அரசியல்
அலசல்
Published:Updated:

மதமாற்ற சர்ச்சை... நேரடியாக ஆளுநருக்கு அறிக்கை... கலைக்கப்பட்ட குழந்தைகள் ஆணையம்!

ஆளுநர் ஆர்.என்.ரவி, சரஸ்வதி, சரண்யா
பிரீமியம் ஸ்டோரி
News
ஆளுநர் ஆர்.என்.ரவி, சரஸ்வதி, சரண்யா

சம்பந்தப்பட்ட பள்ளியில் பயிலும் மாணவிகள் எல்லோருக்கும் பெற்றோர்கள் இருக்கிறார்கள். எனவே, அந்தப் பள்ளி சிறார் நீதிச் சட்டத்தின் கீழ் வராது

சென்னை ராயப்பேட்டையிலுள்ள சி.எஸ்.ஐ மோகனன் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, மயிலாப்பூர் அந்தோணி பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய இரண்டு கிறிஸ்தவப் பள்ளிகளில் கடந்த செப். 6-ம் தேதி திடீர் ஆய்வு மேற்கொண்டது தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம். அதில், சி.எஸ்.ஐ மோகனன் பள்ளியில், ‘மதமாற்றம்’ நடக்கிறது என்று சொன்ன கையோடு, இது குறித்து தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்துக்கு செப். 9-ம் தேதி அறிக்கையும் அனுப்பியது மாநில ஆணையம்.

இந்த ‘மதமாற்ற’ விவகாரம் குறித்து விசாரித்து விளக்கம் அளிக்க வேண்டும் எனத் தலைமைச் செயலாளர் இறையன்பு, டி.ஜி.பி சைலேந்திர பாபு ஆகியோருக்கு தேசிய ஆணையம் செப். 10-ம் தேதி கடிதம் அனுப்பியிருக்கிறது. இப்படி ஒரு கடிதம் வந்த பிறகுதான் தமிழ்நாடு அரசின் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறைக்கு அறிக்கையைச் சமர்ப்பிக்காமல், தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் நேரடியாக தேசிய ஆணையத்துக்கு அறிக்கை அனுப்பிய விவகாரமே வெளியில் தெரிந்திருக்கிறது. இது போதாதென்று செப். 13-ம் தேதி, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் ஆணையத் தலைவர் சரஸ்வதியும், உறுப்பினர் சரண்யாவும் நேரில் சென்று அறிக்கையை வழங்கினார்கள். அது பெரும் சர்ச்சையாகி, ஆணையத்தின் தலைவர், உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பதவிகளையும் பறித்து ஆணையத்தைக் கலைத்திருக்கிறது தமிழ்நாடு அரசு.

மதமாற்ற சர்ச்சை... நேரடியாக ஆளுநருக்கு அறிக்கை... கலைக்கப்பட்ட குழந்தைகள் ஆணையம்!

இது குறித்து ஆணையத்தின் உறுப்பினராக இருந்த சரண்யா ஜெய்குமாரிடம் பேசினோம். “அந்த இரண்டு பள்ளிகளிலும் ஆய்வு மேற்கொண்டபோது, அதில் அந்தோணி பெண்கள் மேல்நிலைப் பள்ளி சிறார் நீதிச் சட்டத்தின்படி (Juvenile Justice Act) அங்கீகாரம் பெற்று இயங்குவது தெரிந்தது. ஆனால், சி.எஸ்.ஐ பள்ளி சிறார் நீதிச் சட்டம், தமிழ்நாடு சிறார் மகளிருக்கான இல்லங்கள் மற்றும் விடுதிகள் முறைப்படுத்தல் சட்டத்தின் கீழ் அங்கீகாரம் எதுவும் பெறவில்லை என்பது தெரியவந்தது. மேலும், அங்கிருந்த மாணவிகள், ‘எங்களை பைபிள் படிக்கச் சொல்கிறார்கள்; பூ, பொட்டு வைக்க அனுமதிப்பதில்லை’ என்று எங்களிடம் புகாரளித்தனர். இது குறித்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகளைத் தொடர்புகொண்டு பேசியும் எந்தப் பயனுமில்லை. எனவேதான், தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்துக்கு எழுதினோம். அதேபோல, ஆய்வறிக்கையை முதல்வரிடம் சமர்ப்பிக்க நான்கு முறை வாய்ப்பு கேட்டும் அனுமதி கிடைக்கவில்லை. எனவேதான், ஆளுநரிடம் சமர்ப்பித்தோம். கடந்த அ.தி.மு.க ஆட்சியில் நியமிக்கப்பட்ட ஆணையம் என்பதாலேயே, தி.மு.க அரசு எங்களைக் கடந்த ஜூன் மாதம் பதவிநீக்கம் செய்தது. நீதிமன்றத்தை நாடியே நாங்கள் மீண்டும் பதவிகளைப் பெற்றோம். இந்த விவகாரத்துக்குப் பின்னர், எங்களை மீண்டும் பதவிநீக்கம் செய்திருக்கிறார்கள்” என்றார் கூலாக.

மதமாற்ற சர்ச்சை... நேரடியாக ஆளுநருக்கு அறிக்கை... கலைக்கப்பட்ட குழந்தைகள் ஆணையம்!

இது பற்றிப் பள்ளித் தரப்பில் கேட்டபோது, “நூறு ஆண்டுகளுக்கும் மேலாகச் செயல்படும் பள்ளி இது. நாங்கள் தவறு செய்திருந்தால், அரசு எங்கள்மீது நடவடிக்கை எடுக்கட்டும்” என்றனர் உறுதியான குரலில்.

சமூகப் பாதுகாப்பு இயக்குநர் வளர்மதியிடம் கேட்டபோது, “சம்பந்தப்பட்ட பள்ளியில் பயிலும் மாணவிகள் எல்லோருக்கும் பெற்றோர்கள் இருக்கிறார்கள். எனவே, அந்தப் பள்ளி சிறார் நீதிச் சட்டத்தின் கீழ் வராது. இந்த அடிப்படை விஷயம்கூட ஆணையத்தில் இருப்பவர்களுக்குத் தெரியவில்லை. அதேபோல, சிறார் மகளிருக்கான இல்லங்கள் மற்றும் விடுதிகள் முறைப்படுத்துதல் சட்டத்தின் கீழ் அங்கீகாரம் பெற பள்ளி விண்ணப்பித்திருக்கிறது. மேலும், பள்ளி தொடர்பாக எந்தப் புகாரும் வராத நிலையில் நேரடி ஆய்வு மேற்கொண்டிருக்கின்றனர். இது தவறில்லை என்றாலும் ஆய்வு குறித்து, சமூகப் பாதுகாப்பு இயக்குநர் என்ற முறையில் எனக்கோ அல்லது சமூக நலத்துறையிடமோ அறிக்கை அளித் திருக்க வேண்டும். நேரடியாக தேசிய ஆணையத்துக்கு அறிக்கை அனுப்பிய தில் நிச்சயம் உள் நோக்கம் இருக்கிறது” என்றார்.

இது தொடர்பாக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறைச் செயலாளர் ஷம்பு கல்லோலிகர் கூறுகையில், “மாநில அரசால் நியமிக்கப்பட்ட ஆணையம் அந்த அரசுக்குக் கட்டுப்பட்டு இருக்க வேண்டும். ஆனால், தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தில் இருப்பவர்கள் எந்தச் சட்ட விதிகளையும், நடைமுறைகளையும் பின்பற்றவில்லை. தற்போது சி.எஸ்.ஐ பள்ளியில் நடத்திய ஆய்வு தொடர்பாக துறையின் செயலாளர் என்ற முறையில் என்னிடம்கூடத் தகவல் தெரிவிக்கவில்லை. அதேபோல, கடந்த காலத்தில் ஆணையம் மேற்கொண்ட பணிகள் குறித்து எந்த அறிக்கையும் சமர்ப்பிக்கப்படவில்லை. மக்களால் தேர்வுசெய்யப்பட்ட அரசைத் தாண்டி நேரடியாக தேசிய ஆணையத்திடமும், ஆளுநரிட மும் அறிக்கை சமர்ப்பித்தது தவறுதான். குறிப்பாக முதல்வரைச் சந்திக்க நேரம் கேட்டதாகத் தொடர்ந்து பொய்யான தகவலைப் பரப்பி வருகிறார்கள். இப்போது அவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாடு அரசு சார்பில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை கூடுதல் இயக்குநர் எஸ்.பி.கார்த்திகா அதே பள்ளியில் ஆய்வுசெய்து, ‘மதமாற்றம் உள்ளிட்ட எந்தப் பிரச்னையும் இல்லை’ என்று அறிக்கை சமர்ப்பித்திருக்கிறார்” என்றார்.

ஷம்பு கல்லோலிகர்
ஷம்பு கல்லோலிகர்

‘ஆணையத் தலைவர் சரஸ்வதி, எல்லா விஷயங்களையும் ஆணைய உறுப்பினர் சரண்யா ஜெய்குமாரிடம்தான் கேட்டுச் செய்வார். அவரைத் தவறாக வழிநடத்தியது சரண்யாதான்’ என்றும் துறை அதிகாரிகளுக்குப் புகார் சென்றிருக்கிறது. ஆனால், அவர் பெரிய இடத்து மருமகள் என்பதால் அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்கத் தயங்குவதாகச் சொல்கிறார்கள்.

குழந்தைகள் உரிமையைப் பாதுகாப்பதாகச் சொல்பவர்கள், மாநில உரிமையைக் காலில் போட்டு மிதித்திருக்கிறார்கள்!