Published:Updated:

கார்ப்பரேட்களின் வேட்டைக்காடுகள்!

செயல்படுத்தப் படவிருக்கும் திட்டம் சூழலியலில் என்ன தாக்கங்களை ஏற்படுத்தும் என்பது குறித்து நிபுணர்களின் ஆய்வறிக்கையைப் பெற வேண்டும்.

பிரீமியம் ஸ்டோரி
உயிரியல் முக்கியத்துவம் வாய்ந்த காடுகளில் அணைகள், சுரங்கங்கள், நெடுஞ்சாலை உள்ளிட்ட தனியார் திட்டங்களைச் செயல்படுத்த மத்திய அரசு சமீபத்தில் அனுமதியளித்திருப்பது பெரும் சர்ச்சையை உண்டாக்கியிருக்கிறது.

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்து வதற்காக மார்ச் 24-ம் தேதி நள்ளிரவு முதல், நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த ஊரடங்கு நேரத்திலும் மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம், உயிரியல் முக்கியத்துவம் வாய்ந்த காடுகளில் சுரங்கம் உள்ளிட்ட தனியார் நிறுவனங்களின் திட்டங்களுக்கு அனுமதி வழங்கியிருக்கிறது.

அருணாச்சலப்பிரதேசம், அஸ்ஸாம், கோவா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களிலுள்ள காடுகளில் பல்வேறு தனியார் திட்டங்களை அமல்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, அஸ்ஸாமிலுள்ள டெஹிங் பட்காய் யானைகள் பாதுகாப்புப் பகுதியில் நிலக்கரி சுரங்கத் திட்டம், கோவாவிலுள்ள பகவான் மகாவீர் வனவிலங்கு சரணாலயம் வழியாக நெடுஞ்சாலை, குஜராத்திலுள்ள கிர் தேசியப் பூங்காவின் வழியாகச் சுண்ணாம்புக்கல் சுரங்கம், கர்நாடகாவில் ஷராவதி சரணாலயத்தில் புவித்தொழில்நுட்ப விசாரணை மையம் உட்பட 30 திட்டங்களுக்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

டெஹிங் பட்காய் யானைகள் பாதுகாப்புப் பகுதியில்  நிலக்கரி சுரங்கத் திட்டத்தை எதிர்த்து...
டெஹிங் பட்காய் யானைகள் பாதுகாப்புப் பகுதியில் நிலக்கரி சுரங்கத் திட்டத்தை எதிர்த்து...

சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளில் வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்த வேண்டுமென்றால், அது தொடர்பாக அந்தப் பகுதியில் வசிக்கும் மக்களின் கருத்துகளை முதலில் கேட்டறிவது மிக மிக முக்கியம். செயல்படுத்தப் படவிருக்கும் திட்டம் சூழலியலில் என்ன தாக்கங்களை ஏற்படுத்தும் என்பது குறித்து நிபுணர்களின் ஆய்வறிக்கையைப் பெற வேண்டும். அவற்றையெல்லாம் பின்பற்றாமல், காணொலிக் கூட்டம் நடத்தி 30 திட்டங்களுக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அரசின் இந்த அணுகுமுறை, சம்பந்தப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அருணாச்சலப்பிரதேசத்திலுள்ள திபாங் பள்ளத்தாக்கில் இடு மிஷ்மி என்ற பழங்குடி சமூகத்தினர் வாழ்கிறார்கள். உயிரியல் முக்கியத்துவம் வாய்ந்த அந்த வனப்பகுதியில் இயற்கையுடன் இயைந்து வாழும் பழங்குடி மக்களின் கலாசார நடைமுறைகள் மிகுந்த ஆச்சர்யத்துக்குரியவை. இந்தப் பள்ளத்தாக்கில் ஏராளமான புலிகள் உள்ளன. அங்கு புலிகளுக்கும் மனிதர்களுக்கும் இடையே நிலவும் கலாசார பந்தம் ஆய்வுகளின் மூலம் உணரப்பட்டுள்ளது. ஒருவர் மரணமடைந்தால், அவரின் உடலுடன் பல்வேறு வகையான விதைகளை வைத்துப் புதைப்பது இந்தப் பழங்குடிகளின் வழக்கம். இதுபோன்ற பழக்கவழக்கங்களால் அங்கு சூழலியல் கட்டிக்காக்கப்படுகிறது. அங்குதான் இப்போது 3,097 மெகாவாட் நீர் மின்திட்டம் கொண்டுவரத் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்துக்காக இரண்டு அணைகள், இரண்டு சுரங்கங்கள், சுரங்க மின்நிலையம், 50 கி.மீ தொலைவுக்கு சாலை போன்றவை அமைக்கப்படவுள்ளன. இதற்காக, 2.3 லட்சம் மரங்கள் வெட்டிச் சாய்க்கப்படவுள்ளன. 1,178 ஹெக்டேர் நிலம் நீரில் மூழ்கும். ஊரடங்கு தீவிரமாக அமல்படுத்தப்பட்டிருந்த ஏப்ரல் மாதத்தில் இதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டதும், வன ஆலோசனைக் குழு (Forest Advisory Committee) காணொலி மூலம் ஆலோசனைக் கூட்டம் நடத்தி அனுமதி அளித்ததும் அந்தப் பகுதி மக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்குக் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. #StopEtalinSaveDibang மற்றும் #SaveArunachalBiodiversity ஆகிய ஹேஷ்டேக்குகளில் இந்தத் திட்டங்களுக்கு எதிரான கருத்துகள் சமூக வலைதளங்களில் பகிரப்படுகின்றன. கவிதைகள், கடிதங்கள், குறும்படங்கள் வாயிலாக இடு மிஷ்மி சமூகத்தினரின் எதிர்ப்பு குரல்கள் சமூக வலைதளங்களில் ஒலித்துவருகின்றன.

சுரங்கம் தோண்டுதல், பாறைகளை உடைத்தல், இடிபாடுகளை அகற்றுதல் என இந்தப் பணிகள் சுமார் ஏழு ஆண்டுக்காலம் நடைபெறும் என்று சொல்லப்படுகிறது. `இந்தத் திட்டங்களால் 15 புலிகள் காப்பகங்கள், பறவைகள் சரணாலயங்கள், சூழலியல் மண்டலங்கள், வன உயிரியல் தடங்கள் போன்ற அதி முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள் கடும் பாதிப்புகளுக்கு உள்ளாகும்’ என்று அறிவியலாளர்களும் சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் களும் கவலையுடன் கூறுகிறார்கள். இது குறித்து மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு 291 விஞ்ஞானிகள் கடிதம் எழுதியுள்ளனர். அதில், ‘வனப்பகுதிகளில் இது போன்ற திட்டங்களைச் செயல்படுத்துவதற்கு அனுமதி வழங்க வேண்டுமென்றால், முதலில் கள ஆய்வு மிகவும் முக்கியம்’ என்று குறிப்பிட்டுள்ளனர்.

கார்ப்பரேட்களின் வேட்டைக்காடுகள்!

வனப்பகுதிகளில் திட்டங்களை நிறைவேற்ற ஆர்வம் காட்டும் நிறுவனங்கள் அளித்த ஆவணங்களின் அடிப்படையில் அனுமதி வழங்கப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகி யுள்ளன. ஊரடங்கு நேரத்தில் மக்களிடம் கருத்துக் கேட்பு கூட்டங்களை நடத்த முடியாது. பாதிக்கப் படும் மக்கள் அரசிடம் போய் முறையிடவோ, போராட்டங்கள் நடத்தவோ இயலாது. அதிகாரிகளிடம் போய் விளக்கங்கள் கேட்கவும் முடியாது. இப்படியான சூழலில், காணொலியில் கூட்டம் நடத்தி அனுமதி அளித்திருப்பது பெரும் சர்ச்சையாகியிருக்கிறது.

இது குறித்து சுற்றுச்சூழல் நிபுணர் பிஜாய் கோஷிடம் பேசியபோது, “2006-ல் கொண்டு வரப்பட்ட ‘வன உரிமைச் சட்டம்’, பாரம்பர்யமாக வனத்தில் வசித்துவரும் மக்களின் உரிமைகளை அங்கீகரித்துள்ளது. இந்தியாவிலுள்ள வனப் பகுதிகளில் 52 சதவிகிதத்தை மக்கள் அனுபவித்து வருவதாக அரசின் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. இந்த நிலையில், வனத்தை வேறு நோக்கங்களுக்காக மாற்றம் செய்ய வேண்டுமென்றால், அதற்குச் சில நிபந்தனைகள் உள்ளன. வனப்பகுதியில் ஒரு திட்டம் கொண்டு வரப்படுகிறதென்றால், அந்த வனம் அமைந்துள்ள பகுதியைச் சேர்ந்த ஊர் மக்களின் அனுமதி பெறப்பட வேண்டும். அப்படி அனுமதி பெறாமல், திட்டத்தை நிறைவேற்றுவது சட்ட விரோதம். தற்போது, கோவிட்-19 பிரச்னையால் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், வனப்பகுதியில் 30 திட்டங்களைச் செயல்படுத்த சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியது தவறானது” என்றார்.

தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் தலைவர் பெ.சண்முகம், ‘‘நம் நாட்டின் கனிம வளங் களைச் சுரண்டுவதற்கு மிகப்பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள் துடிக்கின்றன. சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றியோ, வன உயிரினங் களைக் காக்க வேண்டும் என்பது பற்றியோ அவர்களுக்கு எந்தக் கவலையும் இல்லை. இந்தத் திட்டங்களால் மூன்று லட்சம் ஏக்கர் வனம் மக்களிடமிருந்து பறிபோகும். இதனால், பல்லாயிரக்கணக்கான மக்கள் வனங்களிலிருந்து வெளியேற்றப்படுவார்கள். அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். இது, வன உரிமைச்சட்டம் 2006-க்கு எதிரானது. அங்கு திட்டங்கள் கொண்டுவர வேண்டுமென்றால், எண்பது சதவிகித மக்கள் எழுத்துபூர்வமாக ஒப்புதல் அளிக்க வேண்டும். இல்லையென்றால், அவர்களை அங்கிருந்து வெளியேற்ற முடியாது. எனவே, இது முழுக்க முழுக்கச் சட்டவிரோதமான ஒரு நடவடிக்கை. புலிகள் சரணாலயம், யானைகள் சரணாலயம் என எந்தவொரு சரணாலயமாக இருந்தாலும், மக்களின் விருப்பமின்றி அந்தப் பகுதியில் எந்தவொரு திட்டத்தையும் கொண்டுவர முடியாது’’ என்றார்.

பா.ஜ.க-வின் மாநில செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதியிடம் பேசியபோது, ‘‘இந்த மாதிரியான திட்டங்களுக்கு மாநில அரசுகளின் அனுமதியும் பங்கும் முன்பு இருந்ததைவிட இப்போது அதிகம். தற்போது அனுமதி அளிக்கப் பட்டவற்றில் பல திட்டங்கள் ஏற்கெனவே முழுமையாகப் பரிசீலிக்கப்பட்டு நிலுவையில் இருந்தவை. அனைத்து விதிமுறைகளையும் பின்பற்றித்தான் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. `அவசர அவசரமாக இதைச் செய்கிறார்கள்’ என்று குற்றம் சொல்ல முடியாது. மேலும், பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் முடங்கிப் போவதால் வேலைவாய்ப்பும் பொருளாதாரமும் பாதிக்கப்படுகின்றன என்பதையும் பார்க்க வேண்டும்’’ என்றார்.

தனியார் திட்டங்களைக் கொண்டுவரப் போவதாகச் சொல்லப்படும் இந்தக் காடுகளை, ‘அப்பழுக்கற்ற காடுகள்’ (Pristine Forest) என்று சூழலியலாளர்கள் அழைக்கிறார்கள். இயற்கை கெடாத, தூய்மையான அந்த வனத்தை கார்ப்பரேட்களின் வேட்டைக்காடுகளாக மாற்ற மத்திய அரசு அனுமதிக்கக் கூடாது!

சுரண்டலுக்கான திருத்தம்!

மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தால், ‘சூழலியல் தாக்க மதிப்பீடு புதிய சட்ட வரைவு-2020’ வெளியிடப் பட்டுள்ளது. ‘சூழலியல் தாக்க மதிப்பீடு 2006’-ஐ நீக்கிவிட்டு, ‘சூழலியல் தாக்க மதிப்பீடு 2020’ என்ற புதிய சட்டத்தைக் கொண்டு வருவதற்கான முயற்சி நடைபெறுகிறது. இது, சூழலியல் பாதுகாப்பு அரண்களைப் பலவீனப்படுத்தும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளதாகச் சொல்கிறார்கள். ‘‘தொழிற்சாலைகள் தொடங்கப் படுவதற்கு முன்பாக, முன்னெச்சரிக்கையாக மேற்கொள்ளப்படும் சுற்றுச்சூழல் அனுமதி, பொதுமக்கள் கருத்துக் கேட்பு ஆகியவற்றிலிருந்து தப்பிக்கவைக்கும் வகையில் அமைந்துள்ளது. இது சூழலியலில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்’’ என்று சூழலியலாளர்கள் கவலையுடன் கூறுகிறார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு