Published:Updated:

` விக்கிரவாண்டியில் ஸ்டாலின் பிரசாரம் ஏன் எடுபடவில்லை?'- வேலூரில் விவரித்த அன்புமணி

``வரும் உள்ளாட்சி தேர்தலிலும், அ.தி.மு.க-வுடனான கூட்டணி தொடரும்’’ என்று பா.ம.க இளைஞரணி தலைவர் அன்புமணி கூறினார்.

அன்புமணி
அன்புமணி

வேலூர் மாவட்டம், பனப்பாக்கம் நங்கமங்கலம் புதூர் கிராமத்தில், பா.ம.க சார்பில் அன்புமணியின் தம்பி-தங்கை-மக்கள் படை சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், அக்கட்சியின் இளைஞரணி தலைவரும் மாநிலங்களவை எம்.பி-யுமான அன்புமணி கலந்துகொண்டு பேசினார். 

அன்புமணி
அன்புமணி

அவர் பேசுகையில், ``தமிழகத்தில் மாற்றத்தைக் கொண்டுவருவதற்கான எழுச்சியைக் கிராமம்தோறும் உருவாக்கவேண்டும். அதிக இளைஞர்கள் உள்ள ஒரே கட்சி பா.ம.க மட்டும்தான். தி.மு.க கூட்டத்தில் பார்த்தால், எல்லோரின் தலையும் வெள்ளை வெள்ளையாக இருக்கும்.

வீடுவீடாகச் சென்று, `அன்புமணியின் தம்பி வந்திருக்கிறேன், தங்கை வந்திருக்கிறேன்' என்று மக்களைச் சந்தித்துப் பேசுங்கள். மதுவுக்கு எதிராக முதன் முதலில் குரல் கொடுத்ததும் போராடியதும் நாம்தான். அதன்பிறகே அனைத்துக் கட்சிகளும் மதுவிலக்கை வலியுறுத்திவருகின்றன. 

ஸ்டாலின்
ஸ்டாலின்

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில், தி.மு.க தலைவர் ஸ்டாலின் பொய்களைக் கூறி வெற்றிபெற்றார். அவரின் பொய்ப் பிரசாரம் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் எடுபடவில்லை’’ என்றார்.

முன்னதாக, செய்தியாளர்களைச் சந்தித்த அன்புமணி, ‘‘பா.ம.க-வைப் பொறுத்தவரை ‘நீட்’ தேர்வு என்பது தேவையற்றது.

நீட் தேர்வு ஆள்மாறாட்டத்தில் பல மாநிலங்கள் சம்பந்தப்பட்டுள்ளதால், சி.பி.ஐ விசாரணை அமைக்கவேண்டும். டிசம்பரில் தொடங்கும் நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடரில், காவிரி, மேக்கே தாட்டூ, மீத்தேன் திட்டம் உள்ளிட்ட பிரச்னைகளில் தமிழகத்தின் நலன் காக்கக் குரல் எழுப்புவேன்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

உள்ளாட்சி தேர்தல் இரண்டு மாதங்களுக்குள் நடத்தி முடிக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. உள்ளாட்சி தேர்தலிலும் அ.தி.மு.க-வுடனான எங்களின் கூட்டணி தொடரும்’’ என்றார்.

இந்த நிகழ்ச்சியில், பா.ம.க தலைவர் ஜி.கே.மணி, மாநில துணை பொதுச் செயலாளர் இளவழகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.