Published:Updated:

`சீமானின் பேச்சை மக்கள் ரசிக்கவில்லை; புறக்கணிக்கிறார்கள்!'- அமைச்சர் கடம்பூர் ராஜு

``வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்து வந்தால் முதல்வருக்குப் பாராட்டு விழா நடத்த தயார்” என ஸ்டாலின் கூறினார். முதல்வரும் அதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். ஆனால், ஸ்டாலின் சொன்னதுபோல முதல்வருக்கு பாராட்டுக் கூட்டம் நடத்தினாரா?” என அமைச்சர் கடம்பூர் ராஜு கேள்வி எழுப்பியுள்ளார்.

அமைச்சர் கடம்பூர் ராஜு
அமைச்சர் கடம்பூர் ராஜு

அ.தி.மு.க-வின் 48வது ஆண்டு தொடக்க விழாவையொட்டி தூத்துக்குடி பழைய மாநகராட்சியில் உள்ள மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் முழு உருவச் சிலைக்கு அமைச்சர் கடம்பூர் ராஜு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதைத்தொடர்ந்து அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசுகையில், ``நாம்தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானின் பேச்சை மக்கள் ரசிக்கவில்லை. அவர் தரம் தாழ்ந்து விமர்சிக்கிறார். அதனால், மக்களால் புறக்கணிக்கப்படுவார். மக்களால் புறக்கணிக்கப்படுவதுதான் அவருக்குக் கொடுக்கும் மிகப்பெரிய தண்டனை.

கடம்பூர் ராஜு
கடம்பூர் ராஜு

`வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்து வந்தால் முதல்வருக்குப் பாராட்டு விழா நடத்த நான் தயார்' என ஸ்டாலின் கூறினார். அதற்குப் பதிலடியாக முதல்வர், முதலீடுகளை ஈர்த்து வந்தது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். ஆனால், ஸ்டாலின் சொன்னதுபோல முதல்வருக்கு பாராட்டுக் கூட்டம் நடத்தினாரா? `சொன்ன சொல்லிலிருந்து பின் வாங்குவதற்காக, மக்களிடையே தவறான தகவல்களைச் சொல்வதற்காக ஸ்டாலினுக்கு நோபல் பரிசு கொடுக்கலாம்' என முதலமைச்சர் சொல்லியிருப்பது பொருத்தமாகத்தான் இருக்கிறது.

ஜனநாயக நாட்டில் ஊழலுக்காகக் கலைக்கப்பட்ட ஒரே ஆட்சி தி.மு.க ஆட்சிதான். தி.மு.க என்பது மூன்றெழுத்துபோல, ஊழல் என்பதும் மூன்றெழுத்துதான். எனவே, அவர்கள் ஊழலைப் பற்றி பேசுவது சாத்தான் வேதம் ஓதுவதுபோல் உள்ளது. ஸ்டாலின் இன்னும் முதல்வர் கனவிலேயே இருக்கிறார். அவர் கனவு கடைசி வரையில் கனவாகவே மட்டும்தான் இருக்கும். நடைபெறவுள்ள இரண்டு தொகுதி இடைத்தேர்தலில் மிக அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம். மக்களின் எழுச்சி அதிகமாக உள்ளது. நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் களத்திலேயே இல்லை. அந்தத் தொகுதி எம்.எல்.ஏ-வாக இருந்த வசந்தகுமார் மக்களைத் தவிக்க விட்டுவிட்டு நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு அங்கு சென்றுவிட்டார் என்ற கோபம் மக்களிடையே உள்ளது.

கடம்பூர் ராஜூ
கடம்பூர் ராஜூ

எனவே, இந்த இடைத்தேர்தலில் அ.தி.மு.க-தான் மகத்தான வெற்றியைப் பெறும். நிச்சயமாக இந்தத் தேர்தல் வாக்காளர் மத்தியில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும். அ.தி.மு.க அரசுக்குதான் மக்களின் ஆதரவு என்பதை இத்தேர்தல் நிரூபிக்கும். அடிப்படை வசதிகளை எல்லாம் நிறைவேற்றிக் கொடுத்திருப்பதனால்தான் தமிழகத்தில் அ.தி.மு.க-வின் அரசு கடந்த 31 ஆண்டுகளாக ஆட்சியில் நீடித்துள்ளது. இதன் பிரதிபலிப்பாக இடைத்தேர்தலில் மக்கள் அ.தி.மு.க-வுக்கு வாக்களிப்பார்கள். அதன் பிறகு ஸ்டாலின் என்ன கருத்து கூறுகிறார் என்பதைப் பார்ப்போம்” என்றார்.