Published:Updated:

சீன யுவான் மதிப்பு குறைப்பு... இந்தியாவுக்கு என்ன பாதிப்பு?

வர்த்தகப் போர்

பிரீமியம் ஸ்டோரி

மெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையேயான வர்த்தக யுத்தம் தற்போது பரபரப்பான உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. சமீபத்தில், சீனா மற்றும் அமெரிக்காவிற்கும் இடையேயான பேச்சுவார்த்தைகள் மீண்டும் தொடங்கியபோது, வர்த்தகப்போர் பதற்றங்கள் சற்றே தணிந்ததுபோலத்தான் தோன்றியது.

ஆனால், சீனாவிலிருந்து இறக்குமதியாகும் 300 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருள்களின்மீது புதிதாக 10% வரியை ட்ரம்ப் அதிரடியாக அறிவித்ததும் பரபரப்பு மீண்டும் தொற்றிக் கொண்டது. இதற்குப் பதிலடியாக, அமெரிக்காவிலிருந்து விவசாயப் பொருள்களின் இறக்குமதியைத் தடை செய்வதாக சீனா அறிவித்தது. அது போதாது என்று, சீனாவின் நாணயமான யுவானின் (அமெரிக்க டாலருக்கு நிகரான) மதிப்பை பத்து ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சீன மத்திய வங்கி இறக்கியது. இதற்குக் கடுமையான கண்டனம் தெரிவித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப், சீனா ஒரு ‘நாணய மோசடி நாடு’ (Currency manipulator) என்று சாடினார். அமெரிக்க அரசும் அதிகாரப்பூர்வமான முறையில், சர்வதேச நிதியத்திடம் சீனா மீது குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்துள்ளது.

சீன யுவான் மதிப்பு குறைப்பு... இந்தியாவுக்கு என்ன பாதிப்பு?

அமெரிக்கா சீனா இடையேயான இந்தப் புதிய மோதலின் தொடர்ச்சியாக, இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளின் பங்குச் சந்தைகள் கடும் வீழ்ச்சியைச் சந்தித்தன. நாணயச் சந்தைகளும் சரிவைச் சந்தித்தன. அதேசமயம், தங்கம் மட்டும் புதிய உச்சத்தைத் தொட்டது. இந்த நிகழ்வுகளின் பின்னணி என்ன, இந்தியச் சந்தைகளுக்கான பாதிப்புகள் என்னவாக இருக்கும் என்பதை இங்கு பார்ப்போம்.

சீனா வளர்ந்த வரலாறு

இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகள் போலன்றி, சீன மக்களுக்குக் கருத்துச் சுதந்திரம் உள்ளிட்ட பல ஜனநாயக உரிமைகள் மறுக்கப் பட்டுள்ளன. அதேசமயம், அதீத பொருளாதார வளர்ச்சி மற்றும் அடிப்படைக் கட்டுமான வசதிகள் பெருக்கம் ஆகியவற்றின் காரணமாக அந்த நாட்டு மக்களின் வாழ்க்கைத்தரம் கடந்த சில ஆண்டுகளில் வெகுவாக உயர்ந்துள்ளது.

தொடக்கத்தில் மலிவான பொருள்களைச் சந்தைப்படுத்தியதன் வாயிலாக சர்வதேசச் சந்தையை ஆக்கிரமித்த சீனா, காலப்போக்கில், நவீன தொழில்நுட்பத்தையும் எளிதாகச் சுவீகரித்துக்கொண்டது. இத்துடன், தனது நாணயமான யுவான் மதிப்பை மற்ற முக்கிய நாணயங்களுடன் ஒப்பீட்டு ரீதியாகச் செயற்கை யான முறையில் குறைவாகவே இருக்கும்படி செய்த சீன அரசு, சர்வதேச சந்தையில் ஏகபோக ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியது.

சீன யுவான் மதிப்பு குறைப்பு... இந்தியாவுக்கு என்ன பாதிப்பு?

மேலும், ஏற்றுமதியின்மூலம் ஈட்டிய டாலர்களின் உதவியுடன், ஏழ்மையான ஆசிய மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் முதலீடு செய்ய துவங்கிய சீனா, சோவியத் வீழ்ச்சிக்குப்பிறகு உருவான பெரும் வெற்றிடத்தைப் பயன்படுத்திக்கொண்டு அமெரிக்காவிற்கு நிகரான வல்லரசாக வலம்வர முயன்றது. அதீதமான பொருளாதார முன்னேற்றம் மற்றும் சிறப்பான அடிப்படைக் கட்டுமான வளர்ச்சி ஆகியவை மக்களின் வாழ்க்கைத்தரத்தை வெகுவாக உயர்த்தியதுடன் மக்களின் ஜனநாயகத் தேடல்களைப் பெருமளவுக்கு மட்டுப் படுத்தியது. அமெரிக்காவிற்கு நிகரான வல்லரசு பாவனைகள், சீன மக்களிடையே ஒருவித பெருமிதத்தையும் உருவாக்கியது.

சீனாவைக் கலக்கும் உள்நாட்டுக் கலவரம்

ஆனால், அமெரிக்காவின் அதிபராக ட்ரம்ப் வந்தார்; சீனாவுக்குத் தொல்லையும் வரத் தொடங்கியது. ட்ரம்ப்பின் அதிரடியான நடவடிக்கைகள், சீனாவின் பொருளாதாரத்தைப் பெருமளவு பாதித்துள்ளன. கடந்த 27 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சீனாவின் பொருளாதார வளர்ச்சி சரிவடைந்ததுடன் பொருளாதார பாதிப்புகள் அரசியல் அரங்கிலும் எதிரொலிக்கத் தொடங்கியிருப்பது, சீன அரசின் தலைமைக்கு அதிக அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

சீன யுவான் மதிப்பு குறைப்பு... இந்தியாவுக்கு என்ன பாதிப்பு?

குறிப்பாக, கைதிகள் பரிமாற்றம் குறித்த விவகாரத்தில் ஹாங்காங் நகரத்தில் மக்கள் போராட்டங்கள் இதுவரை இல்லாத அளவிற்கு அதிகரித்துள்ளன. பொதுவாகவே, மக்கள் போராட்டங்களைக் கடுமையாக அணுகும் சீன அரசு, இந்த முறை மென்மையாக நடந்து கொண்டது. கைதிகள் பரிமாற்ற சட்டத்தைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்தது. இருந்தபோதும் மக்களின் தொடர் போராட்டத்தின் பின்னணியில் பொருளாதாரப் பின்னடைவு இருப்பதாகவே தோன்றுகிறது. ஹாங்காங்கில் நடைபெறும் இந்தப் போராட்டங்கள் சீனாவின் உள்பகுதிக்கும் பரவுவதைக் கண்டிப்பாக சீன அரசு விரும்பாது. எனவேதான், ட்ரம்ப்பின் இறக்குமதி வரி விதிப்பினால் ஏற்படக்கூடிய விலை உயர்வு பாதிப்புகளை ஓரளவுக்குச் சமன் செய்வதற்காகப் பத்து ஆண்டுகளில் இல்லாத அளவாக, யுவான் நாணயத்தை (அமெரிக்க டாலருக்கு நிகராக) மதிப்பிழக்கச் செய்துள்ளது சீனா.

இந்தியாவில் ரியல் எஸ்டேட், வாகன விற்பனை ஆகிய துறைகளின் வீழ்ச்சி ஒருபக்கம் இருக்க, சாதாரண மக்கள் பயன்படுத்தும் நுகர்பொருள் விற்பனையில்கூட தளர்ச்சி ஏற்பட்டிருப்பது பலரையும் கவலைகொள்ளச் செய்திருக்கிறது!

இந்தச் சூழ்நிலையில், அமெரிக்கா மற்றும் சீனாவில் ஒரே மாதிரி யான இறக்குமதி வரிகள் இருக்க வேண்டும், யுவான் நாணயத்தின் மதிப்பை ஒரே மாதிரி வைத்திருக்க வேண்டும் என்பது போன்ற ட்ரம்பின் கடும் நிபந்தனைகளுக்கு உடன்படுவது சீன அரசுக்கு அரசியல் மற்றும் பொருளாதார ரீதியாகச் சாத்தியமற்ற காரியம்.

ட்ரம்ப்பின் உண்மையான இலக்கு சீனாவா?

வெளிப்பார்வைக்கு வேண்டுமானால், ட்ரம்ப்பின் இலக்குகள் சீனாவின் அரசியல் மற்றும் பொருளாதாரச் செல்வாக்கை மட்டுப்படுத்துவது மற்றும் அமெரிக்காவின் இழந்த பெருமையை மீட்டெடுப்பது போன்றவையாகத் தோன்றலாம். ஆனால், அடிப்படையில் ட்ரம்ப்பும் அடுத்த தேர்தலில் மீண்டும் ஆட்சிக்கு வரவிரும்பும் ஒரு சராசரி அரசியல்வாதிதான் என்பதை மறக்கக் கூடாது. அவரது கோஷங்கள் சீனாவை நோக்கியிருந்தாலும், இலக்கு என்னவோ அமெரிக்க வாக்காளர்கள்தான்.

ஆர்.மோகனப் பிரபு, CFA
ஆர்.மோகனப் பிரபு, CFA

பொதுவாக, தேர்தல் ஜனநாயகத்தில், ஆட்சியில் தொடர விரும்பும் அரசியல் வாதிகள் வேண்டுவது அதிகப்படியான வேலை வாய்ப்புகளை உருவாக்கும் ரீதியான பொருளாதார வளர்ச்சியைத்தான். வேகமான வளர்ச்சிக்கு எளிதான பாதையாக அவர்கள் தேர்ந்தெடுப்பது குறைவான வட்டி விகிதத்தைத்தான். ஆனால், அமெரிக்கா போன்று ஜனநாயகம் முதிர்ச்சி அடைந்துள்ள ஒரு நாட்டில், வட்டி விகிதங்களைக் கட்டுப்படுத்தும் பொறுப்பு மத்திய வங்கிக்கு வழங்கப்பட்டுள்ளது. மத்திய வங்கியோ, தேர்தலைச் சந்திக்கவேண்டியிராத ஒரு தன்னாட்சி அமைப்பாகும். மேலும், எளிய மக்களைப் பாதிக்காத வகையில், பணவீக்கத்தை மட்டுக்குள் வைத்திருக்க வேண்டிய ஒரு மிகப் பெரிய பொறுப்பு மத்திய வங்கிக்கு உண்டு.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தற்போதைய அமெரிக்காவின் மந்தமான பொருளாதாரச் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, அமெரிக்க மத்திய வங்கியான ஃபெடரல் ரிசர்வ், தனது கொள்கை வட்டி விகிதத்தை 0.25% குறைத்தாலும், ட்ரம்பிற்கு மட்டும் போதவில்லை. இன்னும் அதிகமாகவும் வேகமாகவும் வட்டி விகிதத்தைக் குறைக்க வேண்டும் என்று ட்ரம்ப் வலியுறுத்துகிறார். மற்ற நாடுகளைப்போல, மத்திய வங்கியை நேரடி அரசியல் தலைமையின்கீழ் கொண்டுவர முடியாத நிலையில் உள்ள ட்ரம்ப், சீனாவின் மீது நேரடியாகவும் அமெரிக்காவின் மத்திய வங்கியின்மீது மறைமுகமாகவும் குற்றச் சாட்டுகளை வைப்பதன் மூலம் ஃபெடரல் ரிசர்வ் மீது ஒருவித தார்மீக நிர்பந்தத்தை உருவாக்கி வருகிறார். இதனால் தனது தேர்தல் வெற்றி எளிதாகும் என்பது ட்ரம்பின் திட்டம்.

சீன யுவான் மதிப்பு குறைப்பு... இந்தியாவுக்கு என்ன பாதிப்பு?

இந்திய சந்தைகளுக்கு என்ன பாதிப்பு..?

சீனா மற்றும் ட்ரம்ப் ஆகிய இருதரப்பிற்கும் உள்நாட்டு அழுத்தங்கள் அதிகம் இருப்பதால், தத்தமது நிலையிலிருந்து பின்வாங்குவது தற்போதைக்கு கடினமானதாகவே இருக்கும். இந்தச் சூழ்நிலையில், உலகப் பொருளாதார முன்னேற்றம் தடை பெறவே வாய்ப்புகள் அதிகம். பொருளாதார முன்னேற்றத்திற்கு உள்நாட்டுச் சந்தையையே அதிகம் நம்பியிருந் தாலும்கூட, இந்தியாவும் இந்த வர்த்தக யுத்தத்தினால் ஓரளவுக்குப் பாதிப்புகளை சந்திக்கவே நேரிடும். அதேசமயம், பெட்ரோலியம் மற்றும் கமாடிட்டிச் சந்தைகளின் சரிவு, இறக்கு மதியைப் பெருமளவுக்குச் சார்ந்துள்ள இந்தியா போன்றதொரு நாட்டிற்குச் சாதகமாக அமையும்.

மேலும், இந்தியாவின் உள்நாட்டுப் பொருளாதார நிலைமையும் தற்போது மந்தமாகவே உள்ளது. ரியல் எஸ்டேட், வாகன விற்பனை ஆகிய துறைகளின் வீழ்ச்சி ஒருபக்கம் இருக்க, சாதாரண மக்கள் பயன்படுத்தும் நுகர்பொருள் விற்பனையில்கூட தளர்ச்சி ஏற்பட்டிருப்பது பலரையும் கவலைகொள்ளச் செய்திருக்கிறது. இதற்கு முக்கியக் காரணங்களாக வேலைவாய்ப்பின்மை மற்றும் நுகர்வோரின் நம்பிக்கைக் குறைபாடு ஆகியவை கூறப்படுகின்றன. இவற்றைச் சீர்செய்வது மத்திய அரசின் கடமை.

(குறிப்பு: இந்தக் கட்டுரையில் சொல்லப் பட்டுள்ளவை கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகளே!)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு