Published:Updated:

நோ இன்ஷூரன்ஸ்... சாலை வரி கட்டவில்லை... முதல்வரின் பிரசார வாகன லட்சணமே இதுதான்!

முதல்வரின் பிரசார வாகனம்
பிரீமியம் ஸ்டோரி
முதல்வரின் பிரசார வாகனம்

- பாதுகாப்பில் கோட்டைவிடும் காவல்துறை!

நோ இன்ஷூரன்ஸ்... சாலை வரி கட்டவில்லை... முதல்வரின் பிரசார வாகன லட்சணமே இதுதான்!

- பாதுகாப்பில் கோட்டைவிடும் காவல்துறை!

Published:Updated:
முதல்வரின் பிரசார வாகனம்
பிரீமியம் ஸ்டோரி
முதல்வரின் பிரசார வாகனம்
சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளைப் பாய்ந்து பாய்ந்து நிறுத்தி, ‘லைசென்ஸ் இருக்கா, இன்ஷூரன்ஸ் இருக்கா, புது டைப் நம்பர் பிளேட் எங்கே?’ என்று கேள்வி மேல் கேள்விகளைக் கேட்டுத் துளைத்தெடுக்கும் போலீஸார், முதல்வரின் பிரசார வாகனம் உரிய சான்றுகள் இல்லாமல் ஓடியதைக் கண்டுகொள்ளாதது சர்ச்சையாகியிருக்கிறது.

மறைந்த ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, அவரது பிரசாரப் பயணங்களில் காவல்துறையினரும், கட்சியின் முன்னணி நிர்வாகிகளும் மிகுந்த அக்கறை செலுத்தினார்கள். ஜெயலலிதா செல்லும் வழியில் முந்தைய நாளிலேயே வாகன அணிவகுப்பு நடத்துவார்கள். ஜெயலலிதாவின் வாகனத்தை எந்த இடத்தில் நிறுத்த வேண்டும்; அங்கு யாரெல்லாம் நிற்க வேண்டும் என்பது வரை அனைத்தும் ஏற்கெனவே முடிவு செய்யப்பட்டிருக்கும். ஆனால், முதல்வர் பழனிசாமியின் பிரசாரப் பயணங்களில் இவை அனைத்தும் மிஸ்ஸிங் என்கிறார்கள்!

நோ இன்ஷூரன்ஸ்... சாலை வரி கட்டவில்லை... முதல்வரின் பிரசார வாகன லட்சணமே இதுதான்!

கடந்த வாரம் தூத்துக்குடி மாவட்டத்தில் முதல்வர் பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டபோது, உயிரிழந்த ராணுவ வீரர் கருப்பசாமி வீட்டுக்குச் செல்லத் திட்டமிடப்பட்டது. ஆனால், கருப்பசாமி வீட்டைத் தாண்டி முதல்வரின் கான்வாய் சென்றுவிட்டது. அதன் பிறகு, திரும்பி வந்து கருப்பசாமி வீட்டுக்குச் சென்று அஞ்சலி செலுத்தினார் முதல்வர்.

இது பற்றி நம்மிடம் பேசிய அ.தி.மு.க நிர்வாகிகள், ‘‘பொதுவாக முதல்வர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலமாக இருக்கும். முதல்வரின் நிகழ்ச்சி நடக்கும் ஊரிலேயே காவல்துறை உயரதிகாரிகள் முகாமிட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனிப்பார்கள். ஆனால், முதல்வர் பழனிசாமிக்கு அத்தகைய நடைமுறைகள் பின்பற்றப்படுவதாகத் தெரியவில்லை. முதல்வர் வரும் சாலையில் போலீஸாரை நிறுத்திவைத்து, விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்திருப்பதுபோல ஏமாற்றுகிறார்கள்’’ என்று குமுறுகிறார்கள்.

‘கார்களில் பம்பர் வைத்துக்கொள்வதால், விபத்துகளின்போது ஏர் பலூன் விரிவடையாமல் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. எனவே, பம்பர்களை உடனே அகற்ற வேண்டும்’ என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், முதல்வரின் பிரசாரப் பயணத்தில் பங்கேற்கும் அரசியவாதிகளின் கார்களிலிருந்து பம்பர்கள் இன்னும் அகற்றப்படவில்லை. அதைப் பற்றிக் காவல்துறையும் கண்டுகொள்வதில்லை. இது மட்டுமா...

மறைந்த பி.ஹெச்.பாண்டியனின் மணிமண்டபம் மற்றும் உருவச்சிலை திறப்பு விழா நெல்லை மாவட்டம், சேரன்மகாதேவியில் ஜனவரி 4-ம் தேதி நடந்தது. அதற்காக விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வந்த முதல்வர், துணை முதல்வர் ஆகியோரை வரவேற்றுவிட்டுத் திரும்பிய வாகனங்கள் வல்லநாடு என்ற இடத்தில் ஒன்றோடொன்று மோதிக்கொண்டன. அந்த விபத்தில் சிக்கிய வாகனங்களின் முன்பக்கம் பம்பர்கள் பொருத்தப்பட்டிருந்தன.

நோ இன்ஷூரன்ஸ்.. நோ ரோடு டாக்ஸ்!

சமீபத்தில் நெல்லை வருகையின்போது முதல்வர் பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் ஒரே ஜீப்பில் ஏறி, தங்களுக்கு அளிக்கப்பட்ட வரவேற்பை ஏற்றுக்கொண்டார்கள். இருவரும் ஏறிய ஜீப்புக்கான (டிசிஇ 4951) சாலை வரி 2019-ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதியுடன் முடிவடைந்திருந்தது. இன்ஷூரன்ஸ் 2020 பிப்ரவரி 3-ம் தேதியுடன் முடிவடைந்திருந்தது. இது பற்றி நாம் விசாரணை நடத்திய பின்னர், அவசர அவசரமாகச் சாலை வரி மட்டும் கட்டப்பட்டது.

பயணங்களின்போது மட்டுமன்றி முதல்வரின் இதர பாதுகாப்பு விஷயங்களிலும் காவல்துறையினர் போதிய கவனம் செலுத்துவதில்லை என்று அ.தி.மு.க-வினரே அதிர்ச்சி தெரிவிக்கின்றார்கள். இது பற்றி நம்மிடம் பேசிய அ.தி.மு.க நிர்வாகிகள், ‘‘முதல்வர் பழனிசாமி, டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் விழாவுக்காக கன்னியாகுமரி மாவட்டத்துக்குச் சென்றுவிட்டு, மறுநாள் சங்கரன்கோவிலில் அமைச்சர் ராஜலட்சுமி இல்ல நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அப்போது இரவு 2 மணிக்கு அவர் கன்னியாகுமரியிலிருந்து நெல்லைக்கு வந்து சேர்ந்தார். அவர் தங்கவிருந்த ஆப்பிள் ட்ரீ ஹோட்டலுக்கு அவர் வருவதற்குச் சில மணி நேரத்துக்கு முன்புதான் காவல்துறையினர் சென்று பாதுகாப்பு அம்சங்கள் குறித்துப் பார்வையிட்டார்கள்.

நோ இன்ஷூரன்ஸ்... சாலை வரி கட்டவில்லை... முதல்வரின் பிரசார வாகன லட்சணமே இதுதான்!

கடைசி நேரத்தில் ஹோட்டலுக்குச் சென்று, ஹோட்டலின் உறுதித்தன்மை பற்றிய சான்று, ஹோட்டல் லிஃப்ட் சர்வீஸ் செய்யப்பட்ட சான்று, தீயணைப்புத்துறையின் அனுமதி என பலவற்றைக் கேட்டிருக்கிறார்கள். முதல்வர் தங்குமிடம் முடிவானால் ஓரிரு தினங்களுக்கு இந்த விவரங்களைச் சேகரித்து, பாதுகாப்பை உறுதிப்படுத்தியிருக்க வேண்டும். ஆனால், தற்போது ஏனோதானோவென்று செய்கிறார்கள்’’ என்று புலம்பினார்கள். இது பற்றி நெல்லை காவல்துறையினரிடம் கேட்டதற்கு, ‘முதல்வரின் பாதுகாப்பு விவகாரத்தில் எந்தக் குளறுபடியும் கிடையாது’ என்று மழுப்பலாக பதில் சொல்கிறார்கள்.

முதல்வரின் பாதுகாப்பு விவகாரத்தில் காவல்துறையினர் மெத்தனம் காட்டுவது தொடர்பாக ஆளுங்கட்சியினரே அதிருப்தி அடைந்திருக்கும் நிலையில் என்ன செய்யப்போகிறது, காவல்துறை?

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism