தமிழகத்துக்குத் தொழில் முதலீடுகளை ஈர்க்கும்விதமாக, நான்கு நாள்கள் பயணமாக துபாய் சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின், நேற்று மாலை துபாய் எக்ஸ்போ 2020 கண்காட்சியில் பங்கேற்றார். இந்திய அரங்கைப் பார்வையிட்ட அவர், அங்கு அமைக்கப்பட்டிருந்த தமிழ்நாடு அரங்கைத் திறந்துவைத்தார்.
இந்த அரங்கில் தொழில்துறை, மருத்துவம், சுற்றுலா, கலை, கலாசாரம், கைத்தறி, கைவினைப் பொருள்கள், தொழிற்பூங்காக்கள், உணவுப்பதப்படுத்துதல் போன்ற முக்கிய துறைகளில் தமிழகத்தின் சிறப்பை உலகுக்கு எடுத்துக்காட்டும் வகையில் தொடர்ச்சியாகக் காட்சிப் படங்கள் திரையிடப்படுகின்றன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
மேலும், அரங்கின் முகப்பில் ‘மேட் இன் தமிழ்நாடு’ எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
தமிழ்நாடு அரங்கை முதல்வர் திறந்துவைத்து, கலை நிகழ்ச்சிகளைப் பார்வையிட்டு, துபாய் வாழ் தமிழர்களிடையே உரையாற்றினார். அப்போது அவர், ``தமிழ்நாட்டின் பெருமைகளை உலகுக்குப் பறைசாற்றும் வகையில் அரங்கு அமைக்கப்பட்டுள்ளது” என்றார். மேலும் இது தொடர்பாக ட்விட்டரில், ``துபாய் கண்காட்சியில் தமிழ்நாடு அரங்கைத் திறந்துவைக்கச் சென்றேன். திரளாகக் குழுமியிருந்த அயலகத் தமிழ் உறவுகள் அளித்த உற்சாக வரவேற்பில் ஒரு நொடி வெளிநாட்டில் இருப்பதே மறந்துபோனது!” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
முன்னதாக, முதல்வர் ஸ்டாலின் துபாய் பன்னாட்டு நிதி மையத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தின் பொருளாதாரத்துறை அமைச்சர் அப்துல்லா பின் டூக் அல் மர்ரி அவர்களையும், ஐக்கிய அரபு அமீரகத்தின் வெளிநாட்டு வர்த்தகத்துறை அமைச்சர் டாக்டர் தானி பின் அகமது அல் சியோதி அவர்களையும் சந்தித்து, பல்வேறு துறைகளில் தமிழகத்தில் முதலீடுகள் மேற்கொள்வது குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.
இந்தச் சந்திப்புக்குப் பின்னர் அமீரகப் பயணம் குறித்து ட்வீட் செய்திருந்த ஸ்டாலின், `` "நம்பர் 1 தமிழ்நாடு' என்ற நிலையை அடைய அமீரகப் பயணம் பயனுள்ளதாக அமையும் என்ற நம்பிக்கை ஐக்கிய அரபு அமீரகத்தின் பொருளாதாரத்துறை அமைச்சர் மற்றும் அயலக வர்த்தகத் துறையின் இணை அமைச்சருடனான சந்திப்பில் வலுப்பெற்றது. தமிழக-அமீரக உறவைப்போல வலுவானதாகச் சந்திப்பு அமைந்தது” என்றார்.
தொடர்ந்து, இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் அழைப்பின் பெயரில் துபாயிலுள்ள அவரின் ஸ்டூடியோவுக்குத் தன் குடும்பத்தினருடன் சென்றார் முதல்வர் ஸ்டாலின். அங்கு ரஹ்மான், தான் தயாரித்துள்ள 'மூப்பில்லா தமிழே தாயே' ஆல்பத்தை முதல்வருக்குக் காண்பித்தார். அப்போது, ``தமிழுக்கும் இசைக்கும் உலகில் எல்லை இல்லை” என்றார் ஸ்டாலின்.
தொடர்ந்து, துபாயிலுள்ள உலகிலேயே அதிக உயரமான கட்டடமான புர்ஜ் கலீஃபா கோபுரத்தின் மீது தமிழ்நாட்டின் வரலாறு, பண்பாடு, செம்மொழி, தமிழ்நாட்டின் சமீபத்திய அகழ்வாராய்ச்சிகள் பற்றிய அழகிய காட்சிப் படம் ஒளிபரப்பப்பட்டது. அதை முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டார்.
இது குறித்து ஸ்டாலின், ``3,200 ஆண்டுகள் தொன்மையுடைய நமது வரலாற்றின் பெருமை வாய்ந்த கீழடி & பொருநை ஆற்றங்கரை நாகரிகங்களின் சிறப்பை விளக்கும் காணொலி, உலகின் உயரமான கட்டடமான புர்ஜ் கலீஃபாவில் ஒளிபரப்பப்பட்டது. குழுமியிருந்த உலக மக்கள் அனைவரும் கண்டு வியந்தனர். இந்திய வரலாற்றைத் தெற்கிலிருந்து எழுதுவோம்!” என்றார்.