Published:Updated:

`அவங்க வீடு வேண்டாங்கிறாங்க; நாங்க என்ன பண்றது!' - தி.மலை கலெக்டருக்கு எதிராக அரசு ஊழியர்கள்

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் கந்தசாமியின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் மாவட்டம் முழுவதும் இன்று கறுப்பு பேட்ஜ் அணிந்து பணியில் ஈடுபட்டனர்.

கறுப்பு பேட்ஜ் அணிந்திருக்கும் அலுவலர்கள்
கறுப்பு பேட்ஜ் அணிந்திருக்கும் அலுவலர்கள்

பிரதம மந்திரி வீடு வழங்கும் திட்டத்தில் (PMAY) திருவண்ணாமலை வட்டார வளர்ச்சித்துறை அதிகாரிகள் பணிகளை முறையாகச் செயல்படுத்தவில்லை என்றும் 21-ம் தேதி திங்கள்கிழமை மாலைக்குள் பணியை முடித்துவிட வேண்டும் என்றும் அப்படி பணியை முடிக்காதவர்களை சஸ்பெண்டு செய்துவிடுவேன் என்றும் கலெக்டர் கந்தசாமி வட்டார வளர்ச்சித்துறை அதிகாரிகளையும் பஞ்சாயத்துச் செயலாளர்களையும் எச்சரித்து வாட்ஸ் அப்பில் ஆடியோ தகவல் அனுப்பினார். இந்த ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியது. கலெக்டரின் இந்தச் செயல்பாட்டுக்கு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள், பஞ்சாயத்து செயலாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்து மாவட்டம் முழுவதும் உள்ள 18 வட்டார வளர்ச்சி அலுவலகங்களிலும் கறுப்பு பேட்ஜ் அணிந்து பணியில் ஈடுபட்டனர்.

கறுப்பு பேட்ஜ் அணிந்திருக்கும் அலுவலர்கள்
கறுப்பு பேட்ஜ் அணிந்திருக்கும் அலுவலர்கள்

இதுகுறித்து வட்டார வளர்ச்சித்துறை அலுவலர்கள் கூறுகையில், ``நாங்களென்ன வேலை செய்யாமலா இருக்கிறோம். எவ்வளவு வேலைகள் பெண்டிங்கில் இருக்கின்றன தெரியுமா? மாவட்டத்தில் இருக்கிற 18 அலுவலகங்களிலும் ஆள் பற்றாக்குறை இருக்கிறது. அதை நிரப்ப மாட்டேன்னு இருக்கிறார்கள். பிரதம மந்திரி வீடு திட்டத்தில், பயனாளர்கள் வீடு வேண்டாம் என்று சொல்கிறார்கள். ஏன் என்று கேட்டால் '1.7 லட்சம் ரூபாயை வைத்து என்ன பண்றது `மணல்’ கூட வாங்க முடியாது' என்று சொல்லி, வீடே வேண்டாம் என்று சொல்கிறார்கள். பிரதம மந்திரி வீடு திட்டம் என்பதே வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள ஏழை மக்களுக்குத்தான். அவர்களே பணம் இல்லாம கஷ்டப்பட்டுகிட்டு இருக்காங்க.

`பொறுமையை இழந்துட்டேன்;திங்கள்கிழமை என் யுத்தம் ஸ்டார்ட்!'-அதிகாரிகளை தெறிக்கவிடும் தி.மலை கலெக்டர்

ஒரு வீடு கட்ட வேண்டுமென்றால், இப்போது இருக்கும் விலைவாசி உயர்வுக்குக் குறைந்தபட்சம் 5 லட்சம் ரூபாயாவது தேவைப்படும். அரசு கொடுக்கும் 1.7 லட்சம் ரூபாயை வைத்து, அவர்களால் எப்படி வீடு கட்டிவிட முடியும். நாங்களும் பலமுறை ஆய்வுக் கூட்டத்தில் சொல்லிவிட்டோம். இந்தத் திட்டத்தில் மேலும் 3 லட்சம் ரூபாய் உயர்த்தி கொடுங்கள் என்று. இதை எந்த உயர் அதிகாரிகளும் காதில் போட்டுக்கொள்ளவில்லை. இந்த திட்டத்தில் இதுபோன்று பல பிரச்னைகள் இருக்கிறது. இதை முழுமையாகப் புரிந்துகொள்ளாமல் கலெக்டர், ஒட்டுமொத்த அதிகாரிகள் மீதும் கோவப்படுவது எந்த வகையில் நியாயம். அதனால்தான் இந்தக் கருப்பு பேட்ஜ் எதிர்ப்பு" என்றனர்.

கருப்பு பேட்ஜ் அணிந்திருக்கும் அலுவலர்கள்
கருப்பு பேட்ஜ் அணிந்திருக்கும் அலுவலர்கள்

மேலும் அவர்களிடம், ``அரசு கொடுப்பதே 1.7 லட்சம் ரூபாய்தான். அதிலேயே, ஒரு வீட்டுக்கு ரூ.10,000 முதல் ரூ.20,000 வரை லஞ்சம் வாங்கினால் மக்கள் எப்படி வீடு கட்டுவார்கள் என்று கேட்டோம். ``சிலர் லஞ்சம் வாங்குவது உண்மைதான். இதை மறுக்கவில்லை. சில ஊழல் எலிகளை விரட்டியடிக்கத்தான் வேண்டும். லஞ்சம் வாங்குபவர்களைக் கண்டறிந்து, அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதை கலெக்டர் உடனே செய்ய வேண்டும். லஞ்சம் வாங்கும் ஊழியர்களுக்குத் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் ஒருபோதும் துணை நிற்காது" என்றனர்.

இது தொடர்பாக கலெக்டர் கந்தசாமியிடம் கேட்டோம். ``அலுவலக பணியில் பிசியாக இருக்கிறேன். பிறகு அழைக்கிறேன்" என்று கூறிவிட்டு இணைப்பை துண்டித்துவிட்டார்.