Published:Updated:

தைரியத்துக்கு அமுதா என்று பேர்!

அமுதா
பிரீமியம் ஸ்டோரி
News
அமுதா

மதுரையில் நடுத்தரக் குடும்பத்தில் பிறந்த அமுதா, ஒவ்வொரு பணிச்சூழலிலும் கடும் போராட்டங்களைச் சந்தித்தவர்.

பிரதமர் அலுவலகத்தின் இணைச்செயலாளராகி, தமிழகத்தின் பெருமை முகமாகியிருக்கிறார் அமுதா ஐ.ஏ.எஸ்.

26 ஆண்டுகளுக்கு முன்பு, கடலூர் மாவட்டத் துணை ஆட்சியராகப் பணியைத் தொடங்கிய அமுதா, யுனிசெப் தேசிய திட்ட அதிகாரி, தர்மபுரி, திண்டுக்கல் மாவட்டங்களின் ஆட்சியர், தொழிலாளர் ஆணையத்தின் ஆணையர், தமிழகக் கூடுதல் தேர்தல் அலுவலர், மகளிர் மேம்பாட்டுக் கழக இயக்குநர், உணவுப் பாதுகாப்புத்துறை முதன்மைச் செயலர் எனப் பல்வேறு துறைகளில் தடம் பதித்தவர். தற்போது அவருடைய பணிகளுக்குக் கிடைத்த இன்னொரு மகுடம்தான் இது.

கணவர் ஷம்பு கல்லோலிகருடன் அமுதா
கணவர் ஷம்பு கல்லோலிகருடன் அமுதா

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

மதுரையில் நடுத்தரக் குடும்பத்தில் பிறந்த அமுதா, ஒவ்வொரு பணிச்சூழலிலும் கடும் போராட்டங்களைச் சந்தித்தவர். மிரட்டல்கள், தாக்குதல்களை எதிர்கொண்டவர். அரசியல் அழுத்தங்களைக் கடந்தவர். எதற்கும் வளைந்துகொடுக்காமல் எப்போதும் மக்களுக்கு நெருக்கமாகக் களத்தில் நின்று பணியாற்றியிருக்கிறார். அவருடைய தனித்தன்மைகள் குறித்து அவருடன் பழகியவர்கள் பகிர்ந்துகொண்டவை இவை.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

பர்சனல்

அமுதாவின் அப்பா பெரியசாமி, மத்திய அரசு ஊழியர். அமுதா கேந்திரிய வித்யாலயாவில் படித்தார். அம்மாவழிப் பாட்டிதான் அமுதாவுக்கு கலெக்டர் ஆசையை விதைத்தவர். தாத்தா, சுதந்திரப் போராட்டத் தியாகி. அவர் இறந்தபிறகு பாட்டிக்கு உதவித்தொகை கிடைத்துவந்தது. அமுதா 8ம் வகுப்பு படித்தநேரத்தில், அந்த உதவித்தொகையைப் பெற பாட்டியோடு ஆட்சியர் அலுவலகம் சென்றுள்ளார். அப்போது கலெக்டர் வரவும் எல்லோரும் எழுந்து நின்று வணக்கம் தெரிவித்துள்ளார்கள். `யார் அவர்’ என்று பாட்டியிடம் கேட்க, `அவர்தான் கலெக்டர், இந்த மாவட்டத்துக்கே ராஜா மாதிரி’ என்று சொல்ல, அந்தக்கணத்தில் `நாமும் கலெக்டராக வேண்டும்’ என்ற விதை அமுதாவின் மனதில் விழுந்தது.

தைரியத்துக்கு அமுதா என்று பேர்!

முதல் முறையே சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றார். ஆனால் ஐ.பி.எஸ்தான் கிடைத்தது. `பணியில் சேராதே... முயன்றால் ஐ.ஏ.எஸ் கிடைக்கும்’ என்று ஊக்கப்படுத்தினார் அப்பா. அடுத்த ஆண்டே ஐ.ஏ.எஸ் கைக்கு வந்தது. தமிழகத்தில் முதலிடம். அகில இந்திய அளவில் பெண்களில் முதலிடம் எனச் சிறப்புகளும் சேர்ந்து வந்தன.

அமுதாவின் கணவர் ஷம்பு கல்லோலிகர் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர். பொதுவான நண்பர் மூலமாக அறிமுகமாகி, பெற்றோர் ஏற்பாட்டில் திருமணம் நடந்தது. மேற்கு வங்க கேடரைச் சேர்ந்த ஷம்பு கல்லோலிகர், திருமணத்துக்குப் பிறகு தமிழக கேடர் பெற்றுக் கொண்டு இங்கே வந்துவிட்டார். இப்போது, கைத்தறி, கைத்திறன் துணிநூல் மற்றும் கதர்த்துறையின் முதன்மைச் செயலாளராகப் பணியாற்றுகிறார்.

அமுதாவுக்கு போட்டோகிராபி மிகவும் பிடித்தமானது. குறிப்பாக `வைல்டு லைஃப் போட்டோகிராபி.’ அவர் எடுக்கும் புகைப் படங்களில் பிடித்ததை பிரேம் போட்டு அலுவலகத்திலும் வீடுகளிலும் வைத்திருப்பார்.

அமுதா ஐ.ஏ.எஸ்
அமுதா ஐ.ஏ.எஸ்

டிரக்கிங்கிலும் அமுதாவுக்கு ஆர்வம் உண்டு. இமயமலையெல்லாம் ஏறியிருக்கிறாராம். சைக்கிளிங் செய்வதை வழக்கமாக வைத்திருக்கிறார். வாரத்தில் ஒருமுறையாவது லாங் சைக்கிளிங் செல்வாராம். 30 கிலோ மீட்டரெல்லாம் சர்வசாதாரணமாக சைக்கிளில் பறப்பாராம்.

ஆன்மிகத்தில் அமுதாவுக்கு ஈடுபாடு உண்டு. இப்போதும் ஈரோட்டுப் பக்கம் போனால் சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் கோயிலுக்குச் செல்லாமல் திரும்பமாட்டார். ஆட்சியராக இருந்த நேரங்களில் அந்தக் கோயிலில் நடந்த தீமிதித் திருவிழாவில் தீமிதித்திருக்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

துணிவு

1996-ல் கடலூரில் துணை ஆட்சியராகப் பணியாற்றினார் அமுதா. அப்போது பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்டது கடலூர். அதுகுறித்து விளக்கமளிக்க முதல்வரிடமிருந்து அழைப்பு வந்தது. அதிகாரிகள், முதல்வரைச் சந்திக்கும்போது உடை எப்படி அணிய வேண்டும் என புரோட்டாகால் உண்டு. அமுதா, களத்தில் இருந்து ரெயின்கோட்டோடு நேரடியாக முதல்வரைச் சந்திக்கச் சென்றுவிட்டார். முதல்வர் அலுவலக அதிகாரிகள் தயங்கிநிற்க, முதல்வர் கருணாநிதியே, `அவங்களை வரச்சொல்லுங்கப்பா... வேலை செய்யிற அதிகாரிங்க அப்படித்தான் வருவாங்க’ என்று அழைத்துப் பேசினார்.

தைரியத்துக்கு அமுதா என்று பேர்!

அந்தத் தருணத்தில் செங்கல்பட்டு வட்டாரத்தில் குவாரி, மணல் கொள்ளை என இயற்கை வளங்கள் ஏராளம் கொள்ளையடிக்கப்பட்டன. கடலூரில் பணியாற்றிய அமுதாவை இந்தப்பகுதிக்கு சப் கலெக்டராக நியமித்தார் கருணாநிதி.

பணியில் சேர்ந்ததும் பாலாற்றில் நடந்த மணல் கடத்தலைத் தடுக்கும் முயற்சியில் இறங்கினார் அமுதா. ஒருநாள், மணல் அள்ளிச்சென்ற லாரியைத் தடுத்துச் சிறைபிடிக்க முயன்றார். அப்போது டிரைவர் அமுதா மேல் லாரியை மோதினார். முதுகில் கடுமையாக அடிபட்டது. அதே காலகட்டத்தில் திருநீர்மலையில் முறைகேடாக இயங்கிய குவாரி ஒன்றைக் கண்டறிந்து சீல் வைத்ததோடு 50க்கும் மேற்பட்ட லாரிகளையும் பறிமுதல் செய்தார் அமுதா. அப்போது 500க்கும் மேற்பட்டவர்கள் சூழ்ந்துகொண்டு மிரட்டத் தொடங்கினார்கள். வெறும் 10 போலீஸார்தான் உடன் இருந்தார்கள். இதை மீடியாக்கள் லைவ் செய்தன. அப்போது சட்டசபை நடந்துகொண்டிருந்தது. எதிர்க்கட்சிகள், ``ஒரு பெண் அதிகாரியை, உரிய பாதுகாப்பு இல்லாமல் இந்தப்பணிக்கு அனுப்பியது தவறு’’ என்று குரல் எழுப்ப, முதல்வர் கருணாநிதி, “அவங்க சாதாரண அமுதா இல்லை... `அதிரடி’ அமுதா...

இதையெல்லாம் சமாளித்து வந்துருவாங்க. சாயங்காலம் சட்டசபையில் அறிக்கை தாக்கல் செய்கிறேன்’’ என்றார்.

தைரியத்துக்கு அமுதா என்று பேர்!

ஜெயலலிதாவும் அமுதாமீது மிகுந்த அன்பு வைத்திருந்தார். மகளிர் மேம்பாட்டு ஆணையத்தின் மேலாண்மை இயக்குநராக இருந்த காலத்தில் சுய உதவிக்குழுக்கள் அமைப்பதில் தீவிரம் காட்டியதற்காக அமுதாவைப் பாராட்டியிருக்கிறார் ஜெயலலிதா. தானே புயல், சென்னைப் பெருவெள்ளக் காலங்களில் அமுதாவின் மீதிருந்த நம்பிக்கையிலேயே சிறப்பு அதிகாரியாக அவரை நியமித்தார்.

தர்மபுரி மாவட்டத்தில் ஆட்சியராக இருந்த காலத்தில் பெண் சிசுக்கொலை, சிறுவயதுத் திருமணங்கள் ஏராளம் நடந்துகொண்டிருந்தன. அனைத்தையும் வெகு சீக்கிரமே முடிவுக்குக் கொண்டுவந்தார் அமுதா. சிறு வயதில் பெண்களுக்குத் திருமணம் செய்து வைக்க நினைக்கும் பெற்றோரிடம் பேசி அவர்களுக்குப் பாதிப்பைப் புரியவைப்பார். கல்வியில் கடைசி இடத்தில் இருந்த தர்மபுரி மாவட்டம், மூன்றே ஆண்டுகளில் 14-வது இடத்துக்கு வந்தது. பேரிடர் காலங்களில் பெண்களின் பிரத்யேக சிக்கல்களைப் புரிந்துகொண்டு அவற்றைத் தீர்க்க முனைப்பு காட்டுவார் அமுதா. சென்னைப் பெருவெள்ளத்தின் போது அடையாற்றின் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி மிகவும் சவாலாக இருந்தது. ஆற்றோரம் இருந்த நிறைய குடும்பங்கள் வீடிழக்கும் நிலை. அனைத்துக் குடும்பங்களுக்கும் பெரும்பாக்கம், கண்ணகி நகர்ப் பகுதிகளில் வீட்டு ஒதுக்கீடு பெற்றுத்தந்து, குடியமர்த்திவிட்டே ஆக்கிரமிப்புகளை அகற்றினார். அதன்மூலம் 50 குடும்பங்களுக்கு வீடு கிடைத்தது. அடையாற்றை ஒட்டியுள்ள 5,000 குடும்பங்கள் காப்பாற்றப்பட்டன.

முன்மாதிரி

பி.எஸ்ஸி அக்ரி முடித்த அமுதா, தீவிரமாக சிவில் சர்வீஸ் தேர்வுக்குத் தயாராகி வந்தார். அமுதாவின் தீவிரத்தைக் கண்டு அவரின் அண்ணன் குமரனுக்கும் சிவில் சர்வீஸ் தேர்வு மீது ஆர்வம் வந்தது. அவரும் தயாராக, அமுதாவுக்கு முன்பே தேர்வில் வென்று ஐ.எப்.எஸ் அதிகாரி ஆனார். இலங்கை, கத்தார் நாடுகளில் இந்தியத் தூதரகத்தில் பணியாற்றிய குமரன், இப்போது சிங்கப்பூரில் இந்தியாவின் ஹை கமிஷனராகப் பணியாற்றுகிறார்.

அமுதா ஐ.ஏ.எஸ் எடுத்த புகைப்படம்
அமுதா ஐ.ஏ.எஸ் எடுத்த புகைப்படம்

அமுதாவை ரோல்மாடலாகக் கொண்ட இன்னொரு பிரபலம், நடிகை ஜோதிகா. இதை `அவள் விகடன்’ விருது வழங்கும் விழாவில் அவரே பெருமிதத்துடன் சொன்னார். `அவள் விகடனி’ன் `மாண்புமிகு அதிகாரி’ விருது அமுதாவுக்கு வழங்கப்பட்டபோது, அமுதாவின் சிறப்புகளை எடுத்துச் சொன்னதோடு, காலைத் தொட்டு வணங்க, அரங்கத்தில் இருந்த எல்லோரும் எழுந்து நின்று கைதட்டினார்கள்.

பொறுப்புணர்வு

25 ஆண்டுகளில் 15க்கும் மேற்பட்ட துறைகளில் பணியாற்றியிருக்கிறார். எந்தத் துறையாயினும் 15 நாள்களில் அந்தத்துறை குறித்து முழுமையாகத் தெரிந்துகொண்டு அதிரடிக்குத் தயாராகிவிடுவார். எப்போதும் களத்தில் நின்று பணியாற்றவே அமுதா விரும்புவார். `இந்த வேலையை இவர்தான் செய்ய வேண்டும்’ என்றெல்லாம் பார்க்கமாட்டார். சுனாமி தாக்குதல் ஏற்பட்ட தருணத்தில் யுனிசெப் அமைப்பில் தேசியத் திட்ட அதிகாரியாக இருந்தார். அப்போது மீட்புப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்ட அமுதா, மக்கள் கழிவறை இல்லாமல் சிரமப்படுவதைக் கண்டார். பெரும்பாலானோர் கிடைத்த இடத்தையெல்லாம் கழிவறையாகப் பயன்படுத்தினார்கள். இதனால் தொற்றுநோய் ஏற்படும் ஆபத்தை உணர்ந்த அமுதா, கிராமங்களைச் சுத்தம் செய்வதற்காக தொண்டு நிறுவனங்களை அணுகினார். யாரும் அந்தப்பணிக்கு உடன்படவில்லை. ஒரு கட்டத்தில் தன்னார்வலர்களைத் திரட்டிக்கொண்டு அவரே சுத்தம் செய்யத் தொடங்கிவிட்டார். பிறகு, அது ஓர் இயக்கமாக மாறியது.

தானே புயல் தொடங்கி சமீபத்தில் காவிரி டெல்டாவைத் தாக்கிய கஜா புயல் வரை பேரிடர்கால மீட்புப்பணிகளுக்கான சிறப்பு அதிகாரியாக அமுதா பணியாற்றியிருக்கிறார். பேரிடர்கள் மட்டுமன்றி, முன்னால் ஜனாதிபதி அப்துல்கலாம், முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா, கருணாநிதி இறுதிச் சடங்கு நிகழ்வுகளை ஒருங்கிணைக்கும் பொறுப்பும் அமுதாவிடமே தரப்பட்டது.

அப்துல்கலாம் இறந்தபோது, விடுமுறை எடுத்துக்கொண்டு அவருக்கு அஞ்சலி செலுத்துவதற்காக இராமநாதபுரம் சென்றுவிட்டார் அமுதா. தேசியத் தலைவர்கள் பலர் இறுதிச்சடங்கில் பங்கேற்கவிருந்த நிலையில், உயர் அதிகாரிகள் அமுதாவைத் தேட, அவர் ஏற்கெனவே அஞ்சலி செலுத்த ராமநாதபுரம் சென்றிருப்பது தெரியவந்தது. சாதாரண மனுஷியாக அஞ்சலி செலுத்தச்சென்ற அமுதா, புரோட்டாகால்படி இறுதிச்சடங்குப் பணிகளை மேற்கொள்ளும் பொறுப்பை ஏற்றார். கருணாநிதி, ஜெயலலிதா இறுதிச்சடங்குகளிலும் மிகுந்த பொறுப்புணர்வோடு அவர் பணி செய்தது ஒட்டுமொத்த தேசத்தையும் கவனிக்க வைத்தது.