயரையே ஏற்படுத்தும் என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

கிராமசபை
கிராமசபை

இது சம்பந்தமாகத் தோழன் இயக்கம், சட்டப்பஞ்சாயத்து இயக்கம், வாய்ஸ் ஆஃப் பீப்புள் (மக்களின் குரல்), அறப்போர் இயக்கம் மற்றும் தன்னாட்சி அமைப்பு இணைந்து அக்டோபர் 11-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை கிராம சபை மீட்பு வாரமாக கடைப்பிடிக்க இருக்கிறோம். தமிழக முழுவதிலும் கிராமங்களில் உள்ள இளைஞர்கள், பெண்கள், பொதுமக்களும் இதில் பங்கெடுக்குமாறு அழைப்பு விடுக்கிறோம். இந்த அறப்போராட்டம் வாயிலாகக் கிராம சபை நடத்துவதன் அவசியத்தை வலியுறுத்த இருக்கிறோம்” என்றார்.

வாய்ஸ் ஆஃப் பீப்பிள் அமைப்பின் சாரு கோவிந்தன், சட்டப்பஞ்சாயத்து இயக்கத்தின் பொதுச் செயலாளர் செந்தில் ஆறுமுகம். தோழன் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் மா.ராதாகிருஷ்ணன், அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன், தன்னாட்சி அமைப்பின் தலைவர் கே.சரவணன் ஆகியோர் இந்நிகழ்வை முன்னெடுக்க உள்ளனர். இந்நிகழ்வுக்குப் பசுமை விகடன் ஊடக ஆதரவு வழங்கியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு