Published:Updated:

பணிநியமனம் தொடங்கி பிரின்டிங் வரை... லஞ்ச ஒழிப்புத்துறை ஸ்கேனிங்கில் திறந்தநிலை பல்கலைக்கழகம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம்
தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம்

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை சில ஆவணங்களையும் பெற்றுச் சென்றிருக்கிறது. என்ன நடந்தது என்பது குறித்து விசாரணையில் இறங்கினோம்.

படித்து பட்டம் பெறுவது என்பது இளைஞர்களின் பெருங்கனவு என்றே சொல்லலாம். அந்தக் கனவு சிலருக்குச் சாத்தியப்படும், சிலருக்குச் சாத்தியப்படாது. தமிழகத்தில், 10, 12-ம் வகுப்புகளில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு ஒருகாலம் வரை பட்டப்படிப்பு என்பது நிறைவேறாத கனவாகவே இருந்தது. அதை நிவர்த்தி செய்யும் வகையில்தான் 2002-ல் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா 'தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தை' தொடங்கினார். சிறப்பாகச் செயல்பட்டுவந்த பல்கலைக்கழகம், அ.தி.மு.க ஆட்சியில் கடந்த 10 ஆண்டுகளாக ஊழல்மயமாக மாறியதாகத் தகவல் கிடைத்தது. இந்தக் குற்றச்சாட்டை மெய்ப்பிக்கும் வகையில், இந்தப் பல்கலைக்கழகத்திலிருந்து லஞ்ச ஒழிப்புத்துறை சில ஆவணங்களையும் எடுத்துச் சென்றிருக்கிறது.

2013 முதல் 2016 வரை அ.தி.மு.க-வைச் சேர்ந்த ராஜன் செல்லப்பாவின் சகோதரி சந்திரகாந்தா தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்தார். அதைத் தொடர்ந்து, 2016 முதல் 2019 வரை பாஸ்கரன் என்பவர் துணை வேந்தராக இருந்தார். இந்தக் காலகட்டத்தில்தான் பல்கலைக்கழகத்தில் முறைகேடுகள் அதிகம் நடந்திருப்பதாகச் சொல்கிறார்கள்.

ஜெயலலிதா
ஜெயலலிதா

பல்கலைக்கழகத்தில் நடந்த முறைகேடுகள் குறித்து அந்தக் காலகட்டத்தில் பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினராக இருந்த ஒருவர், நம்மிடம் விளக்கமாகக் கூறினார். ``சந்திரகாந்தா இருந்தபோது பணிநியமனங்களில் முறைகேடுகள் நடந்ததாகக் குற்றச்சாட்டு எழவே, அது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறைக்குப் புகார்கள் பறந்தன. மாணவர்களின் சான்றிதழ்களை டிஜிட்டல் மயமாக்கும் திட்டத்துக்கு 2015-ல் 11.74 கோடி ரூபாய் கணக்கு காட்டப்பட்டிருக்கிறது. ஆனால், திட்டத்துக்கான கட்டமைப்பை உருவாக்காமலேயே பணம் செலவிடப்பட்டிருக்கிறது. இதுவும் அப்போது மூடிமறைக்கப்பட்டது. இது குறித்து சிண்டிகேட் உறுப்பினர்கள் விசாரணையில் இறங்கியபோது, எல்லோருக்கும் அப்போதைய ஆளும் தரப்பிலிருந்து மிரட்டல் வரவே, விசாரணையைப் பாதியில் நிறுத்திவிட்டனர்.

பின்னர் 2016-ல் பாஸ்கரன் வந்தபோதும், முறைகேடுகளுக்குப் பஞ்சமில்லை. 10 லட்சத்துக்கு மேல் செலவு செய்ய வேண்டுமென்றால், டெண்டர் விட்டுத்தான் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்பது விதி. ஆனால், பாஸ்கரனோ தனக்குத் தோதான நிறுவனங்களுக்கு பணிகளைக் கொடுப்பதற்காக, 9 லட்சத்து சில்லறை என அமௌன்ட் கோட் செய்து முறைகேடு செய்திருக்கிறார். பி.ஏ., பி.எஸ்.சி., பி.காம்., எம்.ஏ., எம்.எஸ்.சி., எம்.ஃபில், பிஹெச்.டி என நூற்றுக்கும் மேற்பட்ட பட்டப்படிப்புகள் தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் பயிற்றுவிக்கப்படுகின்றன.

சென்னையில் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் சென்டர்கள் அமைக்க வேண்டும் என்பதற்காகப் பல தனியார் நிறுவனங்களுக்கு ஃப்ரான்ச்சைஸ் (FRANCHISEE) அடிப்படையில் கொடுக்கப்பட்டதிலும், முறைகேடுகள் நடந்தது. தொலைதூரக் கல்விக்கு அனுமதி கொடுக்கும் அதிகாரமும் திறந்தநிலைப் பல்கலைக்கழகத்திடம் இருந்ததால், அதிலும் பி.எட் எனப்படும் ஆசிரியர் பணிக்கான கல்வியியல் கல்லூரிகளுக்கு அனுமதி கொடுப்பதிலும் முறைகேடுகள் நடைபெற்றிருக்கின்றன. அதேபோல, புதிய கட்டடம் கட்டப்பட்டதிலும் பல கோடிக்கு முறைகேடுகள் நடந்திருக்கின்றன.

பல்கலைக்கழக கட்டடம்
பல்கலைக்கழக கட்டடம்

பேராசிரியர், இணைப் பேராசிரியர் நியமனங்களில் 'ரிசர்வேஷன் ரோஸ்டர்' முறை பின்பற்றப்படவில்லை. எஸ்.சி அருந்ததியர்களுக்கான இடங்களில் மற்ற சாதியினர் பணியமர்த்தப்பட்டனர். பல்கலைக்கழகத்தின் நிதி தொடர்பான பரிவர்த்தனைகள் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம்தான் நடைபெற வேண்டும். ஆனால், தனியார் வங்கிகளில் அக்கவுன்ட் வைத்திருக்கின்றனர். அதனால், மாணவர்கள் அட்மிஷன் தொகையைச் செலுத்துவதற்குத் தனியார் வங்கிகள் ப்ராசஸிங் கட்டணம் வசூலிக்கின்றன. தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் இது கிடையாது. தனியார் வங்கி கமிஷன் கொடுப்பதால்தான் அங்கு கணக்கு வைக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது" என்றார்.

"கேமராவைப் பார்த்துக் கொண்டேயிருக்கவேண்டும்!" - அண்ணா பல்கலைக்கழக ஆன்லைன் தேர்வும், சர்ச்சைகளும்!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இவை எல்லாவற்றையும்விட, புத்தகங்கள் அச்சடித்ததில்தான் மிகப்பெரிய முறைகேடுகள் நடந்திருக்கின்றன. இது குறித்து தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் பெறப்பட்ட தகவல்களை நமக்கு அளித்த வழக்கறிஞரே இதை விவரித்தார். ``2016 முதல் 2019 வரையிலான காலகட்டத்தில் அச்சடிக்கப்பட்ட புத்தகங்கள் குறித்த தகவல் கிடைத்திருக்கிறது. அதில், 2016-17 காலகட்டத்தில் 5,01,865 புத்தகங்கள், சுமார் 9,24,29,765.55 ரூபாய்க்கு அச்சடிக்கப்பட்டிருக்கின்றன. அதேபோல, 2017-18 காலகட்டத்தில் 2,01,871 புத்தகங்கள், சுமார் 52,52,399.80 ரூபாய்க்கும், 2018-19 காலகட்டத்தில் 2,50,791 புத்தகங்கள், சுமார் 1,68,98,418.35 ரூபாய்க்கும் அச்சடிக்கப்பட்டிருக்கின்றன.

லஞ்ச ஒழிப்புத்துறை
லஞ்ச ஒழிப்புத்துறை

பாஸ்கரன் துணைவேந்தராக இருந்த இந்த மூன்றாண்டுகளில் மாணவர்களின் எண்ணிக்கை மொத்தமாகவே 60,000-ஐ தாண்டியிருக்காது. ஆனால், புத்தகங்கள் மட்டும் 10 மடங்கு கூடுதலாக அச்சடிக்கப்பட்டன. இல்லாத கோர்ஸ்களுக்கும், இல்லாத மாணவர்களுக்கும் புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டிருக்கின்றன. அனைத்துமே அரசு கூட்டுறவு அச்சகங்களில்தான் அச்சடிக்கப்பட்டன என்றாலும், எந்த அச்சகத்துக்குமே முகவரியே கிடையாது. வெறும் `விருதுநகர் பிரஸ்’, `காஞ்சிபுரம் பிரஸ்’ என்றுதான் குறிப்புகளில் இடம்பெற்றிருக்கின்றன. எல்லா ஆவணங்களையும் லஞ்ச ஒழிப்புத்துறை எடுத்துச் சென்று விசாரித்துவருகிறது" என்று முடித்தார்.

இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை வட்டாரத்தில் விசாரித்தபோது, ``2013 முதல் 2019 வரை இருந்த இரண்டு நிர்வாகத்திலும் முறைகேடுகள் நடந்துள்ளதாகத் தெரிகிறது. அ.தி.மு.க ஆட்சி இருந்தவரை எங்களுக்குக் கிடைத்த புகார்கள் தூங்கிக் கொண்டிருந்தன. தி.மு.க ஆட்சி அமைந்ததும், புகார்கள் தூசு தட்டப்பட்டன. மேற்கொண்டு ஆதாரங்கள் தேவை என்பதால் நேரில் சென்று ஆவணங்களை அள்ளியிருக்கிறோம். கல்வியியல் துறையில் பணியாற்றும் ஒரு பெண், வொக்கேஷனல் பிரிவில் பணியாற்றும் 'ராஜ' நபர் உட்பட 5 பேரிடம் விசாரணை நடத்தியிருக்கிறோம். விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது" என்றார்கள்.

முன்னாள் துணை வேந்தர் பாஸ்கரன்
முன்னாள் துணை வேந்தர் பாஸ்கரன்

குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் கேட்க முன்னாள் துணை வேந்தர் பாஸ்கரனைத் தொடர்புகொண்டோம். ``நான் துணை வேந்தராக இருந்தபோதுதான் பல்கலைக்கழக சிஸ்டத்தையே சீர்படுத்தினேன். ஒரு புத்தகம் அச்சடிக்க வேண்டுமென்றால் துறைத் தலைவரிடமும், இதற்காக அமைக்கப்பட்டிருக்கும் கமிட்டியிடமும் அனுமதி பெற வேண்டும். நான் பதவியேற்பதற்கு முன்புவரை தனியார் அச்சகத்தில்தான் அச்சடித்துக் கொண்டிருந்தனர். நான் வந்த பின்னர், கொட்டேஷன் பெற்று விலையை ஆராய்ந்து, மூன்று அரசு கூட்டுறவு அச்சகங்களுக்கு அச்சடிக்கக் கொடுத்தேன்.

எனது நிர்வாகத்தின்போது, பலகோடிகளை மிச்சம் செய்திருக்கிறேன். அண்ணாமலை பல்கலைக்கழகத்திலிருந்து பேராசிரியர்கள், உதவிப் பேராசிரியர்கள் தகுதியின்றி நியமிக்கப்பட்டிருந்தனர். அதை கேன்சல் செய்து அண்ணாமலை பல்கலைக்கழகத்துக்கே அவர்களை திருப்பியனுப்பினேன். இப்போது அல்ல, நான் பதவியில் இருக்கும்போதிருந்தே என் மீது புகார் சொல்லிக்கொண்டே இருந்தனர். அப்போதே லஞ்ச ஒழிப்புத்துறை ஆராய்ந்து எந்தத் தவறுமே இல்லை என்று சொல்லிவிட்டனர். ஆடிட்டிங்கிலும் என்னைப் பாராட்டவே செய்தனர். எல்லாமே காழ்ப்புணர்ச்சிக் காரணமாக, என் பெயரைக் கெடுக்க வேண்டும் என்பதற்காகச் சொல்லப்படும் குற்றச்சாட்டுகள்" என்றார்.

பார்த்தசாரதி, துணை வேந்தர்
பார்த்தசாரதி, துணை வேந்தர்

தற்போதைய துணை வேந்தர் பார்த்தசாரதியிடம் இது தொடர்பாகப் பேசியபோது, ``நான் துணை வேந்தராகி இரண்டே கால் ஆண்டுகள் ஆகிறது. வெளிப்படையாகச் செயலாற்றி வருகிறேன். எனது காலகட்டத்தில் ஏதாவது நடந்திருந்தால் கேளுங்கள் அதுபற்றி விளக்குகிறேன். எனக்கு முந்தைய நிர்வாகத்தில் நடைபெற்றது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடைபெற்று வருகிறது. லஞ்ச ஒழிப்புத்துறை ஆவணங்களை அள்ளிக்கொண்டெல்லாம் செல்லவில்லை, பதிவாளர் மூலம் முறைப்படி கேட்டார்கள். நாங்களும் கொடுத்திருக்கிறோம். இதற்கு மேல் அதுபற்றி வெளிப்படையாகப் பேச முடியாது" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு