Published:Updated:

`இந்தியாவில் வாழத் தகுதியற்றவர்; சிறையில் அடைக்கணும்!’ -சீமானுக்கு பா.ஜ.க கண்டனம்

`நம் நாட்டின் பிரதமரைக் கொன்றதைப் பெருமையோடு பேசும் சீமான், இந்தியாவில் வாழத் தகுதியற்றவர். அவரைச் சிறையில்தான் அடைக்க வேண்டும்' என்று பா.ஜ.க மூத்த தலைவர் இல.கணேசன் கூறினார்.

இல.கணேசன்
இல.கணேசன்

``காந்தியை கோட்சே சுட்டது சரிதான் என்று சிலர் பேசும்போது, ராஜீவ் காந்தியை நாங்கள்தான் கொன்றோம் என்பதும் சரிதான்’’ என விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரசாரத்தில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசிய கருத்துகள் பெரும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. 

சீமான்
சீமான்

அரசியல் தலைவர்கள் பலர் சீமானுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளனர். பல்வேறு காவல் நிலையங்களில் காங்கிரஸ் கட்சியினர் சீமானைக் கைதுசெய்யக் கோரி புகார் அளித்துவருகிறார்கள். வேலூர் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களிலும் புகார் அளித்துள்ளனர்.

`பேச்சைத் திரும்பப் பெறப்போவதில்லை!'- கடுகடுக்கும் சீமான்; கொந்தளிக்கும் காங்கிரஸ்

புகாரில், ''சீமான் வன்முறையைத் தூண்டுகிறார். ராஜீவ் காந்தியைக் கொன்றதாக அவரே வாக்குமூலம் கொடுத்திருக்கிறார். சட்டத்தின் மீதான நம்பிக்கையையும், மாண்பையும் சீர்குலைக்கிறார். தேச விரோத சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து சீமானை உடனே கைதுசெய்ய வேண்டும்’’ என்று கூறியுள்ளனர். 

சீமானின் உருவபொம்மையைத் தீயிட்டு கொளுத்திய காங்கிரஸார்
சீமானின் உருவபொம்மையைத் தீயிட்டு கொளுத்திய காங்கிரஸார்

இந்த நிலையில், ராணிப்பேட்டை முத்துக் கடையில் சீமானின் உருவபொம்மையைத் தீயிட்டுக் கொளுத்திய காங்கிரஸார் கைதாகினர். இதனிடையே, மகாத்மா காந்தியின் பிறந்தநாள் விழாவையொட்டி, குடியாத்தத்தில் நடைபெற்ற பாத யாத்திரை நிகழ்ச்சியில், பா.ஜ.க மூத்த தலைவர் இல.கணேசன் கலந்துகொண்டார்.

`சீமான் எச்சரிக்கையோடு பேச வேண்டும்!' - திருமாவளவன்

அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த இல.கணேசன், ``அரசியல் வேறு; தேசபக்தி வேறு. அந்நிய நாட்டைச் சேர்ந்த சக்தி, நம் நாட்டின் பிரதமரைக் கொன்றனர். நீதிமன்றம்தான் விசாரித்து அந்த குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்கியது. ராஜீவ் கொலையைப் பெருமையோடு `ஆமாம்’ என்றுகூறும் சீமான், இந்த தேசத்தில் வாழத் தகுதியற்றவர். 

பாத யாத்திரை நிகழ்ச்சியில் இல.கணேசன்
பாத யாத்திரை நிகழ்ச்சியில் இல.கணேசன்

சிறைச்சாலையில்தான் அவரை அடைக்க வேண்டும். டிசம்பர் மாதத்தில், தமிழக பா.ஜ.க தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெறும். அதுவரை அப்பதவி காலியாக இருப்பதால், எங்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை. ஜனவரி முதல் தலைவருடன் தமிழக பா.ஜ.க சிறப்பாகச் செயல்படும்’’ என்றார்.