
- பா.ஜ.க-வை ரவுண்டு கட்டும் காங்... சீனியர்கள்!
பா.ஜ.க-வும் காங்கிரஸும் மிகத் தீவிரமாக மோதிக்கொள்ளும் பிரச்னைகளில் ஒன்றாக இந்திய - சீன எல்லை மோதல் விவகாரம் மாறியிருக்கிறது. இரு நாட்டு ராணுவ வீரர்களுக்குமிடையே ‘மோதல்’ நிகழ்ந்து இரண்டு வாரங்களைத் தாண்டிய பிறகும், அந்த விவகாரம் குறித்து பிரதமர் வாய் திறக்காதது, இந்திய அரசியலில் புயலாக வீசிவருகிறது.
அருணாச்சலப் பிரதேச எல்லையில், தவாங் செக்டார் பகுதியில் கடந்த டிசம்பர் 9-ம் தேதி இந்திய-சீன ராணுவ வீரர்களிடையே மோதல் சம்பவம் நிகழ்ந்தது. அதில், இரு நாட்டு ராணுவ வீரர்களும் காயமடைந்தனர். நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் தொடங்கியதற்கு இரண்டு நாள்களுக்குப் பிறகு இந்த மோதல் சம்பவம் நிகழ்ந்திருக்கிறது.
மோதல் பற்றிய தகவல்களை நாடாளுமன்றத்தில் அரசுத் தரப்பு உடனடியாகத் தெரிவிக்கவில்லை. மூன்று நாள்கள் கடந்து நாளிதழில் செய்தி வெளியான பிறகே, இந்த விவகாரம் வெளியுலகுக்குத் தெரியவந்தது.

‘சீன எல்லை மோதல் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும்... அரசுத் தரப்பு விளக்கம் அளிக்க வேண்டும்’ என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டன. இதைத் தொடர்ந்து, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நாடாளுமன்றத்தில் விளக்கம் அளித்தார். அதை ஏற்காத எதிர்க்கட்சிகள், ‘பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும்’ என்று கோரியதுடன், இரு அவைகளிலிருந்தும் வெளிநடப்பு செய்தன. ஆனால், எல்லையில் நடந்த மோதல் குறித்து ஒரு வார்த்தைகூட பிரதமர் வாயிலிருந்து வரவில்லை. காங்கிரஸாரும் இந்த விவகாரத்தை லேசில் விடுவதாக இல்லை.
மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, ப.சிதம்பரம், ஜெய்ராம் ரமேஷ் என மூத்த காங்கிரஸ் தலைவர்கள் பா.ஜ.க-வுக்கு எதிராக எல்லை மோதல் விவகாரத்தை தீவிரமாகக் கையிலெடுத்திருக்கிறார்கள். பாரத் ஜோடோ யாத்திரையின் 100-வது நாள் விழாவையொட்டி ராஜஸ்தானில் நடைபெற்ற நிகழ்ச்சியில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசினார். அப்போது, “அவர்கள் (பா.ஜ.க அரசு) சிங்கம்போலப் பேசுகிறார்கள். ஆனால், எலியைப்போல செயல்படுகிறார்கள்” என்று விமர்சித்தார். அவரது பேச்சு நாடாளுமன்றத்தில் எதிரொலித்தது. தங்கள் மனதை கார்கே புண்படுத்திவிட்டதாக ஆளும் தரப்பினர் கொந்தளித்தனர். கார்கே இதற்கு மன்னிப்புக் கேட்க வேண்டுமென்று மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் வலியுறுத்தினார். அதற்கு, “சுதந்திரப் போராட்டத்தின்போது மன்னிப்புக் கேட்டவர்கள், சுதந்திரத்துக்காகப் போராடியவர்களை மன்னிப்புக் கேட்கச் சொல்கிறார்கள்” என்று பதில் சொல்லி, பா.ஜ.க-வினரைப் பந்தாடியிருக்கிறார் கார்கே.

மாநிலங்களவையில் பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், “பாலி தீவில் நடைபெற்ற ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் உரையாடிய வீடியோவைப் பார்த்தேன். அப்போது, இந்திய-சீன எல்லை நிலவரம் குறித்துப் பேசப்பட்டதா?” என்று கேள்வி எழுப்பினார். அதற்கு ஆளும் தரப்பிலிருந்து பதில் இல்லை. மேலும், சீன எல்லை விவகாரம் குறித்து ராஜஸ்தானில் பேசிய ராகுல் காந்தி, “லடாக், அருணாச்சலப் பிரதேசத்தில் சீனா போருக்குத் தயாராகிவருகிறது. ஆனால், இந்திய அரசு தூங்கிக்கொண்டிருக்கிறது” என்று சாடினார்.

ராகுல் காந்தியின் பேச்சுக்கு மத்திய அமைச்சர்கள் பலர் வரிசைகட்டி பதிலடி கொடுக்க ஆரம்பித்தனர். மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜுஜு, “நம்முடைய ராணுவத்தை ராகுல் அவமரியாதை செய்கிறார்” என்றார். “ராகுலின் கருத்து மட்டரகமானது” என்றார் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங். “ராகுல் காந்தி அச்சத்தைப் பரப்புகிறார்” என்றார் மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர்.
வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், “சீன விவகாரத்தில் அரசு முனைப்புடன் செயல்பட்டுவருகிறது. ஆகவே, ராகுலின் கருத்து நம்பத்தகுந்ததாக இல்லை” என்றதுடன், “சீனாவுடனான நமது உறவுகள் இயல்பாக இல்லை” என்றும் கருத்து தெரிவித்தார். அப்படியென்றால், ‘பாகிஸ்தான் தூதரிடம் நடந்து கொள்வதைப்போல, சீனத் தூதரை அழைத்து, அவரிடம் மத்திய அரசு அறிக்கை அளிக்காதது ஏன்?’ என்று காங்கிரஸ் சீனியர்கள் எழுப்பிய கேள்விக்கு ஆளும் தரப்பிடமிருந்து எந்த பதிலும் இல்லை. ஆகையால், இந்த விவகாரம் முடிவுக்கு வராமல் சூறாவளியாகச் சுழன்றடிக்கிறது. ‘தேசத்தின் பாதுகாப்பு தொடர்பான இந்தப் பிரச்னையில், பிரதமர் மோடி ஏன் மௌனத்தைக் கலைக்கவில்லை?’ என்று அரசியல் நோக்கர்களே விமர்சனங்களை முன்வைக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.
எதற்கெடுத்தாலும் “எல்லையில் ராணுவ வீரர்கள்...” என்று பேசிவந்தவர்கள் இப்போது ஏன் வாய்மூடி மௌனிகளாக இருக்கிறார்கள்!? என்பதே மில்லியன் டாலர் கேள்வி.