Published:Updated:

ஒதுக்கிவைத்த ஜெயலலிதா... அல்வா கொடுத்த கருணாநிதி... எஸ்.வி.சேகரின் அரசியல் வரலாறு!

எஸ்.வி.சேகர்

``இவருக்கு ஒரு அரசியல் வரலாறா?” என ஆச்சர்யப்படுபவர்களும் இருக்கிறார்கள். ஆனால், எஸ்.வி.சேகர் ஒரு வாழும் `என்சைக்ளோபீடியா’ என்பது தமிழ்கூறும் நல்லுலகுக்குத் தெரியவில்லை.

ஒதுக்கிவைத்த ஜெயலலிதா... அல்வா கொடுத்த கருணாநிதி... எஸ்.வி.சேகரின் அரசியல் வரலாறு!

``இவருக்கு ஒரு அரசியல் வரலாறா?” என ஆச்சர்யப்படுபவர்களும் இருக்கிறார்கள். ஆனால், எஸ்.வி.சேகர் ஒரு வாழும் `என்சைக்ளோபீடியா’ என்பது தமிழ்கூறும் நல்லுலகுக்குத் தெரியவில்லை.

Published:Updated:
எஸ்.வி.சேகர்

``அவரையெல்லாம் ஒரு ஆளாவே நாங்க மதிக்குறதில்ல. எதையாவது பேசுவார், பின்னர் வழக்கு வந்ததும் ஓடி ஒளிந்து கொள்வார். மோடிக்காக நாங்கள் பிரசாரம் செய்துகொண்டிருந்தபோது, அவர் எங்கே போயிருந்தார்?”, நடிகர் எஸ்.வி.சேகரை குறிப்பிட்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமி உதிர்த்த வார்த்தைகள்தான் இவை. மழைவிட்டும் தூவானம் விடாத கதையாக, எஸ்.வி.சேகர் எபிசோடை முதல்வர் கடந்து சென்றாலும் அ.தி.மு.க தொண்டர்களிடம் உஷ்ணம் தணிந்தபாடில்லை. சமூக வலைதளங்களில் சேகரை புரட்டி எடுக்கிறார்கள்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

எஸ்.வி.சேகருக்கு என்ன பிரச்னை?

கந்த சஷ்டி விவகாரம், பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு 10% இடஒதுக்கீடு போன்ற விவகாரங்களில் தி.மு.க-வின் பாணியை அ.தி.மு.க பின்பற்றுவதாக எஸ்.வி.சேகர் கருதுவதுதான் அவருக்குப் பிரச்னை. இதுதொடர்பாக அவர் சமீபத்தில் வெளியிட்ட வீடியோவில், ``அ.தி.மு.க உருப்பட வேண்டுமென்றால், அக்கட்சியின் கொடியில் இருக்கும் அண்ணாவின் படத்தை எடுக்க வேண்டும்” என்று கூறியிருந்தார். தன் பெயரிலேயே அண்ணாவின் பெயரை வைத்திருக்கும் ஒரு கட்சி, பார்த்துக்கொண்டிருக்குமா என்ன... ஜெயக்குமார் வடிவில் பொங்கிவிட்டது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

``அண்ணா படம் போட்ட அ.தி.மு.க கொடியைப் பிடிச்சுதான் மயிலாப்பூர் தொகுதியில் எஸ்.வி.சேகர் ஜெயிச்சார். அவருக்கு உண்மையிலேயே மான, ரோஷம், சூடு இருந்தா ஐந்து வருடம் அ.தி.மு.க எம்.எல்.ஏ.வாக இருந்து பெற்ற சம்பளப் பணத்தையும் இப்போது பெற்றுக்கொண்டிருக்கும் பென்ஷனையும் திருப்பியளிக்கத் தயாரா?” என்று ஜெயக்குமார் விளாசவும் சமூக வலைதளங்களில் வைரலானது. ``நான் ஒருமுறை கூட ஜெயலலிதாவின் காலில் விழுந்தது இல்லை. சசிகலாவை சந்தித்தது இல்லை. இரண்டு ஜோடி கால்களைத் தவிர முகத்தைக் கூட நிமிர்ந்து பார்க்காதவர்கள் பேசுவது காமெடியாக இருக்கிறது. என் கருத்தில் நான் உறுதியாக இருக்கிறேன். என் சம்பளப் பணம் ஒன்றும் அ.தி.மு.க-வின் பணமல்ல” என்று சேகர் பதிலடி தந்தார். கொரோனா செய்திகளால் பொலிவிழந்து போயிருந்த சமூக வலைதளம் இருதரப்பு சண்டையால் களைகட்டுகிறது.

எஸ்.வி.சேகரின் ஜம்போ சர்க்கஸ்!

ஜம்போ சர்க்கஸ் சென்றிருந்தால் பார்த்திருப்பீர்கள். உயரமான இடத்தில் இருந்து கைப்பிடிக்கு கைப்பிடி தாவுவார்கள். உயிரைப் பணயம் வைத்து விளையாடும் இந்த சாகசத்துக்கு `ப்ளையிங் ட்ரபீஸ்’ என்று பெயர். அதற்கு சற்றும் சளைக்காத சாகசத்தை அரசியலில் நிகழ்த்திக் காட்டியவர்தான் எஸ்.வி.சேகர். 2004 வரை பா.ஜ.க, பிறகு அ.தி.மு.க, கிளர்ச்சி அ.தி.மு.க, சார்பு தி.மு.க, காங்கிரஸ், இப்போது பா.ஜ.க என அவர் பிடித்து தாவாத கைப்பிடிகளே தமிழகத்தில் கிடையாது. தமிழக அரசியல் கட்சிகளின் கொள்கை, கோட்பாடு, சட்டத்திட்டத்தைப் பற்றி ஒருவர் தெரிந்துகொள்ள வேண்டுமென்றால், ஒவ்வொரு கட்சியாக ஏறி இறங்க வேண்டியதில்லை. எஸ்.வி.சேகரிடம் ஒருமணிநேரம் அமர்ந்துவிட்டால் போதும். ஒவ்வொரு கட்சியுடன் அவர் பயணித்த வரலாற்றை `நோட்ஸ்’ எடுத்துக் கொண்டாலே, தமிழகக் கட்சிகளைப் பற்றித் தெரிந்துகொள்ளலாம். கிண்டலுக்காகவெல்லாம் சொல்லவில்லை. தமிழக அரசியலில் அவர் ஒரு வாழும் `என்சைக்ளோபீடியா’தான்.

சரி, எஸ்.வி.சேகருக்கும் அ.தி.மு.க-வுக்குமான தொடர்பு எப்படி முளைத்தது? வழக்கமான `சின்னம்மா’ ரூட் மூலம் ஜெயலலிதாவிடம் அறிமுகமானவரல்ல எஸ்.வி.சேகர். ஒரு நாடக நடிகர் என்கிற அந்தஸ்தில் ஜெயலலிதாவிடம் அவருக்கு அறிமுகம் இருந்தது. ஜெயலலிதாவின் ஆட்சிக்காலத்தில் 1991-ல் கலைவாணர் பட்டமும் 1993-ல் கலைமாமணி விருதும் பெற்றவர். கலையுலக அறிமுகத்தைத் தாண்டி ஜெயலலிதாவுக்கும் எஸ்.வி.சேகருக்குமான தொடர்பு பெரிதாக இருந்ததில்லை. 2004 நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க படுதோல்வியை அடைந்தபிறகு, அடுத்த இரண்டு வருடத்தில் வரவிருந்த சட்டமன்றத் தேர்தல் ஜெயலலிதாவுக்கு பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருந்தது.

எஸ்.வி.சேகர்
எஸ்.வி.சேகர்

ஆவினும் சேகரும்!

1996 எபிசோட் திரும்பிவிட்டால் வம்பு வழக்குகளை அசுரத்தனமாக தி.மு.க பாய்ச்சும். அதை எதிர்கொள்வதற்கு போதிய எம்.எல்.ஏ-க்கள் பலம் தேவை என்பதை ஜெயலலிதா நன்கு உணர்ந்திருந்தார். அரசியலில் தோல்வி என்று முடிவாகிவிட்ட பிறகு `கால்குலேடட் ரிஸ்க்’ என்பார்கள். அதாவது, சேதாரத்தை குறைத்துக்கொள்வது. அப்படி குறைத்துக்கொள்வதற்காகக் கொண்டு வரப்பட்டவர்தான் எஸ்.வி.சேகர். 2004-ல் பா.ஜ.க-விலிருந்து கழன்றுகொண்ட சேகர், நேராக வந்து சேர்ந்த இடம் போயஸ் தோட்டம். அப்போதே எஸ்.வி.சேகருக்கும் ஆவின் பாலுக்குமான பந்தம் ஆரம்பமாகிவிட்டது. ஆம்... அப்போது அ.தி.மு.க-வில் ஒரு பவர் சேனலாக இருந்த ஆவின் வைத்தியநாதனிடம் எஸ்.வி.சேகருக்கு அறிமுகம் ஏற்பட்டது. சமீபத்தில் கூட ஆவின் பால் கலப்பட புகாரில் சிக்கினாரே... அதே வைத்தியநாதன்தான் அவர்.

இந்தத் தொடர்பு மூலமாக கார்டனுக்குள் அரசியல்ரீதியிலான அறிமுகம் எஸ்.வி.சேகருக்கு கிடைத்ததாகக் கூறப்படுகிறது. 2006 சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்ட சமயத்தில், சென்னையிலுள்ள 14 தொகுதிகளில் ஏழு தொகுதிகளில் தி.மு.க - அ.தி.மு.க இடையே நேரடிப் போட்டி இருந்தது. தன் ஆட்சி மீதிருந்த அரசு ஊழியர்களின் கோபம் ஜெ.வை பயமுறுத்தியிருந்தது. ஒவ்வொரு தொகுதிக்கும் கவனமாக வேட்பாளர்களைத் தேர்வு செய்தார் ஜெயலலிதா. இஸ்லாமியர்கள் கணிசமாக இருக்கும் திருவல்லிக்கேணிக்கு பதர் சயித், பிராமணர்கள் அதிகமாக வசிக்கும் மயிலாப்பூருக்கு எஸ்.வி.சேகர் என சர்ப்ரைஸ் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். மயிலாப்பூரில் அ.தி.மு.க பகுதிச் செயலாளராக இருந்த ஜெயச்சந்திரன் என்பவருக்கு சீட் கிடைக்கும் எனப் பலரும் எதிர்பார்த்திருந்த வேளையில், சேகருக்கு யோகம் கிட்டியது. ஜெயலலிதாவின் இந்த `கால்குலேடட் ரிஸ்க்’கால், தி.மு.க-வை எதிர்த்துப் போட்டியிட்ட ஏழு தொகுதிகளில் ஐந்தில் அ.தி.மு.க வெற்றி பெற்றது. 61 எம்.எல்.ஏ-க்களுடன் வலுவான எதிர்க்கட்சியாக சட்டமன்றத்திற்குள் நுழைந்தார் ஜெயலலிதா.

எஸ்.வி.சேகர்
எஸ்.வி.சேகர்

சேகரும் தோட்டமும்!

முதல்முறை எம்.எல்.ஏ, அதுவும் தலைநகரில் அதிகாரப்பதவி... சேகரின் குஷிக்கு அளவே இல்லை. ஜெயலலிதாவின் சமுதாயம் சார்ந்தவர் என்பதால் தனக்கே முக்கியத்துவம் கிடைக்கும் என நம்பினார். ஆனானப்பட்ட `சோ’வுக்கே கேட் போடும் தோட்டத்து அரசியல் அவருக்கு புரிபடவில்லை. லோக்கலில் வி.பி.கலைராஜன் போன்ற சீனியர்களிடம் எதிர்த்து அரசியல் செய்ய முடியவில்லை. விரைவிலேயே தோட்டத்தில் இருந்து ஒதுக்கப்பட்டார். மே, 2007-ல் எஸ்.வி.சேகரின் மகள் திருமணம் ராஜா அண்ணாமலைபுரத்திலுள்ள மேயர் ராமநாதன் அரங்கில் நடைபெற்றது. பல கட்சி பிரமுகர்கள் வந்திருந்தாலும் அ.தி.மு.க பெருந்தலைகள் யாரும் அந்தப்பக்கம் எட்டிக் கூடப் பார்க்கவில்லை. பெயருக்கு பொன்னையன் மட்டும் சென்றுவிட்டு வந்தார். எஸ்.வி.சேகரின் மனதுக்குள் கனன்றுகொண்டிருந்த நெருப்பு ஒருநாள் தீ ஜூவாலையாக வீசியது.

``பிராமணர்களுக்காக ஜெயலலிதா எந்த நன்மையும் செய்ததில்லை. சங்கராச்சாரியாரை கைது செய்தது பெரிய துரோகம். அ.தி.மு.க ஒரு ஜாதிக்கட்சி போன்று செயல்படுகிறது. ஜெயலலிதாவை ஒருவர் கட்டுப்படுத்துகிறார். இதை அறிய முடியாத நிலையில் இருப்பது ஜெயலலிதாவின் தவறு” என்றெல்லாம் புகார்களை எஸ்.வி.சேகர் அடுக்கினார். இதற்கு அடுத்ததாக அவர் சொல்லியதுதான் வரலாற்றில் பதிந்துவிட்டது. ``கொள்கை ரீதியாக மாறுபட்டிருந்தாலும் ஒருபோதும் பிராமணர்களுக்கு எதிராக வெறுப்புணர்ச்சியை தி.மு.க காட்டியதில்லை. பல தி.மு.க தலைவர்களுக்கு பிராமணர்களே உதவியாளர்களாக இருக்கின்றனர். பிராமணர்களை மதிக்கும் கட்சி தி.மு.க!” என்று போட்டாரே ஒரு போடு. இந்த ட்விஸ்ட்டை கருணாநிதியே எதிர்பார்க்கவில்லை.

எஸ்.வி.சேகர் - ஸ்டாலின்
எஸ்.வி.சேகர் - ஸ்டாலின்

கருணாநிதி கொடுத்த அல்வா

மூச்சுக்கு முந்நூறு தடவை `மைனாரிட்டி தி.மு.க.’ என்று வெறுப்பேற்றிய ஜெயலலிதாவுக்கு பதிலடியாக, எஸ்.வி.சேகரை கையில் எடுத்து விளையாட ஆரம்பித்தார் கருணாநிதி. இன்று கு.க.செல்வத்தைக் கைக்குள் வைத்துக்கொண்டு பா.ஜ.க ஆடும் விளையாட்டை 13 வருடத்துக்கு முன்னரே கருணாநிதி அறிமுகப்படுத்தியிருந்தார். கிரிஜா வைத்தியநாதன் ஐ.ஏ.எஸ் மற்றும் நடிகர் சத்யராஜ் இல்ல மணவிழாக்களில் தி.மு.க தலைவர்களும் எஸ்.வி.சேகரும் சிரித்துக்கொண்டார்கள். கடுப்பான கார்டன், அ.தி.மு.க-வின் எந்தப் பொதுக்குழுவுக்கும் சேகருக்கு அழைப்பிதழ் அனுப்பாமல் ஒதுக்கியது. பதிலடியாக, தி.மு.க பொதுக்குழுவில் சேகருக்கு சேர் ஒதுக்கி ஜெயலலிதாவை கடுப்பேற்றினார் கருணாநிதி.

அப்போது உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த மு.க.ஸ்டாலினின் பிறந்தநாள் வந்தது. தி.மு.க-வுடனான தன்னுடைய நெருக்கத்தைக் காட்டுவதற்கு, ``தளபதிக்கு கேக் ஊட்டப் போகிறேன்” எனப் பத்திரிகையாளர்களை உடன் அழைத்துச் சென்று போட்டோவுக்கு போஸ் கொடுத்தார் எஸ்.வி.சேகர். அவரின் இவ்வளவு ஸ்டன்ட்டும் எதற்காக என்பது கருணாநிதிக்கு நன்றாகத் தெரியும்.

கருணாநிதி, எஸ்.வி.சேகர் மற்றும் மு.க.ஸ்டாலின்
கருணாநிதி, எஸ்.வி.சேகர் மற்றும் மு.க.ஸ்டாலின்

மே, 2010-ல் சென்னை நாரத கான சபாவில் எஸ்.வி.சேகரின் 5,600-வது நாடகமான `அல்வா’ அரங்கேறியது. அப்போதைய முதல்வர் கருணாநிதிதான் நாடகத்துக்கு தலைமை. கிட்டத்தட்ட ஒருமணிநேரம் நாடகத்தைக் கண்டு ரசித்த கருணாநிதி, தான் பேசும்போது பகவத் கீதை, சங்கராச்சாரியாரின் புகைப்படம் என ஊமைக் குத்து குத்தியதெல்லாம் சேகருக்கு வலிக்கவில்லை. மீண்டும் மயிலாப்பூரில் போட்டியிட ஒரு வாய்ப்பு, இல்லையென்றால் தி.மு.க உதவியோடு ஒரு ராஜ்யசபா எம்.பி பதவி என்பதில் தீவிரமாக இருந்தார் சேகர். திரைத்துறையின் சார்பில் தன்னை எம்.பி-யாக்க வேண்டும் என வெளிப்படையாகவே பேசிவந்தார். கூடுதலாக ஒரு சீட் கேட்கும் கூட்டணிக் கட்சிகளுக்கே `இதயத்தில் இடமிருக்கிறது’ என சாம்பிராணி போடும் கருணாநிதி, சேகருக்கு மட்டும் தலையாட்டிவிடுவாரா என்ன? அ.தி.மு.க-வின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து சேகர் நீக்கப்பட்ட பிறகு, அவரை உடன் வைத்துக்கொள்வதில் கருணாநிதிக்கு என்ன லாபம் இருக்கிறது? கடைசியில் சேகருக்கு அல்வாவே பரிசாகக் கிடைத்தது.

நமஸ்தே ராகுல்ஜி

கோலமிடும் பெண்கள் வீட்டு வாசலில் ஒரு சாணிப்பிள்ளையாரை பிடித்து வைப்பார்கள். ஒவ்வொரு அதிகாலையும் புதுப்பிள்ளையாரை வைக்கும்போது, பழைய பிள்ளையாரை எறிந்துவிடுவதுதானே வழக்கம். அப்படித்தான் நடிகை குஷ்புவின் வருகைக்குப் பிறகு எஸ்.வி.சேகரை தூக்கி எறிந்தது தி.மு.க. இதை அவரால் ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை. ஏதாவது ஒரு கட்சியில் தன்னை இணைத்து, நாட்டுக்காகப் பாடுபட வேண்டுமென்கிற `எண்ணம்' சேகரை உந்தித் தள்ளியது. தன்னுடைய சமூக சேவைகளை காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்திக்கு மெயில் அனுப்ப ஆரம்பித்தார். எதிர்க்கட்சியைச் சேர்ந்த ஒரு சிட்டிங் எம்.எல்.ஏ தன்னை சந்திக்க விரும்பினால் ராகுல் வேண்டாமென்று சொல்லவா போகிறார்? செப்டம்பர் 2010-ல் டெல்லி அப்பாயின்மென்ட்டும் கிடைத்தது. ராகுலுடன் ஒன் டூ ஒன் பேச்சுவார்த்தை நடத்திவிட்டு தமிழகம் திரும்பிய சேகர், காங்கிரஸ் உறுப்பினராக சத்தியமூர்த்தி பவனுக்குள் காலடி எடுத்துவைத்தார்.

எஸ்.வி.சேகர்
எஸ்.வி.சேகர்

பேய்க்கு பயந்து பிசாசிடம் மாட்டிய கதையாக, காங்கிரஸ் கோஷ்டி பூசலுக்குள் எஸ்.வி.சேகரால் எதிர்நீச்சல் போட முடியவில்லை. 2011 சட்டமன்றத் தேர்தலில் அவர் எதிர்பார்த்திருந்த மயிலாப்பூர் தொகுதி தங்கபாலுவின் மனைவிக்கு ஒதுக்கப்பட்டது. தன் மனைவியின் வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டதால், மாற்று வேட்பாளராக மனு அளித்திருந்த தங்கபாலுவே மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிட்டார். இதை எதிர்த்து சத்தியமூர்த்திபவனில் போராட்டம் வெடித்தது. இதன் தொடர்ச்சியாக 19 பேரை கட்சியில் இருந்து தங்கபாலு நீக்கினார். அதில் எஸ்.வி.சேகரும் ஒருவர். காங்கிரஸில் இணைந்த மூன்றே மாதத்தில் அவரை துவைத்து வெளியே அனுப்பியது கதர்க்கட்சி.

வாழ்க்கை ஒரு வட்டம்

ஒரு வட்டம் ஆரம்பித்த இடத்திலேயேதான் முடிவடையும். எஸ்.வி.சேகரின் அரசியல் பயணத்திலும் அதுதான் நடந்தது. 2011-ல் காங்கிரஸில் இருந்து வெளியேற்றப்பட்ட பிறகு குஜராத் சென்று மோடியை சந்தித்த எஸ்.வி.சேகர், 2013-ல் பா.ஜ.க-வில் தன்னை இணைத்துக்கொண்டார். கடந்த ஏழு வருடமாக அக்கட்சியில் தொடர்ச்சியாக இருக்கிறார் என்பதே நாம் ஏற்றுக்கொள்ள வேண்டிய சாதனைதான்.

எஸ்.வி.சேகர்
எஸ்.வி.சேகர்
விகடன்

அ.தி.மு.க-வின் கொடி விவகாரத்தில், ``எஸ்.வி.சேகர் கருத்துக்கும் பா.ஜ.க-வுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை” என பா.ஜ.க மாநில பொதுச் செயலாளர் கரு.நாகராஜன் கூறியுள்ளார். இவ்விவகாரத்தை பெரிதாக்காமல் கட்சிப் பணிகளைப் பார்க்குமாறு முதல்வர் அறிவுறுத்தியிருப்பதால், அ.தி.மு.க நிர்வாகிகளும் சைலன்ட் மோடுக்கு சென்றுவிட்டனர். இதற்கு மேலும் அ.தி.மு.க-வை எஸ்.வி.சேகர் உரசிப் பார்த்தால், பதிலடி உக்கிரமாக இருக்கும் என்பதே ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலை நமக்கு சொல்லும் தகவல். ஆனால், எஸ்.வி.சேகர் அவ்வளவு எளிதில் அமைதியாகிவிடும் சுபாவம் கொண்டவரல்ல. அடுத்தாக என்ன வெடி கொளுத்தப் போகிறாரோ?