Published:Updated:

சென்னை: `தத்தளிக்கும் தி.நகர்; கோட்டைவிட்ட அதிமுக; சாட்டையைச் சுழற்றும் திமுக!'

தி.நகர் ஏரியாவில் தேங்கும் மழைநீர், முழுமையாக கால்வாயில் போய் அடையார் ஆற்றில் கலக்காது. மாம்பலம் கால்வாயை ஆழப்படுத்துவதைவிட அகலப்படுத்துவதுதான் நிரந்தரத் தீர்வு. அதை செய்யத் தவறிவிட்டது முந்தைய அ.தி.மு.க அரசு.

2015-க்கு பிறகு, சென்னை மிக அதிக கனமழையால் வெள்ளக்காடாக மூழ்கிப்போயிருக்கிறது. கொட்டித்தீர்த்த கனமழையால் சென்னையின் சாலைகளில் மழை வெள்ளம் ஆறாக ஓடிக்கொண்டிருக்கிறது. நீர்நிலைகள் நிரம்பி, மக்கள் வசிப்பிடங்களுக்குள் பாய்ந்திருக்கின்றன. இன்னும் சில நாள்களுக்குச் சென்னையில் கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருப்பதால், சென்னை மாநகராட்சி அதிகாரிகள் முழுமுனைப்புடன் களத்தில் பணியாற்றிக்கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில், 2015 மழை வெள்ளச் சேதத்துக்குப் பிறகு, தற்போது வரை என்ன செய்து கொண்டிருந்தீர்கள் என்று சென்னை மாநகராட்சியையும், தமிழக அரசையும் கடுமையாகச் சாடி தன் அதிருப்தியை வெளிப்படுத்தியிருக்கிறது சென்னை உயர் நீதிமன்றம்.

இந்த நிலையில், எதிர்க்கட்சியான அதிமுக, `சென்னையின் தற்போதைய நிலைக்கு ஆளும் திமுக அரசுதான் காரணம்’ என்றும், ஆளும் அரசு, `முந்தைய அதிமுக அரசின் செயல்பாடுகளே இந்த வெள்ளத்துக்குக் காரணம்’ என்றும் மாறி மாறிக் குறை கூறிக்கொண்டிருக்கின்றன. கொட்டித்தீர்த்த கனமழையால் வெள்ளக்காடான சென்னையில் பல்வேறு அரசியல் கட்சியினரும் ஆய்வு மேற்கொண்டு நிவாரண உதவிகளை வழங்கிவருகின்றனர். அந்த வகையில், முதல்வர் ஸ்டாலின் வெள்ள பாதிப்பு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டுவருகிறார்.

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

அண்மையில் கொளத்தூரில் ஆய்வு மேற்கொண்ட ஸ்டாலின், செய்தியாளர்களிடம் பேசும்போது, ``ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பல கோடி ரூபாய் வாங்கி என்ன செய்தார்கள் என்று தெரியவில்லை. எஸ்.பி.வேலுமணி அமைச்சராக இருந்த நேரத்தில் முறையாகப் பணிகள் நடைபெறவில்லை. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கமிஷன் பெற்றிருக்கிறார்கள். முறையாக எந்தப் பணியும் நடைபெறவில்லை. அதிமுக ஆட்சியில் மழைநீர் வடிகால் அமைப்பதிலும் முறைகேடு புகார் எழுந்திருக்கிறது. தற்போது நிலைமையைச் சமாளித்து, பணிகளை மேற்கொண்டுவருகிறோம். நிலைமை சரியானதும், ஆணையம் அமைத்து, தவறு செய்தவர்கள் மீது நிச்சயமாக நடவடிக்கை எடுப்போம்" என்று கூறினார்.

  • முன்னதாக, நவம்பர் 8-ம் தேதியன்று தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரான எடப்பாடி பழனிசாமி மழை வெள்ள பாதிப்புகளைப் பார்வையிட்டார். அப்போது பேசிய அவர், ``தி.நகர், விருகம்பாக்கம், கோடம்பாக்கம் ஆகிய இடங்களில் முழங்கால் அளவுக்குத் தண்ணீர் நிற்கிறது. இதுவரை எந்த அதிகாரியும் வந்து பார்வையிடவில்லை என்று அந்தப் பகுதி மக்கள் புகார் தெரிவிக்கிறார்கள். நான் ஆய்வு செய்த பகுதி முழுவதுமே கழிவுநீரும், மழைநீரும் கலந்திருக்கிறது. குடிநீரில் கழிவுநீர் கலந்துவருவதால் குடிப்பதற்கு முடியவில்லை என்று அங்கு மக்கள் புகார் கூறுகிறார்கள். அம்மா அரசு இருக்கும்போது, வழக்கமாக ஆகஸ்ட் மாதமே தூர்வார நடவடிக்கை எடுப்போம். கால்வாய்கள் முறையாகச் சுத்தம் செய்யப்பட்ட காரணத்தால் எங்கும் மழைநீர் தேங்காமல் வெளியேறியது. அப்படியே மழை பெய்தாலும் மூன்று அல்லது நான்கு மணி நேரத்தில் அந்தத் தண்ணீர் வடிந்துவிடும். ஆனால், தி.மு.க. அரசு சரியான முறையில் தூர்வாராத காரணத்தால், மழை பெய்து இரண்டு நாள்கள் ஆகியும் தண்ணீர் தேங்கி நிற்கிறது. எந்த அதிகாரியும் பார்வையிடவில்லை" என்று குற்றம்சாட்டியிருந்தார்.

மழைவெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்த எடப்பாடி பழனிசாமி
மழைவெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்த எடப்பாடி பழனிசாமி

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் முதல்வர் ஸ்டாலின், ``தி.நகர்ப் பகுதியில் நடந்த ஸ்மார்சிட்டி பணியில் முறைகேடுகள் நடந்திருக்கின்றன. அதைப் பற்றி விரிவாக விசாரித்து நடவடிக்கை எடுப்போம்" என்று அறிவித்திருக்கிறார்.

நவம்பர் 9-ம் தேதி, மாலை 3 மணி நிலவரப்படி, வடக்கு உஸ்மான் ரோட்டின் சில பகுதிகளில் தண்ணீர் தேங்கி நின்றதால், வாகனப் போக்குவரத்து ஸ்தம்பித்தது. இந்த நிலவரத்தைச் சரிசெய்ய ஒருபுறம் நடவடிக்கை எடுக்கப்பட்டாலும், இன்னொரு புறம் ரகசிய விசாரணை முடுக்கிவிடப்பட்டிருக்கிறது. இது பற்றி நம்மிடம் பேசிய மாநகராட்சி அதிகாரி ஒருவர், ``எடப்பாடி முதல்வராக இருந்த காலகட்டத்தில் தி.நகர் பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சுமார் 25 கோடி ரூபாய் அளவுக்குப் பணிகள் நடந்து முடிந்திருக்கின்றன. அதேபோல, சிறப்புத் திட்டத்தின் கீழ் சுமார் 40 கோடி ரூபாய் அளவுக்கு மழைநீர் வடிகால் பணிகளுக்கு டெண்டர்விடப்பட்டது. அந்தப் பணிகளுக்கான ஒப்பந்த வேலைகளை ஏழு நிறுவனங்கள் செய்தன.

சென்னை வெள்ளம்: `ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் முறைகேடு; நடவடிக்கை நிச்சயம்’ - முதல்வர் ஸ்டாலின்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அவற்றில் இரண்டு நிறுவனங்கள், அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை மெதுவாகச் செய்ததைக் கண்டுபிடித்த தற்போதைய தி.மு.க அரசு, அந்த நிறுவனங்களுக்கு அபராதம் விதித்தது. அதேபோல, மற்ற நிறுவனங்களின் பணிகளின் தரம் குறித்தும் தீவிர விசாரணை நடக்கிறது. பூமிக்குக் கீழே எந்த அளவுக்குத் தரமான கட்டுமான பொருள்களைப் பயன்படுத்தினார்கள், டெண்டர் விதிமுறையில் கூறப்பட்டதை முழுவதுமாகச் செய்து முடித்திருக்கிறார்களா என்றரீதியில் விசாரணை நடக்கிறது" என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், ``தி.நகர் பகுதியில் தேங்கும் மழைநீர் தேங்காமல் செல்ல மாம்பலம் கால்வாய் திட்டம் முக்கியமானது. கால்வாயை ஆழப்படுத்துவதும், அகலப்படுத்துவதும்தான் நோக்கம். இந்தக் கால்வாயைச் சீரமைத்து அடையார் ஆறு வரையில் கொண்டுபோய் விட வேண்டும். இந்தப் பணிகளை ஆறு பகுதிகளாகப் பிரித்து, கடந்த சட்டசபைத் தேர்தலுக்கு முன்பு, அ.தி.மு.க ஆட்சியின்போது டெண்டர் விட்டனர். ஐந்து பகுதிகளுக்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டு நடந்துவருகின்றன. அதில் ஒரு பகுதி வேலை மட்டும் இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை.

மேட்லி சுரங்கப்பாதை - தி.நகர்
மேட்லி சுரங்கப்பாதை - தி.நகர்

இது தவிர, அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசு கோட்டைவிட்ட விஷயம் என்னவென்றால், மாம்பலம் கால்வாயில் மழைநீர் போய் அடையார் ஆறுடன் கலக்கும் இடத்தை 'டிஸ்போசல் பாயின்ட்' என்பார்கள். அந்த பாயின்ட்டில் நடக்கவேண்டிய இரண்டு பகுதிகளுக்கான பணிகளுக்கும் சேர்ந்து மொத்தம் எட்டு பகுதிகளாகப் பிரித்து டெண்டர் விட்டிருக்க வேண்டும். ஆனால், ஆறு பகுதிகளுக்கு மட்டுமே டெண்டர் விட்டிருக்கிறார்கள். இந்த ஆறு பகுதிகளில் கால்வாய்ப் பணி நடந்து முடிந்தாலும், அதனால் பலன் இல்லை. தி.நகர் பகுதியில் தேங்கும் மழைநீர் முழுமையாகக் கால்வாயில் போய் அடையார் ஆற்றில் கலக்காது.

மாம்பலம் கால்வாயை ஆழப்படுத்துவதைவிட அகலப்படுத்துவதுதான் நிரந்தர தீர்வு. அதைச் செய்யத் தவறிவிட்டது முந்தைய அ.தி.மு.க அரசு. இப்படியிருக்கும்போது, வெள்ள பாதிப்பைச் சரிசெய்யவில்லை என்று தற்போதைய தி.மு.க அரசு மீது வீண் பழியை எடப்பாடி பழனிசாமி சுமத்தியிருப்பது அரசியல் உள்நோக்கம்கொண்டது. தி.நகர் பகுதியில் மழைநீர் வடிகால் கால்வாய் விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி அரசு கோட்டைவிட்டது தொடர்பான விரிவான அறிக்கையை விரைவில் மக்களுக்குத் தெரிவிக்கவிருக்கிறார்கள். கூடவே, மழைநீர் வாய்க்கால் அமைப்பதில் நடந்த வேறு சில முறைகேடுகளும் அம்பலத்துக்கு வரும்" என்றார்.

சென்னை கன மழை: வெள்ளக் காடாக காட்சியளிக்கும் பள்ளிக்கரணை!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு