அரசியல்
அலசல்
சமூகம்
Published:Updated:

சும்மா அறிவிப்போம்... அப்புறம் பார்த்துக்கலாம்... சுற்றுலாத்துறையின் சொதப்பல் திட்டங்கள்!

படகு சவாரி
பிரீமியம் ஸ்டோரி
News
படகு சவாரி

சுற்றுலாத்துறைக்குப் படகு சவாரி, தமிழ்நாடு ஹோட்டல்கள் ஆகியவற்றின் மூலம்தான் பெரிய அளவில் வருவாய் கிடைக்கிறது. இதனால்தான், மெரினா கடற்கரையில் படகு சவாரி திட்டத்தை அறிவித்ததும் நல்ல வரவேற்பு இருந்தது.

தீபாவளி, கிறிஸ்துமஸ், அரையாண்டு பொது விடுமுறை, புத்தாண்டு, பொங்கல் என அடுத்தடுத்த மாதங்களில் விடுமுறைக் கொண்டாட்டங்களால் தமிழக சுற்றுலாத்தலங்களில் மக்கள் கூட்டம் நிரம்பி வழியவிருக்கிறது. இந்தப் பின்னணியில், சுற்றுலாப் பயணிகளின் தேவைகளைப் பூர்த்தி செய்யவும், சுற்றுலாத் தலங்களை மேம்படுத்தி வருவாய் ஈட்டும் பணிகளை மேற்கொள்ளவும் தமிழக சுற்றுலாத்துறையின் செயல்பாடுகள் எப்படி இருக்கிறது என்ற கேள்வியோடு களத்தில் இறங்கி விசாரித்தோம்...

“தி.மு.க அரசு அமைந்த பிறகு நடைபெற்ற முதல் சட்டமன்றக் கூட்டத்தொடரில், ‘மெரினாவில் படகு சவாரி, மதுரை டு கொடைக் கானல் ஹெலிகாப்டர் திட்டம், மலைவாசஸ் தலங்கள், ஆன்மிகத்தலங்களில் கேபிள் கார் வசதி, கோவை உக்கடம் - வாலாங்குளம் ஏரியில் படகுக் குழாம், ஏலகிரியில் சாகசச் சுற்றுலா, முட்டுக்காடு படகு இல்லத்தில் மிதவை உணவகம், பூம்புகார் துறைமுகம் புனரமைப்பு, நகரங்களுக்கு இடையே சொகுசுக் கப்பல், படகு சேவை’ எனக் கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டு, அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார் சுற்றுலாத் துறை அமைச்சர் மதிவேந்தன்.

அதேபோல, அடுத்த சட்டமன்றக் கூட்டத் தொடரில், `தென்னிந்தியாவின் ஸ்பா-வான குற்றாலம் மேம்படுத்தப்படும்; சுற்றுலா உதவி மையம் அமைக்கப்படும்; முத்துப்பேட்டை, பூண்டி அணைக்கட்டு, முத்துக்குடா, ஆண்டிப்பாளையம், செங்கல்பட்டு கொளவாய் ஏரி உள்ளிட்டவற்றில் படகு சவாரி, நீர்ச் சாகச விளையாட்டுகள் தொடங்கப்படும்; சென்னையிலுள்ள முக்கிய சுற்றுலாத்தலங்களை இணைக்கும் வகையில் ‘எங்கும் ஏறலாம், எங்கும் இறங்கலாம்’ திட்டம்...’ என மீண்டும் கவர்ச்சி அறிவிப்புகளை வெளியிட்டார். ஆனால், இந்த அறிவிப்புகளில் பெரும்பாலானவை ஏட்டளவிலேயே இருக்கின்றன என்கிறார்கள் பொதுமக்கள்.

58 அறிவிப்புகளும்... தனியார் ஆதிக்கமும்!

இது குறித்து சுற்றுலாத்துறை மாவட்ட அதிகாரிகளிடம் விசாரித்தோம்.

“சுற்றுலாத்துறைக்குப் படகு சவாரி, தமிழ்நாடு ஹோட்டல்கள் ஆகியவற்றின் மூலம்தான் பெரிய அளவில் வருவாய் கிடைக்கிறது. இதனால்தான், மெரினா கடற்கரையில் படகு சவாரி திட்டத்தை அறிவித்ததும் நல்ல வரவேற்பு இருந்தது. ஆனால், கடலின் தன்மையை ஆராய்ந்தபோது, அது படகு சவாரிக்கு ஏற்றதல்ல என்று முடிவு கிடைத்தது. எனவே, 16 இடங்களில் அறிவிக்கப்பட்ட படகு சவாரி திட்டம் அதற்கான முன்னெடுப்பு எதுவும் இல்லாமல் கிடப்பில் போடப்பட்டிருக்கிறது. அதேபோல, ஏலகிரி உள்ளிட்ட முக்கியத் தலங்களில் படகுக் குழாம்கள் தனியாரிடம் இருக்கின்றன. முட்டுக்காடு, முதலியார் குப்பம், பைக்காரா, ஏற்காடு, கொடைக்கானல் உள்ளிட்ட படகுக் குழாம்களில் சுமார் 35 படகுகள் இரண்டு ஆண்டுகளாக சேதமாகிக் கிடக்கின்றன. இவற்றைச் சரிசெய்ய இன்னும் நிதி ஒதுக்கப்படவில்லை.

சும்மா அறிவிப்போம்... அப்புறம் பார்த்துக்கலாம்... சுற்றுலாத்துறையின் சொதப்பல் திட்டங்கள்!

‘தமிழ்நாடு ஹோட்டல்’ களைப் பொறுத்தவரை 53-ல் 25 தனியாருக்கு லீஸ் விடப்பட்டன. இவற்றில் தற்போது ஐந்து ஹோட்டல்களின் லீஸ் முடிந்து, அரசு மீண்டும் அவற்றைக் கையகப்படுத்தி இருக்கிறது. ஆனால், அவை இன்னும் பயன்பாட்டுக்கு வரவில்லை. தற்போது திருச்சி தமிழ்நாடு ஹோட்டலுக்கு ரூ.4.17 கோடி செலவில் புதிய கட்டடங் கள் கட்டப்பட்டு இருக்கின்றன. ஆனாலும், திருச்சி உட்பட 10 ஹோட்டல்களைத் தனியாருக்கு லீஸ் விடவே சுற்றுலாத்துறை ஆலோசித்துவருகிறது. அதேபோல, கோர்டிலியா குரூஸ் எனும் ‘சொகுசுக் கப்பல் திட்டம்’ கடந்த ஜூன் மாதம் தொடங்கப்பட்டது. இதற்காக அரசுடன் அந்த நிறுவனத்தின் சார்பாக எந்த ஒப்பந்தமும் போடப்படவில்லை. பயணி களை பஸ்ஸில் ஏற்றி, சென்னை துறைமுகத்தில் கொண்டுபோய் விடும் வேலையை மட்டுமே சுற்றுலாத்துறை மேற்கொள்கிறது. இதுபோல தனியார் முதலாளிகளின் நலனுக்காக, ராமேஸ் வரம் டு கன்னியாகுமரி கப்பல் சுற்றுலா திட்டம் கிடப்பில் போடப்பட்டுவிட்டது. மொத்தமாகச் சட்டமன்றத்தில் சுற்றுலாத்துறை சார்பில் அறிவிக்கப்பட்ட 58 அறிவிப்புகளில் 20 சதவிகிதம் இன்னும் செயல்பாட்டுக்கு வரவில்லை. மீதமுள்ள 80 சதவிகித அறிவிப்புகளுக்கான முதற்கட்ட பணிகள்கூட நடைபெறவில்லை. திட்டங்கள் குறித்து எந்த பூர்வாங்க ஆய்வுகளையும் நடத்தாமல், ‘சும்மா அறிவிப்போம்.... அப்புறம் பார்த்துக்கலாம்...’ என்ற மனநிலையில் செயல்படுவதே இந்த சொதப்பல்களுக்கெல்லாம் காரணம்” என்றனர்.

அமைச்சரின் அமெரிக்க சுற்றுலா!

“கடந்த டிசம்பர் மாதம் மெக்ஸிகோ நாட்டின், லியோன் நகரில் நடைபெற்ற பலூன் கண்காட்சிக்கு சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன், துறைச்செயலர் சந்திர மோகன், சுற்றுலா வளர்ச்சிக் கழக இயக்குநர் சந்தீப் நந்தூரி ஆகியோர் சென்றிருந்தனர். இதையடுத்து, பொள்ளாச்சியில் 2022-ம் ஆண்டு, பிப்ரவரி மாதம் தனியார் நிறுவனங்களுடன் இணைந்து ‘பலூன் திருவிழா’ நடத்தப் படும் என்று அறிவித்தார் அமைச்சர். ஆனால், ஓரிரு நாள்கள் நடக்கும் இந்த பலூன் திருவிழா வுக்கு லட்சக்கணக்கில் பணம் செலவுசெய்து என்ன மாறப் போகிறது... அதற்கு பதில், பொள்ளாச்சியைச் சுற்றியிருக்கும் சுற்றுலாத் தலங்களை மேம்படுத்தலாம் என்று யோசனை சொன்ன போது, உயரதிகாரிகள் அதைக் காது கொடுத்துக்கூடக் கேட்கவில்லை. இருந்தபோதும், மெக்ஸிகோவைத் தொடர்ந்து துபாய் உள்ளிட்ட பல வெளிநாடுகளுக்கும், டெல்லி, குஜராத், மும்பை, கொல்கத்தா எனப் பல வெளி மாநிலங்களுக்கும் அமைச்சரும் அதிகாரிகளும் தொடர்ந்து பயணப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், அந்த பலூன் திருவிழாவோ, வேறு புதிய திட்டங்களோ இதுவரை தொடங்கப் படவில்லை. இதற்கான செலவு மட்டுமே 50 லட்ச ரூபாயைத் தாண்டுகிறது.

கடந்த ஆகஸ்ட் மாதம், மாமல்லபுரத்தில் நடைபெற்ற தனியார் ‘பட்டம் திருவிழா’வுக்காகப் பல லட்ச ரூபாயை சுற்றுலாத்துறை செலவிட்டது. நல்ல கூட்டம் இருந்தது என்றாலும், அதன் மூலம் அரசுக்கு ஒரு ரூபாய்கூட வருவாய் இல்லை. அதேபோல, ‘பொன்னியின் செல்வன்’ வரலாற்றுப் பயணம், ஹெரிடேஜ் ஃபுட் வாக், சைக்கிளிங் என எல்லாமே தனியார் நிறுவனங்கள்தான் செய்கின்றன. அதற்கும் பெரிய அளவில் வரவேற்பு இல்லையென்றாலும், குறிப்பிட்ட சிலருக்காக துறையைத் தொடர்ந்து பயன்படுத்துகிறார்கள்” என்றும் சிலர் குற்றம் சாட்டுகிறார்கள்.

‘சும்மா’ அறிவிப்புகள்... சொதப்பல் திட்டங்கள்!

இது குறித்து சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தனிடம் கேட்டபோது, “படகு சவாரி மூலமாகத்தான் அதிக வருவாய் எங்களுக்குக் கிடைக்கிறது. அதை மேம்படுத்த நடவடிக்கை எடுத்துவருகிறோம். குறிப்பாக ஏலகிரியைச் சுற்றுலாத்தலமாக மேம்படுத்த, அரசின் பிற துறைகளிடமிருந்து தற்போதுதான் அரசாணை பெற்றிருக்கிறோம். மதுரை டு கொடைக்கானல் ஹெலிகாப்டர் திட்டத்தைச் செயல்படுத்த மும்முரமாக வேலை செய்துவருகிறோம். மலை வாசஸ்தலங்கள், ஆன்மிகத்தலங்களில் கேபிள் கார் வசதி ஏற்படுத்துவது தொடர்பாக தர்மசாலாவுக்குச் சென்று விசாரித்தோம். அந்தப் பணிகளுக்கு 150 கோடி ரூபாய்க்கு மேல் செலவாகும் என்று தெரியவந்திருக்கிறது. அதேபோல கன்னியாகுமரியில் கூடுதல் படகுப் போக்குவரத்துக்கான வழித்தடங்கள் இல்லை. அதனால், இவ்விரு திட்டங்களுக்கான மாற்று ஏற்பாடுகள் என்ன என்பது குறித்து ஆராய்ந்து வருகிறோம்.

மதிவேந்தன்
மதிவேந்தன்

அடுத்த ஆண்டு பிப்ரவரியில் பொள்ளாச்சியில் பலூன் திருவிழா நடத்த நடவடிக்கை எடுக்கப்படும். குறிப்பாக, சுற்றுலாவில் சிறப்பாகப் பங்களிக்கும் நிறுவனங்களுக்கு முதன்முறையாக விருது வழங்கி கௌரவித்திருக்கிறோம். சுற்றுலாவுக்கென தனிக் கொள்கை உருவாக்கிவருகிறோம். நாங்கள் ஆட்சிக்கு வந்த பின்னர், தமிழ்நாடு ஹோட்டல் களும் லீஸுக்கு விடப்படவில்லை. சுற்றுலாத் துறையைப் பொறுத்தவரை தனியார் பங்கு அவசியம். எல்லாவற்றையும் அரசே செய்துவிட முடியாது. சுற்றுலாத்துறையின் மேம்பாட்டுத் திட்டம் மந்தமாக நடைபெற்றதற்கு கொரோனா பெருந்தொற்றே முக்கியக் காரணம். தற்போது பணிகளை முடிந்த அளவு விரைவாகச் செய்துவருகிறோம்” என்றார்.

முதல் சட்டமன்றக் கூட்டத்தொடரில் அறிவிப்புகள் வெளியாகி ஓராண்டுக்கு மேல் கடந்துவிட்டது. அறிவித்த திட்டங்களைச் செயல்படுத்தியிருந்தாலே மிடில் கிளாஸ் பட்ஜெட் சுற்றுலாவை ஓரளவுக்குப் பூர்த்தி செய்திருக்க முடியும். ஆனால், விளம்பரங்களைப்போல கவர்ச்சிகரமாகத் திட்டங்களை அறிவித்துவிட்டு, அதன் பிறகு சாத்தியக்கூறுகள் இல்லை என்பது சுற்றுலாத்துறையின் மிகப்பெரிய சொதப்பல்களுக்கு முக்கியக் காரணமாக இருக்கிறது.

சும்மா அறிவிப்போம்... அப்புறம் பார்த்துக்கலாம்... சுற்றுலாத்துறையின் சொதப்பல் திட்டங்கள்!

முந்தும் கேரளம்!

36,627 புராதன கோயில்கள், 1,076 கிலோமீட்டர் கடற்கரை, 15 வனவிலங்கு சரணாலயங்கள், 15 பறவைகள் சரணாலயங்கள், 5 புலிகள் காப்பகம், 5 தேசிய பூங்காக்கள், 411 நினைவுச்சின்னங்கள், அருவிகள், பரந்து விரிந்த புல்வெளிகள், மலைகள், காடுகள், ஆறுகள், ஏரிகள் எனத் தமிழ்நாட்டில் மூலை முடுக்கெங்கும் சுற்றுலாத்தலங்கள் பரந்து விரிந்துகிடக்கின்றன. அதேபோல, உலகப் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு, பொங்கல் திருவிழா என வருடத்தில் பெரும்பாலான நாள்கள் விழாக்கோலமாகக் காட்சியளிக்கும் மாநிலம், தமிழ்நாடு.

ஆனால், நம்மைவிட குறைவான சுற்றுலாத்தலங்களைக் கொண்ட கேரள மாநிலம், தனது சுற்றுலா வருவாயை ஆண்டுக்கு ஆண்டு அதிகரிப்பதற்கான புதுப்புது முயற்சிகளைக் கையாண்டுவருகிறது. வெள்ளம், தொடர்மழை, கொரோனா எனப் பல பேரிடர்களைத் தாண்டியும், அந்த மாநில சுற்றுலாத்துறை தலை நிமிர்ந்து நிற்கிறது. ஆனால், தமிழக சுற்றுலாத்துறை தனது இணையத்தளத்தைக்கூட மேம்படுத்தவில்லை. குறிப்பாக, தனியாரின் பங்களிப்பை அதிகப்படுத்திக்கொண்டே இருப்பதோடு, கொரோனா ஊரடங்கை இன்னும் காரணம் காட்டி, வளர்ச்சிப் பாதையிலிருந்து விலகி நிற்கிறது தமிழக சுற்றுலாத்துறை.