Published:Updated:

பி.எஸ்.என்.எல்: துரோகத்தால் பலிகொடுக்கப்பட்ட துயர வரலாறு!

பி.எஸ்.என்.எல்
பிரீமியம் ஸ்டோரி
News
பி.எஸ்.என்.எல்

ஜியோ நிறுவனத்தின் விளம்பரத்தில் தோன்றிய பிரதமர், பி.எஸ்.என்.எல் மேம்பாட்டுக்காக எதுவும் பேச மறுக்கிறார்.

ஒரு மரம் வீழ்வதை மட்டுமே காண்கிறோம். அதன் வேர்களில் விஷம் வைத்தவர்களை நாமறியோம். பி.எஸ்.என்.எல் ஊழியர்கள் 78,569 பேர், 2020 - ஜனவரி 31 அன்று ஒருசேர விருப்ப ஓய்வில் வெளித்தள்ளப்பட்ட விஷயம்கூட இவ்வாறாகவே அணுகப்படுகிறது. தாராளமயம், தனியார்மயம், உலகமயம் என்பனவற்றால் 1990-களில் பாய்ச்சப்பட்ட விஷம் உள்ளிருந்து அரித்து, இப்போது அதை வீழ்த்தத் தொடங்கியிருக்கிறது. ஆம், இவ்வளவு பெரும் எண்ணிக்கையிலான ஊழியர்களின் வெளியேற்றமானது, அந்த வீழ்ச்சியின் தொடக்கக்காட்சிதான். முழுமையான வீழ்ச்சியின் துயரக்காட்சிகளைக் காண்பதற்கு, நாம் இன்னும் சில காலம் காத்திருக்கவேண்டும்.

பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் இன்றைய நிலைக்கு அதன் ஊழியர்களை மட்டும் பொறுப்பாக்கி நகர்வது எளிய வழி. ஆனால், அது உண்மையான காரணமல்ல. நாட்டின் பாதுகாப்புக் காரணங்களை முன்னிட்டு - லாப, நட்டக் கணக்குக்குள் வைத்துப் பார்க்கக் கூடாத சேவையாகவும் - அரசின் ஏகபோகத்தில் இருந்துவந்த தகவல்தொடர்புத் துறையில் தனியாரை அனுமதித்ததிலிருந்து இதன் வீழ்ச்சி தொடங்குகிறது. பன்னாட்டு நிதி நிறுவனங்களிடம் கடனுக்காகக் கையேந்திய நமது அரசுகள், அந்த நிறுவனங்களின் கட்டளைக்குப் பணிந்து இதுபோன்ற சேவைத்துறைகளை தனியாருக்குத் திறந்துவிடும் நிலை உருவானது.

பி.எஸ்.என்.எல்: துரோகத்தால் பலிகொடுக்கப்பட்ட துயர வரலாறு!

‘சேமநல அரசு’ என்கிற பாத்திரத்திலிருந்து விலகி, தனியார் தொழில் நடத்துவதற்கு உகந்த சட்டங்களை நிறைவேற்றும் போக்கு, 1980-களின் நடுவே தொடங்கியது. சேவைத்துறையாக எதுவும் வேண்டாம்; நஷ்டத்தில் இயங்குவதை மூடிவிடலாம். லாபத்தில் இயங்குவதைத் தனியாருக்கு விற்றுவிடலாம் என்ற நிலை உருவானது. புதிய பொருளாதார கொள்கைக்குப் பிறகு ‘தனியார்’ என்ற சொல் அந்நிய கார்ப்பரேட் நிறுவனங்களையே குறித்தது. ஆனால், அதற்கோர் உள்நாட்டு முகத்தைக் கொடுப்பதற்காக இளைய பங்காளிகளாகச் சேர்த்துக்கொள்ளப்பட்ட இந்திய நிறுவனங்களில் சில, இன்று பெருநிறுவனங்களாக வளர்ந்துள்ளன.

துண்டாடிய தனியார்மயம்!

பெரும்சொத்துகளையும் வாடிக்கையாளர்களை யும் கொண்ட இந்தியத் தொலைத்தொடர்புத் துறையை விற்பதற்கும் வாங்குவதற்கும் எளிதாக, துண்டுத்துண்டாக்கும் முயற்சிகள் பல வடிவங்களில் நடைபெற்றன. வருமானம் ஈட்டித்தரக்கூடிய டெல்லியையும் மும்பையையும் பிரித்தெடுத்து தனித்தனி மகாநகர் நிகம் டெலிகாம் லிமிடெட் உருவாக்கப்பட்டன. நாடு முழுவதும் உள்ள வருவாய் ஈட்டும் பகுதிகளைப் பிரித்து தனியாரிடம் ஒப்படைக்கும் திட்டத்தின் முன்னோட்டமாக 1995-ம் ஆண்டில் தர்மபுரி, சேலம், ஈரோடு, கோவை ஆகிய மாவட்டங்கள் யு.எஸ்.வெஸ்ட் - பி.பி.எல் நிறுவனத்துக்குக் கொடுக்கப்பட்டன. ‘சேவ் டெலிகாம் சேவ் இந்தியா’ என்ற முழக்கத்துடன் தொழிற் சங்கங்கள் அன்று போராடித் தடுத்திருக்கா விட்டால் தொலைத் தொடர்புத் துறை என்பதே இப்போது இருந்திருக்காது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

ஆனாலும் விரிவாக்கம், துரிதம், நவீனமாக்கல் என்கிற அலங்காரங்களுடன் துறையின் பல்வேறு பணிகள் தனியாரிடம் கொடுக்கப்பட்டன. இந்த வேலை ஒப்பந்தங்களைப் பெறுவதில் கையூட்டும், ஊழலும், சாய்மானங்களும் பெரும்பங்காற்றின. பெருநகர சேவைக்கு எம்.டி.என்.எல், இணைய சேவைக்கு வி.எஸ்.என்.எல், நாட்டின் மிஞ்சிய பகுதிகளில் சேவைகளை வழங்கிட பி.எஸ்.என்.எல் என அடுத்தடுத்து வந்த துண்டாடல் இன்னும் ஓயவில்லை.

பி.எஸ்.என்.எல்
பி.எஸ்.என்.எல்

அன்று தொடங்கப்பட்ட பேஜர், மொபைல் போன்ற சேவைகளில் தனியார் நிறுவனங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டன. இந்தப் புறக்கணிப்புக்கு எதிராக நீதிமன்றம் சென்றுதான் அரசு நிறுவனங்களால் இந்தச் சேவைக்குள் வர முடிந்தது. இந்தப் பாரபட்சம் இன்றளவும் பி.எஸ்.என்.எல்-க்கு 4ஜி ஒதுக்கீடு மறுப்பாக நீடிக்கிறது.

தனியாருக்குத் தூதரான பிரதமர்!

தனியார் ஏகபோகத்தில் இருந்த மொபைல் சேவைக்குள் பி.எஸ்.என்.எல் நுழைந்தது, வாடிக்கையாளர்களுக்கு பெரும் ஆதாயங்களைக் கொண்டுவந்தது. பி.எஸ்.என்.எல்-க்கு இணையாகவோ குறைவாகவோ கட்டணம் என்ற நிலைக்கு இறங்கவேண்டிய நிர்பந்தம் தனியார் நிறுவனங் களுக்கு உருவானது. வாடிக்கையாளர்களைத் தக்கவைக்கவும் ஈர்க்கவும் வெறும் கட்டணக் குறைப்பு போதாது என, அவை தொழில்நுட்பத்தை தொடர்ந்து மேம்படுத்திவருகின்றன. அப்படியான மேம்பட்ட தொழில்நுட்பத்துக்குள் செல்வதற்கு பி.எஸ்.என்.எல் நிறுவனத்தை அரசு அனுமதிக்கவில்லை.

ஜியோ நிறுவனத்தின் விளம்பரத்தில் தோன்றிய பிரதமர், பி.எஸ்.என்.எல் மேம்பாட்டுக்காக எதுவும் பேச மறுக்கிறார். இந்த மாதிரியான சில தனியார் நிறுவனங்களின் நலனுக்காக பி.எஸ்.என்.எல் சிறுகச் சிறுக பலிகொடுக்கப்படும் வஞ்சகத்தின் ஒருகட்டம்தான், 78,569 ஊழியர்களின் வெளியேற்றம்.

பெரும் மனித உழைப்பு தேவைப்பட்ட காலத்தில் பணியமர்த்தப்பட்ட ஊழியர்களில் கணிசமானோர், பின்னாளில் தொழில் நுட்பங்களால் தேவையற்றவர்கள் ஆனார்கள். அப்போதும் பொருத்தமான வேறு பணிகளுக்காக அவர்கள் பயன்படுத்தப்பட்டனர். இவர்களில் பலரும் பணி ஓய்வு பெற்றுவந்த நிலையில் இந்த விருப்ப ஓய்வுத்திட்டம் வராமல் இருந்திருந்தாலும் இன்னும் சில ஆண்டுகளில் ஊழியர் எண்ணிக்கை தானாகவே இதே அளவுக்குக் குறைந்திருக்கும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அன்றாட செலவுக்கே திண்டாட்டம்!

கடந்த சில ஆண்டுகளாகவே விரிவாக்கம், தொழில்நுட்ப மேம்பாட்டுப் பணிகளுக்கான நிதியை ஒதுக்காத அரசு, நாளடைவில் அன்றாட நடைமுறைச் செலவுகளுக்கான நிதியையும் நிறுத்திக்கொண்டது. அலுவலகங்களுக்கும் செல்போன் டவர்களுக்கும் மின்கட்டணம் செலுத்தக்கூட முடியாமல் நிறுவனம் திண்டாடியது. எரிபொருள், வாகனப் பராமரிப்பு, ஊழியர் குடியிருப்புப் பராமரிப்பு என எல்லாம் நின்றுபோயின. காப்பீடு, கூட்டுறவுச் சங்கம், வங்கிக்கடன் ஆகியவற்றின் தவணைக்காக ஊழியர்களின் ஊதியத்தில் பிடித்தம் செய்த தொகைகளைக்கூட அந்த நிறுவனங்களுக்கு வழங்காமல் வேறு தேவைகளுக்கு முறைகேடாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டிய நிலைக்குள்ளானது நிறுவனம்.

நிதியின்மை உள்ளிட்ட குளறுபடிகளால் சேவையின் தரம் குறைந்துள்ளது. மக்களின் அதிருப்தி அதிகரித்துவருகிறது. காலாவதியாகிப் போன பழைய புதைவடக் கம்பிகளை, கருவிகளை வைத்துக்கொண்டு செலவின்றி பழுதுகளைச் சரிசெய்யச் சொல்வது, தரைவழி தொலைபேசி மற்றும் பிராட்பேண்ட் இணைப்பு களுக்கு நடைமுறை சாத்தியமற்ற இலக்குகளை நிர்ணயித்து நிர்பந்திப்பது எனக் கடுமையாகி வந்த பணிச்சூழலின் அழுத்தம், இவ்வளவு பேர் விருப்பு ஓய்வு கொடுப்பதற்கான காரணங்களில் ஒன்று. பணப்பலன்கள் இரண்டாம்பட்சம்.

பத்து, இருபது ஆண்டுகளாகப் பணியாற்றிவரும் ஒப்பந்த ஊழியர்களுக்கு உரிய நாளில் ஊதியம் வழங்காதிருந்த பி.எஸ்.என்.எல், இப்போது பத்து மாதங்களாக முற்றிலுமாகவே ஊதியத்தை நிறுத்திவிட்டது. உழைத்தும் பலனின்றி வாடும் அவர்களது அவலத்தை மாற்ற இயலாத அவமானத்தில் குமையும் நிரந்தர ஊழியர்கள், தமக்கும் இந்த நிலை ஏற்படலாம் என அஞ்சியது உண்மையாகிப்போனது. இவர்களுக்கும் நாள்கணக்கில் தள்ளிப்போன ஊதியம் படிப்படியாக மாதக்கணக்கில் தள்ளிப்போனது. 2019, டிசம்பர் மற்றும் 2020, ஜனவரி மாதங்களில் விருப்பு ஓய்வில் வெளியேறியவர்கள் உள்ளிட்ட எவருக்கும் ஊதியம் இன்னும் வழங்கப்படவில்லை.

`பி.எஸ்.என்.எல் மூழ்கிக்கொண்டிருக்கும் கப்பல்’ என்கிற அச்சத்தை உருவாக்கிக்கொண்டே அதை 69,000 கோடி ரூபாயில் சீரமைக்கப் போவதாகச் சொன்னது அரசு. பி.எஸ்.என்.எல் சொத்துகளில் ஒரு பகுதியை விற்று 37,500 கோடி ரூபாய், உறுதிப்பத்திரங்களை விற்று 15,000 கோடி ரூபாய், அரசின் பங்களிப்பாக 30,000 கோடி ரூபாய் என இதற்கான நிதியைத் திரட்டப் போவதாகத் திட்டம். இந்தத் திட்டத்தின் ஓர் அம்சமே, 17,160 கோடி ரூபாய் செலவிலான ‘விருப்ப ஓய்வு 2019’.

வெளியேறும்படியான உளவியல் நெருக்கடியை உருவாக்கி, கட்டாய ஓய்வில் அனுப்புவதே விருப்ப ஓய்வின் உண்மையான பொருள். அதன்படி 50 வயதுக்கு மேற்பட்ட ஊழியர்களில் 78,569 பேர் விருப்ப ஓய்வு பெற்றுள்ளனர். இவர்களது பணியிடங்கள் திரும்ப நிரப்பப்பட மாட்டாது. எனவே, புதிய வேலை வாய்ப்புகள் உருவாகாது. 8,403 பேர் இந்த ஆண்டின் இறுதிக்குள் பணிமூப்பால் வெளியேறி விடுவார்கள். 66,814 பேர் மிஞ்சுவர். வெளியேறியவர்களைவிடவும் பணியில் நீடிப்பவர்களின் நிலை துன்பகரமானது. அவர்களது பணிச்சூழல் முற்றிலும் வேறுவிதமாக மாறப்போகிறது. அனுபவம்வாய்ந்த ஊழியர்களும் அதிகாரிகளும் வெளியேறிவிட்ட நிலையில் அவர்களது பணிகளையும் இவர்களே சேர்த்துச் செய்ய வேண்டியிருக்கும். இடம் மாறுதலும், பணிச்சுமையும், மனஅழுத்தமும் கூடும்.

ஆளில்லாத இடங்கள் இனங்காணப்பட்டு தனியார் முகமைகளிடம் விடப்பட்டுள்ளன. ஆனால், இவையெல்லாம் ஓர் இடைக்கால ஏற்பாடே! சேவையின் தரத்தை உயர்த்தப் போவதாகக் கூறிக்கொண்டு பல லட்சம் கோடி சொத்து உள்ள மக்கள் நிறுவனத்தை, கார்ப்பரேட்டுகளுக்கு சல்லிசான விலைக்குக் கொடுப்பதே அரசின் இறுதி நோக்கம். டாடாவுக்கு வி.எஸ்.என்.எல். விற்கப்பட்டதுபோல், பல விமானநிலையங்களும் துறைமுகங்களும் அதானிக்கு விடப்பட்டதுபோல், ஏர் இந்தியாவும் ஓ.என்.ஜி.சி-யும் ஆயுள் காப்பீட்டுக் கழகமும் விற்கப்படவிருப்பதுபோல் பி.எஸ்.என்.எல் நிறுவனமும் யாருக்கேனும் விற்கப்படும். ‘அரசை நடத்துவதற்கான வருவாயை ஈட்டுகின்ற இந்த மக்கள் சொத்துகளை கார்ப்பரேட்டுகளுக்கு விற்றுவிட்டு, அரசை எப்படி நடத்துவீர்கள் ஆட்சியாளர்களே?’ என்ற கேள்வியை எழுப்பாதவரை இந்த ஊதாரிகள் விதைத் தவசத்தை விற்று சூதாடுவார்கள்.