Published:Updated:

புதுச்சேரி அரசியலைக் கலக்கும் காங்கிரஸ் - பா.ஜ.க எம்.எல்.ஏ-க்கள் புகைப்படம்! - பின்னணி என்ன?

காங்கிரஸ் - பா.ஜ.க எம்.எல்.ஏ-க்கள் புகைப்படம்!
காங்கிரஸ் - பா.ஜ.க எம்.எல்.ஏ-க்கள் புகைப்படம்!

புதுச்சேரியில் ஆளும்கட்சியான காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களும், பா.ஜ.க-வின் நியமன எம்.எல்.ஏ-க்களும் ஒரே அறையில், ஒன்றாக அமர்ந்து உணவருந்தும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.

புதுச்சேரியில் 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க-வுடன் கூட்டணிவைத்து ஆட்சியைப் பிடித்தது காங்கிரஸ் கட்சி. தொடர்ந்து தேர்தலைச் சந்திக்காத நாராயணசாமியை முதல்வராக்கியது காங்கிரஸ் கட்சியின் தலைமை. அதே வேகத்தில் புதுச்சேரியின் துணைநிலை ஆளுநராக  கிரண் பேடியை நியமித்து, நாராயணசாமி தலைமையிலான ஆட்சிக்கு `செக்’ வைத்தது மத்திய பா.ஜ.க அரசு.

கிரண் பேடி - நாராயணசாமி
கிரண் பேடி - நாராயணசாமி

கிரண் பேடியும், மாநில அரசுக்கு பல்வேறு நெருக்கடிகளை ஏற்படுத்தினார். அப்போதிலிருந்து `யாருக்கு அதிகாரம்?’ என்ற விவகாரத்தில் ஆளுநர் மாளிகைக்கும், அமைச்சரவைக்கும் மோதல் நீடித்துவருகிறது. இதற்கிடையில் ஆட்சியில் அமர்ந்ததும் நிலவிய உட்கட்சிப் பூசலால், மூன்று நியமன எம்.எல்.ஏ-க்களை நியமிக்கும் விவகாரத்தை தாமதமாக்கினார் முதல்வர் நாராயணசாமி.

ஒருகட்டத்தில் நியமன எம்.எல்.ஏ-க்களை நியமிக்கும் விவகாரத்தை நாராயணசாமி கையிலெடுத்தபோது, மாநில அரசின் பரிந்துரை இல்லாமல் புதுச்சேரியைச் சேர்ந்த மூன்று பா.ஜ.க நிர்வாகிகளை எம்.எல்.ஏ-க்களாக நியமித்து உத்தரவிட்டது மத்திய உள்துறை அமைச்சகம். அவர்களுக்கு இரவோடு இரவாக பதவிப் பிரமாணம் செய்துவைத்து அதிர்ச்சி கொடுத்தார் கிரண் பேடி. அன்று முதல் கிரண் பேடிக்கு நிகராக அந்த மூன்று எம்.எல்.ஏ-க்களும் சட்டப்பேரவைக்குள்ளேயே ஆளும் காங்கிரஸ் கட்சியைக் கடுமையாக விமர்சித்துவருகின்றனர்.

பா.ஜ.க நியமன எம்.எல்.ஏ-க்கள்
பா.ஜ.க நியமன எம்.எல்.ஏ-க்கள்

சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் நான்கு மாதங்களே இருக்கும் நிலையில் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தது காங்கிரஸ் கட்சி. உடனே ஆளுநர் மாளிகை இருக்கும் பகுதியில் 144 தடையுத்தரவைப் பிறப்பித்து உத்தரவிட்டார் மாவட்ட ஆட்சியர் பூர்வா கார்க். அதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதுச்சேரியில் துணை ராணுவம் குவிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல நாராயணசாமியின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என்று பா.ஜ.க-வும் அறிவித்திருப்பதால் புதுச்சேரியில் பதற்றமான சூழல் நிலவிவருகிறது.

`புதுச்சேரி யூனியன் பிரதேசமாகவே தொடரும்!' - மத்திய உள்துறை இணை அமைச்சர் கிஷன் ரெட்டி

இந்தச் சூழலில்தான் சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ், அரசு கொறடா அனந்தராமன், காங்கிரஸ் எம்.எல்.ஏ ஜான்குமார், பா.ஜ.க-வின் நியமன எம்.எல்.ஏக்கள் சாமிநாதன் (புதுச்சேரி பா.ஜ.க தலைவர்), சங்கர் அனைவரும் ஒரே அறையில் அமர்ந்துகொண்டு உணவருந்தும் புகைப்படம் கடந்த இரண்டு நாள்களாக சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

வைரலாகும் புகைப்படம்
வைரலாகும் புகைப்படம்

அந்தப் படத்தின் பின்னணி தெரியாததால், பொதுமக்கள் மட்டுமல்லாமல் சில காங்கிரஸ் தொண்டர்களும் குழம்பிப்போய் கடுமையாக விமர்சித்துவருகின்றனர். ஏனாம் பிராந்தியத்தின் எம்.எல்.ஏ-வும், தற்போதைய அமைச்சருமான மல்லாடி கிருஷ்ணராவ் புதுச்சேரி சட்டப்பேரவை சார்பில் சிறந்த எம்.எல்.ஏ-வாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். அத்துடன் தொடர்ச்சியாக 25 ஆண்டுகள் எம்.எல்.ஏ-வாகப் பணியாற்றிய அவருக்கு இன்று மாலை ஏனாமில் பாராட்டுவிழாவை நடத்துகிறது புதுச்சேரி சட்டப்பேரவைச் செயலம். அதற்காக முதல்வர் நாராயணசாமி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ-க்களும், பா..ஜ.க-வின் நியமன எம்.எல்.ஏ-க்களும் ஏனாம் சென்றிருக்கின்றனர். அப்போது எடுக்கப்பட்ட அந்தப் புகைப்படம்தான் தற்போது வைரலாகிவருகிறது.

இது தொடர்பாக காங்கிரஸ் வட்டாரத்தில் விசாரித்தபோது, ``ராஜமுந்திரி விமான நிலையத்துக்கு அருகில் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணராவால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஓய்வறையில் அமர்ந்துகொண்டிருக்கும்போது எடுக்கப்பட்ட புகைப்படம் அது. தேவையில்லாமல் அதை அரசியல் ஆக்குகின்றனர்’’ என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு