அரசியல்
அலசல்
Published:Updated:

சி.ஏ.ஜி அறிக்கை சொல்லும் கணக்கு! - இழப்பு... நஷ்டம்... தண்டம்... வீண் செலவு...

தமிழ்நாடு அரசு
பிரீமியம் ஸ்டோரி
News
தமிழ்நாடு அரசு

அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கு 2016-ம் ஆண்டில் சான்றிதழ்களை டிஜிட்டல்மயமாக வழங்குவதில் முறைகேடு செய்ததில் இழப்பு

*தமிழ்நாடு சட்டமன்றத்தில் அ.தி.மு.க-வின் ‘ஒற்றைத் தலைமை’ மல்லுக்கட்டு, ஆறுமுகசாமி, அருணா ஜெகதீசன் ஆணையங்கள் தாக்கலானது உள்ளிட்ட விவகாரங்களால், 19.10.2022 அன்று வெளியான ‘இந்திய கணக்காய்வு மற்றும் தணிக்கைத்துறை (சி.ஏ.ஜி)’ தலைவரின் அறிக்கை குறித்துப் பெரிய விவாதங்கள் எழாமல் போய்விட்டன. கடந்த 10 ஆண்டுக்கால அ.தி.மு.க ஆட்சியில் நடைபெற்ற முறைகேடுகள், அரசுக்கு ஏற்பட்ட இழப்புகள் குறித்த அந்த அறிக்கைகளின் மொத்தத் தொகையைக் கூட்டினால் தலையே சுற்றுகிறது. எனவே, சி.ஏ.ஜி அறிக்கையில் இடம்பெற்ற சில முக்கியமான விஷயங்கள் மட்டும் இங்கே...

* அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கு 2016-ம் ஆண்டில் சான்றிதழ்களை டிஜிட்டல்மயமாக வழங்குவதில் முறைகேடு செய்ததில் இழப்பு ரூ.11.41 கோடி.

* 17,15,441 மாணவர்களுக்கு மார்க் ஷீட் அச்சடிப்பதற்கு பதிலாக, 57 கோடி ரூபாய் செலவில் 1,63,30,000 வெற்றுச் சான்றிதழ்களை அச்சடித்த வகையில் ஏற்பட்ட வீண் செலவு ரூ.24.5 கோடி.

* மதுரை காமராசர் பல்கலைக்கழக தொலைதூரக்கல்விக்காக, டிஜிட்டல் பாடத்திட்டம் தயாரிக்க, தகுதியற்ற நிறுவனத்துக்கு டெண்டர் ஒதுக்கப்பட்டதால் அரசுக்கு ஏற்பட்ட நஷ்டம் ரூ.10.7 கோடி.

* கரூர், தேனி, திருவண்ணாமலை, திருவாரூர், விழுப்புரம் ஆகிய ஐந்து மாவட்டங்களில் அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் அடிப்படை வசதியின்றி விடுதிகள் கட்டியதில் தேவையற்ற செலவினம் ரூ.6.64 கோடி.

சி.ஏ.ஜி அறிக்கை சொல்லும் கணக்கு! - இழப்பு... நஷ்டம்... தண்டம்... வீண் செலவு...

* 131 அரசு மாதிரிப் பள்ளிகளில் பயிலும் 52,238 மாணவர்களுக்குப் பிரத்யேகச் சீருடை இருந்தும், 2020-21-ம் கல்வியாண்டில் அரசின் இலவசச் சீருடை வழங்கியதில் வீண் விரயம் ரூ.6.38 கோடி.

* மதுரையில் 2017-ல் கட்டப்பட்ட ஒருங்கிணைந்த விளையாட்டு அறிவியல் மையம் பயன்பாட்டுக்கு வராததால், மத்திய அரசு விளையாட்டு ஆணையத்துக்கு ஒதுக்கி, வங்கியில் முடங்கிக்கிடக்கும் தொகை ரூ.2.73 கோடி.

* ரேஷன் கடைகளில் எடை மெஷின்களை வருடாந்தர பராமரிப்பு செய்யாமலேயே ஒப்பந்த நிறுவனங்களுக்குக் கட்டணம் செலுத்திய தண்டச் செலவு ரூ.3.22 கோடி.

* கட்டுமானத் தொழிலாளர் நலவாரியத்துக்காக 2014 முதல் 2019 வரை ஒன்பது இடங்களில் கட்டப்பட்ட தங்குமிடங்களில், பயன்பாட்டுக்கு வராத இரண்டு கட்டடங்களால் ஏற்பட்ட பயனற்ற செலவு ரூ.31.66 கோடி.

* 2017-ல் தருமபுரி, திருவண்ணாமலை, வேலூர், விருதுநகர் மாவட்டங்களில் 49 குளங்களைப் புனரமைக்கும் திட்டப் பணிகள் சுணங்கியதால், மத்திய அரசிடமிருந்து வராமல் போன தொகை ரூ.29.95 கோடி.

* கன்னியாகுமரியில் ரூ.10 கோடி செலவில் கட்டப்பட்ட மீன் இறக்கும் தளத்தைக் காப்பீடு செய்யாமல் போனதால், ஒக்கி புயலால் அதில் ஏற்பட்ட சேதாரத்துக்கு ஆன மறுகட்டுமானக் கூடுதல் செலவு ரூ.3.15 கோடி.

* 2017-ல் காஞ்சிபுரம், பெரம்பலூர், திருப்பூர் அரசு மருத்துவமனைகளின் எம்.ஆர்.ஐ ஸ்கேனர்கள் அமைக்கத் திட்டமிட்டு, 2020 வரை இடவசதி, மின்வசதி அளிக்காமல் அதிகாரிகள் இழுத்தடித்ததால், (அந்தக் காலகட்டத்தில் ஏற்பட்ட விலை உயர்வால்) ஆன கூடுதல் செலவு ரூ.1.12 கோடி.

* திருத்திய நெல் சாகுபடி திட்டத்தின்கீழ், ஹெக்டேருக்கு 8 கிலோ நெல் வழங்கவேண்டிய நிலையில், வேலூர் விவசாயிகளுக்கு மட்டும் 50 கிலோ வரை நெல்லைக் கூடுதலாக வழங்கியதால் ஏற்பட்ட கொள்முதல் நஷ்டம் ரூ.1.33 கோடி.

* திருச்சி காந்தி சந்தைக்கு மாற்றாக, கள்ளிக்குடியில் நவீன மத்திய வணிக வளாகம் கட்டப்பட்டும் வசதியின்மை காரணமாகத் திட்டம் செயல்பாட்டுக்கு வராததால் ஏற்பட்ட பயனற்ற முதலீடு ரூ.75.64 கோடி.