Published:Updated:

`இனி, ரூட் தல இருக்காது; குண்டர் சட்டம்தான்!'- மாணவர்களை எச்சரிக்கும் சென்னை போலீஸ்

சகாயராஜ் மு

"இனிமேல் மாணவர்கள் மீதான சாஃப்ட்கார்னர் இருக்காது. அவர்கள்மீது இரும்புக்கரம் கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும்" என்று சென்னை காவல்துறை இணை ஆணையர் சுதாகர் கூறியுள்ளார்.


ஆயுதங்களுடன் மோதும் மாணவர்கள்
ஆயுதங்களுடன் மோதும் மாணவர்கள்

சென்னை அரும்பாக்கத்தில், நேற்று மாணவர்கள் ஆயுதங்களுடன் மோதிக்கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக, பச்சையப்பன் கல்லூரி முதல்வரை காவல்துறை இணை ஆணையர் சுதாகர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் சந்தித்துப் பேசினர். இந்த சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய காவல்துறை இணை ஆணையர் சுதாகர், "சென்னையில் நேற்று நடந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடந்துகொண்டிருக்கிறது.

காவல்துறை இணை ஆணையர் சுதாகர்
காவல்துறை இணை ஆணையர் சுதாகர்

தொடர்ந்து இதுபோன்ற குற்றச் சம்பவங்களில் மாணவர்கள் ஈடுபட்டால், தேவைப்பட்டால் அவர்கள்மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம். இது தொடர்பாகக் கல்லூரி முதல்வரிடம் ஆலோசனை நடத்திவிட்டு, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது" என்றார்.

ஒவ்வோர் ஆண்டும் புதிய மாணவர்கள் வருகிறார்கள். முன்னாள் மாணவர்கள் இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடுவதாகக் கூறப்படுகிறதே?

நடுரோட்டில் மாணவர்கள் மோதல்
நடுரோட்டில் மாணவர்கள் மோதல்

இவர்கள், கல்லூரி மாணவர்கள் என்பதால் சாஃப்ட்கார்னர் இருந்தது. இன்றுவரைக்கும் இவர்களை மாணவர்கள் என்ற கண்ணோட்டத்தில் பார்த்துக்கொண்டிருந்தோம். இவர்களின் இந்த நடவடிக்கை, பொதுமக்களின் அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கிறது. அனைவருக்குமே ஒரு பயத்தை ஏற்படுத்துகிறது. அரிவாளை எடுத்துக்கொண்டு போவது ரவுடியின் செயல்போல் இருக்கிறது. இவர்கள் மாணவர்கள் என்பதால் உடனடியாக நடவடிக்கை எடுப்பது கஷ்டம். இவர்களை ரவுடிகள் என்ற பார்வையில்தான் நாங்கள் பார்க்கிறோம். இனிமேல், மாணவர்கள் மீதான சாஃப்ட்கார்னர் இருக்காது. இவர்கள்மீது இரும்புக்கரம் கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும்.

ஒவ்வோர் ஆண்டும் இதேபோல சம்பவம் நடக்கிறது. நிர்வாகத்துடன் பேசுகிறீர்கள். சஸ்பெண்டு நடவடிக்கை நடந்துகொண்டுதான் இருக்கிறது. இப்போது எடுக்கப்படும் நடவடிக்கை இந்தச் சம்பவத்துக்கு ஒரு முற்றுப்புள்ளியாக இருக்குமா?

ஆயுதம் வைத்திருக்கும்போது பயம் இருக்கத்தான் செய்யும். அவர்களைப் பிடிக்கவில்லை என்று பொதுமக்களை குற்றம் சொல்ல முடியாது. வெறுங்கையில் இருவர் சண்டை போட்டுக்கொண்டிருந்தால் பிரித்து விடலாம். கத்தியை வைத்து சண்டைபோடும்போது, குறுக்கே போக அவர்களுக்கு தயக்கம் இருக்கும்.
காவல்துறை இணை ஆணையர் சுதாகர்

நீங்கள் சொல்வதைப் போல இப்போது சஸ்பெண்டு என்பதுடன் நின்றுபோய்விட்டது. இனி அப்படி கிடையாது. குற்றச்செயல்களில் ஒரு மாணவன் ஈடுபடும்போது, அவரது நடவடிக்கைகள் கண்காணிக்கப்படும். அவர் தவறு செய்யும் பட்சத்தில், 10 மாதங்கள் சிறையில் கிடக்கவேண்டி வரும். இது அவரது வாழ்க்கையைப் பாதிக்கும். இப்படிப்பட்ட நடவடிக்கை எடுக்கும்போது, மற்ற மாணவர்கள் இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடாமல் இருக்க வழிவகுக்கும்.

வெறும் பயத்தை மட்டும் வைத்துக்கொண்டு இதுபோன்ற நடவடிக்கைகளைத் தடுக்க முடியுமா... கல்லூரியின் பங்கு எப்படி இருக்கணும் என்று பார்க்கிறீங்க?

மாணவர்கள் மோதல்
மாணவர்கள் மோதல்

எல்லா கல்லூரி மாணவர்களும் இதுபோன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுவதில்லை. சிலர் மட்டும்தான் ஈடுபடுகிறார்கள். நீங்கள் சொல்வதைப் போல், அனைத்து மாணவர்களும் தவறு செய்யும்போது, அவர்கள் மீதான நடவடிக்கை கேள்விக்குறியாக இருக்கும். இதில் குறிப்பிட்ட சிலர் மட்டும்தான் ஈடுபடுகிறார்கள். இதற்குக் காரணம் யார் என்பதைக் கண்டுபிடிக்கத்தான் இதுபோன்ற நடவடிக்கை எடுக்க உள்ளோம். நாளை, இது தொடர்பான கூட்டம் நடைபெறுகிறது. அப்போது, முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளது. நாங்கள் செய்வது தவறு என்பதை உணர்த்தும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். நேற்று நடந்ததைப்போன்று, சம்பவம் நடக்கும்போதுதான் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். ''ரூட் தல'' என்ற கான்செப்ட்டே இருக்கக் கூடாது என்கிற முடிவுக்கு வந்துவிட்டோம்.

பட்டப்பகலில் மாணவர்கள் ஆயுதங்களுடன் பேருந்தில் வெளியே வருகிறார்கள். பொதுமக்களும் பார்க்கிறார்கள். அவர்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கவில்லை. இதுகுறித்து உங்கள் கருத்து?

இணை ஆணையர் சுதாகர்
இணை ஆணையர் சுதாகர்

ஆயுதம் வைத்திருக்கும்போது பயம் இருக்கத்தான் செய்யும். அவர்களைப் பிடிக்கவில்லை என்று பொதுமக்களை குற்றம் சொல்ல முடியாது. வெறுங்கையில் இருவர் சண்டை போட்டுக்கொண்டிருந்தால் பிரித்து விடலாம். கத்தியை வைத்து சண்டைப்போடும்போது, குறுக்கே போக அவர்களுக்கு தயக்கம் இருக்கும். கண்டிப்பாக காவல்துறைக்கு தகவல் கொடுத்திருக்கணும். தகவல் வந்த பிறகுதான் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்தார்கள்.