Published:Updated:

அண்ணா பல்கலைக்கழக விடுதி காலி செய்யும் விவகாரம்... பல்கலைக்கழகத்தின் சுற்றறிக்கை!

Anna University
Anna University

அண்ணா பல்கலைக்கழக மாணவர் விடுதியை கொரோனா சிகிச்சைக்குக் கொடுக்கும் விவகாரத்தில், விடுதியைத் தருவதற்கு பல்கலைக்கழகம் ஒப்புதல் அளித்துள்ளது. அதேசமயம் மாணவர்கள் வந்து செல்வதற்கான எல்லா பாதுகாப்பு ஏற்பாடுகளையும் மாநகராட்சி செய்து தர, பல்கலைக் கழகம் சார்பில் கோரப்பட்டுள்ளது.

உலகத்தையே ஆட்டிப்படைக்கும் கொரோனா நோய்த் தொற்று நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே போகிறது. பாதிக்கப்படுபவர்களைத் தனிமைப்படுத்துவதற்கு ஏதுவாக பள்ளிகள், கல்லூரிகள் போன்ற பல இடங்களை அரசு கொரோனா தனிமைப்படுத்தல் முகாம்களாகவும் மருத்துவச் சிகிச்சை மையங்களாகவும் மாற்றப்பட்டு வருகிறது.

அந்த வகையில் சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தை மாநகராட்சி பயன்படுத்துவது தொடர்பாகப் பல செய்திகள் வெளிவந்த வண்ணம் இருந்தன. ஏற்கெனவே அங்கு சுமார் 600 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு இருந்தன. அதுமட்டுமன்றி வெளிமாநிலங்களிலிருந்து வந்த சுமார் 600 பேர் பல்கலைக்கழக வளாகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் அங்குள்ள படுக்கை வசதிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்த முடிவெடுத்தது மாநகராட்சி, இதற்காக மாணவர்களின் தாங்கும் விடுதியைக் காலி செய்து கொடுக்குமாறு அண்ணா பல்கலைக்கழக நிர்வாகத்திடம் கேட்டது.

விடுதிகளில் தங்கியிருந்த மாணவர்கள் மார்ச் மாதம் முழு முடக்கம் நடைமுறைக்கு வருவதற்கு முன்னரே அவரவர் சொந்த ஊர்களுக்குத் திருப்பி அனுப்பப்பட்டார்கள். அவசரமாகக் கிளம்பிய மாணவர்கள் அவர்களின் உடைமைகளை அவரவர் அறைகளிலேயே வைத்துவிட்டு சாவியைக் கொண்டு சென்றனர். மாணவர்களின் உடைகள், உடைமைகள் அறையிலேயே இருப்பதால் கொரோனா சிகிச்சைக்காக விடுதியைத் தர முடியாது என்று அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்தது. பதிலாக அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள ஆடிட்டோரியம் மற்றும் 300 படுக்கை வசதி உள்ள 2 புதிய கட்டடங்களைத் தருவதாகவும் தெரிவித்தது.

இதனிடையில் அரசு, கல்வி நிறுவனங்களை கொரோனா மையங்களாக மாற்றுவதற்கான விதிகளைப் பலப்படுத்தியது. கொரோனா சிகிச்சைக்குக் கல்வி நிறுவனங்கள் இடத்தை வழங்காவிட்டால், பேரிடர் மேலாண்மைச் சட்டப்படி அவ்விடம் கைப்பற்றப்படும் என்றும் அரசு எச்சரிக்கை விடுத்தது. இதனையடுத்து, கொரோனா சிகிச்சைக்காக மாணவர் விடுதியைத் தருவதற்கு அண்ணா பல்கலைக்கழகம் ஒப்புதல் அளித்துள்ளது. அதே சமயம் மாணவர்கள் வந்து செல்வதற்கான ஏற்பாடு உட்பட அவர்களின் பாதுகாப்புக்கு மாநகராட்சி உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்றும் பல்கலைக்கழகம் சார்பில் கோரப்பட்டுள்ளது பெற்றோருக்கு பெரும் ஆறுதலைத் தந்துள்ளது.

அண்ணா பல்கலைக்கழகம்
அண்ணா பல்கலைக்கழகம்

அண்ணா பல்கலைக்கழகத்தின் இந்த ஒப்புதலை அடுத்து விடுதியில் தங்கியிருக்கும் சில மாணவர்களுக்கு, கல்லூரி விடுதி காப்பாளர்கள் அலைபேசியில் தொடர்புகொண்டு, விடுதியை அவர்கள் நேரில் வந்தோ, சென்னையில் உள்ள தெரிந்தவர்கள் மூலமாகவோ காலி செய்து சாவிகளை ஒப்படைக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள். இது வெளியூரில் இருக்கும் மாணவர்களுக்கும் பெற்றோருக்கும் பெரும் மன உளைச்சலைத் தந்தது. இந்நிலையில், கல்லூரியின் CEG வளாகத்தின் உள்ள மாணவர்கள் விடுதிகளைக் காலி செய்வதைப் பற்றி அதிகார பூர்வமாக மாணவர்களுக்குக் கல்லூரி தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்லூரியின் டீன், பேராசிரியர் நடராஜன் அவர்கள் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையின் தமிழ் சுருக்கம் பின்வருமாறு;

``நமது கல்லூரியின் துணை வேந்தர் சூரப்பா அவர்களை மாநகராட்சி துணை ஆணையர் அவர்கள் சந்தித்து, கோவிட் -19 நோயாளிகளைத் தனிமைப்படுத்துவதற்காகக் கூடுதலாக இடம் ஒதுக்கித் தர வேண்டிக் கேட்டுக்கொண்டார். துணை வேந்தர் அவர்கள், வளாகத்தில் உள்ள எந்தப் பணியாளருக்கும் ஆபத்து விளைவிக்காத வகையில், சரியான இடம் பார்த்து ஒதுக்குவதாக வாக்களித்தார்.

கல்லூரி வளாகத்தில் உள்ள விடுதிகள் பயன்படுத்தப்படுவது பற்றிய விவாதத்தின்போது, உறுதியாக மாணவர்களின் பூட்டிய அறைகளை உடைத்துத் திறப்பதற்குத் துணை வேந்தர் மறுத்துவிட்டார். மாணவர்களின் பொருள்கள், அவர்களின் சான்றிதழ்கள், ப்ராஜெக்ட் வேலைகள் எல்லாம் உள்ளே இருப்பதால், அவற்றை வேறு இடத்திற்கு மாணவர்களின் அனுமதியின்றி மாற்றி, அவர்களின் எதிர்காலத்தைக் கேள்விக் குறியாக்க முடியாது என்றும் கூறியிருக்கிறார்.

அண்ணா பல்கலைக்கழக
துணை வேந்தர் சூரப்பா
அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பா

மேலும், அவசர தேவை ஏற்படும் பொழுது, அரசு அனைத்து மாணவர்களையும் ஒரு நாள் கல்லூரி வளாகத்திற்கு வர அனுமதித்து அவர்களின் பொருள்களைக் காலி செய்து எடுத்துச் செல்ல அனுமதி வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார். அதுமட்டுமன்றி, மாணவர்கள் பாதுகாப்பான முறையில் கல்லூரிக்கு அவர்களின் ஊரிலிருந்து வந்து செல்வதற்கான எல்லா ஏற்பாடுகளையும் மாநகராட்சி எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

ஒருவேளை, உங்கள் அறைகள் மாநகராட்சி பயன்பாட்டிற்குத் தேவைப்படும் பட்சத்தில், உங்கள் நிரந்தர முகவரி மற்றும் தொடர்பு தகவல்கள் மாநகராட்சி அலுவலர்களிடம் ஒப்படைக்கப்படும். உங்களுக்கான பயண விபரங்கள் எல்லாம் மாநகராட்சி தரப்பில் உங்களுக்குச் சொல்லப்படும். நீங்கள் நேரிலோ, உங்களால் அங்கீகரிக்கப்பட்ட வேறு ஒரு நபர் மூலமாகவோ உங்கள் பொருள்களை நீங்கள் காலி செய்து கொள்ளலாம்.

மாணவர்கள் நாட்டின் நலனிற்காக அரசோடு ஒத்துழைக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறார்கள். அத்துடன் கொரோனா தொற்று முடிந்து விடுதிகளைத் திருப்பி அளிக்கும்போது மாணவர்கள் உடனடியாக உபயோகப்படுத்தும் விதமாக மாநகராட்சி விடுதிகளைச் சுத்தம் செய்து தரும் என்ற நம்பிக்கையையும் தெரிவித்துள்ளார்."

மாணவர்களை தேர்வெழுத நிர்பந்திக்கின்றனவா ஐ.சி.எஸ்.இ பள்ளிகள்?
anna university notice
anna university notice

இவ்வாறு அந்தச் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கடுத்து மாணவர்கள் என்ன செய்ய வேண்டும் என்ற விரிவான விளக்கக் கடிதமும் கல்லூரி சார்பில் CEG வளாகத்தில் உள்ள விடுதிகளில் தங்கியிருக்கும் மாணவர்களுக்கு அனுப்பியுள்ளது. அந்தக் கடிதத்தின் சுருக்கமான விவரங்கள் பின்வருமாறு:

1. மாணவர்களின் அறைகள் அவர்கள் விட்டுச் சென்றபடியே இருக்கின்றன. அவர்களின் தனிப்பட்ட உடைமைகளின் முக்கியத்துவத்தை நாங்கள் அறிவோம்.

2. முன்னர் அறிவித்தபடி, விடுதிகளை கொரோனா வார்டாக மாற்ற மாநகராட்சி கோரிக்கை வைத்திருக்கிறது. நீங்கள் உங்கள் ஊரிலிருந்து பல்கலைக்கழகத்திற்கு வந்து, திரும்பிச் செல்வதற்கான முழு பயண பொறுப்பையும் மாநகராட்சி ஏற்றுக்கொண்டுள்ளது. உங்கள் இ-பாஸ் முதல், டிக்கெட் வரை மாநகராட்சி பார்த்துக்கொள்ளும். இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் நேரடியாக உங்களைத் தொடர்பு கொள்வார்கள். இதில் அண்ணா பல்கலைக்கழகத்தின் தலையீடு இருக்காது.

3. மாணவர்களை, மாநகராட்சி அலுவலர்கள் தொடர்புகொள்ளும்போது, உங்கள் பயணம் வசதியானதாக, பாதுகாப்பானதாக இருக்கிறதா என்பதை உறுதிசெய்து கொள்ளுங்கள். சரியான ஏற்பாடுகள் செய்யப்படாத பட்சத்தில், பயணிக்க மறுப்பது உங்களின் உரிமை.

4. மாநகராட்சி அலுவலகத்திலிருந்து உங்களுக்குத் தகவல்கள் வரும் வரை காத்திருங்கள்.

பல்கலைக்கழகத்தில் நான்கு தொகுதிகளில் சுமார் 15 விடுதிகள் உள்ளன. இதில் இளங்கலை திட்டங்கள் முதல் பிஹெச்.டி வரை 4,000 மாணவர்கள் உள்ளனர். இதில் குறிப்பாக (சி.இ.ஜி) வளாகத்தில் உள்ள நான்கு விடுதிகளும் ஒரு ஆடிட்டோரியமும் அரசிடம் ஒப்படைக்கப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. சி.இ.ஜி வளாகத்திலுள்ள மாணவர்களுக்குத்தான் மேற்சொன்ன அறிக்கைகளும் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Anna university
Anna university

அரசின் இந்த அவசரக்கால நடவடிக்கைக்கு ஒத்துழைக்கும் அதே நேரத்தில், மாணவர்களின் நலனிலும் அவர்களின் எதிர்காலத்திலும் அக்கறை கொண்டு முடிவுகளை எடுத்திருக்கும் அண்ணா பல்கலைக்கழகத்தின் இந்தச் செயல்பாடு அனைவரிடத்திலும் வரவேற்பைப் பெற்றுள்ளது. குழப்பமான இந்தக் காலகட்டத்தில் பல்வேறு செய்திகள், வதந்திகள் பரவும் நிலை இருக்கிறது. அவை ஏற்படுத்தும் பாதிப்புகளைக் களைய இப்படியான முறையான தகவல்கள் அதிகார வட்டங்களிலிருந்து தெரிவிக்கப்படுவது அவசியம்.

அடுத்த கட்டுரைக்கு