Published:Updated:

கொரோனா மரணம்: `தமிழகத்தில் ரூ.50,000 இழப்பீடு... மற்ற மாநிலங்களில் எப்படி?!'

தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்றுக்கு ஆளாகி மரணமடைந்தவர்களின் உறவினர்களுக்கு தலா ரூ.50,000 இழப்பீடு வழங்கப்படும் என்று தமிழக அரசு கூறியிருக்கிறது. மற்ற மாநிலங்களில் எவ்வளவு ரூபாய் இழப்பீடு வழங்கப்படுகிறது..?

கொரோனா பெருந்தொற்று ஒரு பேரிடராக அறிவிக்கப்பட்டு ஒன்றரை ஆண்டுக்கு மேலாகிவிட்ட நிலையில், கொரோனாவால் மரணமடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் இழப்பீடு வழங்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் சிலர் வழக்கு தொடர்ந்திருந்தனர். குறிப்பாக, மதுரை மேலூரை அடுத்த எட்டிமங்கலத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் ஸ்டாலின் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில், `கொரோனா வைரஸ் தாக்குதலில் இறந்த வழக்கறிஞர்கள், வழக்கறிஞர்களின் குமாஸ்தாக்கள் ஆகியோரின் குடும்பங்களுக்கு, பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின்படி உரிய இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

அதேபோல, `கொரோனாவால் மரணமடைந்தவர்களின் குடும்பத்தினருக்குப் பேரிடர் மேலாண்மை விதிகளின்படி உரிய இழப்பீட்டை வழங்க அரசுக்கு உத்தரவிட வேண்டும்' என்று விஜயகோபால் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்

இந்த வழக்குகள் தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் முன்பு கடந்த நவம்பர் 9-ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசுத் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், `வழக்கறிஞர்களும் குமாஸ்தாக்களும் முன்களப் பணியாளர்கள் இல்லை. அதனால், இழப்பீடு வழங்க முடியாது’ என்று கூறப்பட்டிருந்தது. மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ``கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் குறைந்தது ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது" என்று வாதிட்டார்.

அதையடுத்து, ``கர்நாடகா உள்ளிட்ட சில மாநிலங்கள் ரூ.1 லட்சம் வரை இழப்பீடு வழங்கப்படும் என்று அறிவித்திருக்கின்றன. அதுபோல, தமிழக அரசு கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு இழப்பீடாக எவ்வளவு வழங்க முடிவு செய்திருக்கிறது?" என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த அரசுத் தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம், ``தமிழ்நாட்டில் கொரோனா தொற்றினால் 36 ஆயிரத்து 220 பேர் இறந்திருக்கின்றனர். அவர்களின் குடும்பங்களுக்கு உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி தலா ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்கப்படும்'' என்றார். அப்போது, ``இதற்கு முன்பாக புயல், வெள்ளம் உள்ளிட்ட இயற்கை சீற்றங்களினால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.4 லட்சமும், அதற்கு அதிகமாகவும் அரசு இழப்பீடு வழங்கியிருக்கிறது" என்று மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் கூறினார்.

தலைமைச் செயலகம்
தலைமைச் செயலகம்

அதை ஏற்க மறுத்த நீதிபதிகள், ``இயற்கைச் சீற்றங்களால் 10 பேர், 12 பேர் இறந்திருப்பார்கள். அவர்களின் குடும்பத்துக்கு ரூ.40 லட்சம் கூட இழப்பீடாக அரசு வழங்கியிருக்கலாம். ஆனால், கொரோனாவால் 36 ஆயிரம் பேர் இறந்திருக்கின்றனர். இவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் என்றால், எவ்வளவு பெரிய தொகை வரும்?" என்று கேள்வி எழுப்பினர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பின்னர், ``வேறு சில மாநில அரசுகள் ரூ.50 ஆயிரத்துக்கும் மேல் இழப்பீடு வழங்குவதால், தமிழக அரசு விரும்பினால் கூடுதல் இழப்பீடு வழங்கலாம். கூடுதலாக இழப்பீடு வழங்குவது குறித்து தமிழ்நாடு அரசும், புதுச்சேரி அரசும் அடுத்த வாரம் தகவல் தெரிவிக்க வேண்டும். அதேநேரம், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கவேண்டிய இழப்பீட்டை விரைவாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை அடுத்த வாரத்துக்குத் தள்ளிவைத்தனர்.

கொரோனா பெருந்தொற்றால் மரணமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு மாநில அரசுகள், தலா ரூ.50 ஆயிரம் வழங்கும் என்று கடந்த செப்டம்பர் மாதம் உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்திருந்தது. மேலும், இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு மட்டுமல்லாமல், எதிர்காலத்தில் கொரோனாவால் மரணமடைபவர்களின் குடும்பங்களுக்கும் இந்த இழப்பீடு வழங்கப்படும் என்று மத்திய அரசு கூறியிருந்தது.

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

அதை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம், `அனைத்து மாநிலங்களிலும் கொரேனாவால் மரணமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வழங்க வேண்டும்' என்று கடந்த அக்டோபர் மாதம் உத்தரவு பிறப்பித்தது.

பேபி அணையின் மரங்களை வெட்ட அனுமதியும்... அனுமதி ரத்தும்! - கேரள அரசு செய்தது சரியா?

இழப்பீடு ரூ.50 ஆயிரம் என்று உச்ச நீதிமன்றம் கூறியிருக்கும்போதிலும், சில மாநிலங்களில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இதைவிட அதிகமான இழப்பீட்டுத் தொகை அறிவிக்கப்பட்டிருக்கிறது. பீகாரில் தலா ரூ.4 லட்சம், மத்தியப் பிரதேசத்தில் தலா ரூ.1 லட்சம் என அந்த மாநில அரசுகள் அறிவித்திருக்கின்றன. கர்நாடகாவில் மொத்தம் ரூ.1.5 லட்சம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

தலைமைச்செயலகம்
தலைமைச்செயலகம்

கொரோனா இழப்பீட்டுத் தொகையை உயர்த்தி கடந்த செப்டம்பர் மாதம் கடைசி வாரத்தில் கர்நாடக அரசு வழிகாட்டு நெறிமுறைகளை மாற்றியது. அதன்படி, கொரோனாவால் மரணமடைந்த நபர்களின் குடும்பத்தினர் வறுமைக்கோட்டுக்குக் கீழ் இருந்தால், கர்நாடகாவின் 'சந்தியா சுரக்சா' திட்டத்தின் கீழ் ரூ.1 லட்சம் இழப்பீடு பெறலாம். அதுபோக, மாநிலப் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து மத்திய அரசின் வழிகாட்டல்களின்படி ரூ.50 ஆயிரம் பெறலாம். ஆனால், தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருப்பதால், இழப்பீட்டுத் தொகையை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை மாநில அரசு நிராகரித்திருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு