டிசம்பர் 31-ம் தேதி இரவே புத்தாண்டு கொண்டாட்டங்கள் தொடங்கிவிடும் என்பதால் மக்களின் பாதுகாப்பு கருதி, நட்சத்திர ஹோட்டல்கள், கேளிக்கை விடுதிகளில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் சென்னை காவல் ஆணையாளர் அலுவலகத்தில் நடைபெற்றது. சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், நட்சத்திர ஹோட்டல் உரிமையாளர்கள், கிளப், பார் உரிமையாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

இந்தக் கூட்டத்துக்குப் பிறகு சென்னை காவல்துறை சார்பில் நட்சத்திர ஹோட்டல், கிளப், பார்களுக்கான கட்டுப்பாடுகள் குறித்து அறிக்கை வெளியிடப்பட்டது. அதில், `` நள்ளிரவு 01:00 மணியுடன் நட்சத்திர ஹோட்டல்கள், கேளிக்கை விடுதிகளில் உணவு வழங்குதல் மற்றும் மதுபான விற்பனையை நிறுத்திக்கொள்வதுடன் கொண்டாட்டங்களைக் கண்டிப்பாக முடித்துக்கொள்ள வேண்டும்.
நட்சத்திர ஹோட்டல்கள், உணவு விடுதிகள் அரங்கத்துக்குள் 80 சதவிகிதத்துக்கு மேல் நபர்களை அனுமதிக்கக் கூடாது. அனுமதி வழங்கப்பட்டுள்ள இடங்களைத் தவிர மற்ற இடங்களில் மது வகைகளைப் பரிமாறக் கூடாது. நீச்சல் குளத்தின் மீதோ அல்லது அருகிலோ தற்காலிக மேடைகள் அமைத்தல் கூடாது. நீச்சல் குளங்களை 31.12.2022 அன்று மாலை 6 மணி முதல் 01.01.2023 அன்று காலை 6 மணிவரை மூடிவைத்திருக்க வேண்டும்.

கலாசார நடனங்கள் தவிர ஆபாச நடனம் மற்றும் அருவருக்கத்தக்க கேளிக்கை நடனங்கள் நடைபெறாமல் கண்காணித்து தடைசெய்ய வேண்டும். நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் வெளிநாட்டவர்களின், விசா, பாஸ்போர்ட் உள்ளிட்ட விவரங்களைச் சம்பந்தப்பட்ட ஹோட்டல் நிர்வாகம் சரிபார்க்க வேண்டும். பட்டாசுகள் ,வெடிபொருள்கள் வெடிக்க அனுமதி கிடையாது. கேளிக்கை நிகழ்ச்சிகள் நடக்கும் அரங்குகள் மற்றும் அறையில் பெண்கள், சிறுமிகளைக் கேலி செய்தல் (Eve teasing), அத்துமீறல்கள் போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க ஹோட்டல் நிர்வாகத்தினர் போதிய பணியாளர்களை நியமித்து, கண்காணித்து தடுக்க வேண்டும்.

மது அருந்தி வெளியே வரும் விருந்தினர்களை, மாற்று வாகனம் மூலம் அனுப்பிவைக்க ஹோட்டல் நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும். காவல்துறை அனுமதித்த இடம், நேரம் தவிர்த்தல் மற்றும் விதிமுறைகளை மீறும் நட்சத்திர ஹோட்டல், கிளப், பார் மற்றும் கேளிக்கை விடுதிகள் நிர்வாகத்தின் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அதன் உரிமங்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், தமிழக அரசின் கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளைக் கடைபிடிக்குமாறு பொதுமக்கள் மற்றும் ஹோட்டல் நிர்வாகத்தினர் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்" எனக் கூறப்பட்டிருக்கிறது.
மேலும் ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த சங்கர் ஜிவால், உயிரிழப்பு இல்லாத புத்தாண்டு என்பதை நோக்கமாகக்கொண்டு செயல்படவிருப்பதாகவும், புத்தாண்டு தினத்தன்று சென்னையில் 16,000 போலீஸார் பாதுகாப்புப்பணியில் ஈடுபடவிருப்பதாகவும் தெரிவித்தார்.

அதேபோல் பொதுவாக புத்தாண்டு கொண்டாட்ட அறிவுரைகள் குறித்து நேற்று தமிழக டி.ஜி.பி சைலேந்திர பாபு, ``புத்தாண்டு நள்ளிரவு 1 மணிக்கு மேல் பொது இடங்களில் குதூகல கொண்டாட்டங்களுக்கு அனுமதி இல்லை. டிசம்பர் 31-ம் தேதி இரவும், புத்தாண்டின்போதும் கடற்கரைகளில் மக்கள் கடல்நீரில் இறங்கி கொண்டாடக்கூடாது. அவசர உதவி தேவைப்படுபவர்கள் `காவல் உதவி' என்ற அதிகாரபூர்வ செயலியைப் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்" என்று அறிக்கை வெளியிட்டார்.