Published:Updated:

`அமைச்சருக்கு பணம் கொடுக்கணும்!'- பார் டெண்டருக்கு பேரம்பேசிய அ.தி.மு.க ஐ.டி.விங்க் நிர்வாகி நீக்கம்

உண்மைக்கு மாறான தகவலை தெரிவித்ததால் கன்னியாகுமரி மேற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் மனோ கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கிவைக்கப்படுகிறார்.

அ.தி.மு க-விலிருந்து நீக்கப்பட்ட மனோ
அ.தி.மு க-விலிருந்து நீக்கப்பட்ட மனோ

கன்னியாகுமரி மேற்கு மாவட்ட அ.தி.மு.க செயலாளர் ஜான் தங்கம். இவருக்கு உதவியாளராகவும் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளராகவும் இருப்பவர் மனோ. இவர் ராதாகிருஷ்ணன் என்பவரிடம் டாஸ்மாக் பார் ஒதுக்கீடு செய்ய பணம் கேட்டு பேசிய ஆடியோ வாட்ஸ்அப்பில் வேகமாகப் பரவியது.

அ.தி.மு.க. தலைமை கழக அறிக்கை
அ.தி.மு.க. தலைமை கழக அறிக்கை

அந்த ஆடியோவில் ஒரு பாருக்கு நான்கு லட்சம் ரூபாய் வீதம் இரண்டு பார்களுக்கு எட்டு லட்சம் ரூபாய் வேண்டும் என கேட்கிறார். மேலும், அமைச்சர் வரைக்கும் இந்தப் பணம் கொடுக்க வேண்டும் எனவும் மனோ கூறுகிறார். சுமார் 7 நிமிடங்கள் ஓடும் இந்த ஆடியோ பல குழுக்களில் ஷேர் ஆனது.

டாஸ்மாக் பார் டெண்டர் நியாயப்படி நடப்பதாக ஆளும்கட்சியினர் கூறிவந்த நிலையில் அமைச்சருக்கு கொடுக்க வேண்டும் என பணம் கேட்டு அ.தி.மு.க மாவட்டச் செயலாளரின் உதவியாளர் பேசிய ஆடியோ பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்டச் செயலாளராக இருந்த மனோவை அ.தி.மு.க-வின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கி கட்சித் தலைமை அறிக்கை வெளியிட்டுள்ளது.

பாருக்கு பேரம் பேசியதாக நீக்கப்பட்ட மனோ
பாருக்கு பேரம் பேசியதாக நீக்கப்பட்ட மனோ

அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில், `கழகத்தின் கொள்கை குறிக்கோளுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும். கழக கட்டுப்பாட்டை மீறி கழகத்துக்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாக்கும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், உண்மைக்கு மாறான தகவலை தெரிவித்ததாலும் கன்னியாகுமரி மேற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் மனோ கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கிவைக்கப்படுகிறார். கழக உடன்பிறப்புகள் யாரும் அவருடன் எவ்வித தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது' என குறிப்பிடப்பட்டுள்ளது.