Published:Updated:

நெல்லை: `திமுக வாக்குறுதிகள், வராத மழைக்கு வானிலை வாசிப்பது போன்றது’- நடிகை விந்தியா கலகல பரப்புரை

பிரசாரத்தில் நடிகை விந்தியா
பிரசாரத்தில் நடிகை விந்தியா

``தமிழகத்தைவிட்டே தி.மு.க-வை விரட்டியடிக்க வேண்டும். சுதந்திரத்துக்காகப் போராடிய மக்கள் வாழ்ந்த இந்த மண்ணில் எப்போதும் மக்கள் சுதந்திரமாக இருப்பதற்கு, திமுக-வுக்கு ஓட்டுப் போடாதீங்க’’ என்று நடிகை விந்தியா தேர்தல் பரப்புரை.

நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டை சட்டமன்றத் தொகுதியின் அ.தி.மு.க வேட்பாளராக கே.ஜே.சி.ஜெரால்ட் களமிறங்கியிருக்கிறார். தொடர்ச்சியாக நான்கு முறை தி.மு.க வென்ற இந்தத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் அப்துல் வஹாப்புக்கு கடுமையான போட்டியாளராக கே.ஜே.சி.ஜெரால்ட் இருக்கிறார்.

வாக்கு சேகரிக்கும் கே.ஜே.சி.ஜெரால்ட்
வாக்கு சேகரிக்கும் கே.ஜே.சி.ஜெரால்ட்

பாளையங்கோட்டை பகுதியில் பிரசாரத்தைத் தொடங்கிய ஜெரால்ட், வீடுதோறும் சென்று வாக்காளர்களை நேரில் சந்தித்து வாக்கு சேகரிக்கிறார். அவருக்கு ஆதரவாக முன்னாள் எம்.பி-யான விஜிலா சத்யானந்த், முன்னாள் மாவட்டச் செயலாளரான பாப்புலர் முத்தையா, அமைப்புச் செயலாளர் சுதா பரமசிவன், உள்ளிட்ட நிர்வாகிகளும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்தநிலையில், அ.தி.மு.க வேட்பாளரான கே.ஜே.சி.ஜெரால்டை ஆதரித்து அந்தக் கட்சியின் நட்சத்திரப் பேச்சாளரான நடிகை. விந்தியா பிரசாரம் செய்தார். திறந்த வேனில் பாளையங்கோட்டைப் பகுதியில் பிரசாரம் செய்த அவர் ``நான் அ.தி.மு.க-வின் அடிமட்டத் தொண்டரான பின்னர் நடிகை என்பதையே மறந்துட்டேன்.

பிரசாரத்தில் நடிகை விந்தியா
பிரசாரத்தில் நடிகை விந்தியா

என்னை உருவாக்கிய சிற்பி, அம்மா ஜெயலலிதா. ஊராட்சி, உள்ளாட்சி, கிராம ஆட்சி, நகராட்சி என நல்லாட்சி தந்த நம்ம முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றியைத் தெரிவிச்சுக்கிறேன். திருநெல்வேலியின் நெல்லையப்பரும் காந்திமதி அம்மனும் நம்ம குலசாமி.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நெல்லையில் அன்பு காட்டினால் அல்வா வரும். வம்பு காட்டினால் அரிவாள் வரும். வ.உ.சி., சுப்பிரமணிய சிவா, சுப்பிரமணிய பாரதியார் என நாட்டின் தலைவர்கள் சுதந்திரத்துக்காகப் போராடிய பூமி இது. இந்த மண்ணில் எப்போதும் மக்கள் சுதந்திரமாக இருக்க வேண்டுமானால் தயவுசெய்து தி.மு.க-வுக்கு ஓட்டுப் போடாதீங்க.

பிரசாரத்தில் பங்கேற்ற அ.தி.மு.க-வினர்
பிரசாரத்தில் பங்கேற்ற அ.தி.மு.க-வினர்

இங்கே போட்டியிடும் தி.மு.க வேட்பாளர் அப்துல் வஹாப், அவர் சார்ந்த சமுதாய மக்களுக்கே துரோகம் செஞ்சிருக்கார். இந்த மண்ணில் வாழ்ந்த வ.உ.சிதம்பரனார், மக்களைக் காப்பாற்ற செக்கிழுத்து கஷ்டப்பட்டார். அப்படிப்பட்ட மண்ணில் அப்துல் வஹாப் பொய்யான `செக்’ கொடுத்து தன் சமுதாயத்தவரையே ஏமாற்றியிருக்கார்.

நமது வேட்பாளர் ஜெரால்ட் இங்கேயே பிறந்து, வளர்ந்து, கல்யாணம் செய்து, குழந்தையும் பெற்று இங்கேயே வாழ்கிறவர். அவருக்கு இரட்டை இலைச் சின்னத்தில் ஓட்டுப் போடுங்க. ஸ்டாலின் ஆறு வருசத்துக்கு முன்னாடி ’நமக்கு நாமே’னு விளம்பரம் கொடுத்தார். மக்கள் சரி, உங்களுக்கு நீங்களே இருந்துக்கோங்கனு முடிவு செஞ்சுட்டாங்க.

இங்கேயே பிறந்து, இங்கேயே வாழும் வேட்பாளர் கே.ஜே.சி.ஜெரால்ட் உங்களுக்காக உழைப்பார்
நடிகை விந்தியா

அதனால், `வருங்கால முதல்வர்’ என போஸ்டர் ஒட்டிக்கிட்டு இருக்காங்க. பிறகு, 2016 தேர்தலில், ‘கோபப்படுங்கள்’னு கத்தினார். மக்கள் ரொம்பவே கோபப்பட்டு உங்களுக்கு ஆட்சி தேவையில்லை வீட்டில் உட்கார்ந்து அறிக்கைவிடுங்கன்னு சொல்லிட்டாங்க.

இப்போ கிராமசபைக் கூட்டம் நடத்தினார். அதில் கலந்துகொண்ட மக்கள், `கறவை மாட்டைக் காணோம், புருஷனைக் காணோம், தி.மு.க-வில் தருவதாகச் சொன்ன இரண்டு ஏக்கர் நிலத்தைக் காணோம்’னு பேசினாங்க. உடனே ஸ்டாலின், ’கைப்புள்ள சபையைக் கலைச்சிரு’ என்று கூறுவதுபோல எல்லாத்தையும் கலைச்சுட்டுக் கிளம்பிட்டாரு.

வாக்காளர்கள் வீடு தேடிச் செல்லும் வேட்பாளர்
வாக்காளர்கள் வீடு தேடிச் செல்லும் வேட்பாளர்

நான் பார்க்கிற எல்லா எலெக்ட்ரிக் கடைகளிலும் ’விடியலை நோக்கி’னு பேனர்வெச்சிருக்காங்க. ஏன் எலெட்க்ட்ரிக் கடையில் அந்த பேனரை வச்சிருக்காங்கன்னு விசாரிச்சேன். அவங்க, ’திமுக ஆட்சிக்கு வந்தா கரென்ட் இருக்காது. அதனால் எங்க கடையில், யூ.பி.எஸ்., பேட்டரி, டார்ச் லைட் வியாபாரம் சூடுபிடிக்குங்கறதால் போர்டு மாட்டியிருக்கோம்’னு சொன்னாங்க.

எலெக்ட்ரிக் கடைக்காரர்கள் யாரும் திமுவை நம்ப வேண்டாம் உங்களுக்கு ஐந்து பைசா வருமானம் வந்தாலும் அவர்கள் வந்து சண்டை போட்டு கலாட்டா செஞ்சு கல்லாப் பெட்டிய தூக்கிட்டுப் போயிடுவாங்க. திமுக கலாட்டா பண்ணாத ஒரே கடை சாக்கடை மட்டும்தான்.

அதிமுக-வின் வாஷிங் மெஷின் வாக்குறுதி வாக்காளர்களைக் கவருமா?#TNElection2021

வராத மழைக்கு வானிலை அறிக்கை வாசிக்குறது மாதிரி, வராத ஆட்சிக்கு திமுக-வினர் வாக்குறுதி கொடுத்துக்கிட்டிருக்காங்க. ஸ்டாலின் ஆட்சிக்கு வந்தால் மக்கள் கோரிக்கைகளை 100 நாள்ல எப்படித் தீர்த்துவைப்பார்? 22 ஆண்டுகள் தி.மு.க ஆட்சிக் காலத்தில் காவிரி பிரச்னை, மீத்தேன் பிரச்னை, மாணவர் பிரச்னை என எந்தப் பிரச்னையைத் தீர்த்துவெச்சிருக்காங்க?

திமுக ஆட்சியில் சின்னத்திரை, பெரியதிரை நட்சத்திரங்களைக் கூப்பிட்டு விழா மட்டும் நடத்தி சந்தோஷப்பட்டாங்க. தேர்தல் வந்தாலே ஸ்டாலின் சைக்கிள் ஓட்டுவார், ஆட்டோ ஓட்டுவார். விட்டால் பூசாரி வேஷம் போட்டு பேய் ஓட்டவும் செய்வார்.

அ.தி.மு.க தேர்தல் பிரசாரம்
அ.தி.மு.க தேர்தல் பிரசாரம்

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மக்களை ஏமாற்றி 38 தொகுதியில் ஜெயிச்சவங்க, மக்களுக்கு ஒண்ணுமே செய்யலையே. ஆனால், சிறுபான்மை மக்களுக்கு அ.தி.மு.க அரசு பல நல்ல திட்டங்களைக் கொடுத்திருக்கு. அதனால தயவுசெய்து தி.மு.க-வை நம்ப வேண்டாம். அவர்கள் அளித்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றியதாகச் சரித்திரம் இல்லை.

கொரனோ காலத்தில் மக்கள் கேட்காமலேயே முதல்வர் பல்வேறு உதவிகளை செஞ்சார். 2011-ல் தமிழகத்தில் 400 ஆம்புலன்ஸ் மட்டுமே இருந்துச்சு. இன்னைக்கு 12,000 ஆம்புலன்ஸ் இருக்கு. தி.மு.க-வை தோற்கடிப்பது மட்டுமல்ல, அவர்களை தமிழகத்தை விட்டே விரட்டி அடிப்பதுதான் நமது வேலை” என்று பேசினார்.

பிரசாரத்தில் நடிகை விந்தியா
பிரசாரத்தில் நடிகை விந்தியா

தொடர்ந்து, தி.மு.க-வின் விளம்பரப் பாடலான `ஸ்டாலின்தான் வராரு... விடியல் தரப் போறாரு’ என்ற பாடலை சற்று மாற்றிப் பாடிய நடிகை விந்தியா, `ஸ்டாலின் தான் வராரு.. மக்களே உஷாரு...’ என்று பாடியதும் கூடியிருந்த அ.தி.மு.க-வினர் ஆர்ப்பரித்தனர்.

அடுத்த கட்டுரைக்கு