Published:Updated:

``பிளாட்பாரத்துலதான் உக்காந்துருக்கோம் சார்!" - கண்ணீரில் ராதாகிருஷ்ணன் நகர் பெண்கள்

ராதாகிருஷ்ணன் நகர் ( பா.காளிமுத்து )

சென்னை, அரும்பாக்கம் டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் பகுதிப் பெண்கள் பலரிடம் ஆதங்கமும், கோபமும், இயலாமையும், ஏமாற்றமுமே நிறைந்திருக்கிறது.

``பிளாட்பாரத்துலதான் உக்காந்துருக்கோம் சார்!" - கண்ணீரில் ராதாகிருஷ்ணன் நகர் பெண்கள்

சென்னை, அரும்பாக்கம் டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் பகுதிப் பெண்கள் பலரிடம் ஆதங்கமும், கோபமும், இயலாமையும், ஏமாற்றமுமே நிறைந்திருக்கிறது.

Published:Updated:
ராதாகிருஷ்ணன் நகர் ( பா.காளிமுத்து )

``ரெண்டு நாளா நிறைய பேர் வந்து மைக்கை நீட்டுறாங்க... நாங்களும் சலிக்காம எங்க கெதிய சொல்றோம். ஆனா எதுவுமே நடக்கலியே... எல்லோர்கிட்டயும் கண்ணீர்விட்டு என்ன பிரயோஜனம் சொல்லுங்க... நா பேசலண்ணா... வேற யார்கிட்டயாவது கேளுங்க" - விரக்திமிகு வார்த்தைகளை வீசிவிட்டு பேச மறுத்து ஒதுங்குகிறார் அந்த இளம்பெண்.

``போக்கெடம் இல்லாம வீதியில நின்னு நாங்க கண்ணீர் வடிக்கிறது உங்களுக்கெல்லாம் விளையாட்டா இருக்குல்ல... இப்போ நாங்க என்ன சொல்லி என்ன ஆவப்போவுது? கடைசியில நாதியில்லாத எங்க மேலதான் தப்பு சொல்லுவாங்க... சட்டம் பேசுவாங்க... போங்கப்பா..." என்று விலகுகிறார் இன்னொரு பெண்.

ராதாகிருஷ்ணன் நகரில் இடிக்கபட்ட வீடு
ராதாகிருஷ்ணன் நகரில் இடிக்கபட்ட வீடு
பா.காளிமுத்து

சென்னை, அரும்பாக்கம் டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் பகுதிப் பெண்கள் பலரிடம் ஆதங்கமும், கோபமும், இயலாமையும், ஏமாற்றமுமே நிறைந்திருக்கிறது. வீடில்லாமல் வீதியில் நிற்போரை எப்படி எதிர்கொள்வது என்று தெரியாமல் நாம் நின்றுகொண்டிருக்க, ``ந்தேரு... அவங்க என்ன பண்ணுவாங்க..? ஏதோ நம்ம கஷ்டத்தைக் கேக்கறதுக்கு இப்படி நாலு பேராச்சும் வர்றாங்கள்ல..? உள்ளதை சொல்றதுக்கு என்ன..? அவங்ககிட்ட கோவப்பட்டான்னா ஆவப் போவுது?" என்று சக பெண்களை ஆசுவாசப்படுத்தி பேச வைக்கிறார் ஐம்பதுகளைத் தாண்டிய பிரேமா.

``இங்க நாங்க வாடகைக்குத்தான் குடியிருந்தோம். ஆனா இன்னிக்கு நேத்தி இல்ல. பல வருஷமா இங்கதான் இருக்கோம். எங்க வூட்டுக்காரர் அம்மா, அப்பாலாம் இங்கினதான் பொறந்து வளந்தாங்கோ. இன்னிக்கு வந்து ஹவுஸ் ஓனருங்களுக்குத்தான் வூடு குடுப்போம், உங்களுக்குக் கொடுக்க முடியாதுன்னு தொரத்திவுட்டா எங்க போறது? எல்லாரும் கூலி வேலை செய்யுறவங்க சார். தோ... நான்லாம் வீட்டு வேலைக்கிப் போறவ... கொரோனா வந்ததுலேயிருந்து வேலையே இல்ல.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இத்தன நாளா சோத்துக்கு வழியில்லாம சிங்கியடிச்சுகிட்டிருந்தோம். இப்போ வீட்ட விட்டும் தொரத்திட்டாங்க. புள்ளை குட்டிகளோட சாமானையெல்லாம் வாரிப்போட்டுட்டு பிளாட்பாரத்துலதான் உக்கார்ந்திருக்கோம். வீடும் போயி... பொழப்பும் போயி ரோட்ல உக்கார்ந்திருக்கோம். இதுக்கப்புறமும் இன்னா சார் பேச முடியும்..? எங்களுக்கு வீடு வேணும். நாங்க செத்தாதான் எங்க கோரிக்கைய எடுப்பீங்கன்னா நாங்க அதுக்கும் ரெடி" - ஆற்றாமையில் வெடிக்கிறார் கண்மணி.

ராதாகிருஷ்ணன் நகர்
ராதாகிருஷ்ணன் நகர்
பா.காளிமுத்து

``நாங்களும் இங்கின இருவது வருஷத்துக்கு மேலா குடியிருக்கோம். வோட்டர் ஐடி, ரேஷன் கார்டுன்னு எல்லா ப்ரூஃபும் இங்கினதான் இருக்குது. ஒவ்வொரு தடவ வீடு எழுத வர்றப்பவும், பாக்கலாம் பாக்கலாம்னே சொன்னாங்க. இப்போ `உனெக்கெல்லாம் வீடு கெடையாது'ன்னு கைவிரிச்சுட்டாங்க. பாலத்துக்குக் கீழ சாமானையெல்லாம் அள்ளிப் போட்டுட்டு உட்கார்ந்துருக்கோம். படுக்க எடமில்லாம நானும் என் வூட்டுக்காரரும் கே.எம்.சி ஆஸ்பத்திரியில போய் படுத்துத் தூங்கி, காலையில எந்திருச்சு வர்றோம்.

`இங்கின வாடகைக்கிதான குடியிருந்தே, அதேபோல வேற எடத்துக்கு வாடகைக்கிப் போயிருக்க வேண்டியதுதானே?'ன்னு கேக்குறாங்க. ஆயிரம், ரெண்டாயிரத்துல எங்கின சார் வாடகைக்கி வீடு கெடைக்கிது சொல்லுங்கோ..? இப்படி அட்ரெஸ் இல்லாம ஆக்கிட்டாங்க. வீடு இல்லன்னா இந்த ரேஷன் கார்டு, ஓட்டர் ஐடியெல்லாம் செல்லுமா சொல்லுங்கோ..? ஓட்டு மட்டும் உரிமையோட வாங்கிக்கிட்டாங்க. அவங்களை நம்பிதானே இவ்வளவு வருஷமா இங்கின உட்கார்ந்திருந்தோம்..? எங்களுக்கும் ஒரு வழி காட்டுங்க... எங்களுக்கும் ஒரு குடிசை கொடுங்க" என்று கெஞ்சலாகக் கேட்கிறார் பிரேமா.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இவர்கள் கண்ணீருக்கு யாரிடமும் உரிய பதில் இல்லை. `ஆலோசிப்போம், பரிசீலிப்போம்' என்று கடந்துபோகிறது அரசு நிர்வாகம். காரணம், இங்கு 2015-க்குப் பிறகு எடுத்த கணக்கெடுப்பின் படி 93 வீடுகள்தான் இருந்தது என்கின்றனர். அந்த வீட்டின் உரிமையாளர்களுக்கு சென்னை புளியந்தோப்பில் வீடுகள் ஒதுக்கப்பட்டுவிட்ன. வீடு கிடைத்தவர்கள் காலி செய்து போய்விட்டனர்.

பொதுவெளியில் பேசப்படுவதைப்போல அங்கிருந்து வெளியேறுவதற்கு அவர்கள் யாரும் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. பெருவெள்ளம் உள்ளிட்ட இயற்கை பேரிடர்களாலும் இன்னபிற காரணிகளாலும் பாதிக்கப்பட்டவர்கள், மகிழ்ச்சியுடன் அங்கிருந்து கிளம்புகிறார்கள் என்று சொல்ல முடியாவிட்டாலும் எதிர்ப்பேதும் இல்லாமலேயே அங்கிருந்து வெளியேறியுள்ளனர். எல்லா குடும்பங்களுக்கும் வீடு வேண்டும் என்பதுதான் அங்குள்ள பிரச்னை.

ராதாகிருஷ்ணன் நகர்
ராதாகிருஷ்ணன் நகர்
பா.காளிமுத்து

பல வருடங்களாக வாடகைக்குக் குடியிருந்தவர்கள், ஒரு வீட்டுக்குள் இரண்டு, மூன்று குடும்பங்களாக இருந்தவர்களுக்குத்தான் இப்போது வீடு கிடைக்கவில்லை. அவர்கள்தான் வீதியில் நிற்கின்றனர். ஒரே வீட்டுக்குள் இரண்டு, மூன்று குடும்பங்கள் வசித்தால் அவர்கள் ஒவ்வொரு குடும்பத்துக்கும் தனித்தனி வீடு அரசால் கொடுக்க முடியுமா? வாடகைதாரர்களுக்கு எப்படி வீடு வழங்க முடியும்? இப்படிப் பல கேள்விகள்.

இது சார்ந்த பிரச்னைகள் குறித்து தொடர்ந்து போராடிக்கொண்டிருக்கும் சமூக செயற்பாட்டாளர் இசையரசுவிடம் பேசினோம். ``ஒவ்வொரு குடிசைகள் இடிக்கப்படும்போதும் வாடகை வீடுதாரர் வீடு கேட்கின்றனர், ஒரே வீட்டில் வசிக்கும் நாலைந்து குடும்பத்தினர் தனித் தனியாக வீடு கேட்கின்றனர் என்ற பிரச்னை வருகிறது. சென்னையில இருக்கிற குடிசைப் பகுதிகளில் அங்கீகரிக்கப்பட்ட குடிசைப் பகுதிகள், அங்கீகரிக்கப்படாத குடிசைப் பகுதிகள் என இரண்டு பிரிவுகள் இருக்கின்றன.

ராதாகிருஷ்ணன் நகர்
ராதாகிருஷ்ணன் நகர்
பா.காளிமுத்து

1985-க்குப் பிறகு, நகரப் பகுதிகளில் புதிதாக உருவாகின்ற குடிசைப் பகுதிகளை கணக்கெடுத்து அங்கீகரிப்பதை தமிழக அரசு கைவிட்டுவிட்டது. அதுதான் இன்று இவ்வளவு பெரிய பிரச்னையாக வந்து நிற்கிறது. இது 40 ஆண்டுகளின் பிரச்னை. இப்போது இடிக்கப்படக்கூடிய ராதாகிருஷ்ணன் நகர்கூட அங்கீகரிக்கப்படாத குடிசைப் பகுதிதான். இங்கிருக்கும் குடிசைகளுக்குக் குடிநீர் இணைப்பு, மின் இணைப்பு, ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை என எல்லாவற்றையும் நிர்வாக ரீதியாகக் கொடுக்கும்போது அது நீர்நிலை ஆக்கிரமிப்பு பகுதி என அதிகாரிகளுக்கும், ஆட்சியாளர்களுக்கும் தெரியுமா, தெரியாதா?

ஆக்கிரமிப்பு பகுதி என்று தெரிந்தும் அதை ஊக்கப்படுத்தியது அதிகாரிகளும் அரசியல்வாதிகளும்தானே... அதன் பின்னணியில் என்ன அரசியல் இருக்கிறது? அதற்கு அரசிடம் பதில் இருக்கிறதா? இந்த நகரத்தை கட்டியெழுப்ப இந்த மக்களின் உழைப்பு வேண்டும். நீங்கள் ஆட்சியில் அமர இவர்களது ஓட்டு வேண்டும். ஆனால் இவர்கள் வீடு கேட்டால், கிடையாது என்று வீதியில் நிறுத்துவீர்களா? சொந்த மக்களின் உழைப்பை உறிஞ்சிக்கொண்டு வீதியில் நிறுத்துவதற்குத்தான் அரசாங்கமா?

மூன்று வீடு கேட்கிறார்கள், நான்கு வீடு கேட்கிறார்கள் என்று விமர்சனம் செய்வதற்கு முன், குடிசைப் பகுதிகளைப் பற்றி நன்கு புரிந்துகொண்டு பேசுங்கள். ஒரு குடிசையை வெளியிலிருந்து பார்ப்பதற்கு அது ஒரே வீடாகத் தெரியும். ஆனால், அந்த சின்னஞ் சிறிய இடத்தை இரண்டு, மூன்றாகப் பிரித்து இரண்டு, மூன்று குடும்பங்கள் குடியிருப்பார்கள். சிலர் ஒரு போர்ஷனில் குடியிருந்துகொண்டு மற்ற போர்ஷன்களை மிகக் குறைந்த வாடகைக்கு விடுவார்கள். வாடகைக்குக் குடியேறுபவர்களுக்கும் உரிமையாளர்களுக்கும் பெரிய வேறுபாடு இருக்காது. அவர்களும் பல வருடங்களாக அங்கேயே வசிப்பார்கள். தவிர, 40, 50 வருடங்களுக்கு முன்பு இங்கு குடியேறியவர்களின் குடும்பமும் வளர்ந்து இரண்டு, மூன்று குடும்பங்களாகியிருக்கும். பெருகும் குடுங்களுக்கு ஏற்ப வீடு என்ற திட்டம் இங்கு இல்லை. அதுதான் பிரச்னை. 40 வருடங்களாக இந்த ஆக்கிரமிப்பைக் கண்டுகொள்ளாமல் உற்சாகப்படுத்தியதன் விளைவு இங்கு வந்து நிற்கிறது. இந்தக் கேள்விகளுக்கெல்லாம் அரசுதான் பதில் சொல்ல வேண்டும்.

ராதாகிருஷ்ணன் நகர்
ராதாகிருஷ்ணன் நகர்
பா.காளிமுத்து

40 ஆண்டுகளில் எத்தனை அதிகாரிகள் ஊழல் செய்திருப்பார்கள், எத்தனை பேர் லஞ்சம் வாங்கிக்கொண்டு முறைகேடாக இணைப்பு கொடுத்திருப்பார்கள்? இந்தப் பிரச்னையெல்லாம் சரி செய்ய வேண்டுமென்றால், கடைசியாக உங்களுடைய தவற்றை ஒப்புக்கொள்ளுங்கள். எத்தனை குடும்பங்கள் இருக்கின்றனரோ அத்தனை குடும்பங்களுக்கும் வீட்டைக் கொடுத்து இனிமேல் இங்கு யாரும் குடிசை போடக் கூடாது என்று கறாரான கொள்கை கொண்டுவாருங்கள்.

அதைவிடுத்துப் பாதிப் பேருக்கு வீடு கொடுத்து மீதிப் பேரை நடுத்தெருவில் நிறுத்தினால் அவர்கள் எங்கே போவார்கள்..? மீண்டும் இன்னொரு குடிசைப் பகுதியைத்தான் உருவாக்குவார்கள். சில வருடங்கள் கழித்து அதனை அப்புறப்படுத்த இயந்திரங்களோடு போய் நிற்குமா இந்த அரசு? கல்வி, வேலை வாய்ப்பையும் அனைவருக்கும் ஏற்படுத்தி பொருளாதார ஏற்றத்தாழ்வில்லாத சமூகத்தை உருவாக்கி குடிசை பகுதியே இல்லாத நிலையை உருவாக்குவதுதான் அரசின் கடமையே தவிர குடிசைகளை இடிப்பது அல்ல'' என்கிறார் இசையரசு.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism