Published:Updated:

``முப்படைகளுக்கும் ஒரே தளபதி!” - சீர்திருத்தமா... சர்வாதிகாரமா?

Chief of Defence Staff
Chief of Defence Staff

`முப்படைகளுக்கும் ஒரே தளபதி (Chief of Defence Staff - CDS)’ என பிரதமர் மோடி தன்னுடைய சுதந்திர தின உரையில் அறிவித்திருந்தார். பிரதமரின் இந்த அறிவிப்பு, மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

இந்த மாற்றம் செயல்படுத்தப்பட்டால், நீண்டகாலத்துக்குப் பிறகு பாதுகாப்புத் துறையில் மேற்கொள்ளப்படும் முக்கியமான மாற்றமாக அமையும். 2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கான அறிக்கையில், காங்கிரஸ் கட்சியும் CDS உருவாக்கப்படும் என அறிவித்திருந்தது. பிரதமரின் இந்த அறிவிப்பை, பஞ்சாப் முதல்வர் அமரேந்தர் சிங் உள்ளிட்ட பிரதான காங்கிரஸ் கட்சித் தலைவர்களுமே வரவேற்றனர். இந்தப் புதிய அறிவிப்பின் தேவை, முக்கியத்துவம், சாதக, பாதகங்களை இக்கட்டுரையின் வாயிலாகத் தெரிந்துகொள்வோம்.

Indian Army
Indian Army
AP

`கார்கில் போருக்குப் பிறகு, பாதுகாப்புத்துறையில் செய்யப்பட வேண்டிய சீர்திருத்தங்கள் தொடர்பாக ஆராய, அப்போதைய பிரதமர் வாஜ்பாய் அரசால் கே.சுப்ரமணியன் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டது. அக்குழுவின் பரிந்துரையின் அடிப்படையில், 'முப்படைகளுக்கும் ஒரே தளபதி' உருவாக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. சுப்ரமணியன் கமிட்டியின் பரிந்துரைகளை ஆராய, பா.ஜ.க மூத்த தலைவர் அத்வானி தலைமையில் அமைச்சர்கள் குழு உருவாக்கப்பட்டது.

`CDS உருவாக்குவது தொடர்பான விஷயத்தை, அனைத்து அரசியல் கட்சிகளையும் கலந்தாலோசித்து ஒருமித்த கருத்தை உருவாக்கிய பின், பார்த்துக்கொள்ளலாம்' என அமைச்சர்கள் குழு தெரிவித்தது. அதன் பின்னர் பாதுகாப்புத்துறை சீர்திருத்தங்கள் தொடர்பாக ஆராய அமைக்கப்பட்ட நரேஷ் சந்திரா கமிட்டி மற்றும் ஷேகட்கர் கமிட்டி ’முப்படைகளுக்கும் ஒரே தளபதி’ உருவாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியிருந்தது.

Indian navy
Indian navy
Indian Navy

இருப்பினும், CDS உருவாக்கம் தொடர்பாகப் பலமுறை விவாதிக்கப்பட்டிருந்தாலும், அரசியல் கட்சிகளிடையே இது தொடர்பாக ஒருமித்த கருத்து எட்டமுடியவில்லை என்பதால், செயல்வடிவம் பெறாமலே இருந்துவந்தது. தற்போது பிரதமர் மோடியின் அறிவிப்பு, இதுதொடர்பான விவாதங்களை மீண்டும் உருவாக்கியுள்ளது.

ஒய்வுபெற்ற ராணுவ அதிகாரியும் பாதுகாப்புத் துறை நிபுணருமான ஹரிகரனிடம் இதுகுறித்துப் பேசினோம்... ''கார்கில் போர் சமயத்தில் பாகிஸ்தான் படைகள் நமது எல்லைக்குள் ஊடுருவியதே இந்தியாவுக்கு இரண்டு வாரங்கள் கழித்துதான் தெரியவந்தது. உளவுத்துறைகளுக்கு இடையே சரியான ஒருங்கிணைப்பு இல்லாமல் போனது மிகப்பெரிய குறைபாடாகப் பார்க்கப்பட்டது. அதனால்தான் பாதுகாப்புப் படைகளில் செய்ய வேண்டிய சீர்திருத்தங்களுக்காக கே.சுப்ரமணியன் கமிட்டி அமைத்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

Hariharan
Hariharan

அதன் பரிந்துரைகளில் மிகவும் முதன்மையானது ’முப்படைகளுக்கும் ஒரே தளபதி (Chief of Defence Staff - CDS)’ உருவாக்குவது. ஆனால், அது இன்றுவரையில் செயல்வடிவம் பெறாமலே இருப்பது துரதிர்ஷ்டவசமானது. நேரு பிரதமராக இருந்தபோது வாரம் ஒருமுறை முப்படைத் தளபதிகளைச் சந்தித்து ஆலோசனைகளை மேற்கொள்வார். அந்த நடைமுறை, பிற்காலத்தில் இல்லாமல் போனது. தற்போது ராணுவம், கடற்படை, விமானப்படைக்குத் தனித்தனியாகத் தளபதிகள் உள்ளனர்.

இவர்களை உள்ளடக்கி ’Chiefs of Staff Committee’ செயல்படும், மூவருள் பணியில் மூத்தவர் ஓய்வுபெறுகிற காலம்வரையில் அந்த வாரியத்தின் தலைவராக (Chief of Army Staff - COAS) இருப்பார். தேவைக்கேற்ப முப்படைகளுக்கும் இடையே தகவல் பரிமாற்றத்தின் மூலம் முடிவுகள் எடுக்கப்பட்டு உத்தரவுகள் வழங்கப்படும்.

Indian Air Force
Indian Air Force

ஆனால், போர் என்பது தற்போது களயுத்தத்தைத் தாண்டி, அணு யுத்தம், சைபர் யுத்தம் என விரிவடைந்து வருகிற சூழலில், அதற்கேற்ப துரிதமாக முடிவுகள் எடுக்கப்பட வேண்டும். அதற்கு அரசுக்கு ஆலோசனைகள் வழங்க அனைத்துப் படைகளையும் ஒருங்கிணைத்த தலைமை என்பது அவசியமாகிறது. முப்படைக்கும் தனித்தளபதிகளின் நிலையில் எந்த மாற்றமும் இருக்கப்போவதில்லை. இவர் மற்ற மூன்று தளபதிகளுக்கும் மேலான நிலையில் இருப்பார். முப்படைகளுக்கும் தொடர்புப் புள்ளியாக அனைத்து விஷயங்களையும் ஒருங்கிணைத்து, அரசுக்கும் பிரதமருக்கும் பாதுகாப்பு, போர் தொடர்பான ஆலோசனைகள் வழங்குவதில் முதன்மையானவராக இருப்பார்.

தற்போது பாதுகாப்புத்துறை செயலர்தான் அரசுக்கு ஆலோசனை வழங்குகிறார். ஆனால், பாதுகாப்பு அமைச்சகத்தின் உள்ள அனைவருமே குடிமைப்பணிகளில் இருந்து வருபவர்கள். பாதுகாப்புத்துறை சார்ந்த பின்புலம் கொண்டவர்கள் இதில் இடம்பெற வேண்டும். பல மேற்குலக நாடுகளிலும் அப்படித்தான் உள்ளது. அதனால், பாதுகாப்புத்துறை செயலகத்தில் இருப்பவர்களிடம் இதற்கு எதிர்ப்புகள் வருவதுண்டு. இந்தியா அனைத்துச் சீர்திருத்தங்களிலுமே பின்தங்கிதான் உள்ளது. இந்த மாற்றம் 10 ஆண்டுகளுக்கு முன்னரே வந்திருக்க வேண்டும். இது மிகவும் அவசியமான ஒன்று” என்றார்.

"Army and Nation - The Military and Indian Democracy Since Independence
"Army and Nation - The Military and Indian Democracy Since Independence

இதைப்போலவே சுதந்திரத்துக்குப் பிறகு, இந்தியாவில் ராணுவமும் ஜனநாயகமும் எவ்வாறு மோதிக்கொள்ளாமல் இணக்கமாக இருந்தன என்பது பற்றி, அண்டை நாடான பாகிஸ்தானுடன் ஒப்பிட்டு "Army and Nation - The Military and Indian Democracy Since Independence" என்கிற புத்தகத்தை ஸ்டீவன் ஐ.வில்கின்சன் என்கிற யேல் பல்கலைக்கழகப் பேராசிரியர் எழுதியிருந்தார்.

அதில் அவர் குறிப்பிடுபவை, ``ஒரே நேரத்தில் இரண்டு நாடுகளும் சுதந்திரம் பெற்றபோதிலும், ஜனநாயகத்தில் ராணுவத்தின் அதிகாரத்தை, ஆதிக்கத்தைக் குறைக்க இந்தியா செய்ய முனைந்த சீர்திருத்தங்களைப் பாகிஸ்தான் செய்யத்தவறியது. அதனால்தான் அங்கு அரசியலில் ராணுவம் தலையிட நேர்ந்து பல பத்தாண்டுகளுக்கும் தொடர்ந்து சர்வாதிகார ராணுவ ஆட்சி நடைபெற்றது. இந்தியா செய்த சீர்திருத்தங்களுள் முதன்மையானது ராணுவத்துக்கு அனைத்துப் பிரதேசங்களில் இருந்து வீரர்களைத் தேர்வுசெய்து, ராணுவத்தில் குறிப்பிட்ட பிரதேசத்தின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்தியது. இரண்டாவது ராணுவத் தளபதிகளை அரசியல் விவகாரங்களிலிருந்து விலக்கி, அவர்களுக்கு ஓய்வுக்குப் பிறகு மிகத் தொலைவான இடங்களில் தூதர் பதவிகளை வழங்கியது. ராணுவத்துக்கென தனி உளவுத்துறை என இல்லாமல் ஒருங்கிணைந்த உளவுத்துறையை உருவாக்கி ராணுவ அதிகாரிகள், தளபதிகளை ஓய்வுக்குப் பிறகும் கண்காணிப்பிலேயே வைத்தது.

இத்தகைய முன்னெச்சரிக்கை, சீர்திருத்த நடவடிக்கைகளை ஆசிரியர் ‘Coup proofing', அதாவது ராணுவத்தின் மூலம் ஆட்சிக் கவிழ்ப்பு ஏற்படுவதிலிருந்து காப்பது எனக் குறிப்பிடுகிறார். இதில் மிகவும் முதன்மையானதாக ஆசிரியர் மேற்கோள் காட்டுவது சுதந்திரத்துக்குப் பிறகு முப்படைத் தளபதியை அமைச்சரவைப் பொறுப்பிலிருந்து நீக்கி, அவருக்கான அதிகாரத்தைக் குறைத்து பாதுகாப்பு அமைச்சகத்தின்கீழ் கொண்டுவந்தது. பின்னர் முப்படைகளுக்கும் ஒருங்கிணைந்த தலைமை அல்லாமல், மூன்று படைகளுக்கும் தனித்தனி தலைமையை உருவாக்கி, அவர்கள் ஒருங்கிணைந்து செயல்படுகிற நடைமுறையை உருவாக்கியது. பாதுகாப்புப் படைகளுக்கு இடையே அதிகாரத்தைப் பிரித்தளித்தது. அரசுக்கு எதிராக அவை ஒன்றிணையாமல் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குக்கீழ் செயல்படுவதில் மிக முக்கியமான பங்காற்றியது. தளபதிகளுக்கான பதவிக்காலத்தை மூன்று ஆண்டுகள் என நிர்ணயித்து, அவர்களை அரசியல் முடிவுகளில் இருந்து விலக்கி வைத்ததும் குறிப்பிடத்தக்கது. நீண்டகாலம் ராணுவத் தளபதிகள் பதவியில் இருப்பதால் அரசியல் அபிலாஷைகள் உருவாக நேரிடும் என்பதை நிர்ணயித்த பதவிக்காலத்துக்குக் காரணமாகக் குறிப்பிடுகிறார்.

Steven I. Wilkinson
Steven I. Wilkinson

1962 சீன யுத்தத்தில் இத்தகைய சீர்திருத்தங்களால், படைகள் ஒருங்கிணைப்பில் தொய்வு ஏற்பட்டது என்கிறபோதிலும், இந்தியாவின் அண்டை நாடுகளில் (குறிப்பாக பாகிஸ்தானில்) ஏற்பட்டது போன்றதான ராணுவத் தலையீடு, ஆட்சிக் கவிழ்ப்பு போன்ற சர்வாதிகார இடையூறுகள் என்பது ஏற்படாமல் தவிர்ப்பதில் மிக முக்கியமான பங்காற்றியது. சீன யுத்தத்துக்குப் பிறகே CDS உருவாக்க வேண்டும் என்கிற பரவலாக எழுந்தபோதிலும், இதுநாள் வரையில் எந்த அரசும் அதைச் செயல்படுத்த எண்ணவில்லை” என்கிறார்.

முப்படைகளுக்கும் ஒரே தளபதி என்ற பிரதமரின் அறிவிப்பு, ராணுவச் சீர்திருத்தத்துக்கு உதவுமா, சர்வாதிகாரத்துக்கு வழிவகுக்குமா என்பதற்குக் காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.

அடுத்த கட்டுரைக்கு