Published:Updated:

போளி, ஹேர் கட் சீக்ரெட், கிரீட்டிங் கார்டு சர்ப்ரைஸ்... ஜெயலலிதா நினைவுகள் பகிரும் சரோஜா தேவி, சச்சு

சரோஜா தேவியுடன் ஜெயலலிதா
சரோஜா தேவியுடன் ஜெயலலிதா

இன்று ஜெயலலிதாவின் 73-வது பிறந்தநாளில், அவரை பற்றிய தங்கள் நினைவுகளை இங்கே பகிர்ந்துகொள்கிறார்கள் அவருடன் பழகிய சினிமா பிரபலங்கள்.

``உலக அளவில் அரசியலில் சாதித்த பெண்கள் பார்த்தீங்கன்னா, அவங்க ஒரு பெரிய தலைவரோட மகளாகவோ, மனைவியாகவோ, அரசியல்வாதி கணவரின் மறைவுக்கு அப்புறம் அரசியலுக்கு வந்தவங்களாவோதான் இருப்பாங்க பெரும்பாலும். ஆனா, இந்த மாதிரி எந்த பின்புலமும் இல்லாம வந்ததுனால, என்னைப் பொறுத்தவரைக்கும், Politics was not a bed of roses for me'' - தன்னைப் பற்றி ஓர் ஆங்கில பேட்டியில் இப்படிப் பகிர்ந்திருந்தார், முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெ.ஜெயலலிதா.

ஆம்... அரசியல் பாதையில் பல போராட்டங்களைச் சந்தித்து, 30 வருடங்களுக்கு முன்பே மாநிலத்தின் முதலமைச்சராக ஒரு பெண் பொறுப்பேற்றது, வரலாற்று வெற்றி. இன்று ஜெயலலிதாவின் 73-வது பிறந்தநாளில், அவரை பற்றிய தங்கள் நினைவுகளை இங்கே பகிர்ந்துகொள்கிறார்கள் அவருடன் பழகிய சினிமா பிரபலங்கள்.

Jayalalitha
Jayalalitha

நடிகை சச்சு

``சின்ன வயசுல நாங்க பல படங்கள் ஒண்ணா நடிச்சிருந்தாலும், அவங்க முதலமைச்சர் ஆன பிறகு, 1991-ல ரொம்ப வருஷம் கழிச்சு, அவங்கள  சந்திக்கிறதுக்காக அப்பாயின்மென்ட் வாங்கிக்கிட்டு கோட்டைக்கு என் தங்கையும் நானும் போனோம். அப்போ அவங்க எங்கள ஒரு தனி ரூம்ல உட்கார வைக்க சொன்னதா சொல்லி, ஒருத்தர் எங்களை ஒரு ரூமில் உட்கார வெச்சுட்டுப் போனார். அவங்கள சந்திக்க வந்த முக்கியப் புள்ளிகள், மாவட்ட ஆட்சியாளர்கள், அரசு அதிகாரிகள்னு எல்லாரையும் சந்திச்சு முடிச்ச பிறகு, எங்களை உள்ள கூப்பிட்டாங்க.

உள்ள நுழைஞ்சதும் போட்டோ எல்லாம் எடுத்துட்டு, எல்லோரையும் வெளியில் அனுப்பினாங்க. அப்புறம் எங்ககிட்ட, `பேசி முடிச்சு எல்லாரையும் அனுப்பிச்ச பிறகு, உங்களோட நிதானமா கொஞ்ச நேரம் பேசணும்னு எனக்கு எண்ணம். அதனாலதான் நான் உங்கள வெயிட் பண்ண வெச்சுட்டேன்'னு சொன்னாங்க. `பரவால்லம்மா, முதலமைச்சருக்கு எத்தனையோ வேலைகள் இருக்கும், இத்தனை வேலைகளுக்கு நடுவுல எங்களுக்கு அப்பாயின்ட்மென்ட் கொடுத்ததே பெரிய விஷயம்'னு நான் சொல்ல, டக்குனு என்னை அப்படியே இறுக அணைச்சுக்கிட்டாங்க. அதுக்கு முன்னாடி நாங்க பல வருஷம் நட்போடு பழகியிருந்தாலும், அத்துணை பாசத்தோட அவங்க அணைச்சுக்கிட்டது அதுதான் முதல் முறை. அந்த அன்புல நான் அப்படியே திக்குமுக்காடிப் போனேன்.

சச்சு
சச்சு

அவங்க பேசும்போது, `சச்சு எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு... சத்யா ஸ்டூடியோவில் `குமரிக்கோட்டம்' படம் ஷூட்டிங். ஒருநாள் ஈவ்னிங் உங்க பாட்டி சுடச்சுட போளி பண்ணி கொண்டு வந்திருந்தாங்க. அதை எனக்கும் கொடுத்தப்போ, `டயட்ல இருக்கேன், இதுல நெய் நிறைய இருக்குமே'னு சொல்லி வேணாம்னு சொன்னேன். அதுக்கு அவங்க, `ஒருவாய் சாப்பிட்டா ஒண்ணும் ஆகாது. சச்சு மாதிரி நீயும் எனக்கு ஒரு பேத்திதான்'னு சொல்லி அப்படியே எனக்கு ஊட்டிவிட்டாங்க. அதை என்னால மறக்கவே முடியாது. உங்களை பார்த்தவுடனே எனக்கு அந்த பழைய ஞாபகம் எல்லாம் வந்துடுச்சு'னு சொன்னப்போ, அவங்க கண்கள் லேசா கலங்கிடுச்சு. முதலமைச்சரான பிறகும் எப்பவோ நடந்ததை இன்னமும் பாசத்தோட ஞாபகம் வெச்சிருக்காங்களேனு, நெகிழ்ச்சியில நான் வார்த்தைகள் இல்லாம நின்னேன்.

ஒரு முறை, இயல் இசை நாடக மன்றத்தோட கமிட்டி மெம்பரா நான் இருந்தப்போ, கமிட்டி மெம்பர்கள் எல்லோரும் சேர்ந்து முதலமைச்சரோட அஃபீஷியலா பேசறதுக்காக அப்பாயின்ட்மென்ட் வாங்கியிருந்தோம். அன்னைக்கு பிப்ரவரி 22. அவங்கள சந்திக்கப் போறோம் அப்படீங்கிறதால, அவங்களுக்கு பிடிச்ச கிரீன் கலர்ல அவங்களுக்கு ஒரு பெரிய பொன்னாடையும், நல்ல வாசகங்கள் நிறைந்திருந்த ஒரு கிரீட்டிங் கார்டும் நான் வாங்கினேன். கார்டுல, எல்லா கமிட்டி மெம்பர்ஸையும் கையெழுத்துப் போடச் சொன்னேன்.

பிப்ரவரி 22 அன்று, எங்க மீட்டிங் முடிஞ்ச உடனேயே, அந்த பொன்னாடையை ஜெயலலிதா அம்மாவுக்குப் போர்த்தி, அந்த கிரீட்டிங் கார்டையும் சர்ப்ரைஸா கொடுத்தோம்.

ஜெயலலிதா
ஜெயலலிதா
ஜெயலலிதா நினைவு இல்லம் டு சிலை திறப்பு...  மெரினாவில் நம்ம சென்னை! #PhotoAlbum

`என்னது இது..!'னு அதை வாங்கிப் பார்த்தவங்க முகத்தில், மின்னல் மாதிரி அவ்ளோ சந்தோஷம். நாங்க உடனே, `இன்னும் ரெண்டு நாள்தானே இருக்கு உங்க பர்த்டேவுக்கு... உங்களுக்கு இருக்கிற வேலைக்கு நடுவுல நாங்க மறுபடி மறுபடி உங்களை தொந்தரவு பண்ண முடியாது. அதனால, அட்வான்ஸ் ஹேப்பி பர்த்டே விஷஸ்'னு சொன்னப்போ அவ்வளவு மகிழ்ச்சியா சிரிச்சாங்க. அதை என்னால மறக்கவே முடியாது.

அதே மாதிரி, இன்னொரு சுவாரஸ்யமான சம்பவம். ஜெயலலிதா மேடம் வீட்டுல, அவங்க கோபமா மூஞ்சிய தூக்கிவெச்சுக்கிட்டபடி இருக்கும் அவங்களோட சின்ன வயசு போட்டோ ஒண்ணு இருக்கும். அதைப் பத்தி நான் அவங்ககிட்ட கேட்டதுக்கு, அதுக்கு பின்னாடி இருந்த சுவாரஸ்யமான கதையைச் சொன்னாங்க.

``எனக்கு எங்கம்மான்னா ரொம்பப் பிடிக்கும். என்னோட சின்ன வயசுலே எங்கம்மா ஷூட்டிங்க்கு போற சமயத்தில, எங்க சித்திதான் எனக்கு தலை வாரி, பின்னி, ஸ்கூலுக்கு ரெடி பண்ணி அனுப்புவாங்க.

அப்போ ஒரு முறை, `என்னால இனிமே இந்தத் தலை பின்ற வேலைக்கு உன்கூட அல்லாட முடியாது'னு சொல்லி எங்க சித்தி என்னைக் கூட்டிகிட்டு போய், எனக்கு பாப் கட் பண்ணி கூட்டிட்டு வந்துட்டாங்க. அம்மா வரட்டும்னு நான் எவ்வளவோ சொல்லியும் அவங்க கேட்கவேயில்ல. அப்போ நான் கோபமா இருந்தப்போ எடுத்த போட்டோதான் இது'னு சொல்லி சிரிச்சாங்க ஜெயலலிதா மேடம்” என்று தன் சிறு வயது தோழியின் நினைவுகளில் மூழ்கினார் நடிகை சச்சு.

நடிகை சரோஜாதேவி

``ஜெயலலிதா மேடம் ஒரு முறை என்கிட்ட பேசும்போது, `நேற்று உங்களால எனக்கு 3 மணி நேரம் வேஸ்ட்'னு சொன்னாங்க. `ஏன்..?'னு கேட்டதுக்கு, `நீங்க நடிச்ச படம் `புதிய பறவை' டிவியில் போட்டிருந்தாங்க. ரொம்ப இன்ட்ரஸ்டிங். அதைப் பார்த்த நேரத்துல என் வேலை எல்லாம் கெட்டுப்போச்சு தெரியுமா?'னு ஒரு குழந்தை மாதிரி கடகடனு சிரிச்சாங்க. அப்போ அங்கயிருந்த சசிகலா மேடம், `பழைய பாடல்கள் டிவியில் ஒளிபரப்பாகும்போது ரொம்பவும் விரும்பிப் பார்ப்பாங்க. அதிலேயும் நீங்க நடிச்ச பாடல்கள்னா அவங்களுக்கு அவ்வளவு பிடிக்கும்'னு சொன்னாங்க.

சரோஜா தேவி
சரோஜா தேவி
``கருணாநிதி, ஜெயலலிதா கூப்பிட்டும் அரசியலுக்கு வரல; ஆனா இப்போ..?" - புதிய முடிவு குறித்து ராதிகா

அவங்க முதலமைச்சரா இருந்த நேரத்துல, ஒரு முறை நான் அவங்களை பார்க்கப் போயிருந்தேன். `உங்களுக்கு என்ன வேணும் சொல்லுங்க'னு கேட்டாங்க. `எனக்குனு எதுவும் வேண்டாம். ஆனா, மதுரைக்கு பக்கத்துல கம்பம் என்ற ஊர்ல ஒரு பெண்கள் காலேஜ் வேணும்னு அந்த மக்கள் கேட்குறாங்க, நீங்க அதுக்கு அப்ரூவல் கொடுத்தா நல்லா இருக்கும்'னு சொன்னேன். உடனே அதுக்கு வேண்டியத செஞ்சாங்க. அந்த ஊரைச் சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து பல ஆயிரக்கணக்கான பெண்கள் அந்தக் கல்லூரியில படிச்சு பட்டதாரி ஆக, நானும் ஒரு காரணம்னு நினைக்கும்போது ரொம்ப சந்தோஷமா இருக்கு. ஜெயலலிதாம்மா பிறந்தநாள்ல அந்தப் பெண் பிள்ளைகள், குடும்பங்கள் சார்பா அவங்களுக்கு நன்றி சொல்லிக்கிறேன்."

- ஸ்ரீவித்யா தேசிகன்
அடுத்த கட்டுரைக்கு