Published:Updated:

குடிசைகளை மறைக்க சுவர்... மோடி - ட்ரம்ப் சந்திப்பால் சர்ச்சையில் அகமதாபாத் மாநகராட்சி!

மோடி- ட்ரம்ப்
மோடி- ட்ரம்ப்

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வருகையையொட்டி அகமதாபாத்தில் குடிசைப் பகுதிகளை மறைக்கும் விதமாக சுவர் எழுப்பப்படுவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அவரின் மனைவி மெலனியா ட்ரம்ப் இருவரும் அரசுமுறை பயணமாக பிப்ரவரி 24, 25-ம் தேதிகளில் இந்தியாவுக்கு வரவுள்ளனர். இந்திய பயணத்தை மிகவும் மகிழ்ச்சியுடன் எதிர்நோக்கி காத்திருப்பதாக ட்ரம்ப் தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். கடந்த ஆண்டு பிரதமர் மோடி அரசுமுறை பயணமாக அமெரிக்கா சென்றிருந்தார். மோடி விடுத்த அழைப்பை ஏற்று ட்ரம்ப் இந்தியா வர சம்மதம் தெரிவித்துள்ளார்.

மோடி - ட்ரம்ப்
மோடி - ட்ரம்ப்

இந்தியா வரும் ட்ரம்ப் டெல்லியில் வைத்து முக்கிய தலைவர்களை சந்தித்து பேசுகிறார். இதையடுத்து அகமாதாபாத்தில் புதிதாக உருவாகி வரும் மொடேரா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் பொதுக்கூட்டம் ஒன்றில் மோடி, ட்ரம்ப் இருவரும் உரையாற்றவுள்ளனர். சுமார் 1 லட்சம் பேர் அமரக்கூடிய வகையில் இந்த கிரிக்கெட் மைதானம் உருவாகி வருகிறது.

குஜராத்தின் மாநிலம் அகமதாபாத்துக்கு விமானம் மூலம் வரும் ட்ரம்ப் சர்தார் வல்லபபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து பொதுக்கூட்டம் நடைபெறும் கிரிக்கெட் மைதானத்துக்கு காரில் அழைத்துச் செல்லப்படுவார். விமான நிலையத்தில் காந்திநகர் செல்லும் வழியில் இந்திரா மேம்பாலம் பகுதிக்கு அருகில் குடிசைப்பகுதிகள் அமைந்துள்ளன. இங்கு 500 வீடுகள் உள்ளன. சுமார் 2,500 மக்கள் அந்தப் பகுதியில் வசித்து வருகிறார்கள். இந்நிலையில் ட்ரம்ப் கண்களிலிருந்து குடிசைப் பகுதிகளை மறைக்கும் நோக்கில் தற்போது அங்கு 6 முதல் 7 அடி உயரத்தில் தடுப்புச்சுவர்கள் அமைக்கப்படுன்றன.

குடிசைகளை மறைக்க சுவர்... மோடி - ட்ரம்ப் சந்திப்பால் சர்ச்சையில் அகமதாபாத் மாநகராட்சி!

அகமதாபாத் மாநகராட்சி சார்பில் இந்தப்பணிகள் நடந்து வருகின்றன. சுவர் அமைக்கும் பணிகள் முடிவடைந்த பின்னர், அங்கு நன்கு வளர்ந்த செடிகள் வைக்கப்படும் என்றும் அதேபோல் சபர்மதி ஆற்றங்கரைப் பகுதிகளில் பேரிச்சை மரங்கள் வைக்கப்படும் என மாநகராட்சி ஊழியர்கள் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபரின் வருகையையொட்டி மாநகராட்சி அதிகாரிகள் மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அகமதாபாத் மேயர் பிஜல் படேலிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்தவர், ``நான் எதையும் பார்க்கவில்லை. எனக்கு எதுவும் தெரியாது” எனப் பதிலளித்துள்ளார்.

பின் செல்ல