Published:Updated:

`போலீஸ் வரும்; டாஸ்மாக் பாருக்கு ரூ.4 லட்சம் கமிஷன்!'-சர்ச்சை ஆடியோவும் அ.தி.மு.க மா.செ பதிலும்

டாஸ்மாக் பார் டெண்டர் நியாயப்படி நடப்பதாக ஆளும்கட்சியினர் கூறிவந்த நிலையில், பணம் கேட்டு அ.தி.மு.க மாவட்டச் செயலாளரின் உதவியாளர் பேசும் ஆடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டாஸ்மாக் பார்
டாஸ்மாக் பார்

கன்னியாகுமரி மேற்கு மாவட்ட அ.தி.மு.க செயலாளர் ஜான் தங்கத்தின் உதவியாளர் மனோ என்பவர் டாஸ்மாக் பார் டெண்டர் எடுக்க பணம் கேட்கும் ஆடியோ வாட்ஸ்அப்களில் வேகமாகப் பரவி வருகிறது.

ஜான் தங்கம்
ஜான் தங்கம்

அந்த ஆடியோவில் பேசும் மனோ, `ஒரு பாருக்கு நான்கு லட்சம் ரூபாய் வீதம் இரண்டு பார்களுக்கு எட்டு லட்சம் ரூபாய் வேண்டும்' எனக் கேட்கிறார். இதற்குப் பதில் கொடுக்கும் எதிர்முனையில் உள்ள நபர், `நான் பார் நடத்தாமல் டாஸ்மாக் அருகே உள்ள இடத்தில் ஹோட்டல் நடத்துவேன்' என்கிறார்.

அதற்கு ஜான் தங்கத்தின் உதவியாளரான மனோ, ` நீங்கள் அங்கு கடை நடத்தினால் போலீஸ் விரட்டும், மாறி மாறி செலவு வரும்' என்கிறார். அதுமட்டுமல்லாமல் அமைச்சர் வரைக்கும் பங்கு கொடுக்க வேண்டும் எனவும் கூறுகிறார். சுமார் 7 நிமிடங்கள் ஓடும் இந்த ஆடியோ பல குழுக்களில் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

ஆடியோ குறித்து அ.தி.மு.க குமரி மேற்கு மாவட்டச் செயலாளர் ஜான் தங்கத்தின் உதவியாளர் மனோவிடம் பேசினோம். ``அவர் என்னிடம் அடிக்கடி சகஜமாக பேசும் நபர்தான். பேரூராட்சி பகுதியில் டாஸ்மாக் பாருக்கு பத்தாயிரம் ரூபாய் செலுத்துவதற்குப் பதில், ஐந்தாயிரம் ரூபாய் செலுத்தியதால் அவரது படிவம் ரிஜெக்ட் ஆகிவிட்டது.

Tasmac bar
Tasmac bar

இதனால், பார் சம்பந்தமாக அவரும் மற்றொரு நபரும் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருக்கிறார்கள். இந்த நிலையில், தனக்கு பார் கிடைக்காது என உணர்ந்ததால் உள் நோக்கத்தோடு அந்த ஆடியோவை வெளியிட்டுள்ளார்" என்றார்.

அ.தி.மு.க குமரி மேற்கு மா.செ ஜான் தங்கத்திடம் கேட்டபோது, ``அதற்கும் எனக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை" என்றார். `அப்படியானால், உங்கள் உதவியாளர் மீது நடவடிக்கை எடுப்பீர்களா?' என கேட்டதற்கு, ``பார்க்கிறேன்" என்றதோடு முடித்துக் கொண்டார்.