Published:Updated:

`இன்பதுரையா... அப்பாவுவா?!' - உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்காகக் காத்திருக்கும் தி.மு.க, அ.தி.மு.க

நெல்லை மாவட்டம் ராதாபுரம் தொகுதியின் மறுவாக்கு எண்ணிக்கை முடிவை வெளியிடுவதற்கு உச்சநீதிமன்றம் விதித்திருந்த தடை இன்றுடன் முடிவுக்கு வருகிறது.

supreme court
supreme court

2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலின்போது ராதாபுரம் சட்டமன்றத் தொகுதியில் தி.மு.க சார்பாக அப்பாவு, அ.தி.மு.க சார்பாக ஐ.எஸ்.இன்பதுரை ஆகியோர் போட்டியிட்டனர். வாக்கு எண்ணிக்கை முடிவில் 49 வாக்குகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க-வின் இன்பதுரை வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது.

Appavu
Appavu

தேர்தல் ஆணையத்தின் முடிவை ஏற்க மறுத்து சென்னை உயர் நீதிமன்றம் சென்றார் தி.மு.க வேட்பாளர் அப்பாவு. அவர் தனது மனுவில், ’வாக்கு எண்ணிக்கையின்போது தபால் வாக்குகளைச் சரியாக எண்ணவில்லை. அதனால் தபால் வாக்குகளையும் கடைசி மூன்று சுற்றுக்கான வாக்குகளையும் மீண்டும் எண்ணிய பிறகே முடிவை அறிவிக்க வேண்டும்’ எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனுவை எதிர்த்த அ.தி.மு.க எம்.எல்.ஏ-வான இன்பதுரை, ’தபால் வாக்குகளுக்கான படிவத்தில் நடுநிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் சான்றொப்பம் அளிக்க அதிகாரம் கிடையாது. எனவே, அந்த வாக்குகள் செல்லாததாகிவிட்டன. மேலும், மறுவாக்கு எண்ணிக்கைக்கு அவசியமில்லை’ என வாதிட்டார்.

இந்த வழக்கில் தீர்ப்பளித்த உயர்நீதிமன்றம், தபால் வாக்குகளுடன் 19, 20 மற்றும் 21-ம் சுற்றுகளுக்கான வாக்குகளை அக்டோபர் 4-ம் தேதி மீண்டும் எண்ண வேண்டும் என உத்தரவிட்டது.

I.S.Inbadurai MLA
I.S.Inbadurai MLA

நீதிமன்ற உத்தரவுப்படி ராதாபுரம் தொகுதிக்கான தபால் வாக்குகள் மற்றும் மூன்று சுற்றுகளுக்கான வாக்குகள் மீண்டும் எண்ணப்பட்டன. இதற்கிடையே, உச்சநீதிமன்றம் சென்ற ஐ.எஸ்.இன்பதுரை, தபால் வாக்குகளுக்கான படிவத்தில் நடுநிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் சான்றொப்பம் அளிக்க அதிகாரம் இல்லை, மறுவாக்கு எண்ணிக்கை முடிவை வெளியிடவும் தடை கோரி வழக்குத் தொடர்ந்தார்.

உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருவதால் 4-ம் தேதி மறு வாக்குஎண்ணிக்கை முடிந்த பின்பு 23-ம் தேதி வரை முடிவை அறிவிக்க இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது. அந்தத் தடை இன்றுடன் முடிகிறது. அத்துடன், இன்பதுரையின் வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது. அதில், உச்சநீதிமன்றம் எடுக்கும் முடிவைப் பொறுத்து மறுவாக்கு எண்ணிக்கை முடிவு வெளியாகுமா என்பது தெரியவரும்.

Vikatan

நீதிமன்ற உத்தரவு ஐ.எஸ்.இன்பதுரைக்குச் சாதகமாக வந்தால் மட்டுமே அவரால் தொடர்ந்து எம்.எல்.ஏ-வாக நீடிக்க முடியும். இல்லாவிட்டால் தி.மு.க-வின் எம்.எல்.ஏ-க்கள் எண்ணிக்கையில் ஓர் இடம் அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்படும் என்பதால் இந்த வழக்கை ஆளுங்கட்சியினரும் எதிர்க்கட்சியினரும் ஆர்வத்துடன் கவனித்து வருகிறார்கள்.