Published:Updated:

கொரோனா தொற்று, சென்னையில் குறைந்து மற்ற மாவட்டங்களில் அதிகரித்தது ஏன்? - தலைமைச் செயலாளர் விளக்கம்

சண்முகம்
சண்முகம்

``கொரோனா வைரஸ் தொற்று தமிழகத்தில் கட்டுப்பாட்டில் இருக்கிறது. நாங்கள் சரியான பாதையில் சென்றுகொண்டிருக்கிறோம். நம் முதல்வர் தினந்தோறும் தமிழக நிலவரத்தைக் கண்காணித்து ஆலோசனை சொல்லி வருகிறார்'' என்கிறார் தலைமைச் செயலாளர் சண்முகம்.

சென்னையில் உச்சத்துக்குப் போன கொரோனாவை ஒருவழியாகக் கொஞ்சம் கட்டுப்படுத்திவிட்டது அரசு. அதே நேரம், தமிழகத்தின் 17 மாவட்டங்களில் தினந்தோறும் 2,000 பேர் என்கிற விகிதத்தில் பாதிப்பு அதிகரித்து வருகிறது. சென்னையை ஒட்டியுள்ள செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் தவிர மதுரையிலும் கொரோனா பாதிப்பு உச்சத்தில் உள்ளது. இந்த நிலையில், வருகிற ஜூலை 31-ம் தேதியுடன் தற்போது அமலில் உள்ள ஊரடங்கு முடிகிறது. அதன் பிறகு, ஊரடங்கில் தளர்வுகள் தளர்த்தப்படுமா என்ற கேள்விகள் பொதுமக்களுக்கு எழுந்துள்ளன.

அரசு தரப்பு, என்ன முடிவில் இருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள தமிழக தலைமைச் செயலாளர் சண்முகத்தைத் தொடர்பு கொண்டோம்.

``கொரோனா நோய் தமிழகத்தில் கட்டுப்பாட்டில் இருக்கிறது. நாங்கள் சரியான பாதையில் சென்றுகொண்டிருக்கிறோம். நம் முதல்வர் தினந்தோறும் தமிழக நிலவரத்தைக் கண்காணித்து ஆலோசனை சொல்லி வருகிறார். டெக்னிக்கல் பிரிவு அதிகாரிகளுக்கு முழுச் சுதந்திரம் கொடுத்து, கொரோனா தடுப்பு மற்றும் நிவாரண பணிகளை ஊக்குவித்து வருகிறார்''என்றார். தொடர்ந்து அவரிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.

``நாலு அமைச்சர்கள், 13 எம்.எல்.ஏ-க்கள், உயர் அதிகாரிகள் பலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்களே... கொரோனா பாதிப்பில் இருந்து எப்படி தற்காத்துக்கொள்கிறீர்கள்?''

``முன்னரே பேட்டியில் சொன்னதுதான். மாஸ்க் அணிவது, சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது, கைகளை அடிக்கடி கழுவுவது. இதைத்தவறாமல் செய்கிறேன். இதுவரை மூன்று முறை கொரோனா டெஸ்ட் செய்துள்ளேன்.''

சென்னை மாநகராட்சி
சென்னை மாநகராட்சி

``கடந்த முறை அளித்த பேட்டியின்போது, சென்னையில் கொஞ்சம் அதிகரிப்பது போல் அதிகரித்து, பிறகு குறையும் என்று சொன்னீர்கள். ஆச்சர்யமாக இருந்தது. நீங்கள் சொன்னதுதான் நடந்தது. அதேநேரம், சென்னைக்கு வெளியே பிற மாவட்டங்களில் அதிகரித்துவிட்டதே?''

``கொரோனா வைரஸ் மனித உடலில் தங்கி, பல மடங்காக பெருக்கம் ஏற்படுவதை `இன்குபேஷன் பீரியட்' (Incubation period) என்று சொல்லுவார்கள். சுமார் 14 நாள்கள் பிடிக்கும். சென்னையில் அந்தக் காலகட்டத்தைத் தாண்டிவிட்டோம். புதியதாகப் பாதிப்பு இல்லை. விரைவில் தினமும் சாராசரியாக நோய் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,000-க்கு கீழே குறையும். சென்னையில் என்னென்ன நடவடிக்கைகளை எடுத்தோமோ, அந்த பாணியில் மற்ற மாவட்டங்களில் தற்போது செயல்பட்டு வருகிறோம். குறிப்பாக, மதுரையில் அதிக கவனம் செலுத்தி வருகிறோம். பொது இடங்களில் நடமாடும் மக்களில் குறிப்பிட்ட சதவிகிதத்தினர் மாஸ்க் அணிவதில்லை. அப்படி இருக்கக் கூடாது என்பதை மீண்டும் மீண்டும் சொல்லி வருகிறோம்.

சில மாவட்டங்களில் கொரோனா டெஸ்ட் பெருவாரியாக எடுத்துவிட்டார்கள். ஒரு நாளைக்கு இவ்வளவுதான் டெஸ்ட் செய்ய முடியும். அதனால்தான், ஒரு சில மாவட்டங்களில் திடீரென ஏறுமுகமாகவும், இறங்கு முகமாகவும் புள்ளி விவரங்கள் வருகின்றன. இவை அடுத்த சிலநாள்களில் சரியாகிவிடும். கொரோனா பாதிப்பு எண்ணிக்கை, மற்ற மாவட்டங்களில் அதிகரித்து பிறகு குறையும். நாங்கள் இப்போது கவனம் செலுத்துவது இறப்பு விகிதத்தைப் பற்றித்தான். இதிலும், மாவட்டங்களுக்கு இடையே பாதிப்புகள் ஏற்றமும் இறக்கமுமாக இருக்கின்றன. அதற்கான மருத்துவக்காரணங்களை ஆராய்ந்துகொண்டிருக்கிறோம். அவை மருத்துவர்களின் கைகளில் இருக்கிறது. அதையும் விரைவில் சரிசெய்துவிடுவோம்.''

``சென்னையில் கொரோனா பரவ 2 காரணங்கள்... 4 சிஸ்டம் சிகிச்சை!'' - விளக்கும் தலைமைச் செயலாளர் சண்முகம்

``சென்னையில் தற்போது, பல்வேறு தொழில் நிறுவனங்கள் இயங்க ஆரம்பித்துவிட்டன. மக்கள் நடமாட்டம், வாகன நடமாட்டம் கணிசமாக அதிகரித்துள்ளது, இதனால், மீண்டும் கொரோனா தொற்று அதிகமாகுமா?''

``நிச்சயமாக இருக்காது. சென்னை மக்கள் இப்போதெல்லாம் கொரோனா நோய் பற்றி முழுவதுமாக தெரிந்துகொண்டு விட்டார்கள். அதேநேரம், மக்கள் ஒவ்வொருவரும் அவரது வயது, ஏற்கனவே உள்ள நோய், முன்தடுப்பு மருந்துகள் என்று பல்வேறு வகையில் கைதேர்ந்துவிட்டார்கள். உஷாராக இருந்தால் மட்டுமே கொரோனா பாதிப்பில் இருந்து தப்பிக்கலாம் என்று நம்புகிறார்கள். இதைத்தான் அரசும் எதிர்பார்த்தது. எனவே, சென்னையில் இனி நோய்த் தொற்று பரவாது. அரசின் ஊரடங்கு போன்ற நடவடிக்கைகளுக்கு நல்லமுறையில் ஒத்துழைப்புத் தருகிறார்கள்.''

Corona virus
Corona virus
Unsplash

``மக்கள் ஒத்துழைப்பு சரி..! அரசு தரப்பில் டெஸ்ட்டுகளை அதிகப்படுத்தும் திட்டம் இருக்கிறதா?''

``தமிழகத்தில் இதுநாள் வரை பி.சி.ஆர் சோதனை முறையைத்தான் பின்பற்றிவருகிறோம். இதுதான் எல்லாவகையிலும் சிறந்தது. இந்தியாவில் டெல்லி போன்ற சில மாநிலங்களில் `ஆன்டிஜன் சோதனை' (Antigen test) முறையைப் பின்பற்றுகிறார்கள். இதன் ரிசல்ட் அவ்வளவு துள்ளியமாக இருக்காது என்பதால், நாம் பயன்படுத்துவதில்லை. வரும் நாள்களில் கூடுதலாக டெஸ்ட்டுகளை செய்ய ஏதுவாக, சோதனை அடிப்படையில் ஆன்டிபாடி டெஸ்ட் - Antibody test (நோய் எதிர்ப்பு பரிசோதனை) முறையைப் பின்பற்ற அதிகாரிகள் தயாராகிவிட்டனர். மனிதரின் ஸ்வாப் இதற்கு தேவையில்லை. ரத்த சாம்பிள்களை இதற்கு போதும். ஒரு ஸ்ட்டிரிப்பில் வைத்து சில நிமிடங்கள் காத்திருந்தால் ரிசல்ட் வந்துவிடும். மிக எளிமையானது. அதேபோல், பி.சி.ஆர் பூல்டு (PCR pooled) என்கிற முறையிலும் மனிதரின் ஸ்வாப் எடுத்து டெஸ்ட் செய்ய அதிகாரிகள் தயராகிவருகிறார்கள். இந்த இரண்டு முறைகளில், சென்னையில் மேலும் டெஸ்டுகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தப்போகிறோம்.''

``இப்படி ஸ்ட்ரிப்பில் ரத்த சாம்பிளை வைக்கும் கிட்ஸ்-ஐ முன்பு சீனாவில் இருந்து வரவழைத்தார்களே... அதே டெக்னாலஜிதானா?''

``யெஸ். நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்துவதுதான் நோக்கம். சீனாவில் வாங்கப்பட்ட கிட்ஸ்களில், ரிசல்ட்டில் குழப்பம் இருந்தது. திருப்பி அனுப்பிவிட்டார்கள். இப்போது வரவழைப்பது - தென்கொரிய நாட்டைச் சேர்ந்த கிட்ஸ். மிகவும் துல்லியமான ரிசல்ட்டைத் தரக்கூடிய நம்பகரமானது. அமெரிக்காவில் ஒரே நேரத்தில் 5 லட்சம், 6 லட்சம் என்கிற அளவில் டெஸ்ட் எடுத்தோம் என்றெல்லாம் நியூஸ் வருகிறதல்லவா? `ஆன்டிபாடி டெஸ்ட்' முறைதான் அங்கே பின்பற்றுகிறார்கள். அதையே இங்கேயும் பின்பற்றப்போகிறோம். கொரிய நாட்டிலிருந்து அதற்கான கிட்ஸ் வரவழைக்க ஏற்பாடு செய்துள்ளோம்.

இதன்படி, ரத்த மாதிரிகளை எடுத்து இரண்டு வகையான டெஸ்ட்டுகளைச் செய்யலாம். ஒன்று - நோய் வந்தவுடன் காட்டும் ஆன்டிபாடி அளவு. இன்னொன்று - நோய் வந்துசென்ற பிறகு காட்டும் ஆன்டிபாடி அளவு. இரண்டு விதத்திலும் ரத்தத்தை டெஸ்ட் செய்யலாம். சென்னையில் உள்ள அனைத்து தனியார் நிறுவன பணியாளர்களுக்கும் ஆன்டிபாடி டெஸ்ட்டை வாரம் ஒரு தடவை செய்யலாம். இதை சென்னை மாநகராட்சி செயல்படுத்த இருக்கிறது. பெரிய பெரிய தொழிற்சாலைகளில் பணியாளர்களுக்கு டெஸ்ட் வாரவாரம் செய்யும்போது, உள்ளூர இன்பெக்ஷன் ஆகாது. மார்க்கெட்டுக்குப் போகிறவர்கள், கொரோனா தடுப்பு போன்ற அத்தியாவசியப் பணியில் உள்ளவர்களை அடிப்படி டெஸ்ட் செய்யலாம்.''

ரேபிட் டெஸ்ட்
ரேபிட் டெஸ்ட்

`` `பி.சி.ஆர் பூல்டு முறை' அதுபற்றி கொஞ்சம் சொல்லுங்களேன்?"

``இந்த முறைப்படி 1000 கிட்ஸ் இருந்தால் 5,000 பேருக்கு டெஸ்ட் செய்துவிடலாம். கொரோனா பாஸிட்டிவ் இருப்பது தெரியவந்தால், சம்பந்தப்பட்டவர்களுக்கு மீண்டும் ஸ்வாப் டெஸ்ட் எடுத்து பி.சி.ஆர். டெஸ்ட் செய்யவேண்டிவரும். ரிசல்ட் வருவதற்கு ஒரு நாள் ஆகும். கொரோனா பாதிப்பு 5% குறைவாக உள்ள ஏரியாக்களில் உள்ளவர்கள் மத்தியில் பி.சி.ஆர். பூல்டு முறையில் டெஸ்ட் செய்யலாம். நல்ல பலன் தரும்.''

அடுத்த கட்டுரைக்கு