Published:Updated:

“இனி காவிரியில் தண்ணீர் வருவது சந்தேகம்தான்!”

காவிரி
பிரீமியம் ஸ்டோரி
காவிரி

பறிபோகும் மேலாண்மை ஆணையத்தின் அதிகாரம்...

“இனி காவிரியில் தண்ணீர் வருவது சந்தேகம்தான்!”

பறிபோகும் மேலாண்மை ஆணையத்தின் அதிகாரம்...

Published:Updated:
காவிரி
பிரீமியம் ஸ்டோரி
காவிரி
ஊரடங்கில் நாடே முடங்கிக் கிடக்கிறது. கொரோனா பயத்தில் மக்கள் நிலைகுலைந்து கிடக்கின்றனர். இந்த நேரத்திலும்கூட, காவிரி உரிமையில் தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு துரோகம் இழைக்கும் செயலில் ஈடுபட்டுள்ளதாக, குமுறல்கள் வெடிக்கின்றன.

தமிழர்களின் நீண்ட நெடிய போராட்டங் களுக்குப் பிறகு, நடுவர் மன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி அமைக்கப்பட்ட காவிரி மேலாண்மை ஆணையம்தான் காவிரி விவகாரத்தில் இப்போதைக்கு தமிழ்நாட்டுக்கான ஒரே ஆறுதல். தன்னாட்சி அதிகாரம் பெற்ற தனி அமைப்பாகச் செயல்பட்டுவந்த இந்த ஆணையத்தை, தற்போது நீர்வளத் துறையின் (ஜல்சக்தித் துறை அமைச்சகம்) நேரடி கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவந்து, அரசிதழில் வெளியிட்டுள்ளது மத்திய அரசு. இதற்கு, தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதுகுறித்து நம்மிடம் பேசிய காவிரி உரிமை மீட்புக் குழுவின் உறுப்பினரும் தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் பொதுச்செயலாளருமான கி.வெங்கட்ராமன், ‘‘காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு இதுவரை குறைந்தபட்ச தற்சார்ப்புத் தன்மையாவது இருந்துவந்தது. அதையும் குழிதோண்டிப் புதைக்கும் நோக்கிலேயே நீர்வளத் துறையின்கீழ் இதை கொண்டுவந்துள்ளது மத்திய அரசு. இது சட்டவிரோதமானது. இதை தமிழக அரசு கண்டித்திருக்க வேண்டும்; தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்க வேண்டும். அதைவிடுத்து, தமிழகப் பொதுப்பணித் துறை இதற்கு ஆதரவாக விளக்கமளிக்கிறது. ‘ஊதியம் வழங்குதல் மற்றும் நிர்வாக நடவடிக்கைக்காகவே இதன் பணிகள் குறித்த விதிகளில் தற்போது திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இதனால், தமிழ்நாட்டுக்கு பாதிப்பில்லை’ என்கிறது. இது கண்டிக்கத்தக்கது.

வெங்கட்ராமன் - வீரப்பன்
வெங்கட்ராமன் - வீரப்பன்

காவிரி மேலாண்மை ஆணையத்துக்கான செலவுகள் மற்றும் நிர்வாகச் செயல்பாடுகள் குறித்து ஏற்கெனவே உச்ச நீதிமன்றம் தெளிவாக வரையறுத்துவிட்டது. ஊதியம் உள்ளிட்ட செலவுகளை இதில் தொடர்புடைய மாநிலங்களும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என அதில் சொல்லப் பட்டுள்ளது. எனவே, அது ஒரு விஷயமே அல்ல.

மத்திய நீர்வளத் துறை அமைச்சகத்தின் பணிகள் குறித்த விதிகளில் மத்திய அரசு தற்போது மூன்று முக்கியமான திருத்தங்களைக் கொண்டுவந்துள்ளது. காவிரி மேலாண்மை ஆணையத்தின் தன்னாட்சி அதிகாரத்தை ஒழிப்பதற்காக தெளிவாகத் திட்டமிட்டு இதைச் செய்துள்ளனர்.

மத்திய அரசின் பணி ஒதுக்கீட்டு விதி 1961-ம் ஆண்டில் நான்காவது பகுதி, இந்திய நீர்வளத் துறை அமைச்சகம் நிர்வாகம் செய்யவேண்டிய சட்டங்களை வரையறுக்கிறது. அதில் பதிவு 32, மாநிலங்களுக்கு இடையிலான தண்ணீர் தகராறு சட்டத்தைக் குறிக்கிறது. அதாவது, இந்தச் சட்டத்தைச் செயல்படுத்த வேண்டியது, நீர்வளத் துறையின் பொறுப்பு. அதேசமயம், 1956 தண்ணீர் தகராறு சட்டத்தின் வரம்புக்கு உட்பட்ட வகையில்தான் நீர்வளத் துறை செயல்பட முடியும். தன்னிச்சையாகச் செயல்பட முடியாது. இந்த 32-வது பதிவு, வரம்புக்கு உட்பட்ட அதிகாரத்தையே மத்திய அரசுக்குத் தருவதால் அது நீக்கப் பட்டுள்ளது.

இரண்டாவது திருத்தமாக, காவிரி மேலாண்மை ஆணையம், மத்திய நீர்வளத் துறையின்கீழ் இணைக்கப்பட்டுள்ளது.

மூன்றாவது திருத்தமாக, இந்தியாவில் உள்ள அனைத்து ஆறுகளையும் பாதுகாப்பது, மேம்படுத்துவது, மேலாண்மை செய்வது ஆகிய அதிகாரங்கள், மத்திய நீர்வளத் துறைக்கு அளிக்கப்பட்டுள்ளன. இவை அனைத்துமே தமிழ்நாட்டுக்கு பாதகமானது. இதன்மூலம், கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேகேதாட்டுவில் அணை கட்டும் அபாயம் நெருங்கிவிட்டது’’ என்றார்.

“இனி காவிரியில் தண்ணீர் வருவது சந்தேகம்தான்!”

இதுகுறித்து, தமிழ்நாடு பொதுப்பணித் துறையின் ஓய்வுபெற்ற தலைமைப் பொறியாளர் அ.வீரப்பனிடம் பேசினோம். ‘‘இது தமிழ்நாட்டுக்கு இழைக்கப்பட்ட மாபெரும் துரோகம். மத்திய அரசு எப்போதுமே தமிழக மக்களுக்கு, குறிப்பாக இங்கு உள்ள பாசன விவசாயிகளுக்கு பாதகமாகவே நடந்துகொள்கிறது. காவிரி நடுவர் மன்றம் உத்தரவிட்டும், மேலாண்மை ஆணையம் அமைக்க மறுத்துவந்தது. நம் மக்கள் தொடர் போராட்டங்கள் நடத்தியும்கூட அலட்சியம் செய்தது. 2018-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும், நீண்ட இழுத்தடிப்புக்குப் பிறகே மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டது. ஆனாலும், அதற்கு நிரந்தர தலைவரை நியமிக்கவில்லை.

இதற்கு முழுமையான தன்னாட்சி அதிகாரம் இல்லையென்றாலும்கூட, இங்கேயாவது நமது ஆதங்கத்தைப் பதிவுசெய்தோம்... அழுத்தம் கொடுத்தோம். தற்போது இதற்கும் ஆபத்து வந்துவிட்டது. மத்திய நீர்வளத் துறை கண்டிப்பாக கர்நாடகாவுக்கு சாதகமாகத்தான் நடந்துகொள்ளும். ஏராளமான உதாரணங்கள் உள்ளன. காவிரியில் தண்ணீர் கொண்டு வர முடியாத தமிழக அரசோ, கோதாவரியில் இருந்து காவிரிக்கு தண்ணீர் கொண்டுவருவதாக திசைதிருப்புகிறது. மத்திய அரசின் தற்போதைய சூழ்ச்சி நடவடிக்கையைத் தடுத்து நிறுத்த, தமிழக அரசு எந்த முயற்சியும் எடுக்கவில்லை. இனி, காவிரியில் தண்ணீர் வருமா என்பது சந்தேகம்தான்’’ என்றார்.

வானதி சீனிவாசன்
வானதி சீனிவாசன்

பா.ஜ.க மாநிலப் பொதுச்செயலாளர் வானதி சீனிவாசனிடம் பேசியபோது, ‘‘காவிரி பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண விரும்புகிறார் பிரதமர் மோடி. கிருஷ்ணா மற்றும் கோதாவரி நதிகளின் உபரிநீரை காவிரிக்குக் கொண்டு வருவதற்காகவே, அனைத்து ஆறுகள் மற்றும் மேலாண்மை வாரியங்களையும் மத்திய நீர்வளத் துறையுடன் இணைத்துள்ளனர். இதனால், காவிரி மேலாண்மை ஆணையத்தின் அதிகாரங்களிலோ, காவிரி நதிநீர் பங்கீட்டிலோ எந்த ஒரு மாற்றமும் ஏற்படாது. இதனால் தமிழ்நாட்டுக்கு பலன்கள்தான் அதிகமே தவிர, எந்தப் பாதிப்பும் இல்லை. மேகேதாட்டு அணை கட்டும் அபாயம் நெருங்குவதாகச் சொல்வதும் உண்மையல்ல’’ என்றார்.