Election bannerElection banner
Published:Updated:

பணப்பட்டுவாடா; தேர்தல் ரத்து; `இந்த முறையும் அது நடக்கக் கூடாது’ - புலம்பும் அரவக்குறிச்சி மக்கள்

அரவக்குறிச்சி
அரவக்குறிச்சி ( நா.ராஜமுருகன் )

இந்தமுறையாவது, பணபட்டுவாடா பிரச்னையில் சிக்காமல், இங்கே நேர்மையாக தேர்தல் நடக்க, தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கணும். போன முறை எங்க தொகுதிக்கு ஏற்பட்ட களங்கத்தை, இந்தமுறையும் நாங்க அனுபவிக்கும் சூழல் வந்துடக் கூடாது.

இந்தியத் தேர்தல் வரலாற்றில் முதன்முறையாக, பணப்பட்டுவாடா புகாரில் சிக்கி, கடந்த 2016-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் ரத்து செய்யப்பட்ட தொகுதி அரவக்குறிச்சி. பின்னர், 18 எம்.எல்.ஏ-க்கள் தகுதிநீக்க வழக்கில் இந்தத் தொகுதியின் அன்றைய எம்.எல்.ஏ செந்தில் பாலாஜி பதவியிழந்தார். இதையடுத்து மூன்றாவது முறையாகத் தேர்தல் நடத்தப்பட்டு மீண்டும் செந்தில் பாலாஜி எம்.எல்.ஏ-வாக இருக்கிறார். `இந்த முறை எப்படித் தேர்தல் நடக்கப்போகுதோ?' என்று தொகுதி மக்கள் கவலைகொள்ளத் தொடங்கிவிட்டனர்.

செந்தில் பாலாஜி
செந்தில் பாலாஜி
நா.ராஜமுருகன்

கரூர் மாவட்டத்திலுள்ள நான்கு சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாக, அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி இருக்கிறது. மிகவும் வறட்சியானப் பகுதிகளைக்கொண்ட தொகுதி இது. பின்தங்கிய மக்கள் அதிகம் வாழும் தொகுதியும்கூட. கடந்த 2016-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில், அ.தி.மு.க சார்பில் செந்தில் பாலாஜியும், தி.மு.க சார்பில் கே.சி.பழனிசாமியும் களமிறங்கினர். ஆனால், தொகுதிக்குள் பணம் விநியோகிக்க அன்புநாதன் என்பவர் மூலமாக அ.தி.மு.க-வினர் நூதன முறையைக் கையாண்டனர். `மத்திய அரசுக்குச் சொந்தமானது' என்ற ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட ஆம்புலன்ஸ்களில் பணம் கடத்தப்படுவதாக, வருவாய்த்துறைக்குத் தகவல் கிடைத்தது. இதனால், ஆம்புலன்ஸ் வாகனத்தை மடக்க, அதில் நோயாளிகளுக்கு பதிலாக கட்டுக்கட்டாகப் பணம் இருந்ததைக் கண்டு, அதிகாரிகள் அதிர்ந்துபோனார்கள்.

அரவக்குறிச்சி
அரவக்குறிச்சி
நா.ராஜமுருகன்

விசாரணையில், இதற்குப் பின்புலமாக இருந்து அன்புநாதன் என்பவர் செயல்பட்டது தெரியவந்தது. அதனால், அப்போதைய எஸ்.பி., வருமான வரித்துறை அதிகாரிகள், டி.ஆர்.ஓ உள்ளிட்ட அதிகாரிகள், அன்புநாதன் வீட்டின் அருகிலிருந்த குடோனில் ரெய்டு நடத்தினர். அங்கு நடைபெற்ற சோதனையில், 12 பணம் எண்ணும் இயந்திரங்கள், பணத்தைக் கட்டும் ரப்பர் பேண்டுகள், சரக்கு அடைக்கப்படும் காலிப் பெட்டிகள், நான்கு கார்கள், ஒரு டிராக்டர், ஒரு ஆம்புலன்ஸ் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டதாக அதிகாரிகளால் சொல்லப்பட்டது.

ஆனால், அன்புநாதன் வீட்டில் பிடிபட்டது என்னவோ வெறும் ரூ.10 லட்சம் ரூபாய்தான் எனத் தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர். 'மூன்று நாள்கள் ரெய்டு நடந்தது. வெறும் பத்து லட்சத்துக்காகவா, மூன்று நாள்கள் ரெய்டு நடக்கும்... அங்கே குறைஞ்சது ரூ.100 கோடி ரூபாய் வரை பதுக்கிவைக்கப்பட்டிருந்தது. அதை, அதிகாரிகள் கணக்கில் காட்டாமல், குறைந்த அளவு பணத்தை மட்டும் கணக்கில் காட்டினார்கள்' என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. இதனால், இந்தியத் தேர்தல் வரலாற்றில் முதன்முறையாக, பணப்பட்டுவாடா புகாருக்காக அரவக்குறிச்சி தொகுதி தேர்தல் ரத்து செய்யப்பட்டது.

அதன் பிறகு, தனியாக நடந்த தேர்தலில் செந்தில் பாலாஜி, அ.தி.மு.க சார்பில் நின்று வெற்றிப்பெற்றார். ஆனால், டி.டி.வி.தினகரன் ஆரம்பித்த அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்துக்குச் சென்றதால், தகுதிநீக்கம் செய்யப்பட்ட செந்தில் பாலாஜி தனது எம்.எல்.ஏ பதவியை இழந்தார். பின் தி.மு.க-வுக்கும் அவர் தாவினார்.

கரூர்: பாதியில் நிற்கும் சாலை;  முழுமை பெறாத மைதானம்! - அவசரகதியில் திறக்கப்பட்ட திட்டங்கள்

கடந்த 2019-ம் ஆண்டு, மே மாதம் நடைபெற்ற இடைத்தேர்தலில், செந்தில் பாலாஜி வெற்றிபெற்றார். இதற்கிடையில், அன்புநாதன் மீது கரூர் ஜே.எம் - 2 கோர்ட்டில் நடந்துவந்த, ஆம்புலன்ஸில் ஸ்டிக்கர் ஒட்டிய வழக்கு ஒன்றுமில்லாமல் ஆனது. அவர்மீது வருமான வரித்துறையினர் தாக்கல் செய்த வழக்கு, சென்னை சீஃப் மெட்ரோ பாலிடன் நீதிமன்றத்தில் நடைபெற்றுவருகிறது. இப்படிப்பட்ட சூழலில் , 'வரும் தேர்தலில் அரவக்குறிச்சி தொகுதியில் எப்படித் தேர்தல் நடக்கப்போகிறதோ?' என்று தொகுதி மக்கள் அங்கலாய்க்கத் தொடங்கியிருக்கிறார்கள்.

தற்போது, அரவக்குறிச்சி தொகுதி எம்.எல்.ஏ-வான செந்தில் பாலாஜி வரும் தேர்தலில், தனது சொந்தத் தொகுதியான கரூரில் நிற்கவிருக்கிறார். அ.தி.மு.க-வில் முக்கியப்புள்ளியான போக்குவரத்துத்துறை அமைச்சரும், மாவட்டச் செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கரும், கரூர் தொகுதியில் நிற்கவிருக்கிறார். இதனால், அரவக்குறிச்சி தொகுதியில், இரண்டு கட்சிகளின் சார்பில் களமிறங்கப்போவது யார் என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

தி.மு.க சார்பில் கே.சி.பழனிசாமியின் மகன் சிவராமனுக்கோ அல்லது முன்னாள் அமைச்சரும், மாநில விவசாய அணிச் செயலாளருமான கரூர் சின்னசாமி அல்லது அவர் மகனுக்கோதான் சீட் என்று அடித்துச் சொல்கிறார்கள். அ.தி.மு.க-வைப் பொறுத்தமட்டில், இளைஞர் மற்றும் இளம்பெண் பாசறையின் மாவட்டச் செயலாளர் கமலக்கண்ணன் சீட்டுக்காக மோதுகிறார். ஆனால், தி.மு.க கூட்டணியில், அரவக்குறிச்சியைக் கேட்டு காங்கிரஸ் கட்சியினர் மல்லுக்கட்டுகின்றனர்.

கரூர் சின்னசாமி
கரூர் சின்னசாமி
நா.ராஜமுருகன்

காரணம், இந்தத் தொகுதியில் வரும் பள்ளபட்டி பேரூராட்சியிலுள்ள 29,000 இஸ்லாமியர்களின் வாக்குகளை நினைத்துத்தான். அதில், 80 சதவிகித வாக்குகள் தி.மு.க கூட்டணிக்குத்தான் எல்லா தேர்தல்களிலும் கிடைத்துவருகின்றன. இதனால், எளிதாக வெற்றிபெற்றுவிடலாம் என்று காங்கிரஸ் நினைக்கிறது. அதேபோல், அ.தி.மு.க கூட்டணியில் பா.ஜ.க-வும், பா.ம.க-வும் இந்தத் தொகுதியைக் கேட்டு அடம்பிடிக்கின்றன. இதுவரை, அ.தி.மு.க., தி.மு.க என இரண்டு கட்சிகளும் தலா ஐந்து முறை வென்றிருக்கின்றன. அதனால், அரவக்குறிச்சி தொகுதியில் சீட் பெறுவதற்கே கட்சிகள் மத்தியில் போட்டி கடுமையாகியிருக்கிறது. அதேபோல், வரும் தேர்தலில் அன்புநாதன் பங்கு இருக்குமா என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது.

இது ஒருபுறம் இருக்க தொகுதி மக்களோ, ``பொதுவா ஒரு தொகுதி எம்.எல்.ஏ-வாக இருப்பவர் இறக்க நேரிட்டால்தான் அந்தத் தொகுதியில் இடைத்தேர்தல் நடக்கும். ஆனா, எங்க தொகுதியில் பணப்பட்டுவாடா பிரச்னை, எம்.எல்.ஏ தகுதிநீக்க வழக்கின் தீர்ப்பு உள்ளிட்ட விஷயங்களால், கடந்த ஐந்து வருடங்களில் இரண்டு முறை இடைத்தேர்தல் நடந்திருக்கிறது. 'உங்களுக்கு என்ன, அடிக்கடி இடைத்தேர்தல் நடக்குது. வேட்பாளர்கள் உங்களுக்குப் பணத்தை வாரி கொட்டுவாங்க'னு மத்த தொகுதிக்காரங்க பேசுறாங்க. ஆனா, பணப்பட்டுவாடா பிரச்னைக்காக இந்தியாவிலேயே முதன்முறையாக தேர்தல் தள்ளிவைக்கப்பட்ட தொகுதினு எங்களுக்கு அவமானமாத்தான் இருக்கு.

முருங்கை உற்பத்தி
முருங்கை உற்பத்தி
நா.ராஜமுருகன்

இங்கே முருங்கை விவசாயம் அதிகம் நடக்குது. அதை முறைப்படுத்த எந்த உள்கட்டமைப்பு வசதிகளையும் ஏற்படுத்தலை. பல கிராமங்களில் குடிநீர்ப் பிரச்னை தலைவிரிச்சு ஆடுது. எங்களோட உண்மையான பிரச்னையை இங்ஜே யாரும் தீர்க்கலை. அதைத் தீர்க்க உத்தரவாதம் தர்றவங்களுக்கே எங்க ஓட்டு விழும். இந்தமுறையாவது, பணப்பட்டுவாடா பிரச்னையில் சிக்காம, இங்கே நேர்மையாக தேர்தல் நடக்க, தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கணும். போன முறை எங்க தொகுதிக்கு ஏற்பட்ட களங்கத்தை, இந்தமுறையும் நாங்க அனுபவிக்கும் சூழல் வந்துடக் கூடாது" என்கிறார்கள்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு