Published:Updated:

``மணிமாறா... நீ எங்கப்பா இருக்கே?'' கொரோனா பாசிட்டிவும் ராங் நம்பரும்!

சென்னை - முழு ஊரடங்கு
சென்னை - முழு ஊரடங்கு

ஒரு மணிமாறனைக் கண்டுபிடிப்பதற்காக, ஒரு ராங் நம்பரை சென்னை மாநகராட்சி படுத்தியபாடு அப்படியே இங்கே...

கடந்த திங்கள் கிழமை காலை 9 மணி வாக்கில் என்னுடைய மொபைல் அலறியது.

97101 ----5 என்ற எண்ணிலிருந்து அழைப்பு.

``ஹலோ, மணிமாறன்தானே. நாங்க சென்னை மாநகராட்சியில இருந்து பேசுறோம்.''

``மணிமாறனா... ''

``அப்படி யாரும் இல்லீங்களே.''

``மணிமாறன் இல்லையா..?'' எதிர்முனையில் பலத்த அதிர்ச்சி.

``இது பாரதி நகர்தானே (வடசென்னை)''.

``இல்லீங்க. .... நகர் (தென்சென்னை)''.

``அதுவும் பொய்யா?''

``நீங்க என்ன நம்பர் போட்டீங்க''

``98407 ----1''

``நம்பர் சரியாத்தான் இருக்கு. ஆனா, மணிமாறான் கிடையாது. என் பேரு.....''

``இல்லீங்க... இந்த நம்பரைத்தான் மணிமாறன் கொடுத்திருக்கார். அவருக்குக் கொரோனா பாசிட்டிவ். உடனே அவரை வந்து எங்கள பாக்கச் சொல்லுங்க.''

call (Representational Image)
call (Representational Image)

``என்னது பாசிட்டிவா?''

``ரொம்ப பயப்படறீங்க, அப்ப நீங்கதான் மணிமாறன்.''

``அட, உங்க சந்தேகத்துக்கு அளவே இல்லையா. பாசிட்டிவ்ங்கிற வர்த்தையைக் கேட்டா `கொரோனாவுக்குக் கூட 'குப்'னுதாங்க இப்பல்லாம் வேர்க்கும்''

``சார் விளையாடாதீங்க... மணிமாறன வரச்சொல்லுங்க..''

``அட, அப்படி யாருமே இல்லைனு சொல்லிக்கிட்டிருக்கேன். அவர வரச் சொல்லுனு சொல்றீங்களே!''

``இல்லீங்க... இந்த நம்பரத்தானே கொடுத்திருக்கார்...''

``நம்பரத் தப்பா கொடுத்திருக்கார். ஆளை விடுங்க'' என்று இணைப்பைத் துண்டித்தேன்.

சற்றுநேரத்தில், 90254 ---- 9 என்ற எண்ணிலிருந்து அழைப்பு. இப்போதும் அதே மணிமாறன் பற்றிய கேள்விதான். இந்த முறை நான் முந்திக்கொண்டேன்.

``நீங்கள் யார்?''

''நான் போலீஸ். கொரோனாவுக்காக கார்ப்பரேஷனில் டியூட்டி'' என்றவரிடம், ``இப்பொழுதுதான் அனைத்து விவரங்களையும் 97101 ....5 இந்த எண்ணிலிருந்து அழைத்த பெண்மணியிடம் கொடுத்தேன்.''

``பரவாயில்லை. திரும்பவும் சொல்லுங்க...''

``ஏங்க எனக்கு வேற வேலை இல்லையா. திரும்பத் திரும்ப இதையே சொல்லிட்டிருக்க முடியுமா''

``உங்க நம்பரைத்தான் மணிமாறன் கொடுத்திருக்கார். அதனால உங்களுக்குத்தான் பிரச்னை. சொல்லித்தான் ஆகணும்.''

``என் நம்பரைக் கொடுத்தா... அவரோட ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, அடையாள அட்டை இதையெல்லாம் வாங்கி ஏன் நீங்க செக் பண்ணல. இதைப் பத்தி நான் போலீஸ்ல புகார் கொடுப்பேன்''.

``கொடுங்க... உங்க நம்பர மணிமாறன் கொடுத்திருக்கிறதால நீங்கதான் பதில் சொல்லியாகணும்''

``அப்படி யாரும் இல்லனு சொல்லியாச்சி. இந்த நம்பரும் அவரோடது இல்லனு சொல்லியாச்சி திரும்பத் திரும்ப டார்ச்சர் பண்றீங்களே.''

``அதெல்லாம் எங்களுக்குத் தெரியாதுங்க. மணிமாறனைக் காணோம். இந்த நம்பர்லதான் கேட்கமுடியும்.''

``சரி, கார்ப்பரேஷன் கமிஷனர் பிரகாஷ், போலீஸ் டி.ஜி.பி திரிபாதி இவங்கள விட்டு உங்களுக்கு பதில் சொல்லச் சொல்றேன். இப்போதைக்கு போனை வைங்க'' என்று துண்டித்தேன்.

மீண்டும் மீண்டும் இங்கே குறிப்பிட்ட அந்த இரண்டு எண்களில் இருந்து மட்டுமல்லாது, இன்னும் சில எண்களிலிருந்தும் தொடர்ந்து போன்.

``மணிமாறா... மணிமாறா...''

``இல்லீங்க... இல்லீங்க...!''

உச்சக்கட்ட டார்ச்சரில் அலுவலக சகாவுக்கு போன் அடித்தேன்.

``ஓ... அப்படியா. ஒரு கொரோனா பாசிட்டிவ் கேஸ் வந்தா போலீஸ், ஹெல்த், கார்ப்பரேஷன், ரெவின்யூ உட்பட எட்டு, ஒன்பது டிபார்ட்மென்ட்டுக்கும் தெரியப்படுத்திடுவாங்க. அந்த பாசிட்டிவ் கேஸை இந்த டிபார்ட்மென்ட் அத்தனையும் ஒருங்கிணைஞ்சி, கண்காணிச்சி, மருத்துவ உதவிகளைச் செய்யுறதுக்குத்தான் இந்த ஏற்பாடு'' என்று அலுவலக நண்பர் சொன்னார்.

``ம்... இது ஒருங்கிணைப்பா... இல்ல உயிரெடுப்பா?'' என்று முனகிக்கொண்டிருக்கும்போதே இன்னொரு எண்ணில் இருந்து போன். இப்போது பேசியவரும் `போலீஸ்' என்றே அறிமுகப்படுத்திக் கொண்டார். இவர் சென்னையின் வடக்குப் பகுதியாம்.

``மணிமாறன் இருக்கிறாரா?''

``இல்லையே'' இந்தத் தடவை எனக்கே சுரத்து குறைந்துவிட்டது.

ஆதி அந்தம் அனைத்தையும் பொறுமையாகச் சொல்லிவிட்டு, ``இன்னும் எத்தனை பேர் போன் செய்வீங்க'' என்றேன்.

``க்ளுக்'' என்று சிரிப்பொலி. ``

ஏற்கெனவே டார்ச்சர் ஆரம்பிச்சுடுச்சா. இதுவரைக்கும் எத்தனை பேர் போன் பண்ணினாங்க?''

``எட்டு, ஒன்பது பேர் இருக்கும்.''

``இன்னும் எட்டு ஒன்பது பேர் பண்ணுவாங்க.''

``ஏன் சார், ஒரு ஆள் போன் பண்ணி தெரிஞ்சுகிட்ட பிறகு, அத்தனை டிபார்ட்மென்ட்டுக்கும் அதை அப்டேட் பண்ணிட்டா வேலை முடிஞ்சுச்சு. எதுக்காக உங்க டயத்தையும் எங்க டயத்தையும் வேஸ்ட் பண்றீங்க?''

``சார், ஒருத்தர் மிஸ் பண்ணாலும் இன்னொருத்தர் கண்டுபிடிச்சுடலாம் இல்லியா. அதுதான் மேலிடத்து உத்தரவு. எப்படி எங்க ஐடியா?''

``இதைவிட, அந்த மணிமாறன் டெஸ்டுக்கு வந்தப்பவே ஆதார் கார்டு, டிரைவிங் லைசென்ஸ்னு எதையாச்சும் வாங்கியிருந்தா இந்தத் தொல்லையே இல்லையே..?''

மீண்டும் குபீர் சிரிப்பு.... ``விவரம் புரியாத ஆளா இருக்கீங்க சார்."

Thenkachi swaminathan
Thenkachi swaminathan
Photo: Vikatan

இந்த `தென்கச்சி' கோ. சுவாமிநாதன் தெரியும்ல... அவர் ஒரு விஷயம் சொல்லியிருக்கார். அதான் அரசாங்கம்.''

``அப்படி என்ன சார் சொன்னார்?''

``அட இதுவும் தெரியாதா..?''

``ஒருத்தன் நெடுஞ்சாலையில் 3 அடி இடைவெளி விட்டுக் குழியைத் தோண்டிக்கிட்டே போனானாம். இன்னொருத்தன் மண்போட்டு மூடிட்டே போனானாம்.

ஒரு பெரியவர் இதப் பார்த்துட்டு, `என்னப்பா வேலை நடக்குது?’னு கேட்டாராம்.

`அரசாங்க வேலை’னு பதில் வந்திருக்கு.

`ஒருத்தன் குழியைத் தோண்டறான், இன்னொருத்தன் அதை மூடறான். அர்த்தமில்லாம இருக்கே’னு கேட்டாராம்.

``நான் விவரம் சொல்றேங்க. 3 அடி தூரத்துக்குக் குழி தோண்டுறது ஒருத்தன் வேலை. அதுல செடியை நடவேண்டியது இன்னொருத்தன் வேலை. மண்ணைப் போட்டு மூடவேண்டியது மூணாவது ஆளோட வேலை. செடி நட வேண்டிய ஆள் இன்னிக்கு லீவு போட்டுட்டான். அதுக்கு நான் என்ன பண்ண முடியும்?"னு சொன்னானாம்.

அதுக்குப் பெரியவர், `இதை உன் மேலதிகாரிகிட்டே சொல்ல வேண்டியதுதானே’ என்றாராம்.

`அவர்கிட்ட சொன்னதுக்கு, உன் டியூட்டியை நீ ஒழுங்காப் பாரு. அடுத்தவனைப் பத்தி நீ ஏன் கவலைப்படறேனு கடுப்பா சொல்லிட்டார்'னு சொன்னானாம்.''

கதையை முடித்தவர்...

``சரி சரி மணிமாறன் கிடைக்கற வரைக்கும் உங்களுக்கு போன் வரும் பார்த்துக்கோங்க'' என்றார்.

``ம்... நம் கதை முடிந்தது'' என்றே தோன்றியது.

கொரோனா தடுப்பு… தாராவி முதல் கண்ணகி நகர் வரை சாதித்த வரலாறு!

ஆரம்பத்தில் போன் செய்தவர்கள் மீதும்... மணிமாறன் மீதும் பயங்கர கோபம்தான். ஆனால், `அரசாங்க வேலை'க்குப் பிறகு எல்லாமே மாறிவிட்டது. அடுத்தடுத்து வந்த போன்களுக்கு பொறுமையாக பதில் சொல்லிக் கொண்டே இருக்கிறேன்.

ம்... பாவம்தானே அவர்களும்.

`மணிமாறா நீங்க எங்கப்பா இருக்கே. இந்த அரசாங்கத் தொல்லை தாங்கமுடியலப்பா. பேசாம நான்தான் மணிமாறன்னு கொரோனா பாசிட்டிவாவே மாறிடலாமோனு தோணுது!'

பின்குறிப்பு: மணிமாறன் தவறான எண்ணைக் கொடுத்துவிட்டாரா... அல்லது இவர்கள் எழுதும்போது ஏதாவது தவறிழைத்துவிட்டார்களா என்று தெரியவில்லை. ஒருவர் டெஸ்டுக்கு வரும்போது வெறுமனே அவர் கொடுக்கும் மொபைல் நம்பரை மட்டும் குனிந்த தலை நிமிராமல் எழுதிக்கொண்டு அவரை அனுப்பிவைப்பது என்ன நடைமுறை. அடையாள அட்டைகளை வாங்கிப் பார்த்து நகல் எடுத்து வைத்துக்கொள்ள வேண்டாமோ. அப்படி செய்திருந்தால், நொடியிலேயே ஆளைக் கண்டுபிடித்திருக்க முடியும். இல்லையென்றால் என்னுடைய எண்ணை செக் செய்தாலே... என் பெயரும் ஊரும் வந்துவிடும். இதைச் செய்துபார்க்கும் அளவுக்குக்கூட யோசிக்காமல் இருப்பதுதான் வேதனையாக இருக்கிறது.

கொரோனா
கொரோனா

பாவம், அவர்களும் என்னதான் செய்வார்கள். ஆளுங்கட்சிக்காரர், மக்கள் பிரதிநிதிகள், உயர்அதிகாரிகள் என்று பலரும் கூட்டு போட்டுக் கொள்ளையடிப்பதற்காக கான்ட்ராக்ட் அடிப்படையில் கொரோனாவுக்காக வேலைக்குச் சேர்க்கப்பட்டவர்கள்தானே இவர்களில் பலரும். ஒரு நாளைக்கு 380 ரூபாய் கொடுப்பார்கள். கணக்கில் எழுதுவது கடவுளுக்கே தெரியாது. `380 ரூபாய்க்கு இவ்வளவு யோசித்தால் போதும்' என்று அவர்கள் நினைப்பதிலும் தவறில்லைதானே!

-அன்பு

அடுத்த கட்டுரைக்கு